Wednesday, August 26, 2015

தெய்வீக கதைகள் (2)

நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். 
இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள். 
அப்போது நாரதர், ""கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? "தேவரிஷி' என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை 
உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா?'' என்று கேட்டார். 
அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, ""நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்...'' என்று கூறினார். 
கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த "மகதி' என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.
மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! "தான் நாரதர்' என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.
இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். 
"நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா?'' என்று கேட்டான். 
நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். 
அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். 
இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு 
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான். 
இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது. 
போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள். 
அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், ""அரசியாரே! போரில் நமது 
அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள்,'' என்று கூறினர்.
நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். 
ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். 
அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள். 
விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். 
இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, 
அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது. 
குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. 
நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள். 
காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், "ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்.... நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன!'' என்று பலவாறு கூறி கதறி அழுதாள். 
அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, "அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். 
நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள். 
முதியவர் அவளிடம், "அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும்,'' என்று தெரிவித்தார்.
முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 
குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக்கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். 
நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்த படியே கிருஷ்ணரிடம் சென்று, ""பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க 
வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்,'' என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார். 
கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.
வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா! 
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.
"முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். ''- பகவத்கீதை 7.14
இன்னும் கேட்போம்...

சுவாமி கமலாத்மானந்தர்

No comments:

Post a Comment