நானும், என் கணவரும் அடுத்த மூன்று வருடங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக இப்போது கர்ப்பமாகி இருக்கிறேன். இந்தக் குழந்தையைக் கலைத்துவிடலாம் என்று நினைக்கிறேன். இது கடவுளுக்கு எதிரான குற்றம் என்கிறாள் அம்மா. கருக்கலைப்பு என்பது கடவுளுக்கு எதிரான பாவமா? சத்குரு: கடவுளை எதற்கு அநாவசியமாக இழுக்கிறீர்கள்? நீங்கள் கர்ப்பமானதற்கு நீங்கள்தான் பொறுப்பு அல்லவா? கருக்கலைப்பு கடவுளுக்கு எதிரான பாவமோ, இல்லையோ பொறுப்பில்லாமல் கர்ப்பமாவது மனித குலத்துக்கு எதிரான பாவம். எப்போது ஒரு புதிய உயிர் உங்களுக்குத் தேவையில்லையோ, அதற்கு முதலில் இடம் கொடுத்திருக்கவே கூடாது தானே? உங்களுக்குள் உருவாகும் உயிரே உங்களுக்குப் பொருட்டில்லாமல் போகும்போது, வெளியில் இருக்கும் வேறு எந்த உயிர்தான் உங்களுக்கு மதிப்புள்ளதாகத் தோன்றப் போகிறது? கடவுள் கருக்கலைப்பை ஏற்பாரா, மாட்டாரா என்பதல்ல கேள்வி. உங்கள் மீதும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், உருவாகிக் கொண்டிருக்கும் உயிர் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் மனிதநேயத்தைப் பற்றியதே இந்தக் கேள்வி. சக உயிர்களை மதிக்கத் தெரியாதது சந்தேகம் இல்லாமல் பாவச் செயல்தான்! கேள்வி அப்படியானால், கருக்கலைப்பே பாவம் என்று முத்திரை குத்திவிட முடியுமா? சத்குரு: ஒரு தாயைக் காப்பாற்றவோ, சரியாக உருவாகாததால் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டோ மருத்துவ ரீதியாக ஒரு கரு கலைக்கப்படுவது வேறு. ஆனால், மருத்துவத்தில் இந்த வசதி இருக்கிறது என்கிற தைரியத்தில் பொறுப்பற்று கர்ப்பமாவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? தனக்கு எதிரில் வந்த நின்ற உதவியாளரை அமெரிக்க ஜனாதிபதி நிமிர்ந்து பார்த்தார். “சட்ட அதிகாரி இதை உங்களிடம் காட்டச் சொன்னார்…” என்று கையில் ஒரு சீட்டுடன் அவர் தயங்கி நின்றார். “என்ன?” என்றார் ஜனாதிபதி. “அபார்ஷன் பில்!” ஜனாதிபதியின் நெற்றி சுருங்கியது. “அதை எதற்குச் சட்ட அதிகாரியிடம் காட்டினீர்கள்? நானே செட்டில் செய்து விடுகிறேன்…!” கருக்கலைப்பு மசோதா என்பதைத்தான் ‘அபார்ஷன் பில்’ என்று உதவியாளர் சொன்னார் என்பது கூடவா ஜனாதிபதிக்குப் புரியாது என்று கேட்காதீர்கள். மருத்துவ வசதி இருப்பதால், பொறுப்பாக இருக்க வேண்டியவர்கள் கூட எப்படிப் பொறுப்பற்று நடந்து கொள்கிறார்கள் என்பதற்காகச் சொல்லப்பட்ட நகைச்சுவை இது. ஆனால், கருக்கலைப்பு என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல. சொந்தக் காரணங்களையோ, குடும்பச் சூழ்நிலைகளையோ, சமூக அவமதிப்பையோ காரணமாக்கிக் கருக்கலைப்பு செய்து கொள்வது இன்றைக்கு அதிகமாகிவிட்டது. இதைப் பாவம் என்றோ, புண்ணியம் என்றோ பார்க்க நான் தயாராக இல்லை. இன்னொரு உயிரை எடுத்தெறிவது மனிதகுலத்துக்கு மிக எதிரானது; இது உங்களுக்கு நல்லது செய்யாது என்றுதான் சொல்கிறேன். கேள்வி கவனமன்றி தவறுதலாகக் குழந்தை வந்துவிட்டது. அதை வேண்டாவெறுப்பாக பெற்றுக் கொண்டால், அதற்கல்லவா வேதனை? அதைவிட கருவிலேயே கலைக்கப்படுவது மேலானது இல்லையா?” சத்குரு: குழந்தையா தவறு செய்தது? தவறு செய்தது பெற்றோர்தானே? அதற்காகக் குழந்தையைத் தண்டிப்பது என்ன நியாயம்? அந்த தம்பதிகளுக்கல்லவா தண்டனை தரப்பட வேண்டும்? வேண்டாம். எந்த உயிரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயதானபோது, மோசமான போலியோ தாக்கியது. “உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்” என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதை அவன் கேட்டான். அவன் அம்மா அழுகையின் உச்சத்துக்குப் போனாள். அந்த இரவைக் கடந்துவிட்டால், அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான். இரவு முழுக்கத் தூங்காமல் விழித்திருந்தான். விடிந்ததும் அம்மாவை உலுக்கி எழுப்பி, “அம்மா, பாருங்கள். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்!” என்று கட்டிக் கொண்டான். அம்மாவின் சந்தோஷக் கண்ணீர், அவன் மனதில் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. அடுத்துவரும் ஒவ்வொர் இரவையும் இதேபோல் கடக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். இறுதியாக அவனை மரணம் வென்றபோது, அவன் வயது என்ன தெரியுமா? 75. அந்தச் சிறுவன் மில்டன் எரிக்சன். மனிதனுக்கு அவனேதான் தடை என்பது பற்றி அவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம். மனநல சிகிச்சைகளில் பல புதிய தலைமுறைகளை அறிமுகம் செய்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் அவர். 12 வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும். புரிந்து கொள்ளுங்கள்… எந்த உயிரும் அர்த்தமின்றி இவ்வுலகுக்கு வருவதில்லை. கேள்வி வெளிப்படையாகவே கேட்கிறேன்… நீங்கள் கருக்கலைப்புக்கு எதிரானவரா?” சத்குரு: இல்லை. நான் எதற்கும் எதிரானவன் அல்ல! ஒரு வாகனம் வாங்கியிருக்கிறீர்கள். சாலையில் யார் மீதும் மோதாமல் அதைச் செலுத்துங்கள் என்று சொன்னால், நீங்கள் வாகனத்துக்கு எதிரானவரா என்று கேட்பது போலிருக்கிறது இது. மின்சாரத்தையோ, நெருப்பையோ, தண்ணீரையோ பொறுப்புடன் பயன்படுத்துங்கள் என்று சொன்னால், நீங்கள் மின்சாரத்துக்கு எதிரா, நெருப்புக்கு எதிரா என்று கேட்பீர்களோ? முழுமையான விழிப்புணர்வுடன் வாழ்க்கை கவனமாக நடத்தப்பட்டால், அதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், நவீன மருத்துவ வசதிகளைப் பொறுப்பில்லாமல் பயன்படுத்த நினைத்தால், அதைத்தான் எதிர்க்கிறேன். மிருகங்களிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. மனித குலத்திடம் எதிர்பார்ப்பது தப்பா? உயிர்களைப் பற்றிய பொறுப்பான விழிப்புணர்வுடன் செய்யப்படும் எதற்கும் நான் எதிரானவன் அல்ல. பொறுப்பற்ற செயல்களுக்கு மட்டுமே எதிரானவன். எது விஷம், எது அமுதம் என்று இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?
Read more at :
Read more at :
No comments:
Post a Comment