Saturday, September 5, 2015

பிரச்னை எப்படி நிரந்தரமாகும்?

பிரச்னை எப்படி நிரந்தரமாகும்?
‘‘எனக்கு ஏராளமான பிரச்னைகள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி அவற்றை சமாளிப்பது என்றும் புரியவில்லை...’’‘‘வாழ்க்கை என்றால் பிரச்னை இருக்கத்தான் செய்யும். அதற்காக மனம் கலங்கிவிடலாமா?’’‘‘மனம் கலங்காமல் எப்படித்தான் இருப்பதாம்? பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கமாட்டேனென்கிறதே. பிரச்னையே நிரந்தரமாகிவிடும் போலிருக்கிறதே! ஒன்றா, இரண்டா அடுத்தடுத்துதான் பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றனவே!’’
‘‘ஒரு இலையில் உனக்குப் பலவகை உணவுப் பொருட்களைப் பரிமாறுகிறார்கள்.
வரிசையாக அணிவகுத்திருக்கும் அந்தப் பொருட்களில் உனக்குப் பிடித்ததை முதலில் எடுத்து சுவைக்கிறாய். பிறகு அடுத்தது, அதற்குப் பிறகு பரிமாறப்படும் சாதம், குழம்பு, ரசம், மோர் என்று அந்த விருந்தில் பல ருசிகளை அனுபவிக்கிறாய். வயிறு நிறைகிறது; மனசும் திருப்தியாகிறது. அந்த உணவுப் பொருட்கள்தான் உன் பிரச்னைகள் என்று வைத்துக்கொள். ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார். எல்லாவற்றையும் ஒரேயடியாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே. எந்த பிரச்னைக்கு முதலில் தீர்வு காண்பது என்று முடிவு செய்ய கடவுளை தியானித்துக்கொள்.
அல்லது சற்று நேரம் கண்மூடி அமைதியாக இரு. உனக்குள்ளே பளிச்சென்று ஒளி தோன்றும். சுறுசுறுப்பாக இயங்கு; அந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடு;
இப்போது அடுத்ததற்கு வா. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு பிரச்னையாக நீ அணுகிக்கொண்டு போகும்போதே வரிசையிலிருந்த பல பிரச்னைகள் காணாமல் போயிருக்கும்! ‘அட, இதற்குத்தானா பயந்தோம்!’ என்று நீயே ஆச்சரியப்படுவாய்...’’
‘‘பிரச்னை நிரந்தரமாகிவிட்டால்?’’‘‘இந்த உலகில் எது நிரந்தரம்? உன் ஆயுள் எத்தனை ஆண்டு என்று உன்னால் சொல்ல முடியுமா?’’‘‘முடியாது. அது நாளைக்கே முடிந்தாலும் முடிந்துவிடலாம்.’’‘‘அதாவது, வாழ்க்கையே நிலையானதல்ல என்றாகிவிட்ட பிறகு பிரச்னைகள் மட்டும் நிரந்தரமாகிவிடுமா என்ன? ஒன்று மாற்றி ஒன்று என்று வேண்டுமானால் வருமே தவிர, ஒருவருக்கு நிரந்தரமாக ஒரு பிரச்னை என்ற நிலைமை வரவே வராது.’’
‘‘அதாவது..?’’‘‘என்ன ஆகுமோ, தோற்றுவிடுவோமோ என்ற பயத்தை முதலில் விடு. குளத்துக்குள் காலை விட்டால்தானே ஆழம் தெரியும்? ‘இந்த பிரச்னையை நான் சாதகமாக வெல்வேன்,’ என்று மனதில் உறுதி கொள். அந்த உறுதி நிலைப்பட்டுவிட்டாலேயே பல திக்குகளிலிருந்தும் ஆதரவுகளும், உதவிகளும் வந்து சேரும். இதை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் புது உற்சாகம் தோன்றும். இனி வெகு எளிதாக அடுத்த பிரச்னையை நீ எதிர்கொள்ளலாம்...’’
‘‘வந்து...’’
‘‘இன்னும் தயக்கம் ஏன்? எப்போதுமே உன்னுடன் துணையாக வர, உனக்கு நல் வழிகாட்ட கடவுள் தயாராக இருக்கிறார். அவரிடம் மனு போடு. அவர் உடனே வந்து உதவுவார்; அதை நீ அனுபவபூர்வமாகவே உணர்வாய்.’’

No comments:

Post a Comment