Saturday, February 6, 2016

இந்து தர்மத்தில் பூஜை முறைகள்:

இந்து தர்மத்தில் பூஜை முறைகள்:
பூஜையின் நோக்கம்:-
பூஜை எனப்படுவது தெய்வங்களிடம் பக்தி செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்காகும். இந்துக்கள் மட்டுமின்றி பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களும் பூஜைகள் மேற்கொள்வர். பரம்பொருளின் சகுணபிரம்ம நிலையை உபாசிப்பவர்கள், மூர்த்திகளையும் தெய்வீகச்சின்னங்களையும் வைத்து தெய்வங்களை முறையான வழிமுறைகளைப் பின்பற்றி அழைத்து மரியாதையுடன் பக்தி செலுத்துவர்.
பூஜை எனும் சொல்:-
பூஜை எனும் சொல் ’பூசெய்’ எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து தோன்றியதாக பிரபல ஆராய்ச்சியாளர் வரதராஜா வி.ராமன் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘பூசெய்’ என்றால் பூக்களால் (வழிபாடு) செய்தல் எனப் பொருள்படும். மேலும், ’பூசு’ எனும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர். பூசு என்பதற்கு அலங்கரித்தல் என்ற பொருள் உள்ளது.
பூஜை வகைகள்:-
இந்துக்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஐந்து கடமைகளில் வழிபாடு ஒன்றாகும். வழிபாட்டின் ஓர் அங்கம் தான் பூஜை ஆகும். பூஜைகள் என்பது கோவிலிலும் வீட்டிலும் மேற்கொள்ளப்படும். கோவில்களில் மேற்கொள்ளப்படும் பூஜை இறைத்தொண்டில் அனுபவம் பெற்ற மற்றும் இறைவனைப் பற்றியும் தர்மங்களைப் பற்றியும் முழுமையான ஞானமுடைய ஒருவரால் மேற்கொள்ளப்படும். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜை வீட்டுப் பெரியவர்களாலும் பூஜை வழிமுறைகள் தெரிந்தவர்களாலும் மேற்கொள்ளப்படும். கோவிலில் மேற்கொள்ளப்படும் பூஜையும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பூஜையும் சற்று வேறுபடும்.
பூஜை வழிமுறைகள்:-
பூஜைகள் பற்றியும் அதை மேற்கொள்ளும் முறையைப் பற்றியும் கிரியசூத்திரம் எனும் நூல் விளக்குகின்றது. இந்த நூல் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதாகும். இந்த சூத்திரநூல் ”பூஜை எனப்படுவது தெய்வங்களுக்கு மரியாதை செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்குமுறை” என குறிக்கின்றது.
பஞ்ச மகா யக்ஞங்கள் என இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கிய மரியாதைமுறைகளை இந்த நூல் விளக்குகின்றது.
அவை:
தெய்வங்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, முன்னோர்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, சக மனிதர்களுக்கு செய்யவேண்டிய மரியாதை, சக உயிரினங்களுக்கு செய்யவேண்டிய மரியாதை மற்றும் பரம்பொருளான பிரம்மத்திற்கு செய்யவேண்டிய மரியாதை. இவற்றுள் தெய்வங்களுக்குச் செய்யவேண்டிய மரியாதை தான் பூஜையாகும்.
”ஒரு பக்தனை தெய்வீக சக்தியில் நிலைபெற செய்ய பூஜைகள் உதவுகின்றன. தெய்வங்களின் சக்தியும் ஒரு பக்தனின் மனம், புத்தி, புலன்கள், ஆன்மா ஆகியவை இணைந்து ஆன்மீக ஈடேற்றம் ஏற்படுத்தும் வழிமுறை பூஜை. பூஜை என்பது மனிதனின் உணர்ச்சிகளைத் தூய்மையாக்கும் ஒருவகை யோகமுறை எனவும் கூறப்படுகின்றது.” என மதங்கள் சார்ந்த துறையில் PhD பட்டம் பெற்ற திராஸி பின்ச்மன் (Tracy Pintchman) தெரிவித்துள்ளார்.
கோவில் பூஜை:-
கோவிலில் பூஜை மேற்கொள்பவரை பூஜாரி அல்லது பூசாரி என அழைப்பர். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகளைக் காட்டிலும் கோவில்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் மிக நுட்பமானதாகவும் விரிவாகவும் இருக்கும். சில கோவில்களில் பூஜையின் போது 64 வகையான உபசாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
இவை ஒரு நாளைக்கு ஆறு முறைகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வங்கள் அந்த கோவில்களில் குடியிருக்கும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக திகழ்கின்றனர். எனவே தினமும் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் பூஜை தெய்வங்களை ‘எழுப்பும்’ பூஜையாக அனுசரிக்கப்படுகின்றது. பெரும்பாலும் கோவில் பூஜைகள் ஆகமநூல்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளன. எனவே, சைவ கோவில் பூஜைகளும் வைணவ கோவில் பூஜைகளும் சில வேறுபாடுகளை உடையவை.
வீட்டு பூஜை:-
இல்லங்களில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் 16 வகையான உபசாரங்களை உடையவை ஆகும். உபசாரம் என்றால் வரவேற்பு எனப் பொருள்படும். இந்த 16 உபசாரங்களில் ஐந்து உபசாரங்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. எனவே பெரும்பாலான இல்லங்களில் இந்த ஐந்து உபசாரங்களும் பூஜையின் போது பின்பற்றப்படுகின்றன. இல்லங்களைப் பொறுத்தவரை தெய்வ சக்திகள் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்படுகின்றன.
ஐந்து முக்கிய உபசாரங்கள் பஞ்ச உபசார பூஜைகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.
அவை பின்வருமாறு:-
1) கந்தம் (சந்தனம்) – மணமிகும் சந்தனம் படைத்தல்
2) புஷ்பம் (மலர்கள்) – வண்ணப் பூக்கள் படைத்தல்
3) தூபம் (அகர்பத்தி/சாம்பிராணி) – புகையும் அகர்பத்தியும் சாம்பிராணியும் படைத்தல்
4) தீபம் அல்லது ஆரத்தி (விளக்கு) – ஒளிவிடும் தீபங்கள் ஏற்றி ஆரத்தி படைத்தல்
5) நைவெத்தியம் (எளிமையான உணவு) – அன்புடன் தயாரிக்கப்பட்ட உணவை படைத்தல்
பூஜை மேற்கொள்வதன் நோக்கம்:-
மனத்தையும் சிந்தனையையும் தூய்மையாக்கி ஒருநிலைப்படுத்தி, தெய்வீகத்துடன் தொடர்பில் ஈடுபட்டு ஓர் உன்னதமான உணர்வை அடைவதற்காக தான். கண்டிப்பாக ஒவ்வொருவரும் முடிந்தவரை தினமும் காலையில் அல்லது மாலையில் பூஜை மேற்கொள்ள வேண்டும்.
முடியாத நிலையில் வாரத்தில் ஒருமுறை (வெள்ளிக் கிழமைகளில்) பூஜை மேற்கொள்வது சிறப்பு. ஸ்வாமினி பிரமானந்த சரஸ்வதி, நவீன வாழ்வுமுறைக்கேற்றபடி பூஜை மேற்கொள்ளும் எளிய வழிமுறையை தன்னுடைய ’பூர்ண வித்யா’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய இந்துக்களின் பூஜை முறை
இந்தோனேசியாவின் பாலித்தீவில் இந்துக்கள் வாழ்கின்றனர். இங்கு அவர்கள் மேற்கொள்ளும் பூஜை ‘செம்பாஹ்யாங்’ என்றழைக்கப் படுகின்றது. ஜாவா மொழியில் ’செம்பா’ என்றால் மரியாதை செலுத்துதல் அல்லது வழிபடுதல் எனப் பொருள்படும். ஹ்யாங் என்றால் தெய்வம் அல்லது தெய்வீக சக்தி எனப் பொருள்படும். இந்தோனேசிய இந்துக்களைப் பொறுத்தவரை செம்பாஹ்யாங் எனப்படும்
பூஜைமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவர்கள் பூஜை மேற்கொள்ளும் போது வேத மந்திரங்கள் உச்சாடனம் செய்வர். தினந்தோறும் தீபம், தூபம், மலர், மணம், மந்திரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் பூஜை மேற்கொள்வர்.

No comments:

Post a Comment