Monday, February 15, 2016

கண் துடிப்பது நல்லதா?...


கண் துடிப்பது நல்லதா?...



கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம்.

வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம். இதன் காரணம் என்ன? விளக்குகிறார் பொது மருத்துவர் முருகேஷ்.

கண் இமைகள் ஏன் துடிக்கின்றன?

கண்ளின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும்.

இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.

எப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.

என்ன காரணம்?

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.

தீர்வு என்ன?

கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள்.

இதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ, மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம். 

1 comment:

  1. நல்ல பகிர்வு
    அறிந்து கொண்டேன்.

    ReplyDelete