ஏன் யோகிகளை எரிக்காமல் புதைக்கிறார்கள்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் சத்குரு அவர்கள், யோகிகள் விழிப்புணர்வுடன் மரணத்தை நிர்ணயிக்கும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாக விளக்குகிறார். சத்குரு: யோகிகளை எப்போதுமே புதைப்பதில்லை. சில சமயம் அவர்கள் தங்களைச் சார்ந்தவர்களிடம் புதைக்கும்படி சொல்வார்கள், ஆனால் சில வேளைகளில் புதைப்பதா எரிப்பதா என்ற வாய்ப்புகளை திறந்துவைத்திருப்பார்கள், அப்போது அவர்கள் எரிக்கப்படுவார்கள். பொதுவான வழக்கம் ஒன்று என்னவென்றால்,ஒரு யோகி தன்னைச்சுற்றி போதுமான அளவு விறகை அடுக்கிவைத்துவிட்டு, விறகிற்குத் தீ மூட்டிவிட்டு அதன்மேல் தியானத்தில் அமர்ந்துகொண்டே எரிந்துவிடுவார். அவர் தன் உடலிற்கும் தனக்கும் இடையில் இடைவெளி உருவாக்கியிருப்பவராக இருப்பார். முழு விழிப்புணர்வுடன் தன் பூத உடலை அவர் அழிக்கிறார். தீயில் எரிந்துகொண்டிருக்கும்போது கதறி ஓடாமல் இருப்பதென்றால், அதற்குமேல் நீங்கள் விழிப்புணர்வாக இருக்கமுடியாது. இது ஒரு பொதுவான வழக்கம், அதனால்தான் யோகிகள் எரியூட்டப்படுவதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவதில்லை. இதை அவர்களாகவே முழுவதும் தனிமையில் செய்துகொண்டார்கள் – தங்களுக்குத் தாங்களே எரியூட்டிக்கொண்டார்கள். ஆனால் உங்களை நீங்களே புதைத்துக்கொள்ள முடியாது. குழியை வேண்டுமானால் நீங்கள் வெட்டிக்கொள்ளலாம், ஆனால் கொஞ்சம் உதவி தேவை. அதனால் யாரோ ஒருவரிடம் புதைக்கச்சொல்லி குறிப்புகள் கொடுத்தார்கள். தீயில் எரிந்துகொண்டிருக்கும்போது கதறி ஓடாமல் இருப்பதென்றால், அதற்குமேல் நீங்கள் விழிப்புணர்வாக இருக்கமுடியாது. சிலசமயம் யோகிகள் தங்கள் உடலை விடும்போது, அவர்கள் நடந்துநீருக்குள் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு யோகிக்கு, போதிய விழிப்புணர்வு இருக்கலாம், ஆனால் உடலின் செயல்பாட்டை நிறுத்துவதற்கு உடலமைப்பின்மீது தேவையான ஆளுமை இல்லாமலிருக்கும். அவருக்கு உடலமைப்பை நிறுத்த சற்று உதவி தேவை, அதனால் உடலுக்குள் நுழையும் நீரின் உதவியை எடுத்துக்கொண்டு அவர் ஜலசமாதி அடைகிறார்.அவர் அசைவில்லாமல் இருந்து உடலைவிடுவார். சில யோகிகள் போக முடிவுசெய்து மிருகங்களுக்கு உணவாகிவிடுவர். பிற உயிரினங்கள் அவரை சாப்பிட ஏதுவாக அவர்கள் காட்டுக்குச் சென்று உடலை விடுவர். இது மிகவும் அரிது, இப்படிச் செய்பவர் பெரும்பாலும் நன்னோக்கம் கொண்ட ஒரு யோகியாக இருப்பார், ஞானமடைந்தவராக இருக்கமாட்டார். அவர் கருணை கொண்டவராக இருக்கிறார், அவர் இன்னும் கரைந்து போகவில்லை. கருணை என்பது தீவிரமான ஆர்வம் கரைந்துபோயிருக்கும் நிலை, ஆனால் அதுவும் ஒரு நிலையிலான ஆர்வம்தான். உங்கள் இருப்பின் இயல்பே ஒருவிதமான விழிப்புணர்வு நிலையாக மாறிவிட்டால், திடீரென யாரோ ஒருவர் உள்ளே நடந்துவந்து துப்பாக்கியால் உங்கள் தலையில் சுட்டால், அப்போதும் நீங்கள் விழிப்புணர்வாகவே போகமுடியும். இதை யாரும் உங்களுக்கு மறுக்கமுடியாது. அதனால் அவர்கள் தண்ணீருக்குள் சென்றார்களா, நெருப்புக்குள் சென்றார்களா, புதைக்கப்பட்டார்களா, அல்லது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டார்களா என்பது ஒப்பனையளவில் மட்டுமேஉள்ள வித்தியாசம். வாழும்போது, அணிந்துகொள்ள விதவிதமான உடைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது போல, இறக்கும் தருணத்திலும் தண்ணீர், காற்று, பூமி, நெருப்பு என்று விரும்பும் உடையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலான யோகிகள் 27லிருந்து 35 வயதுக்குள் தங்கள் உடலை விடுவார்கள். 42 என்பது இன்னொரு வயதுவரம்பு. பொதுவாக அவர்கள் அந்த காலகட்டத்தில் சென்றுவிடுவதற்குக் காரணம், அப்போது எல்லாம் செய்தாகிவிட்ட நிலையில் இருப்பார்கள், அதனால் விழித்தெழுவார்கள். அவர்கள் இறந்துவிட்டதாக மக்கள் நினைப்பார்கள், ஆனால் இன்னொரு விதமான உண்மைநிலைக்கு அவர்கள் விழிப்பார்கள். தங்களது கனவிலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள். நீங்கள் ஏதோ கனவு கண்டுகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காலையில் அலாரம் அடித்தால் கனவிலிருந்து விழித்துவிடுவீர்கள். அதேபோல், உடல் மற்றும் மனதின் கலவையாக இருக்கும் வேறுவிதமான கனவு ஒன்றை நீங்கள் இப்போது கண்டுகொண்டு இருக்கிறீர்கள், ஒருநாள் அந்தக் கனவிலிருந்து விழித்தெழுவீர்கள், அவ்வளவுதான். தன் கனவின்மீது பற்றுதல் இருக்கும் ஒருவரை, அவர் கனவு கண்டுகொண்டு இருக்கும்போது எழுப்பினால் அவர் அழுவார். கனவு கலைந்ததால் அழும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அற்புதமான கனவு கண்டுகொண்டு இருக்கும்போது, அது கலைந்துவிட்டால், அதை மீண்டும் தொடர முடியவில்லையே என்று குழந்தைகள் எழுந்தபின் அழுகிறார்கள். இதற்கும், சாவை நெருங்கும்போது நீங்கள் அழுவதற்கும் இடையே எந்த வித்தியாசமுமில்லை. இப்போது உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் கண்டுகொண்டு இருக்கும் கனவிலிருந்து விழித்துக்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள். இறப்பு என்பது அப்படி ஓர் விழித்தெழலாகும். அப்படியானால் எல்லோரையும் நாம் எழுப்பிவிடலாமா? இல்லை, அவர்கள் மீண்டும் உறங்கிவிடுவார்கள், எழுப்பி பிரயோஜனமில்லாமல் போய்விடும். அவர்கள் மறுபடியும் தூங்கமுடியாதபடி அவர்களை எழுப்பவேண்டும், அப்போது எழுப்புவதில் அர்த்தமிருக்கும். எனவே இந்த யோகிகள் தங்களது படுக்கை விரிப்புகளை விட்டுவிட்டுச் சென்றார்கள். அப்போது காலியான படுக்கையைப் பார்த்துவிட்டு அவர் போய்விட்டதாக நீங்கள் நினைத்துவிட்டீர்கள். அப்படியில்லை, அவர் விழிப்புணர்வுடன் தன் உடலை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார் – முற்றிலும் மாறுபட்ட உண்மைநிலைக்கு அவர் விழித்தெழுந்துள்ளார்.
Read more at : ஏன் யோகிகளை எரிக்காமல் புதைக்கிறார்கள்?
Read more at : ஏன் யோகிகளை எரிக்காமல் புதைக்கிறார்கள்?
No comments:
Post a Comment