Monday, August 24, 2015

உங்கள் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

ஒரு முனிவர் எப்படியாவது சொர்க்கத்திற்குச் சென்றுவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் தன்னிடம் இருந்த நோஞ்சான் பசுக்களை எல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
"பால் வற்றிப்போன பசுக்களைக் கொடுப்பதால் என்ன லாபம்...?'
இப்படி யோசித்த அவருடைய மகன், ""என்னை யாருக்கப்பா தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்?'' என்று கேலியாகக் கேட்டான்.
தந்தை பதில் சொல்லவில்லை. மகன் மூன்று முறை அதே கேள்வியை கேலியுடன் கேட்க எரிச்சலடைந்த தந்தை, ""உன்னை 
எமனுக்குக் கொடுக்கிறேன்,'' என்று சொல்லி அதற்கான மந்திரத்தைச் சொல்லிப் புனித நீரையும் ஊற்றிவிட்டார். 
மகன் எமனுலகிற்குச் சென்றான். மூன்று இரவுகள் யமலோக வாசலில் காத்திருந்தான். எமன் பதறிப்போய் ஓடி வந்தான்.
மூன்று இரவு காக்க வைத்ததற்குப் பரிகாரமாக மூன்று வரங்கள் கொடுப்பதாகச் சொன்னான். தன் தந்தைக்கு கோபம் நீங்க வேண்டும், சொர்க்கதிற்குச் செல்ல என்ன யாகம் செய்ய வேண்டும் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டான் மகன். மூன்றாவதாக ஒரு மகத்தான வரத்தைக் கேட்டான். 
""எமனே! நீ மரண தேவன். இறந்த பின் என்ன ஆகிறோம் என்பதைச் சொல். இறப்பு தான் முடிவா? இல்லை.. அதன் பின்னும் எங்கள் இருப்புநிலை தொடருமா?''
"இந்த விஷயம் வேண்டாம் மகனே! இது மிகவும் குழப்பமானது. தேவர்களும் முனிவர்களுமே இன்னும் இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதைவிட்டுவிடு. பதிலுக்கு உன்னை பூலோகத்தில் மன்னனாக்குகிறேன். கணக்கற்ற யானைகள் குதிரைகள் பசுக்கள் ஆகியவற்றைத் தருகிறேன்,''. 
""தேவையில்லை. இதெல்லாம் ஒரு நாள் அழிந்து போகும்.''.
""போகட்டும்! நீ எத்தனை காலம் வாழ விரும்புகிறாயோ அதுவரையில் வாழும் வரத்தைத் தருகிறேன். இளமையுடனும் உடல் நலத்துடனும் நீண்ட காலம் வாழ்வாயாக.''
""வேண்டாம்''
""தேவலோக அப்சரஸ்களைத் தருகிறேன். அவர்களோடு பல நூற்றாண்டுகாலம் நீ சுகித்திருக்கலாம்.''
""வேண்டாம்''
"பின் என்ன தான் வேண்டும்?'
""நான் கேட்ட கேள்விக்குப் பதில்.''
எமன் வசமாக மாட்டிக்கொண்டான். 
அந்தச் சிறுவனுக்கு அவன் சொன்ன உபதேசம்தான் கடோப நிஷத்தாக மலர்ந்தது.. 
இப்போது அதுவல்ல கேள்வி! 
வாழ்க்கையில் நாம் ஒரு பெரிய விஷயத்தைத் தேடிப் போகும்போது நமக்குக் கொசுறாக சில நன்மைகள் உண்டாகலாம். பலரும் "ஆகா! இதுவே போதுமே!' என்று நினைத்துக்கொண்டு தங்கள் தேடலை முடித்து விடுகிறார்கள்.
பெரிய பதவியில் இருப்பவர்கள், பதவியின் மூலம் பொருள் சம்பாதிக்க முடிந்தால் போதும், என்று நினைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர், ஒரு உயரத்தைத் தொட்டவுடன் இனி வேண்டாம் என்று விட்டு விடுகிறார்கள். 
ஆன்மிகத்துறையில் ஈடுபடுபவர்கள் கூட சில சக்திகளும் சித்திகளும் வந்தவுடன் புகழையும் பணத்தையும் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்கு மேல் அவர்கள் வளர்வதில்லை. இதே கருத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அழகாக விளக்கினார். அவர் ஊரில் உள்ள கோயிலில் இறைவனுக்கு இனிப்பான பிரசாதங்களை படைப்பார்கள். அதைச் சுவைக்க எறும்புக் கூட்டம் வந்துவிடும். அவற்றை விரட்ட இப்போது இருப்பது போல் ரசாயனப் பொடிகள் எல்லாம் இல்லை. 
""எறும்புகளை எப்படி வரவிடாமல் தடுப்பது?'' என்று ராமகிருஷ்ணரிடம் கோயில் நிர்வாகத்தினர் கேட்டார்கள். 
""கோவில் வாசலில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விடுங்கள். அதைத் தாண்டி அவைகள் வராது.''
கொஞ்சமும் வன்முறையில்லாத அற்புதமான வழி. எறும்பிற்கு வேண்டியது ஒரு இனிப்புப் பொருள். அது கோவில் வாசலிலேயே சாதாரணச் சர்க்கரையில் கிடைக்கும் போது, எதற்காக உள்ளே வரவேண்டும்?
ராமகிருஷ்ணரின் யோசனை நல்ல பலனைக் கொடுத்தது. ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் அன்று அவர் தன் சீடர்களுக்குச் செய்த உபதேசம்.
""அந்த எறும்புகளின் நிலையில்தான் இன்று பலர் இருக்கிறார்கள். இறையருளைத் தேடி சன்னிதானத்திற்கு வருகிறார்கள். இறைவன் அவர்களுக்கு செல்வம், புகழ் போன்றவற்றைக் கொடுக்கிறான். இவை எல்லாம் கோயில் வாசலில் கொட்டிக்கிடக்கும் சாதாரணச் சர்க்கரை. உண்மையான ஆன்மிக இனிப்பு கோயில் கருவறையில் இருக்கிறது. ஆனால், சாதாரணச் சர்க்கரை போதும் என்று 
அவர்கள் வாசலோடு திரும்பிப் போய்விடுகிறார்கள்.''
பெரிய லட்சியத்துடன் வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், நடுவிலேயே தங்கள் கனவுகளையும் லட்சியத்தையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு, சுக வாழ்க்கையில் முடங்கிப் போகிறார்கள்.
எனக்குத் தெரிந்து மூன்று மிகச் சிறந்த விற்பன்னர்கள், பெங்களூருவில் ஒரு மென்பொருள் நிறுவனம் ஆரம்பித்தார்கள். அவர்கள் வடிவமைத்த மென்பொருளுக்குச் சந்தையில் நல்ல கிராக்கி இருந்தது. அதனால், அமெரிக்காவில் இருந்த ஒரு மென்பொருள் 
நிறுவனத்தின் பொருட்கள் விற்கவில்லை. 
அமெரிக்க நிறுவனம் பெங்களூரு நிறுவனத்தை விலை பேசியது. ஏறக்குறைய 100 மடங்கு அதிகம் தருவதாகச் சொன்னவுடன், தங்கள் வியர்வையாலும் அறிவாலும் உருவாக்கிய மென்பொருளையும் அந்த நிறுவனத்தையும் அமெரிக்க நிறுவனத்திற்குத் தாரை வார்த்து
விட்டுப் போய்விட்டார்கள். இவர்களிடம் வாங்கிய மென்பொருளை முடக்கிவிட்டு, தன் தயாரிப்பான தரம் குறைந்த மென்பொருளை விற்றுக் கொண்டிருக்கிறது. பணம் என்ற எலும்புத் துண்டில் மயங்கி, வாழ்க்கையை இழந்து விட்டார்கள் அவர்கள்.
ஒரு நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நிறுவனத்தின் இரண்டு பொது மேலாளர்கள், தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். வயது, திறமை, அனுபவம் அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம், இருவருக்கும் ஏறக்குறைய ஒரே அளவில் இருந்தது. யாரைத் தேர்ந்தெடுப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தோம். தெரிவு செய்யும் குழுவில் இருந்த ஒரு முதியவர், அழகான வழி ஒன்றைச் சொன்னார்.
முதலில் ஒரு போட்டியாளரை உள்ளே அழைத்தோம். முதியவர் அவரிடம் ரகசியக் குரலில் பேசினார்.
""தலைவர் பதவிக்கு ஆளெடுப்பதை ஆறுமாதம் தள்ளி வைத்திருக்கிறோம். நம் நிறுவனத்தின் நியூயார்க் கிளையின் மேலாளர் பதவி காலியாக இருக்கிறது. நம் நிறுவனத் தலைவரைவிட இரண்டு மடங்கு சம்பளம்.
உலகெங்கும் சுற்றிவரும் வாய்ப்பு. இருவரில் உங்களுக்குத் தகுதி அதிகமாக இருப்பதால் அதை உங்களுக்குத் தரலாம் என்று இருக்கிறோம்.''
அந்தப் போட்டியாளர் அதை உடனே ஏற்றுக்கொண்டார்.
அடுத்த போட்டியாளரிடம் அதே போல் சொன்ன போது, ""எனக்குத் தலைவர் பதவியைத் தவிர வேறு எந்தப் பதவியும் வேண்டாம். இதற்காக ஆறு வருடம் கூடக் காத்திருக்கிறேன்,'' என்றார்.
அவருக்குத்தான் தலைவர் பதவி கிடைத்தது.
அந்த முதியவர் கொடுத்த விளக்கம் அற்புதமானது.
""நியூயார்க்கில் வேலை என்ற எலும்புத் துண்டை வீசி எறிந்தேன். அதைப் பொறுக்கியவனுக்கு உயர்ந்த லட்சியங்கள் இல்லை என்பது நிச்சயம். நிறுவனத்திற்கு நல்ல தலைவன் கிடைத்துள்ளான்.''
போகங்களிலும் இன்பங்களிலும் மனதை விட்டுவிடாதீர்கள். உண்மையான வெற்றித் தத்துவத்தை அறிவதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள். 

No comments:

Post a Comment