வண்ணங்களும் எண்ணங்களும்
மஞ்சள் நிறத்தின் மகிமை;
பொன்னிற மஞ்சள் – தெய்வீக உணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும், முழுவதுமாக மனதில் நிறைந்து அமைதி, பக்தி, ஞானம் ஏற்படுத்தவல்லது. மேலும், அமைதியுடன் கூடிய ஒரு நல்ல ஓய்வு நேரங்களை சந்தோஷத்தோடு அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
ஆழ்ந்த தெய்வீக உணர்வுக்கு பொன்னிற மஞ்சள் உகந்தது. மேலும் புதிய படைப்புக்கள், புது முயற்சிகள், இறக்க சுபாவம், தயாள குணம், தரும காரியங்களை நிறைவேற்றும் மனப்பாங்கை வளர்க்கும் சக்தி படைத்தது. பொன்னிற மஞ்சளின் சின்னம் சூரியன். கடவுளின் சக்தியைக் காட்டும் இந்நிறம், தெய்வீக சக்தியுடையது.
கோயில்களில் கடவுளுக்கு லேசான மஞ்சள் நிறமுடைய சந்தனக்காப்பு மனதிற்குள் பக்தியை நிறைவாகத் தந்து மனச்சாந்தியை அளிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் வாசனை மட்டுமல்ல, முக்கியமாக சந்தனம் (லைட்டான) மஞ்சள் நிறம் உடையதுதான் அதன் காரணம். அதேபோல் அதிக வண்ணம் சேர்த்த சந்தனப்பொட்டு வைத்திருப்போரைப் பார்த்தால், அவர்பால் உங்களுக்கு ஒரு அந்நோன்யமும் மதிப்பும் ஏற்பட்டு, அவர் ஒரு தெய்வீகக்களை நிறைந்திருப்பவராக தோன்றுவார்.
உங்கள் மனதில் மஞ்சள் பூசிய நம்குலப் பெண்களின்மேல் தனி மரியாதையும் ஒரு பயபக்தியும் தோன்றுவதும் கடவுளிடம் நமக்கு ஏற்படும் ஒரு பக்தி கலந்த உணர்ச்சிகளின் அடக்கமும் ஆகும். மேலும் பொன் வண்ண ஆடையுடுத்திய குருபகவானின் நிறமான தங்க நிற மேனியின் சிறப்பும் நாம் அந்தக் கடவுளை வணங்கச் செல்லும்போது பொன் வண்ண ஆடையுடுத்திச் செல்வது (கடவுளைத் தன்பால் இழுத்து) அவரை சாந்தப்படுத்தி நமக்கு அருள் கிடைக்கச் செய்யும் ஏதுவான ஓர் அம்சம்.
மஞ்சள் மகிமை என்ற வார்த்தையே ஒரு தனிச்சிறப்பு வார்த்தையாக நம் நாட்டில் பாராட்டிப் போற்றுவதாக அமைந்துவிட்டது.
மாலை நேரங்களில் பொன்னிற மஞ்சளாடை உடுத்தி பொது நிகழ்ச்சிகளுக்கோ, கோயில்களுக்கோ செல்வது மிகப் பொருத்தமான ஆடை அலங்காரமாகவும் உங்களுக்கு ஒரு தனிக்கவர்ச்சியையும் மதிப்பையும் தருவனவாகவும் அமையும்.
மஞ்சள் கலந்த நீரை நம் வீட்டு விசேஷங்களில் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட உபயோகிப்பதும் வழிமுறையாக இருந்து வருகிறது. திருவிழாக்கள் முடிந்ததும் தெய்வீக நிறமான மஞ்சளைக் கலந்துதான் ஒருவருக்கொருவர் ஊற்றி மஞ்சள் நீராட்டம் என்று விழாவை இனிதே கொண்டாடி முடிக்கிறோம்.
மஞ்சளில் நனைத்து கடவுளுக்கு வேண்டி, காசு வைத்து முடிந்தால் எல்லாம் சுபமாக நடக்கும் என்ற ஐதீகமும் மஞ்சள் நிறத்தின் சிறப்பு. பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாசலில் மஞ்சள் வர்ணக்கோலம்தான் அத்தனையிலும் மிகச்சிறப்பாகக் கண்ணைக் கவர்ந்திழுக்கும்படி அமையப்பெற்றிருக்கும். மஞ்சள் நிறமில்லாத கோலம் அழகாயிராது, கலையாகவும் இருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்கமே மஞ்சள் நிறந்தானே! இதற்கு ஈடு இணை எதாகிலும் உண்டா? எல்லோரையும் காந்தம் போல் (திருடனையும் சேர்த்து!) கவர்ந்து இழுப்பது, பொன் அணிந்த ஆடவர், பெண்டிர்களைத்தானே! அழகுக்கு அழகு சேர்ப்பது தங்க நிற மஞ்சள் நகைகள்தன். அதற்கு இந்த உலகமே அடிமை. அது இதுதானே நம் வாழ்க்கைக்கு அஸ்திவாரம், ஆட்டி படைப்பது எல்லாம்.
மஞ்சள் நிற வாழைப்பழங்கள் வைத்து கடவுளுக்கு நைவேத்யம் செய்தால் தனிச்சிறப்புடன் பக்தியின் பழமாக கருதுகிறோம். மாங்கனியும் இதன் காரணமே. மாம்பழக்கலர் என்றாலே மஞ்சள் நிறத்தைத்தான் குறிக்கிறது. மஞ்சள் நிறமான மாங்கனியைப் பார்த்தாலே சுவைக்கத் தோன்றுவதும் அதன் நிறத்தாலேதான்.
No comments:
Post a Comment