Sunday, November 20, 2011

கருட மகிமை

கருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும்.
 
1. விசாலா- மந்தகாசமான பார்வை
 
2. கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை
 
3. தாரா-குறுக்குப் பார்வை
 
4. மதுரா-அன்பையும் அருளையும் பொழியும் பார்வை
 
5. போகவதி-தூக்க கலக்கமான பார்வை
 
6. அவந்தீ-பக்கமாக பார்ப்பது
 
7. விஜயா-கணவன் மனைவி இடையே நேசத்தை வளர்க்கக் கூடியது
 
8. அயோத்தியா-வெற்றியைத் தோற்றுவிப்பது.
 
இதனால்தான் வைணவ ஆலயங்களில் கருடனை தரிசித்துக் கொண்டு பெருமாளை சேவிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

பிரதட்சிணம்...

பிரதோஷ கால வழிபாட்டில் முக்கியமாகவும், முத்தாய்ப்பாகவும் விளங்குவது ஈசன், அம்மையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியே இதனைப் "பிரதட்சிணம்'' என்று கூறுவர். பிரதட்சிணத்தில் பல முறைகள் கூறப்பட்டிருக்கிறது. என்றாலும் அவைகளில் மிக முக்கியமான சில பிரதட்சிண முறைகள் வருமாறு:-
 
திரிதளப் பிரதட்சிணம்:
 
இந்தப் பிரதட்சிணத்தில் சுவாமி சந்திரசேகர மூர்த்தி தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் "த்வஜஸ்தம்பம்'' அருகிலிருந்து புறப்பட்டு கோவிலை மூன்று முறை தொடர் சுற்றாக வலம் வருவார். அப்போது அவரைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வதால் ஊடலைத் தீர்த்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும். மேலும் தவறு செய்யாதவர்களைத் தண்டித்த பாவம் போகும்.
 
கர்ப்ப ஸ்ரீபிரதட்சிணம்....
 
இந்தப் பிரதட்சிணத்தில் இறைவியுடன் கூடிய இறைவனைச் கூமந்துகொண்டு அடியவர்கள் அடிமேல் அடிவைத்து நடந்து கோவில் வலம் வரும் போது, அடியார்க்கெல்லாம் முதல்வனாகிய ஈசனும் அம்மையுடன் அசைந்து அசைந்து வருவார். இவ்வலத்தின் போது யாரொருவர் ஈசனைச் சுமக்கும் பேற்றைப் பெறுகின்றார்களோ, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் வந்து தங்க மாட்டார்கள் என்பது உறுதி. அத்துடன், பிள்ளைப்பேறு உண்டாகி வம்சம் தழைத்தோங்கும்.
 
திக்காடி பிரதட்சிணம்....
 
இந்தப் பிரதட்சிணத்தில் தேவியுடன் ஈசனைச் சுமந்த அடியார்கள் முதலில் ஐந்து அடிகள் முன்னே எடுத்து வைத்து அலப்பக்கம் திரும்புவார்கள். பிறகு ஐந்து அடிகள் எடுத்து வைத்து இடப்பாக்கம் திரும்புவார்கள். இப்படியே ஐந்து ஐந்து அடிகளாக எடுத்து வைத்து முன்னேறும் போது ஈசனும் வலப்பக்கம், இடப்பக்கம் என மாறி மாறி சென்று அருள் வேண்டி வந்தவர்க்கெல்லாம் தரிசனம்  தந்து அருள் புரிவார். இவ்வலத்தில் ஈசனை மனம் குளிர திரிசிப்பதால் நாள் பட்ட நோய் தீரும், பால்பாக்கியம் பெருகும், திருமணம் கூடும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் அத்துடன் பொன்னும் பொருளும் சேரும். தெய்வ அருள் கிட்டும்.
 
குழுவி நடை பிரதட்சிணம்.....
 
இவ்வலத்தில் அடியார்கள் அன்னையுடன் சுவாமியைச் சுமந்து கொண்டு ஆடி ஆடி முன்னேறி நடக்க, ஈசனும் "ஆற்றிலே படகு அசைந்து அசைந்து வருவது போல'' வருவார் அப்போது ஈசனைத் தரிசனம் செய்வோர்க்கு மூன்று உலகங்களிலும் தொடரும் நாகதோஷம் நீங்கும்.
 
சோம சூத்ர பிரதட்சிணம்......
 
பலவிதமான பிரதட்சிண முறைகள் கூறப்பட்டிருந்தாலும் ''சோம சூதர் பிரதட்சிணம்'' என்கிற உன்னதமான பிரதட்சிணமே அனைத்திலும் மிகவும் சிறந்த பிரதட்சிண முறையாகும். அதிஉன்னதமான இந்த சோம சுத்த வலத்தில் அன்னையுடன் ஈசனை முறையாக சுமந்து கொண்டு அடியவர்கள் வரும் அழகைக் கண் குளிரக்கண்டு ஆனந்திப்பவர்கள் அனைத்து வகையான செல்வங்களையும் பெறுவதோடு, அவர்களின் பாவச்சுமையையும் குறைத்துக் கொள்கிறார்கள். அத்துடன் "அசுவ மேத யாகம்'' செய்த பலனையும் பெறுகின்றார்கள்.

சுப்ரபாத பலன்கள்

அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கடமுடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.
 
கலியுக தெய்வமாகிய ஸ்ரீ  வெங்கநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
 
ஓம் நமமோ நாராயணாயா...!

சனீஸ்வர பகவான்

சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு 2+3=7 ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை சிரசு சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும் கூறுவர்.
 
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
 
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
 
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
 
சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
 
கந்த சஷ்டி கவச  பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
 
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.

சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.
 
ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். 
 
 
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
 
சனீஸ்வர தீபம்.......
 
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
 
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
 
புஷ்பாஞ்சாலி....
 
சனி பகவானுக்கு வன்னி மலர் மற்றும் நீலோற்பல மலர் மிகவும் விருப்பமானது. சனி பகவானுக்கு உரிய சனிக்கிழ
பலவிதக் கொடுமைகளுக்கும் காரண பூதனாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார்.
 
ஒரு நியாயமான கிரகம். மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது.
 
சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.
 
சாயாதேவிக்கு தப்தி (பத்திரை) சாவர்ணிக மனு சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான்.
 
சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள். இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை.
 
எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக்கிச் சென்றது. கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கும் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.
 
சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள்.  கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.
 
இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். சக்திக்கு மீறிய கவசம் எது? ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது.
 
பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன். அதற்கு சாதாரண முகம் உதவாது. யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார். பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார்.
 
காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.
 
அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண்டாள். பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது. அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார்.  சனி என்ற சிருதகர்மா தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.
 
தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார். சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய் இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான்.
 
மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான் நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும். சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறா ர்

Friday, November 18, 2011

ஆசௌசம்

ஆசௌசம் Print E-mail
ஆசௌசம் உள்ளவரின் வீட்டில் உணவு உண்பதனால் உணவு உண்டவருக்கு வரும் ஆசௌச விபரம்.

அனாவசியமாக ஆசௌசிகள் வீட்டில் உணவு உட்கொள்ளுவதைத் தவிர்ப்பதே மிகவும் நல்லது. ஆசௌசம் இல்லாதவர்களை வற்புறுத்தி உண்ணவைப்பதுவும் பாவமாகும்.
ஆசௌசம் இல்லாத ஒருவன் வேறு வழியின்றி மரண ஆசௌசம் (துடக்கு)உள்ளவர்கள் சமைத்த உணவுகளை உண்ணும்படி நேர்ந்தால் அந்த உணவு ஜீரணமாகும்வரை ஆசௌசம் உண்டு. அதன்பின் ஸ்னானம் செய்து திருநீறு அணிந்து அகோராஸ்திர மந்திரத்தை 1000 உரு ஜபம் செய்தால் சுத்தியடைவர். அல்லது கோவிலில் மந்திரம் ஜெபித்த பஞ்சகவ்வியம் வாங்கி சாப்பிடுவதனாலும் சுத்தியாகும்.
அறியாமல் சாப்பிட்டவருக்கு உடனே ஸ்னானம் செய்தால் சுத்தியாகும்.


ஒரு சில நாட்கள் தொடர்ந்து ஆசௌசிகள் வீட்டில் அவர்களுடன் தங்கியிருக்கவும் சாப்பிடவும் நேர்ந்தாலும் அவர்களைவிட்டு நீங்கியபின்னர், கடைசியாக அங்கு சாப்பிட்ட உணவு ஜீரணமானதும் ஸ்னானம் செய்து திருநீறு அணிந்து மேற்படி அகோராஸ்திர மந்திரத்தை ஜபம் செய்தால் சுத்தியாகும். ஆசௌசம் இல்லாதவர்கள் சமைத்த உணவு அல்லது விலைக்கு வாங்கிய உணவுகளை மரணவீட்டிpற்கு எடுத்துவந்து அங்கு பரிமாறும்பொழுது அதை உண்ணுபவர்களுக்கு ஸ்னானம் செய்த உடன் சுத்தமுண்டாகும்.

Thursday, November 17, 2011

ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம்

» ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம்

ஐந்தொழில் தத்துவத்திள் மஹோற்சவம்


 
மகோற்சவம் என்பது பெரிய விழா எனப் பொருள்படும். நித்திய பூசை, மாச உற்சவம் போன்றவற்றில் இடம்பெறும் குறை குற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக மஹோற்சவம் நடைபெறுகிறது. இது இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தினை உணர்த்துகின்றது.

அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்கின்ற நாளாகும். அதில் ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினம் மிகவும் சிறப்பு மிக்கதாகும். எம்மை விட்டு பிரிந்து இறைபதம் எய்திய பிதிர்களுக்கும், மூதாதையர்களுக்கும் தர்ப்பணம் செய்து தானங்கள் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதற்குரிய நாளாகும்.

சிறப்பாக தந்தையை இழந்தவர்கள், அவருடைய மூதாதையர்களுக்கு ஆடி அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தர்ப்பணம் செய்து தீர்த்தமாடி தங்களால் இயன்றளவு தான தருமங்களைச் செய்தல் வேண்டும். இதனால் பிதிர்கள் சந்தோஷமடைந்து எங்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும், குழந்தைப் பாக்கியம், தோச நிவர்த்தி, நோய்களற்ற தேக ஆரோக்கிய த்தினையும் வழங்குவர் என்பது திண்ணம். இதனால் கட்டாயம ¡க தந்தையை இழந்தவர்கள் தீர்த்தமாடி தானங்களை வழங்குவதால் சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.

மஹோற்சவத்தின் போது மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கும் இறைவன் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். அதாவது இறைவன் இக்காலங்களில் தம்பம் (கொடிமரம்) சிவாச்சாரியார் (குருக்கள்) யாகசாலை (கும்பம்) போன்ற இடங்களுக்குள் வந்து இறையன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

கொடியேற்றத் திருவிழா படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. கொடிமரம் பதி (பரம்பொருள்), கொடிச்சீலை பசு (ஆன்மா), கயிறு - பாசம் (கன்மவினைகள்) ஒரு ஆன்மாவானது தான் செய்த கன்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுத்து பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றது.

ஆன்மா ஆணவம் கன்மம், மாயை என்று சொல்லப்படும் பாசத்தில் இருந்து விடுபடுகின்ற போது பரம்பொருளின் திருப்பாதத்தினை அடையலாம். மல நீக்கம் பெற்ற ஆன்மா இறைவனை அடையும் என்ற தத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது.

இறைவனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அதாவது ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பவையாகும்.

இதேபோல் ஐந்து முகங்களை கொண்ட கணபதி ஹேரம்ப கணபதி என அழைக்கப்படுகின்றது. ஐந்து யானைத்தலையுடன் பத்து கண்களும், பத்து திருக்கரங்களையும் கொண்டு ஒரு நோக்காக பஞ்ச முக விநாயகர் பார்க்கின்ற போது மக்களுக்கு இருக்கின்ற துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. இந்த பஞ்சமுக விநாயகருக்கு தினமும் பஞ்சமுகார்ச்சனை இடம்பெறுவது மிகச்சிறப்பாகும்.

இறைவனை திருவிழாக் காலங்களில் வாகனங்களில் ஏற்றி வெளி வீதி வருகின்ற போது இறைவன் இன்னும் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். இது காத்தல் தொழிலை குறிக்கின்றது.

சாந்த மூர்த்தியாக இருக்கின்ற இறைவன் மலநாசம் செய்வதற்காக மாணிக்கப் பிள்ளையார் திருவேட்டை திருவிழாவில் புறப்படுகிறார். எங்களிடம் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை போன்ற மும்மலங்களால் நாம் தினமும் பல்வேறு வகையான துன்பங்களுக்குள் உழன்று தத்தளிக்கிறோம். இந்த மலங்களை அழித்து எங்களை நல்லவர்களாக மாற்றுவதற்காகவே இறைவன் திருவேட்டை தினத்தன்று அழித்தல் தொழிலைச் செய்கின்றார்.

முன்னொரு காலத்திலே சிவனிடம் நாரதர் மாங்கனியைக் கொடுத்து பிள்ளையாருக்கும், முருகனுக்கும் இடையில் போட்டியை ஏற்படுத்தி விநாயகர் வெற்றி பெறுவதும் முருகன் கோபித்து பழனிமலை செல்வதும், பெற்றோர் சாந்தப்படுத்தி திரும்ப கூட்டிவருவதும் போன்ற காட்சிகள் மாம்பழத் திருவிழாவில் இடம்பெறுகின்றது. எமது குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து விட்டுக் கொடுப்புடன் வாழவேண்டும் என்ற தத்துவத்தினை உணர்த்துகின்றது.
நீர் நிலைகளில் மிகச் சிறந்தது சமுத்திரமாகும். ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் அருள் பாலித்த விநாயகப் பெருமான் நீர்நிலைகளில் இருக்கின்ற உயிரினங்களுக்கும் தனது அருளை வழங்க சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெறுகின்றது. மக்களுக்கும், உயிரினங்களுக்கும் தனது அருளால் தொழிலைச் செல்வதே தீர்த்தமாகும். இக்காலங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுவது சிறந்ததாகும்.

பத்து நாட்களாக கொடிமரத்தில் இருந்து அருள் வழங்கிய இறைவன் மல நீக்கம் பெற்ற ஆன்மாவினை தன்னுடன் சேர்த்துக் கொள்வதே கொடியிறக்கமாகும். இதன்போது மறைத்தல் தொழிலை இறைவன் செய்கின்றார்.

இறைவன் மீது சதா சிந்தனையில் இருப்பவர் சண்டேஸ்வரர் நாயனார். இறைவனை வணங்கிய பின் இவரை வணங்கினால் தான் அதன் பலன் முழுமையாக எங்களுக்கு கிடைக்கும். அதனால்தான் சண்டேஸ்வரருக்கு உற்சவம் எடுத்து திருவிழாவின் பூரண பலனையும் நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம்.

இறைவன் சிவாச்சாரியாரிடத்தில் வந்து உறைகின்றான். அதனாலும் உற்சவத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்கு நன்றி சிவாச்சாரிய உற்சவம் இடம் பெறுகின்றது

குத்துவிளக்கு

குத்துவிளக்கு




குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி,
வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டு.
தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
விளக்கின் மகிமை
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில்
தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும். விளக்கேற்றும் முகத்தின் பலன்
குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் - பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் அணைக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்
பசு நெய்: செல்வம் பெருகும்
நல்லெண்ணெய்: உடல் ஆரோக்கியம்
விளக்கெண்ணெய்: புகழ் தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.
மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

தீபாராதனை

பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,

     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
     ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
     ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
     ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”

என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.

பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.

உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;

     “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
     விளக்கினின் முன்னை வேதனை மாறும்
     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”

என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.

கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.

தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.

தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.

     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட
     சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.

     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
     பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ?
     ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
     நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ?”
(தாயுமானவர்).

தீபாராதனை தத்துவ விளக்கம்

   றைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.
இறைவன் முருகனை அருணகிரிநாதர், "தீப மங்கள ஜோதி நமோ நம' என்று போற்றுகிறார். மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை "ஒளி வளர் விளக்கே' என்றும்; "சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே' என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.

கோவில்களில் செய்யப்படும் தீபாராதனைகளைப் பற்றியும், அவற்றைச் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. தீபாராதனை என்பது வெறும் சடங்காக மட்டுமின்றி, உலகின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் காட்டும் தத்துவ விளக்கமாகவும் அமைந்துள்ளது. இனி கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் அதன் தத்துவத்தையும் சிறிது பார்ப்போம்.

கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தங்களுக்கு முன்பு திரையிடப்பட்டிருக்கிறது. திரைக்கு உள்ளே இருந்து பூஜையை குருக்கள் ஆரம்பிக்கிறார். முதலில் மணியோசை கேட்கிறது. எல்லையில்லா வெற்றிடத்தில் முதலில் ஒலியே பிறக்கிறது. ஒலியில் இருந்து ஒளி பிறப்பது ஒரு தீபத்தின் மூலம் காட்டப்படுகிறது.

ஒலியில் இருந்து இறைவன் அருளால் பல நிலைகளில் உள்ள ஜீவன் பிறப்பதை அடுக்கு ஆரத்தி உணர்த்துகிறது. இப்போது திரை நீக்கப்பட்டு அடுக்கு ஆரத்தியைப் பார்க்கிறோம். அண்டவெளியில் புலப்படாதிருந்த உலகம் திரையை விலக்கிக்கொண்டு நமக்குத் தெரிகிறது. இறைவன் உயிரில் கலந்து உருவமாகப் புலப்படுவதும் திரை விலகிய பிறகு இறை வடிவத்தைக் காண்பதும், அதன் முன்னே இருக்கும் அடுக்கு ஆரத்தியும் குறிப்பிடுகின்றன. அடுக்கு ஆரத்தியில் தீபங்கள் பல தட்டுகளில் இருந்தாலும், அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தைக் குறிப்பிடுகின்றன.

பிறகு ஐந்து தட்டுகள் காட்டப்படுகின்றன. இவை சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்சபூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. பிறகு ஐந்து பூதங்களும் சேர்ந்து பிரபஞ்ச வடிவமாக விளங்கும் கும்பாரத்தி காட்டப்படுகிறது. கும்பம் அண்டத்தையும், அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் இறைவனையும் குறிப்பிடுகிறது.

அதையடுத்து நாகதீபம், மயூரதீபம், குக்குட தீபம், ரிஷப தீபம், கஜதீபம், புருஷாமிருக தீபம், புருஷ தீபம், அஸ்திர தீபம் ஆகியவை காட்டப்படுகின்றன. இவை மூலம் முதலில் ஊர்வன, அடுத்து பறப்பன, அடுத்து மனிதனும் விலங்குமாகிய புருஷாமிருகம், அடுத்து மனிதன், இந்த வளர்ச்சிக்குப் பிறகு வாழ்வதற்கான ஆயுதம் ஆகியனவும் விஞ்ஞான முறையில் காட்டப்பட்டு வருகின்றன. இவை உருவத்தால் வேறுபட்டிருப்பினும் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு இயங்குவன என்னும் பொருள்பட அவற்றின்மீது பிரபையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.

இவ்வாறு ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றிய ஜீவன் பல நிலைகளைக் கடந்து அறிவால் இறைவனை அறிந்து கொள்கிறது. இந்த ஆன்மா ஒரே ஆரத்தியாகக் காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அதன்மீது விபூதி தெளிக்கப்படுகிறது.

அடுத்து ஏழு கிளைகளையுடைய கர்ப்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. விபூதிகள் கைவரப்பெற்று உயிர் பத்துவித குணங்களைக் கொள்கிறது. குணங்கள் கூடிக்கொண்டு வருவதை இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்று வரிசையாக தீபங்களாகக் காட்டப்படுகின்றன.

பக்குவம் அடைந்த ஜீவன் இறைவனின் சாரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. எனவே எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப்படுகிறது. கிழக்குத் திசையான இந்திரன் திசையிலிருந்து குடையும், தென்கிழக்கான அக்னி திக்கில் இருந்து அடுக்கு தீபமும், தெற்கு திசையாகிய யம திக்கில் இருந்து சுவஸ்திகமும், தென்மேற்கு திசையாகிய நிருதி திக்கில் இருந்து சாமரமும், மேற்கு திசையான வருண திக்கில் இருந்து பூரண கும்பமும், வடமேற்கு திசையான வாயு திக்கில் இருந்து விசிறியும், வடக்கு திசையான குபேர திக்கில் இருந்து ஆலவட்டமும், வடகிழக்கு ஈசான்ய திக்கில் இருந்து கொடியும் கொண்டு வரப்பட்டதாகக் கருதி அவை காட்டப்படுகின்றன.

கோவில்களுக்குச் செல்பவர்கள் ஏதோ தீபாராதனை விதவிதமாகக் காட்டப்படுகிறது என்று நினைத்து விடாமல்- இதன் மூலம் ஆன்மா எல்லையற்ற பரந்த வெளியில் நிறைந்திருக்கும் இறைவனிடமிருந்து முதலில் ஒலியாகவும், பின்னர் ஒளியாகவும், அதிலிருந்து படிப்படியாக உலகமாகவும், அதில் நிறைந்த உயிர்களாகவும் தோன்றுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மூலமான இறைவனிடம் தோன்றிய ஆன்மா உலகை அடைந்து இங்குள்ள உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறது. அதில் சிக்கிக் கொள்ளாத ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதைக் குறிக்கும் வகையில் வேதங்கள் முழங்கப்படுகின்றன. இறைவனின் வார்த்தை களான வேதத்தின் வழி செல்லும்ஆன்மா தன்னை உணர்ந்து கொண்டு படிப்படியாக முன்னேறு கிறது. இதையே ஒன்று முதல் பத்து வரையில் உள்ள தீபங்கள் குறிப்பிடு கின்றன. நற்குணங்களால் நிறையப் பெற்ற ஜீவனை எட்டு திசைகளில் உள்ளவர் களும் வாழ்த்துகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் குடை, அடுக்கு தீபம், சாமரம் ஆகியவை காட்டப் பெறுகின்றன.
பின்னர் கற்பூர தீபம் காட்டப்படுகிறது. இதுவே பூரண நிலை எய்திய ஜீவனின் நிலையாகும். கற்பூரம் எரிந்து காற்றில் கலந்து விடுவதைப்போலவே, ஜீவனும் தன் பாசப் பிணைப்பை உதறிவிட்டு பகவானோடு ஐக்கியமாவதை இதனால் உணர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் விபூதி அளிக்கப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த உலகத்தின் தோற்றத்தையும் இறுதியில் அது ஒடுங்கி விட்டதையும் குறிக்கும் வகையில் நெருப்பின் மீதியான சாம்பல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

Monday, November 14, 2011

இருமுடியில் இருக்க வேண்டியவை

சபரிமலை பக்தர்கள் மாலை அணிதல்

இருமுடியில் இருக்க வேண்டியவை
சபரிமலைக்கு கிளம்பும் முன், உங்கள் இருமுடியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீலநிறத்துணியில் இருமுடியைத் தயார் செய்ய வேண்டும். ஒரு பையில், வெற்றிலை, பாக்கு, காசு, நெய் தேங்காய் ஆகியவற்றை முதலில் வைக்க வேண்டும். பின், கற்பூரம், விபூதி, மஞ்சள் தூள், ஊதுபத்தி, அவல், பொரி, பன்னீர், கற்கண்டு, நல்லமிளகு, புகையிலை ஆகியவற்றை வைக்க வேண்டும். நெய் ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் தேங்காயை உடைத்து நெய்யை அபிஷேகத்திற்கும், தேங்காயின் ஒரு மூடியை அங்கே எரியும் ஆழியிலும் சேர்த்து விட வேண்டும். ஒரு மூடியை பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு கொண்டு வரலாம். கற்கண்டை அதற்கான தனி உண்டியலில் போட்டு விடலாம். மாளிகைப்புறத்து அம்மனுக்கும், நாகருக்கும் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். கடுத்துவா சுவாமிக்கு (கடுத்த சுவாமி) அவல் பொரியும், வாவருக்கு நல்ல மிளகும், கருப்ப சுவாமிக்கு புகையிலையும் சமர்ப்பிக்க வேண்டும். காசை உண்டியிலில் போட்டு விடுங்கள். இருமுடியின் பின்பகுதியில் இரண்டு தேங்காய், பச்சரிசி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஏறுதேங்காய், இறங்கு தேங்காய் என்பர். ஒன்றை படி ஏறும் போதும், ஒன்றை வேறுபாதையில் இறங்கும் போதும் உடைப்பதுண்டு.
கரிமலை மூர்த்திக்கும், விநாயகருக்கும் தேங்காய் உடைக்கும் பழக்கமும் உண்டு. இதற்குரிய காய்களை தனியாக ஜோல்னா பையில் வைத்துக் கொள்ளவும். இருமுடியை தலையில் வைக்கும் முன் ஒரு சால்வையை தலையில் போட்டு அதன்மேல் முடியை தூக்கி வைக்கவும்.

மாலை அணிந்தவர்கள் பின்பற்றவேண்டியவை
1. காலை மாலை இருவேளையிலும் குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை மனதார நினைத்து வழிபடவேண்டும்.
2. கருப்பு, நீலம், காவி நிற வேட்டி, சட்டை அணிய வேண்டும்.
3. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
4. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.
5. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
6. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.
7. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.
8. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.
9. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.
10. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

பெண் பக்தர்களே! அடையாள அட்டை இருக்கிறதா!
சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. இதில் சில குழந்தைகளுக்கு பத்து வயதானாலும் கூட வயது கூடியவர்கள் போல் தோற்றமளிப்பர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சிலர் இளமையாக தோற்றமளிக்கலாம். இந்தச் சூழலில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், துணையாக வரும் ஆண் பக்தர்கள் அவர்களை பம்பையிலேயே விட்டுவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு அவர்கள் தங்கள் பேன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பிறந்த நாளுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அல்லது வயதை நிரூபிக்கும் ஏதேனும் ஒரு சான்றைக் காட்டி அனுமதி பெறலாம். மறக்காமல் உங்கள் அடையாள அட்டையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா?

பிரணவம்- சொல் விளக்கம்!

"ஓம்' என்பதை "பிரணவ மந்திரம்' என்று சொல்கிறார்கள். பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா? "என்றும் புதியது' என்று அர்த்தம். "ஓம் ஓம் ஓம்' என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் "ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி' என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. "என்றும்

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

 

ஒரு ஆணின் பெயர் ரேஷன் கார்டில் மட்டும் வீட்டுத்தலைவர் என்ற இடத்தில் இருந்து பயனில்லை. நிஜமாகவே, அவன் வீட்டுத்தலைவனாக இருக்க வேண்டும். சம்பாதிக்கிற பணத்தை பொறுப்புடன் அம்மாவிடமோ, மனைவியிடமோ ஒப்படைக்க வேண்டும். "என் புருஷன் எனக்கு ஒண்ணுமே தருவதில்லை' என்று ஒரு மனைவி சொன்னால், அது அந்த ஆணுக்குத்தான் கேவலம். காரணம், "புருஷன்' என்ற சொல்லின் முதல் இரண்டெழுத்தான "புரு'என்பதற்கு "நிறையக் கொடுக்கிறவன்' என்றும், "எடுக்க எடுக்க குறைவில்லாதவன்' என்றும் அர்த்தம். அதாவது, குடும்பத்துக்கு தேவையான அளவு பொருளைக் கொடுக்க வேண்டும். மேலும், தேவைப்பட்டாலும் கொடுக்க தயாராகும் அளவு உழைப்பாளியாகத் திகழ வேண்டும். இனியாவது, "புருஷன்' என்ற பட்டத்தை பெயரளவுக்கு வச்சுக்காம, வீட்டுக்கு ஏதாச்சும் கொடுக்கிற வழியைப் பாருங்க!
 தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

தாய்க்குப் பின் மனைவி' என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் "தாரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. "தாரம்' என்றால் "மகிழ்ச்சி'. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு "தாரம்' இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை "தாரம்' என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும். 

ருத்ராட்சம்


ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவி பாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. திரிபுராசுரன் என்ற அரக்கனைக் கொன்று, தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமான் 33லட்சம் ஆண்டுகள் கண்களைத் திறந்தபடி தவமிருந்தார். தவத்தின் முடிவில் கண்களை மூடியபோது, அதில் இருந்து விழுந்த துளிகளில் ருத்ராட்சம் உற்பத்தியானது. ருத்ராட்சம் என்ற சொல்லுக்கு "சிவனின் கண்கள்' என்று பொருள். இதுபற்றிய தகவல் தேவிபாகவதம் நூலில் சொல்லப்பட்டுள்ளது. நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அன்னபூரணி

நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் "அன்பே சிவம்' என்று குறிப்பிடுகிறார். "அறிவான தெய்வமே' என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.
""அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!! '' என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார்.
""எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும் (உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும்,'' என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால் வேண்டுகிறார்

அன்னாபிஷேகம் செய்வது ஏன்


  சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, "இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. "அன்னையோடு அறுசுவை உண்டிபோம்' என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். அதனால் தான் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்பர்.

சோத்துக்குள்ளே சொக்கநாதர்
வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். "தானத்தில் சிறந்தது அன்னதானம்' "சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி' "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' "அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது' போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,"ஒருவன் வேண்டும்' என்று கேட்ட அதே வாயால் "போதும்' என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.

வள்ளலார் சொல்வதைக் கேளுங்க! 

 அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவகாருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும் வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,""சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கந்த நாமச் சிறப்பு

அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவன், அவர் மீது பொறாமை கொண்டான். ஒருமுறை, அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டானுக்கும் யாருடைய பக்தி மேலானது என்ற விவாதம் எழுந்தது. திருவண்ணாமலையை ஆட்சி செய்து மன்னன் பிரபுடதேவன் இப்போட்டிக்கு தலைமை வகித்தான். அருணகிரிநாதர் முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார். ஆனால், சம்பந்தாண் டான் முருகனின் காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து தடுத்தான். சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தின் இடப்புறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், "கம்பத்து இளையனார்' என்று பெயர் பெற்றார். இதனை திருப்புகழில் ""அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா'' என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார்.



 "ஸ்கந்தர்' என்றால் "துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர்' என்று அர்த்தம் பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை "ஸ்கந்த ஷஷ்டி' என்றே சொல்கிறோம். அம்பாளோடும் "முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் "சோமாஸ்கந்தர்' என்றே பேர் இருக்கிறது. "முருகன்' என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.

திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது-வயலூர்



"வயலூர் இருக்க அயலூரைத் தேடி அலைவானேன்?' என்பது பழமொழி. வள்ளல் போல் பன்னிரண்டு கைகளால் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகன் வாழும் ஊர் வயலூர். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தன் கைகளில் தாங்கிய முருகன் "வயலூருக்கு வா' என்று அழைத்தார். இங்கு தான் "முத்தைத்தரு பத்தித்திருநகை' என்று திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தார். பதினெட்டுப் பாடல்களை அருணகிரிநாதர் இங்கு பாடினார். பிறதலங்களில் இருக்கும் முருகனுக்கு வேண்டிய நேர்த்திக் கடன்களை வயலூர் முருகனுக்கு நிறைவேற்றலாம். வாரியார் சுவாமிகள் வயலூர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வயலூர் சென்று வள்ளி மணாளனை வழிபட்டால்

தீபாவளியன்று சூரியோதயத்துக்கு நாற்பத்தெட்டு நிமிஷம் எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும்


எல்லா நாளும் தீபாவளி

தராசுக்கு "துலாக்கோல்' என்று பெயருண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசியை துலாமாதம் என்பர். துலாஸ்நானம் என்னும் புனித நீராடல் இம்மாதம் முழுவதும் காவிரியில் நடைபெறும். துலாக்கோலான தராசு எப்படி நடுநிலையாகத் தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதமில்லாமல் செயல்படுபவனே நீதிமான். நீதிபதி முன் இருக்கும் பெண்தேவதையும் நீதியின் அடையாளமாகத் தராசு கையில் வைத்திருப்பதைக் காணலாம். சத்தியபாமா பெற்ற மகன் என்றும் பாராமல், உலகுக்கு கேடு செய்ததன் மகனை அழித்து நீதியை நிலைநாட்டினாள். அதேநேரம் தாய்பாசத்தோடு தீபாவளியைக் கொண்டாடவும் வழிகாட்டினாள். நீதியுணர்வும், மனவுறுதியும் உள்ள நாள் தீபாவளித் திருநாள் போல் என்றும் ஒளி வீசும்.


 
ஏழுபண்டாக்கள் பூஜை

தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது காசி. காசியில் கங்கைக்கு முக்கியத்துவம். இதில் 64 நீராடும் தீர்த்தக்கட்டங்கள் அமைந்துள்ளன. அதில் மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம் மிகவும் விசேஷமானதாகும். பெரும்பாலான மக்கள் மணிகர்ணிகாவில் நீராடியே கங்கை தீர்த்தம் எடுப்பார்கள்.
இங்குள்ள காசிவிஸ்வநாதருக்கு பக்தர்களே கங்கைநீரால் அபிஷேகம் செய்து பூஜிக்கலாம். இங்கு தினமும் இரவு7.45 முதல் 8.30 மணிவரை நடைபெறும் சப்தரிஷி (ஏழு ரிஷிகள்) பூஜையைத் தரிசிப்பது சிறப்பாகும். அத்திரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி என்னும் ஏழுரிஷிகள் இந்நேரத்தில் பூஜிப்பதாகச் சொல்வர் இதைக்குறிக்கும் வகையில் ஏழுபண்டாக்கள்(ஏழு அர்ச்சகர்கள்) சூழ்ந்து நின்று காசிவிஸ்வநாதரை அர்ச்சனை செய்வார்கள்.
 எண்ணெய்க்குளியல் எத்தனை மணிக்கு - பெரியவர் சொல்றபடி செய்யுங்க

 சூர்யோதயத்துக்கு முன் அப்யங்கனம்(எண்ணெய்க் குளியல்) பண்ணக்கூடாது என்பது விதி. ஆனாலும், இதற்கு வித்தியாசமாக ஒரு விதியை பகவானிடமிருந்து வரமாக வாங்கி விட்டால் பிள்ளையை(நரகாசுரனை) பற்றி விசேஷமாக இருக்கும் என்று பூமாதேவி நினைத்தாள். அதனால், தீபாவளி நாளில் மட்டும் சூரியோதயத்துக்கு முந்தி அருணோதய காலத்தில் எண்ணெய் ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரம் கேட்டு அதற்காக பகவானின்
அங்கீகாரத்தைப் பெற்றாள்.
அருணோதயம் என்றால் அருணனின் உதயம். அருணன் சூரியனுடைய தேரோட்டி. அவன் ஒரே சிவப்பாக இருப்பான். நல்ல சிவப்புக்கு "அருணவர்ணம்' என்று பெயர். சூரியன் அடிவானத்தில் தெரிவதற்கு முன்ஒரு முகூர்த்த காலத்துக்கு முந்தியே வானில் சிவப்பு பரவ ஆரம்பித்து விடுவதைத் தான் அருணோதயம் என்பது. ஒரு முகூர்த்தம் என்பது இரண்டுநாழிகை. அதாவது நாற்பத்தெட்டு நிமிஷம்.
தீபாவளியன்று சூரியோதயத்துக்கு ஒரு முகூர்த்தம் முந்தியே எண்ணெய் தேய்த்து குளித்துவிட வேண்டும். சிலர், விடிவதற்கு முன்னால் அப்யங்கனம் (எண்ணெய்க் குளியல்) செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ராத்திரி இரண்டு மணி, மூன்று மணிக்கே ஸ்நானம் செய்கிறார்கள். இப்படி செய்வது தப்பு.
இந்த ஆண்டாவது காஞ்சிப்பெரியவர் சொல்றதைக் கடைபிடிப்போமா!

காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள் -10

தீபாவளியன்று காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு.
""விசுவேசம் மாதவம் டுண்டிம்
தண்டபாணிம்ச பைரவம்
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்''
விஸ்வநாதர், பிந்துமாதவர், துண்டிவிநாயகர், தண்டபாணி, காலபைரவர், காசி மாதா, வராஹி, புனித கங்கை, அன்னபூரணி, மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம் ஆகிய பத்தும் அவசியமாக தரிசிக்கவேண்டியவை. இதில் தண்டபாணி காசியின் காவல் தெய்வம். காலபைரவர் கோயிலில், காசிமாதா சந்நிதி உள்ளது. "குஹாம்' என்றால் வராஹி. காசிமாதா சந்நிதிக்கு மேற்கில் உள்ள குகையையும் குஹாம் என்பர். பத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது நல்லது. வரிசைப்படி தரிசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தரிசனத்துக்கு "நித்திய யாத்திரை' என்று பெயர்.

ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க

ஆண்டு முழுவதும் தொழில் லாபகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக, தீபாவளியன்று லட்சுமி தேவியைப் பிரார்த்திப்பர். அன்று இரவில் மண் அகல்களில் விளக்கேற்றுவர். அமிர்தசரஸ் பொற்கோயிலில் தீபாவளி வழிபாடு சிறப்பாக நடக்கும். இதில் பல்லாயிரக்கணக்கான தீபங்களை ஒரே நேரத்தில் ஏற்றுவது கண்கொள்ளாக் காட்சி. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களைப் பாதுகாத்த கிருஷ்ணருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் உத்தரபிரதேச மக்கள். குறிப்பாக விவசாயிகள் கோவர்த்தன பூஜையைத் தீபாவளியன்று நடத்துவது வழக்கம்.

மும்மூர்த்திகளுக்கும் தொடர்புள்ள புனிதநீர் கங்கை

பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகத்தை அளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாய கங்கையாக ஓடியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவபெருமான் தன் தலையில் அந்நீரைத் தாங்கி "கங்காதரன்' என்ற பெயர் பெற்றார். பின்னர், பகீரதனின்
கோரிக்கைக்கு இணங்கி பூமிக்கு வந்தது கங்கை. எனவே, சிவனின் தலையில் இருந்தாலும், பூமிக்கு வந்தாலும் அதன் பெயர் கங்கை தான். வீட்டில் நீர் எடுத்து கும்பத்தில் வைத்து, நூல் சுற்றி மந்திரங்களை ஜெபித்தால், அந்நீரிலும் கங்கை ஆவாஹனம் ஆகிவிடும். எனவே, விஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும் உரியதாக கங்காதீர்த்தம் அமைந்துள்ளது. ஆக, பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தொடர்புள்ள புனிதநீர் கங்கையில் தீபாவளிநாளில் ஸ்நானம் செய்கிறோம்.

ராமனுக்கும் தீபாவளி

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமரும், கிருஷ்ணரும் முக்கியமான அவதாரங்கள். இதில் கிருஷ்ணரோடு மட்டும் தீபாவளியைத் தொடர்புபடுத்தி புராணக்கதை கூறுவர். இந்நாள் ராமரின் வாழ்க்கையோடும் தொடர்பு கொண்டதாகும். ராவணவதம் முடித்து விட்டு, ராமர் மீண்டும் அயோத்திக்கும் திரும்பி பட்டம் கட்டிக் கொண்ட நாளே தீபாவளி. ராமன் சத்தியம் மற்றும் வீரத்தின் வடிவம். இதனை வால்மீகி, "ராமம் சத்தியம் பராக்கிரமம்' என்று போற்றுகிறார். அந்த சத்தியத்தை உள்ளத்தில் ஏற்பதன் அடையாளமாக, வீடுகளில் ஒளி விளக்குகளை வீட்டில் ஏற்றி மக்கள் கொண்டாடுகின்றனர்.

குபேரபூஜை

செல்வத்தின் அதிபதியான திருமகளின் அருள் கிடைக்க, தீபாவளியன்றோ அதற்கு மறுநாளோ குபேரபூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு "ராஜாதிராஜன்' என்ற பெயர் உண்டு.
யட்ச கணங்களின் தலைவனான குபேரன் சாந்த குணம் கொண்டவர். "பஞ்சதசீ' என்னும் மந்திரத்தை ஜெபிக்கும் இவர் இருக்கும் இடத்தில் திருமகள் நித்யவாசம் செய்வதாக ஐதீகம். செல்வத்தை வழங்கும் சங்கநிதி, பதுமநிதி என்னும் பிரதிநிதிகள் குபேரனுடைய இருபுறமும் வீற்றிருப்பர். சிவபெருமானைக் குறித்து தவம் செய்து, அஷ்டதிக் பாலகர்களில் (எட்டுதிசை அதிபதிகள்) இடம்பெற்ற இவர், வடதிசைக்கு உரியவராவார். இதனால் தான் வடக்கு நோக்கிய வீடு வாழும் என்ற சுலவடை வந்தது. வீடு கட்டுபவர்கள் வடக்கு வாசலைத் தேர்ந்தெடுப்பதும் இதனால் தான். தீபாவளி மட்டுமின்றி, வெள்ளிக்கிழமைகளிலும் இவரை மல்லிகை மலர் தூவி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நவக்கிரக மண்டபத்தில் கல்வி மற்றும் திருமணப் பார்வைக்குரிய குரு பகவான் வடக்கு நோக்கியே இருக்கிறார்

கலப்படமில்லாத சந்தோஷம் எங்கிருக்கிறதோ, அதை தேடுவோம்.

மனசில் ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், பொய், பொறாமை எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்று என்று ஆசைப் பூர்த்திக்கான விஷயங்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு பேய் மாதிரி ஆட்டி வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் இத்தனை காரியங்களையும் செய்கிறோம். என்றாலும், இந்த காரியங்களினால் அதிகபட்சமாக அடையக்கூடிய சந்தோஷம் சிலகாலம் மட்டும் இருந்து விட்டு மறைந்து போய் விடுகிறது. எதுவுமே கலப்படம் இல்லாத சந்தோஷமாக இல்லாமல் கையோடேயே ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது.
பட்சணம் சாப்பிட்டால் சந்தோஷமாயிருக்கிறது. வயிற்றுவலியும் கூடவே வருகிறது என்பது வயிற்றுப்பசி விஷயத்தில் மட்டும் தான் என்று இல்லை. கண்ணின் பசி, காதின் பசி, சரீரப்பசி, எண்ணத்தின் பசி, பணப்பசி எல்லாவற்றிலும் இதே தான் நடக்கிறது. குழந்தை விளையாடிப் பார்த்தால் சந்தோஷமாயிருக்கிறது. அதற்கு ஒரு காய்ச்சல் வந்து விட்டால், இந்த சந்தோஷத்தைப் போல நாலுமடங்கு கவலை ஏற்படுகிறது.
கலப்படமில்லாத சந்தோஷம் எங்கிருக்கிறதோ, அதை மனசுக்காக தேடுவோம்.

வியாதியின் பெயருடையவன் /அம்பாளின் பெயர் "சாட்சி'

கோர்ட்டில் தானே "சாட்சி' என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்! அம்பாளுக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது எனக் குழம்ப வேண்டாம். சாட்சி என்பதை சமஸ்கிருதத்தில் "சாக்ஷி அல்லது சாக்ஷி' என்று உ<ச்சரிப்பார்கள். அன்னை பராசக்திக்கு "விச்வ ஸாக்ஷிணீ' என்ற பெயர் உண்டு. "விச்வம்' என்றால் "உலகம்'. "ஸாக்ஷிணீ' என்றால் "சாட்சியாக இருப்பவள்'. உலக மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் அவள் சாட்சியாக இருக்கிறாள். "ஸர்வதோக்ஷி' என்றும் அவளைச் சொல்லலாம். அதாவது எங்கும் தலையும், முகமும், கண்களும் கொண்டவள். இதையே கிராமமக்கள் "ஆயிரம் கண்ணுடையாள்' என்கின்றனர். இதனால், அவள் பார்வைக்கு தப்பி, எந்த ஒரு மனிதனும் எந்தச் செயலையும் செய்ய முடியாது. அவள் பார்க்கவில்லை என்று இப்போது நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மரணத்துக்குப் பின் அவள் முன்னால் நின்று தண்டனை பெறும்போது தான் இதை உணர்வார்கள்.



 
அழகான பெயர்களைத் தேடி எண்கணித நிபுணர்களைத் தேடி அலைவது இந்தக் காலம். ஆனால், அந்தக்காலத்தில் ஒரு அசுரன், வியாதி ஒன்றின் பெயரை தனக்கு வைத்திருந்தான். அவனது பெயர் "முயலகன்'. நடராஜரின் திருவடியின் கீழே ஒரு அசுரன் அழுந்திக்கிடப்பானே அவன் தான் இவன். அவனை முயலகன், முஸலகன், அபஸ்மார புருஷன் என்றெல்லாம் அழைப்பார்கள். "அபஸ்மாரம்' என்றால் "காக்கை வலிப்பு'. காக்கை வலிப்பு நோய் வந்தவனின் கைகளும், கால்களும் எப்படி இழுக்குமோ, அதே "போஸில்' நடராஜரின் காலடியில் படுத்திருப்பான் இவன். அதனாலேயே அப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள். கால்,கை வலிப்பு தான் "காக்கா வலிப்பு' ஆனது என்பது இன்னொரு கொசுறுத் தகவல்.

காவேரி- பெயர் வந்த கதை


கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியாற்றை "காவேரி' என்று சொல்வது தான் நடைமுறை வழக்கம். இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? காவேரியின் தந்தை பெயர் கவேர மகரிஷி. ராஜரிஷியான அவரது மகள் என்பதால் அவரது பெயரால் "காவேரி' என்று பெயர் பெற்றாள். தமிழில் "காவிரி' என்கிறோம். "கா' என்றால் "சோலை. செல்லும் இடமெல்லாம் சோலைவனமாக மாறும் வகையில் தன் அகலத்தை விரித்துக்கொண்டே போனதால் கா"விரி' ஆனது. விநாயகர் காக வடிவெடுத்து அகத்தியரின் கமண்டலத்தைத் தட்டி விட்டதால் ஏற்பட்ட பெயராலும் "காவிரி' என்று பெயருண்டு. "காக்கா விரித்ததால் (தட்டி விட்டதால்) கா "விரி' என்னும் பெயர் வந்தது. இப்படி, காவிரி நதியின்

"கருடாழ்வார்

கஷ்யப மகரிஷிக்கும்,வினதைக்கும் பிறந்த பிள்ளை கருடன். விஷ்ணுவின் வாகனமாக இவருக்கு "பெரியதிருவடி' என்ற சிறப்புப் பெயருண்டு. கருடனின் தாய் வினதையைக் கத்ரு என்பவள் அடிமையாக்கினாள். அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க, தேவலோகத்திலுள்ள அமுத கலசத்தைக் கொண்டு வர நிபந்தனை விதித்தாள். நெருப்புக்குண்டத்தின் நடுவில் அந்தக் கலசம் இருந்தது. அதை தைரியமாக எடுத்து கொண்டு வந்து கொடுத்து அன்னையை விடுவித்தார். இவர் பெருமாளின் பக்தர் என்பதால் "கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். பெரிய சிறகுகளை விரித்தும், கைகளைக் குவித்தும் கருவறை முன் காட்சி தருவார். திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்ஸவத்தில் கருடசேவை மிகவும் விசேஷம். ஆவணி சுவாதியில் இவர் அவதரித்ததாகச் சொல்வர்.

வில்வ இலையில் வசிப்பவள்


""பில்வ நிலையாயை நம:'' என்று லட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி திருமகளைப் போற்றுகிறது. வில்வஇலையில் வசிப்பவள் லட்சுமி. அதனால், வில்வமரத்திற்கு "ஸ்ரீவிருட்சம்' என்று பெயருண்டு. வில்வ இலைகளால் சிவபெருமானை அர்ச்சிப்பதால் பாவநிவர்த்தி உண்டாகும் என்று வில்வபத்ர பூஜாபலன் கூறுகிறது. வில்வ இலைகள் 3,5,7 தளங்களாக இருக்கும். இந்த மரங்கள் இமயமலை அடிவாரத்தில் உள்ள தராய் காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. மந்திர சாஸ்திரப்படி, லட்சுமி மந்திரத்தை வில்வமரப் பலகையில் வரைந்து பூஜிப்பது சிறப்பான பலன் தரும்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு-குழந்தைகள் நன்றாகப் படிக்க...

குழந்தைகள் நன்றாகப் படிக்க...
சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்
கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பர். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பர். ஆனால், தேர்வு அறைக்கு போனதும் பதட்டத்தில் படித்ததை மறந்து விடுவர். இப்படி எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும். குதிரை முகத்தோடு இருக்கும் இப்பெருமானை வழிபட்டே, சரஸ்வதியே அனைத்து வித்தைகளையும் கற்றதாகச் சொல்வர். காலை, மாலை நேரத்தில் வீட்டில் படிக்கத்
தொடங்கும் முன், ""ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!'' என்ற ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கத் தொடங்கச் சொல்லுங்கள். அதோடு கூட, கல்விக்குரிய புதன் கிழமையில் பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள். நிச்சயம் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கும்.

உடல்நிலை பாடாய் படுத்துகிறதா
சிலருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உபாதை உடலில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை. அடிக்கடி உடம்புக்கு முடியாதவர்களுக்கான பரிகார தெய்வம் சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இவரை வழிபடுவது சிறப்பு. சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம். செலவில்லாத எளிய பரிகாரம் ஒன்றும் இருக்கிறது. காலையில் நீராடிய பின், கிழக்கு முகமாக நின்று சூரியனை இருகரம் கூப்பி வணங்குங்கள்.
ஜபாகு ஸும சங்காஸம் காஸ்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரணதோஸ்மி திவாகரம்' என்னும் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு...
கணவன் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம் வெறுப்பு வளர்ந்து விட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். சில நேரங்களில் விவாகரத்து வரை போய் விடுகிறது. இந்த நேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே. ""பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை'' என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை சிவபெருமானே நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆண்பாதி பெண்பாதியாக இருக்கும் "அர்த்தநாரீஸ்வரர்' கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள். பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று,
""மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' என்ற தேவாரப்பாடலை மூன்று முறை சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தம் மலரும்.

நவராத்திரி

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொ<லு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தெரிந்து கொண்டால் நெகிழ்ந்து போவீர்கள்!
தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். "யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு "சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டு. "சிவை' என்றால் "சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

பொம்மைகளை அடுக்கும் முறை
மனிதனாகப் பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும். கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும். முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக் கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும் பொம்மைகளையே வைப்பதால், அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது, எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செய்யலாமே!
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
* முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
* மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
* நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
* ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
* ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
* ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
* எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள், பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.


ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் தேவியை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது சிறப்பாகும்.

 நவராத்திரியின் ஒன்பது நாட்களை மூன்றாகப் பிரித்து முதல் மூன்றுநாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளையும், கடைசி மூன்றுநாட்கள் சரஸ்வதியையும், பத்தாம் நாள் விஜயதசமியன்று ஆதிபராசக்தியையும் பூஜை செய்வது நியதி. ஒவ்வொரு நாளும் தேவியை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது இன்னும் சிறப்பாகும். மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து தேவியை வழிபட வேண்டும். ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி, நவமி, தசமி ஆகிய திதிகளில் அவசியம் வழிபடுவது நவராத்திரி விரத பலனைப் பெற எளிய வழியாகும்.

 அம்பாளுக்கு ஐந்தெழுத்து
சிவனை"நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் வணங்குகிறோம். அதுபோல, அம்பாளுக்கும் "துர்க்கா' என்னும் சொல் பஞ்சாட்சரமாக (ஐந்தெழுத்து மந்திரம்) விளங்குகிறது. த், உ,ர்,க்,ஆ ஆகிய ஐந்து எழுத்துகளின் சேர்க்கையே துர்க்கை. துர்க்கா என்ற மந்திரத்தை ஜெபித்தால், எதிரிகளின் தொல்லை நீங்கி மன தைரியம் உண்டாகும். இந்த சொல்லுக்கு "அரண்' "கோட்டை' என்று பொருள். வழிபடும் அடியவர்களைக் கோட்டை போலச் சுற்றி பாதுகாக்கும் துர்கையை " துர்க்கா தேவீம் சரணம் ப்ரபத்யே' என்று வேதம் போற்றுகிறது
 லலிதா சகஸ்ர நாமம்
 பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற பகுதியில் அம்பிகைக்குரிய "லலிதா சகஸ்ரநாமம்' இடம் பெற்றுள்ளது. ஒரு சமயத்தில் சிவபெருமானின் விருப்பத்திற்கேற்ப, பார்வதி சாந்த கோலத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது தேவியின் திருவாயில் இருந்து "வசினீ' என்னும் எட்டு வாக் தேவதைகள் தோன்றினர். அவர்கள் போற்றித் துதித்த ஆயிரம் திருநாமங்களே "லலிதா சகஸ்ர நாமம்' ஆகும். இதனை, உலக நன்மைக்காக திருமாலின் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தி அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அகத்தியர் மூலம் இம்மந்திரம் பூலோகத்திற்கு வந்தது.

 மகிஷாசுரன் பிறந்த கதை

 அகத்தியர் ஒருமுறை வரமுனி என்ற தபஸ்வியைச் சந்திக்க வந்திருந்தார். இறுமாப்புடன் இருந்த வரமுனி, அவரைக் கண்டு கொள்ளவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு தவவலிமை அதிகம் என்ற அகந்தையே இதற்குக் காரணம். ஞானதிருஷ்டியால் விஷயம் அறிந்த அகத்தியர் கோபம் கொண்டு, ""வரமுனியே! ஆணவம் ஒருவனை அழித்துவிடும். அடுத்த பிறவியில் நீ ஒரு மகிஷமாக(எருமை) கடவது'' என்று சபித்தார். இதனால், ரம்பன் என்னும்
அசுரனுக்கும், ஒரு பெண் எருமைக்கும் வரமுனி பிள்ளையாகப் பிறந்தார். "மகிஷன்' என்று பெயரிட்டு வளர்த்தனர். மகிஷன் தவமிருந்து, தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான். அந்த வரத்தின் அடிப்படையில் துர்காதேவி மகிஷனை அழித்தாள்.

துர்க்காவின் திசை

சிவன்கோயில் பிரகாரத்தில் துர்க்கை பரிவார தேவதையாக இருப்பாள். கயிலாயத்தை நோக்கி இவள் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் அவளது சிலையை வடக்கு நோக்கி அமைப்பர்.
 ஆற்றல் தரும் அரிய மந்திரம்


"ஓம்' என்பது பிரணவ மந்திரமாகும். பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனின் ஒலி வடிவமே (நாத தத்துவம்) இம்மந்திரமாகும். கடலலை எழுப்பும் ஓசையும், சங்கில் எழும் நாதமும் பிரணவம் என்பர். பர்வத ராஜகுமாரியான பார்வதிக்குரிய திருநாமங்களில் "உமா' என்பது உயர்வானது. இதனையே "சக்தி பிரணவம்' என்று சொல்வர். சக்தி என்பதற்கு ஆற்றல் என்பது பொருள். அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையே "ஓம்' என்பதுபோல, உமா' என்னும் மந்திரத்திலும் இந்த எழுத்துக்கள் உள்ளன. தேவிக்குரிய மூலமந்திரம்"ஓம் உமாதேவ்யை நமஹ' என்பதாகும். நவராத்திரி நாட்களில் இதை ஜெபிப்பவர் அம்பிகை அருளால் அரிய செயல்களையும் எளிதாக முடிக்கும் ஆற்றலைப் பெறுவர்.
 
ஒரே நாளில் முழுபலன்


நவராத்திரியின் ஒன்பது நாட்களும், பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, நரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதி என்று ஒன்பது கோலங்களில் அம்பிகையை வழிபடுவர். ஒன்பது நாளும் வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாடு செய்வர். இந்நாளில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் வழங்கும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வணங்கினால் நவராத்திரி விரதத்தின் முழுபலனும் கிடைக்கும்.
 
ஆயி மகமாயி

 அம்பிகையை, "ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்' என்று போற்றுவர். உயிர்களுக்கு எல்லாம் தாயாக இருப்பதால் "ஆயி' என்று அவளுக்குப் பெயர். பிரபஞ்சம் எங்கும் அவளுக்கு கண்கள் இருக்கின்றன. இதனால், "கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி, ஆயிரம் கண்ணுடையாள்' என்றெல்லாம் குறிப்பிடுவர். பாரதியாரும் பராசக்தியை, "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று போற்றுகிறார். மாயவனின் தங்கையாக இருப்பதால் அவளுக்கு "மாயி' "மகமாயி' என்றும் பெயருண்டு.

 
சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது

ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான், வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர் "கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச் செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின் அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும். வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன ஆதிசங்கரர், ""உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால் ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும், அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்,'' என்று முடித்திருக்கிறார்.
""ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள் ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள் வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால் தான்,'' என்கிறார். பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார். படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின் கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.