கேள்வி கர்மவினைக்கும் உடலைத் தாக்கும் நோய்களுக்கும் என்ன தொடர்பு என்று விளக்க முடியுமா? சத்குரு: கர்மா என்பது பாராட்டுப் பத்திரமும் அல்ல. தண்டனையும் அல்ல. கர்மா என்பது ஒரு செயலும், அதன் பின்விளைவும் பற்றியது. கண்களை மூடிக் கொண்டு வாகனத்தைச் செலுத்தினால், என்ன ஆகும்? தெருவில் காணும் எதையோ பொறுக்கி எடுத்து உட்கொண்டால் என்ன ஆகும்? விரும்பத்தகாத பின்விளைவுகள் தாம் இருக்கும். அதேபோல் தான் உடல், மனம், உணர்ச்சி, சக்தி என்று வெவ்வேறு நிலைகளில் நீங்கள் புரியும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு வருகிறது. அப்படிப் பதிவான பின்விளைவுகள்தாம் உங்கள் உடல்நிலையையும் தீர்மானிக்கின்றன. நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், நோய் கொண்டிருப்பதும் இந்தப் பதிவுகளால்தான். அதற்காக, கர்மவினைகள் அறுதியானவை, மாற்ற முடியாதவை என்று அர்த்தமல்ல. முழு விழிப்புணர்வுடன் இயங்க ஆரம்பித்தால், ஏற்கெனவே சேகரித்த கர்மவினைகளால் வேதனையுறாமல், அவற்றைச் சுலபமாகக் கடந்து செல்ல முடியும். கேள்வி விதிக்கப்பட்டதிலிருந்து தப்ப முடியாதல்லவா? சத்குரு: நம் தேசம் சுதந்திரம் பெற்றபோது, ஒவ்வொரு குடிமகனின் சராசரி வாழ்நாள் இருபத்தேழு வருடங்கள் தான். இன்றைக்கு அது ஐம்பத்தாறு வருடங்களாக முன்னேறியிருக்கிறது. இதை விதியா செய்தது? இல்லை விதியின்மீது நம்பிக்கை இருந்தால், சின்னம்மைக்கும் போலியோவுக்கும் எதிராக ஏன் மருந்துகளைக் கண்டு பிடித்தீர்கள்? ஏன் தடுப்பூசிகள் போடுகிறீர்கள்? நோய்களைப் புரிந்து கொள்ளும் திறமை பெற்றதும், விதியை மாற்றும் திறனும் உங்களுக்கு வந்தது அல்லவா? அது போல் வாழ்க்கையைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், அதை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம். விதியை நீங்களே எழுதலாம். உங்கள் உடலின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தால், வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் திறனில் 15 முதல் 20 சதவீதம் கிடைத்துவிடும். உங்கள் மனதை உங்கள் சொல்படி கேட்க வைத்து விட்டால், 50 முதல் 60 சதவீத வாழ்க்கை உங்கள் வசம் வந்துவிடும். உங்கள் உயிர்சக்தியைக் கட்டுப்படுத்த அறிந்து கொண்டீர்களென்றால், நூறு சதவீத கட்டுப்பாட்டுடன் உங்கள் விதியை நீங்களே எழுதிக்கொள்ள முடியும். கேள்வி மதச்சார்பின்றி மக்கள் வாழ முடியுமா? சத்குரு: இன்றைய சூழ்நிலையில் மதச்சார்பு இருந்தால் மக்கள் எப்படி வாழ முடியும் என்பதல்லவா கேள்வி. ஒவ்வொரு மதமும் தங்களுக்குள் நடத்தும் போர்கள் மனிதனை நிம்மதியாக வாழ விடுவதில்லை என்பது தானே உண்மை? மதம் என்பது ஒரு மனிதன் தனக்குள் பார்த்துக் கொள்வதற்கான கருவிகளை வழங்குவதற்காக உருவானது. ஆனால், அந்த அடிப்படையை விட்டு விட்டு கூட்டம் சேர்ப்பதும், பலத்தை பிரயோகித்துக் காட்டுவதும் அல்லவா மதங்களின் முக்கிய வேலைகளாகி விட்டன? எப்போது எண்ணிக்கையில் கவனம் போனதோ, அப்போதே மதம் செத்துப் போய், அங்கே அரசியல் கட்சி பிறந்து விடுகிறது. இன்றைக்கு பெரும்பாலான மத அமைப்புகள் இப்படி அரசியல் கட்சிகளின் அமைப்புகளாக மாறி விட்டன. இப்படிப்பட்ட சிந்தனை உள்ள மத அமைப்புகள் இல்லாமல் இருப்பதே மனிதகுலத்துக்கு நல்லது.
: கர்மாவிற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு?
: கர்மாவிற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு?
No comments:
Post a Comment