Monday, July 30, 2012
உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்
"ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே"
-தொல்காப்பியர்-
உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்.
ஓரறிவுயிர்:
புல்லும் மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மெய்யினால் உணரும் உணர்வுடைய புல், மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக் கூறுவர். ஓரறிவு உயிர்களைத் தொல்காப்பியர் இரண்டாகப் பகுத்துக் காண்கின்றார்.
”புறக்கா ழனவே புல்வென மொழிப”
வெளியே சதைப்பற்று உடையனவாய் உள்ளே சதைப்பற்று அற்றனவாய் உள்ளனவற்றைப் புல் என்பர் புல்லின் உறுப்புக்களாக,
தோடே மடலே யோலை யென்றா
ஏடே யிதழே பாளை யென்றா
ஈர்க்கே குலையடின நேர்ந்தன பிறவும்
புல்வொடு வருமெனச் சொல்லினர் புலவர்
என்கிறார்.
”அகக்காழனவே மரமென மொழிப”
உள்ளே சதைப்பற்று உடையனவாய் வெளியே அற்றனவய் உள்ளனவற்றை மரம் என்பர். மரத்தின் உறுப்புக்களாக,
இலையே தளிரே முறியே தோடே
சினையே இழையே பூவே யரும்பே
என்கிறார்.
ஒருவித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்களுக்குப் பொதுவாக,
காயே பழமே தோலே சுவையும் செதிளே
வீழோ டென்றாங் சுவையும் அன்ன
என்கிறார்.
ஈரறிவுயிர்:
மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன் வாயினால் உணரும் சுவை உணர்வுடையவைகள் ஈரறிவு உயிர்களாகும்.
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
என்கிறார். நந்தும் முரளும் ஈரறிவுடைய உயிர்களாகும். சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கருத்து.
மூவறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டு உணர்வுடன் மூக்கினால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவைகள் மூவறிவு உயிர்களாகும்
சிதலு மெறும்பு மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குமுடையனவாதலால் மூவறிவுயிராகும். இவற்றின் கிளைகளாவன ஈயன் மூதாய் போல்வன.
நான்கறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்ற மூன்று உணர்வுடன் பார்த்தல் திறன் படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.
நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வு ஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும் உள. பிறவும் என்றதனால் ஞ’மிறும் சுரும்பும் எனக் கொள்க என்பார் இளம்பூரணர்.
ஐயறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன் படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.
மாவும் மாக்களும் ஐயறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சியில்லாதவர். கிளையென்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன.
ஆறறிவுயிர்:
ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன் படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன் அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.
மக்கள் தாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
என்பதன் மூலம் ஆறறிவு படைத்த மாந்தருடன் பிற உயிரினங்களையும் இணைத்துக் கூறுவதன் மூலம் அறியலாம்.
தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல்பையும் அவ்வுயிரினங்கள் தொடர்பான மரபு வழிப்பட்ட பெயரினங்களையும் ஆராய்ந்து பல அரிய உண்மைகளைக் கூறுகிறார். இச்செய்திகள் மூலம் தொல்காப்பியரின் உயிரியல் அறிவு தொடர்பான சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகிறது.
தொடு உணர்வு கொண்ட உயிரே முதல் உயிர் என்றும் ஓரறிவு உயிர் என்றும் அவற்றிலிருந்தே ஈரறிவு உயிர், மூவறிவு உயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர் முதலான அனைத்தும் உருவாயின என்பர். இதனைத் தொல்காப்பியர்,
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
என்கிறார்.
அறிவியல் வளராத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின் இனம், பெயர், பாகுபாடு, அறிவு போன்றவை குறித்து ஆராய்ந்து தெளிவாக உணர்த்திய தொல்காப்பியனாரின் புலமை வியப்புக்குரியது.
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்கள் அனைத்தையும் முன்னோர் வழங்கிய மரபு பிறழாமல் கூறியுள்ளார். முன்னைய ஆசிரியர்களைத் தொல்காப்பியர், என்மனார் புலவர், என்ப என்ற தொடர்களால் குறிப்பிடுவதும்,
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப
என்றும்,
மரபுநிலை திரியற் பிறிது பிறிதாகும் போன்ற நூற்பாக்களை அமைத்திருத்தலை உற்று நோக்குவதன் மூலம் அறியலாம்.
உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய டார்வினின் கருத்துக்களும் தொல்காப்பியரின் கருத்துக்களும் ஒன்றுபட்டும் வேறுபட்டும் காணப்படுகின்றன. அறிவுரைகளைக் கொண்டு உயிர்களைப் பிரிக்கும் நிலைதான் தொலகாப்பியரின் முறை. தொல்காப்பியரின் எண்ணப்படி அறிவுரைகளின் வளர்ச்சிக்கு எல்லையேனும் குறிக்கப் பெறவில்லை.
டார்வினுடைய கொள்கைப்படி உயிர் பெருக்கத்திற்கு இன வேறுபாடு அவசியம். தசைக் குழம்பான நிலையிலேயே இன உறுப்புகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் உயிரினம் பெருகியது. நாளடைவில் பல்வேறு மாற்றங்களுடன் இன்று மனிதன் வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறான் என்பது டார்வினின் பரிணாமக் கொள்ளை உணர்த்துகின்ற உண்மை.
தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது. அவ்வாறு பார்க்கும் நிலையில் டார்வினின் விளக்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை பற்றி உயிர்களை ஆறு பிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.
Sunday, July 29, 2012
காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்ற வேண்டும்?
<உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நேரம் பொன்னானது என்பதை உணர வேண்டும். இதோ, காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவம்.
ஒரு பேராசிரியர் காந்திஜியை சந்திக்க ஆஸ்ரமத்துக்கு வந்தார். அங்கே ஒரு முதியவர் பெருக்கிக் கொண்டிருந்தார்.
""நான் மகாத்மாஜியைப் பார்க்க வேண்டும். நான் வந்திருப்பதாகச் சொல்,'' என தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்.
""ஐயா! காந்தி நேரப்படி நடப்பவர். தாங்கள் காத்திருங்கள். 11 மணிக்கு நிச்சயம் உங்களைச் சந்திப்பார்''.
பேராசிரியருக்கு கோபம் வந்து விட்டது. ஒரு வேலைக்காரன் இப்படி பேசுகிறானே! மேலும், பேராசிரியரான நானே காந்திஜியை "மகாத்மா' என்கிறேன். இவன் காந்தி என மரியாதைக் குறைவாக அவரைக் குறிப்பிடுகிறானே!
கோபத்துடன் அவர், ""ஏய்! நான் வந்திருப்பதை அவரிடம் சொல்லப்போகிறாயா இல்லையா? வீணாகக் காக்க வைக்காதே.''
அப்போதும், அந்த முதியவர் பெருக்கியபடியே, ""ஐயா! சற்று அமருங்கள். காந்தி நேரம் தவறாதவர். 11மணிக்கு நிச்சயம்
சந்திப்பார்,'' எனவும் பேராசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து கடிகாரம் 11 மணியைக் காட்டியது.
பெருக்கிக் கொண்டிருந்த முதியவர், அவரை நோக்கி வந்தார்.
""ஐயா! சொல்லுங்கள், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?''
""நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? காந்திஜியை சந்திக்க வேண்டும்,''.
""நான் தான் அந்த காந்தி. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்,'' என்றார்.
பேராசிரியர் அதிர்ந்து விட்டார். மகாத்மாவிடம் மன்னிப்பு கேட்டார். நேரம் தவறாமல் கடமையாற்றியவர் காந்திஜி. அதனால் தான் விலை ஒப்பிட முடியாத சுதந்திரக்கனியை நம்மிடம் பறித்துக் கொடுத்தார்.
இனியேனும் காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்றி வெற்றிக்கனிகளைப் பறிப்போமா!
கடவுளால் எல்லாம் முடியும்
<மகானிடம் சீடன் ஒருவன், ""சுவாமி! மனிதனுடைய விருப்பத்தை எல்லாம் கடவுளால் நிறைவேற்ற முடியாது போல் தெரிகிறதே'' என்றான்.
""ஏன் அப்படி சொல்கிறாய்''.
""காட்டில் மரம் வெட்டும் விறகுவெட்டி, எப்போதும் குளிரடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறான்,'' என்றான் சீடன்.
""நியாயம் தானேப்பா! குளிரடித்தால் தானே வெட்டிய விறகெல்லாம் சீக்கிரம் விற்கும்,''.
""எப்படி நியாயமாகும் சுவாமி! பழ வியாபாரியோ எப்போதும் வெயில் கொளுத்த வேண்டும் என்றல்லவா நினைக்கிறான்'' என்றான்.
""அதுவும் நியாயமே! பழங்கள் கெடாமல் இருக்கவேண்டுமானால் வெயில் அடிக்கத் தானே வேண்டும்,'' என்றார்.
""சுவாமி! நான் சொல்வதைக் கேளுங்கள்.விவசாயியோ மழையை வேண்டுகிறான். செங்கல் சூளைக்காரனோ சாரல் கூட விழக்கூடாது. எப்போதும் வெயில் வேண்டும் என்று நினைக்கிறான். கடவுளே நினைத்தாலும் கூட எப்படி இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?,'' என்றான்.
மகான் அவனிடம்,""இப்போது வானிலை எப்படி இருக்கிறது?,'' என்று கேட்டார்.
""வெயில் காய்கிறது சுவாமி,''.
""போனவாரம் எப்படி இருந்தது?,''.
""சுவாமி! செவ்வாய், புதன் கிழமைகளில் மழை பெய்ததால் குளிராக இருந்தது,''.
""பார்த்தாயா கடவுளின் லீலையை! போன வாரத்தில் மழை,குளிர். இந்த வாரத்தில் வெயில். எல்லோரின் விருப்பத்தையும் அவர் நிறைவேற்றி வைத்ததை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய் அல்லவா,'' என்றார்.
ச' இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம்
<மகாபாரதத்தை ஸ்லோக வடிவில், வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய காலத்தில் "ச' என்ற அக்ஷரத்தை (எழுத்து) அதிகமாக பயன்படுத்தியிருந்தார். ஒருமுறை, கவிப்பேரரசர் காளிதாசர் ஒரு காட்டுவழியே சென்றார். வழியில் வியாசர் சிலை இருந்தது. தன் ஆட்காட்டி விரலை சிலையின் தொப்புளுக்குள் விட்டு குடைந்தபடியே. ""நீர் பெரிய "ச'காரப் பிரியராச்சே! உம்மைப் போய் பெரிய கவிஞன் என்கிறார்களே! "ச' இல்லாமல் உம்மால் ஒரு ஸ்லோகம் எழுதி விட முடியுமா என்ன!'' என்று கேலியாகக் கேட்டார். அவ்வளவு தான்! தொப்புளுக்குள் சிக்கிய விரல் வெளியே வரவில்லை.
சிலை பேசியது. ஆம்...சிலைக்குள் இருந்து வியாசரே பேசினார்.
""அடேய் புத்திசாலி! "ச' இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம் சொல்லு, அப்படியானால் தான் விரல் விடுபடும்,'' என்றார்.
""இதென்ன பிரமாதம்...சொல்கிறேன்,'' என ஆரம்பித்தவரை தடுத்த வியாசர், ""ஏற்கனவே நீ மனதில் தயாராய் வைத்துள்ளதை ஏற்கமாட்டேன். நான் சொல்லும் விஷயத்துக்கேற்ற ஸ்லோகம் சொல் பார்க்கலாம்,'' என்றவர், ""திரவுபதிக்கு பஞ்சபாண்டவர்கள் எவ்வெப்போது என்னென்ன முறை ஆக வேண்டும், சொல் பார்க்கலாம்,'' எனக் கேட்டார்.
காளிதாசர் படுவேகமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். விரல் விடுபட்டது. வியாசர் அவர் முன் தோன்றி, ""நான் பாரதத்துக்காக ஒரு லட்சம் ஸ்லோகம் எழுதினேன். எழுதியவர் மகாகணபதி. ஆனால், இப்போது நீ சொன்னது போல, பாரதத்தில் ஒரு ஸ்லோகம் கூட அழகாக வரவில்லை,'' என்று பாராட்டினார்.
வியாசரையும் விட சிறந்த கவிஞர் காளிதாசர் என்பது இதிலிருந்து தெரிகிற விஷயம்.
பரதன்
<
ஒரு பூனைக்குட்டியிடம் நம் குழந்தை விளையாடினால் கூட, ""டேய் பார்த்து...கையை கடிச்சுட போகுது,'' என்று எச்சரிக்கை செய்கிறோம். ஆனால், நம் பாரத தேசத்துக்கு அந்தப்பெயர் வரக்காரணமாக இருந்த அந்தச் சிறுவன் சிங்கக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு மகாராஜா...அங்கு வந்தார்.
அவரது பெயர் துஷ்யந்தன். துர்வாச முனிவரின் சாபத்தால், தன் மனைவி யாரென்று தெரியாமல் நினைவை இழந்தவர். கண்வமகரிஷியின் வளர்ப்பு பெண்ணான சகுந்தலையை மணம் செய்தவர். மாபெரும் வீரர். அசுரர்களுடன் போர் வரும் காலங்களில், அவரையும் உடனழைத்துச் செல்வான் தேவேந்திரன். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர் அன்று, காட்டுவழியே விமானம் ஒன்றில் வந்த போது, சிங்கக்குட்டியுடன் விளையாடும் சிறுவனைக் கண்டார்.
""ஆகா! எனக்கு வீரன் என்ற பட்டம் இருப்பதே தவறு. நான் பகைவர்களைத் தோற்கடித்திருக்கிறேன். ஆனால், இந்தச் சிறுவனைப் போல சிங்கத்துடன் விளையாடும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கவில்லையே! இவன் யார்! விசாரித்து செல்லலாமே!''
விமானம் தரை இறங்கியது.
""தம்பி! நீ யார்! சிங்கத்துடன் விளையாடுகிறாயே! பயமாக இல்லையா!
சிறுவன் கலகலவென சிரித்தான்.
""நாம் மனிதர்கள். சிங்கத்தை விட ஓரறிவு அதிகமுள்ளவர்கள். நாம் பயப்படலாமா?'' சிறுவனின் பதில் மகாராஜாவை சிந்திக்க வைத்தது.
""இவன் வீரன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட...யார் பெற்ற பிள்ளையோ! அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது சலங்கை
சத்தம் பலமாகக் கேட்டது. சில பெண்கள் ஒரு சேர வந்தார்கள்.
""பரதா! கிளம்பு! முனிவர் மரீசி உன்னை அழைக்கிறார்,''.
ஆம்...அவனது பெயர் பரதன்.
""சற்று பொறுத்து வருகிறேன். ஆமாம்... அம்மா எங்கே?''
""அன்னையார் நீராடச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் வந்து விடுவார்...'' என்றவர்கள் அவனது கையைக் கவனித்தனர்.
""பரதா! உன் கையில் கட்டியிருந்த ரøக்ஷ (மந்திரக்கயிறு) எங்கே?''
சிறுவனும் அப்போது தான் கவனித்தான்.
""ஐயையோ! அதை எப்படியாவது தேடிப்பிடியுங்கள். ரøக்ஷயைத் தொலைத்தால், முனிவர் என்னைத் தொலைத்து விடுவார்,''.
சிறுவன் பதட்டத்துடன் அங்கும் இங்கும் தேடினான். பணிப்பெண்களும் தேடினர். மன்னர் இதைக் கவனித்து, அவரும் தேடத் துவங்கினார். ஒரு செடியின் அடியில் கிடந்த ரøக்ஷயை எடுத்து பெண்களிடம் நீட்டி, ""இதுவா பாருங்கள்,'' என்றனர்.
அந்தப்பெண்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
""ஐயா! தாங்கள் யார்? இந்தக் கயிறை இந்தச் சிறுவனின் தந்தையும், தாயும் தவிர மற்றவர்கள் தொட்டால் பாம்பாகி விடும் என முனிவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் இவனது தந்தையா?''
இதற்குள் அவனது தாய் அங்கு வர, ராஜா அதிர்ச்சியுடன் பார்த்தார்.
""சகுந்தலா''...அவளும் அதிர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
""சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்த்த போது, நீ யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். இப்போது நினைவு வந்து விட்டதா?''
துர்வாசரின் சாபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சகுந்தலாவிடம் விளக்கினார். அந்த ராஜா தான் துஷ்யந்தன்.
அவருக்கும் சகுந்தலைக்கும் பிறந்த வீரத்திருமகனான பரதனே நம் ஆண்டை ஆண்ட மாபெரும் சக்கரவர்த்தி.
அவரது பெயரால் தான் நம் தாய்த்திருநாடு "பாரதம்' எனப்படுகிறது.
குளிர வேண்டிய சந்தனம் ஏன் உடலைச் சுட்டது.
<
ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைர மோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர்.
யாகம் துவங்கியது. அப்போது, கிழிந்த அழுக்கடைந்த ஆடை, மெலிந்த தேகத்துடன் ஒரு வேதியர் உள்ளே வந்தார். தலைமை வேதியருடன் வந்திருந்த மற்ற வேதியர்கள் ஓரளவுக்காவது வசதியுள்ளவர்கள். ஏதோ வீட்டில் இருப்பதில் நல்ல ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவரோ, நெற்றியில் சந்தனம் மட்டும் இட்டு, வேதம் ஓத இருந்த அந்தணர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார்.
தலைமை வேதியர் அவரைப் பார்த்து முகம் சுழித்தார்.
""எழுந்திரும்! இங்கே உட்காரக் கூடாது, நீர் ஒன்றும் வேதம் சொல்ல வேண்டாம். அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து சந்தனம் அரைத்தால் போதும், புரியுதா!'' என்றார்.
வந்தவர் பதிலேதும் பேசவில்லை. தலைமை வேதியர் இட்ட கட்டளையை பணிவுடன் ஏற்றார். சந்தனம் அரைக்க ஆரம்பித்தார். அவர் சூரிய மந்திரத்தை <முணுமுணுத்தபடியே சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார்.
தலைமை வேதியர் அவரைக் கவனித்தார்.
"இவனுக்கு என்ன தைரியம்! வாய் முணுமுணுக்கிறதே! என்னைத் திட்டிக் கொண்டே சந்தனம் அரைக்கிறான் போலும்! யாகம் முடியட்டும், கவனித்துக் கொள்ளலாம்' என்று மனதிற்குள் கருவிக்கொண்டே யாகத்தை நடத்தினார்.
யாகம் முடிந்ததும் எல்லாருக்கும் சந்தனம் அளிப்பது வழக்கம். தலைமை அந்தணர் முறைப்படி முதலில் வாங்க வேண்டும். அவர் சந்தனத்தை வாங்கி உடலில் பூசினாரோ இல்லையோ! "ஐயோ அம்மா!'' என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்.
குளிர வேண்டிய சந்தனம் உடலைச் சுட்டது.
""சந்தனம் ஏன் சுடுகிறது?''
""நான் சூரிய மந்திரம் உச்சரித்தபடியே அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டிவிட்டார் போலும்!''
""ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் என்னிலும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே!'' தலைமை வேதியர் வருத்தப்பட்டார்.
சந்தனம் அரைத்தவர் மனம் நெகிழ்ந்து, சூடு தணிக்குமாறு சூரியனைப் பிரார்த்தித்தார். தலைமை வேதியரின் உடலில் இருந்த சூடு தணிந்தது.
இவ்வளவு சக்தி வாய்ந்த அந்த அபூர்வ மகான் யார் தெரியுமா?
ஸ்ரீ ராகவேந்தர்.
அவரை "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று சொல்லி பூஜிப்போர், குளிர்ந்த மனதுடன் சகல நலனும் பெற்று வாழ்வர்.
நல்லவர்களைச் சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை.
ஒரு ஊருக்கு வந்த துறவி, ""நல்லவர்களுடன் மட்டுமே சேருங்கள். ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனைகளுக்கு சென்று வாருங்கள். நலமாக இருப்பீர்கள். நான் சொல்லும் இந்த மந்திரவாக்கு உறுதியாகப் பலிக்கும்'' என்று அங்குள்ள மக்களுக்கு போதித்து வந்தார்.
ஒரு வாலிபன் அவரிடம்""ஐயா சாமி! சொல்வது அப்படியே பலிக்கும் என்கிறீர்களே! நீங்கள் என்ன மந்திரவாதியா?'' என்று கேலியான தொனியில் கேட்டான்.
""அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்,'' என்ற துறவியிடம், ""அப்படியானால், இந்தக் கல்லை தண்ணீரில் மிதக்கச் செய்ய முடியுமா?'' என்று ஒரு பொடிக்கல்லை எடுத்துக்கொடுத்தான் வாலிபன்.
துறவி அதை தண்ணீருக்குள் வீசினார். மூழ்கிவிட்டது. வாலிபன் சிரித்தான்.
""தம்பி! அவசரப்படாதே! இது சிறிய கல், பெரிய கல்லை நான் மிதக்க வைப்பேன். ஒரு மணிநேரம் கழித்து வா. கல் மிதக்கும்,'' என்றார் வாலிபன் போய்விட்டான்.
துறவி ஒரு மரப்பலகையை எடுத்தார். அதன்மேல் பெரிய பாறாங்கல்லை வைத்து தண்ணீரில் போட்டார். கட்டை மீதிருந்த கல் மிதந்தது.
வாலிபன் வந்தான். இந்தக்காட்சியைப் பார்த்து சிரித்தான்.
""கட்டை மீது கல்லை வைத்துக் கட்டினால் மிதக்கும் என்பது நான் அறியாததா?'' என்றான்
ஏளனமாக.
""தம்பி! இதில் கல்லை தீயது என்றும், கட்டையை நல்லது என்றும் வைத்துக்கொள். நல்லவர்களைச் சார்ந்திருக்கும் தீயவர்கள் கூட அழிவதில்லை. புரிகிறதா?'' என்றார்.
நல்லவர்களுடன் சேர்ந்தால் கெட்டவர்களும் நலம் பெறுவர்... புரிகிறதா!
எளிமை தான் ஒருவனை உயர்த்தும் கருவி
தேவர் தலைவன் இந்திரனுக்கு உலகிலேயே மிகப்பெரிய மாளிகை கட்ட வேண்டுமென்று ஆசை. கைலாயம், வைகுண்டம், சத்தியலோகம், ஆனந்தலோகம், சூரியலோகம் எல்லாவற்றையும் விட பரப்பில் அதிகமாக கட்டப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் ஒப்படைத்தான். விஸ்வகர்மா தன் பணியாளர்களைக் கொண்டு வேகமாகப் பணிகளைச் செய்தார். பரப்பு பெரியது என்பதால், சில ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி இழுத்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் களைப்படையவே வேலை பாதியில் நின்றது.
இந்திரனுக்கு ஒரே கவலை. அந்த நேரத்தில் நாரதர் வந்தார்.
""நாரதரே! பிரச்னை இப்படி..'' என்று ஆரம்பித்த இந்திரன், மாளிகை கட்டுமானப்பணி தடைபட்ட விஷயத்தைச் சொல்லி, இதற்கு தீர்வு சொல்லுங்களேன்,''என்றான் வருத்தத்துடன்.
""அப்பா! எனக்கு வீடு கட்டிய பழக்கம் கிடையாது. வீடும் கிடையாது. போகிற ஊரில் யார் வீட்டிலாவது தங்குபவன். ரோமச மகரிஷியை போய்ப் பார். அவர் சொல்வார் தீர்வு!'' எனச்சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.
அந்நேரத்தில் ரோமசர் அங்கு வந்தார். (உடலெல்லாம் முடி உடையவர் என்பது பொருள்) அவரது தலையில் ஒரு பாய் நீட்டிக் கொண்டிருந்தது. இடையில் சிறிய ஆடை மட்டும் அணிந்திருந்தார்.
""முனிவரே! தலையில் என்ன பாய்?'' என்றான் இந்திரன்.
""அப்பனே! அதுதான் என் வீடு. மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ என் தலை குடியிருக்க இவ்வளவு பெரிய மாளிகை போதாதா!'' என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டார். இந்திரனுக்கு சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
""ஆகா... ஒருவன் நினைத்தால் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் வாழலாம். எளிமை தான் அவனை உயர்த்தும் கருவி,'' என்று எண்ணியவன் மாளிகைக் கட்டுமானப்பணியை நிறுத்தி விட்டான்.
கோவிந்தநாமத்தின் மகிமை
<திருப்பதிக்குள் நாம் எங்கு சென்றாலும், நம் காதில் ஒலிக்கும் நாமம் "கோவிந்தா... கோவிந்தா...' என்னும் திவ்யநாமம். இந்த நாமம் எவ்வளவு சக்தியுடையது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்.
நாடு சுதந்திரமடைவதற்கு முன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பல தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடினர். அவர்களில் ராஜாஜியும் ஒருவர்.
ஒருமுறை, ஏழுமலையான் மீது தீவிர பக்தியுடைய ஒரு தாழ்த்தப்பட்டவர் திருப்பதிக்குள் நுழைந்து விட்டார். அதிகாலையே நீராடி, நெற்றியில் திருமண் (நாமம்) தரித்து, "கோவிந்தா...கோவிந்தா...' என முழங்கியபடியே, கோயிலுக்குள் நுழைந்து, பெருமாளைக் கண்குளிர தரிசித்தும் விட்டார். அப்போது ஒரு அதிகாரி அந்த பக்தரை எப்படியோ பார்த்து விட்டார்.
""நீ தாழ்த்தப்பட்டவன் தானே! கோயிலுக்குள் நுழைய என்ன தைரியம்? உன்னால், கோயிலே தீட்டுப்பட்டு விட்டதே. வா... உன்னை போலீசில் ஒப்படைக்கிறேன்,'' என ஒப்படைத்து விட்டார். சித்தூர் கோர்ட்டில் ஆங்கில நீதிபதி ஒருவர் முன், தாழ்த்தப்பட்டவர் நிறுத்தப்பட்டார். அவருக்காக முனுசாமி என்ற வக்கீல் ஆஜரானார். வழக்கு நடந்து கொண்டிருந்தது.
இவ்விஷயத்தை ராஜாஜி கேள்விப்பட்டார். கோர்ட்டுக்குச் சென்று வழக்குகளில் ஆஜராவதில்லை என்று அவர் முடிவெடுத்திருந்த சமயம் அது. இருப்பினும், அந்த தாழ்த்தப்பட்டவருக்காக ஆஜராக சித்தூர் சென்றார். அங்கே, வேறு ஒரு வக்கீல் அவருக்காக வாதாடுவது கண்டு, அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல் முனுசாமி, ""நீதிபதி அவர்களே! தாழ்த்தப்
பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர் ராஜாஜி. அவர் இங்கே வந்துள்ளார். அவரே இவ்வழக்கில் வாதாடட்டும்,'' என்றார்.
நீதிபதியும் சம்மதிக்கவே, தாழ்த்தப்பட்டவருக்காக வாதாடினார் ராஜாஜி.
""கோவிந்தா' என்ற நாமத்தை ஒரு தடவை சொன்னாலே ஒரு இடம் சுத்தமாகி விடும். இவரோ நீராடி, திருமண் தரித்து, கோவிந்தநாமத்தை பலமுறை சொல்லியபடி கோயிலுக்குள் சென்றுள்ளார். அப்படியிருக்க, கோயில் தீட்டுப்பட்டதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம்? இவரை வழக்கில் இருந்து விடுவிக்கவேண்டும்,'' என்றார்.
வாதத்தை ஏற்ற நீதிபதி, அந்த நபரை விடுதலை செய்தார். கோவிந்தநாமத்தின் மகிமையைப் பார்த்தீர்களா! ஆனால், இப்போது "உன் பணம் கோவிந்தா தான்! உனக்கு வேலை கோவிந்தா தான்' என்று கேலிப்பொருள் கலந்து பேசுவதைக் கைவிடுங்கள். கோவிந்தநாமம் கோடி பலன் தரவல்லது.
சித்து வேலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தால்
<சித்துவேலை செய்பவர்கள், துறவி போல் வேஷமணிந்து அநியாயம் அட்டூழியம் செய்பவர்கள் ஆன்மிக உலகில் பெருகியிருக்கிறார்கள். யார் ஒருவர் மக்களுக்கு சேவை செய்கிறாரோ, அவர் தான் உண்மையான துறவி. ஏன்... இல்லறத்தில் இருப்பவர்கள் கூட இவ்வாறு சேவை செய்யலாம்.
ஒரு துறவி மக்களிடம், தன்னை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள பல சித்து வேலைகளைச் செய்தார். ஒருநாள் கடவுள், ஒரு பக்தனைப் போல வேடமணிந்து அவரைக் காண வந்தார்.
""சாமி! நீங்கள் பல சித்து வேலைகள் செய்வீர்களாமே! அதோ! அங்கே நிற்கிறதே யானை.. அதை உங்களால் கொல்ல முடியுமா?'' என்றார்.
""இதென்ன பிரமாதம்'' என்ற துறவி, கொஞ்சம் மணலை எடுத்து யானையை நோக்கி எறிந்தார். யானை சுருண்டு விழுந்து இறந்தது.
""ஆகா...அற்புதம், அந்த யானையை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?''
துறவி சிரித்தபடியே, தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை யானை மீது தெளித்தார். யானை தூங்கி எழுந்தது போல் உயிர் பெற்று நின்றது.
இப்போது கடவுள், ""சரி துறவியே! யானையைக் கொன்றீர்கள். உயிர் பிழைக்க வைத்தீர்கள். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? இதே, சித்து வேலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தால் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமல்லவா?'' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். வந்தது கடவுள் என்பதை அறிந்த துறவி, மனம் திருந்தினார். சித்துவேலையை மக்களுக்கு வசதி செய்து கொடுக்கும் விதத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்.
கவனச்சிதறல் கூடவே கூடாது
அலுவலகத்திலோ, வீட்டிலோ ஒரு பணியைச் செய்யும்போது, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிப்பவர்கள் பலர். இதனால் செய்கிற வேலையில் குளறுபடி ஏற்படுகிறது.
ஒருவன் தூண்டிலை கால்வாயில் போட்டு விட்டு, தூண்டில் முள் அசைகிறதா என கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒருவன் அவ்வழியே வந்தான்.
""ஐயா! சுப்பையா வீடு எங்கே இருக்கிறது?'' என்றான். மீன் பிடித்தவன் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவனது கண்ணும் கருத்தும் தூண்டில் முள்ளிலேயே இருந்தது.
வந்தவன் திரும்பவும் கேட்டான். உஹும்...அவன் அசையவே இல்லை.
""அடேய், என் கேள்விக்கு பதில் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்! இல்லை நீ செவிடா!'' அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை. அவன் சலித்துப்போய் கிளம்பி கொஞ்ச தூரம் போய்விட்டான். அந்நேரத்தில் தூண்டில் முள் அசைய, லபக்கென வெளியே இழுத்தான். மீன் ஒன்று சிக்கியிருந்தது. இப்போது, தன்னிடம் கேள்வி கேட்டவனை நோக்கி ஓடினான்.
""ஐயா! என்னிடம் ஏதோ கேட்டீர்களே! நான் தொழிலில் மூழ்கிவிட்டால் என்னையே மறந்து விடுவேன். அதனால், பிறர் கேள்வி கேட்கிற உணர்வு ஏதோ இருந்தாலும் கூட, என்ன சொல்கிறார்கள் என்பது என் காதில் விழாது. இப்போது சொல்லுங்கள், தாங்கள் என்ன கேட்டீர்கள்?'' என்றான்.
கேள்வி கேட்டவனுக்கோ கோபம்.
""எத்தனையோ முறை நான் கத்திக்கத்தி கேட்டும், நீ பதில் சொல்லவில்லை. இப்போது கேட்கிறாயே?'' என்று சலிப்புடன் சொன்னவன்,சுப்பையா வீடு இருக்குமிடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான்.
தொழிலில் மட்டுமல்ல, தியானம் போன்ற ஆன்மிக விஷயங்களிலும், வெளியில் கவனம் செலுத்துவதைமறந்துவிடவேண்டும்... புரிகிறதா!
சீடர்களையும் மதித்த மாபெரும் மகான் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்த போது, மார்க்ரெட் நோபிள் என்ற கிறிஸ்தவப் பெண்மணி சுவாமியின் சிஷ்யை ஆக முடிவு செய்தார். அவருடன் இந்தியா வர விருப்பம் தெரிவித்தார்.
""அவசரம் வேண்டாம், உன் மனது பக்குவப்படட்டும்,'' என சுவாமி சொல்லிவிட்டார்.
பின்னாளில், சுவாமிஜி கோல்கட்டாவில் ஆஸ்ரமம் அமைத்திருப்பதை அறிந்த நோபிள், சுவாமிஜிக்கு கடிதம் எழுதினார். இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
நோபிளுக்கு சுவாமி எழுதிய பதில் கடிதத்தில், ""இங்குள்ள மக்கள் மூடநம்பிக்கை மிகுந்தவர்கள். பாதி நிர்வாணமாக இருக்கும் இவர்கள் மத்தியில் நீ வாழ வேண்டும். கடும் வெயில் அடிக்கும்,'' என்று எழுதியிருந்தார்.
ஆனாலும், நோபிள் இந்தியா வந்தார். அவரே சகோதரி நிவேதிதை என்ற பெயரில் சுவாமியின் சிஷ்யை ஆனார்.
ஒருநாள், நிவேதிதை ஆஸ்ரமத்துக்கு சில பணிகள் தொடர்பாக வந்தார். சுவாமிஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்தார். பணிமுடிந்து அவரிடம் விடை பெற வந்தார்.
""சாப்பிட்டாயா?'' எனக்கேட்டார் சுவாமிஜி.நிவேதிதை ""இல்லை'' என்றதும் சுவாமிஜி அவரை அமர வைத்து பரிமாறினார். நிவேதிதை எவ்வளவோ தடுத்தும் கைகழுவ தண்ணீர் ஊற்றினார். குடிக்க பால் கொடுத்தார்.
""ஜி! நானல்லவா உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும், நீங்கள் செய்கிறீர்களே,'' என கண்கலங்க கேட்டார் நிவேதிதை.
""இயேசுநாதர் தன் வாழ்நாளின் இறுதியில் சீடர்களின் பாதங்களை கழுவியதை நீ அறிந்திருப்பாய் அல்லவா?'' என்று சுவாமிஜி எதிர்க்கேள்வி கேட்டார்.
ஆனால், அது அவரது வாழ்வின் இறுதிக்காலமாக இருக்கும் என்று சகோதரி நிவேதிதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சீடர்களையும் மதித்த மாபெரும் மகான் சுவாமி விவேகானந்தர்.
அவரவர் பார்வையில் உலகின் செயல்கள் வித்தியாசப்படுகின்றன
துறவி ஒருவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து உலகையே மறந்த நிலையில் இருந்தார். அப்போது, ஒரு திருடன் வந்தான்.
""இந்த ஆசாமியும் நம்மைப் போல் திருடன் போல! இரவெல்லாம் விழித்து விட்டு இப்போது தூங்குகிறான்,'' என்று சொல்லியபடியே போய்விட்டான். அடுத்து ஒரு மொடாக்குடியன் வந்தான். போதையில்,"" இவன் நம்மை மாதிரி குடித்துவிட்டு கண்ணை விழிக்க முடியாமல் திணறிப் போய் உட்கார்ந்திருக்கிறான். நான் எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருக்கிறேன்,'' என்று தன்னைப் பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டு போய்விட்டான்.
அடுத்து வந்த துறவிக்கு தான், அவர் தியானத்தில் ஆழ்ந்து போயிருந்தது புரிந்தது. அவரவர் பார்வையில் உலகின் செயல்கள் வித்தியாசப்படுகின்றன. தங்களைப் போலவே மற்றவர்களையும் உலகம் கருதுகிறது. பக்தியைக் கூட பாவத்தொழிலாகப் பார்க்கிறது. நமது உலக ஆசைகள் பக்தியையும், தூய்மையையும் நமக்குத் தெரியவிடாமல் மூடிவிடுகிறது.
நம்மை நாம் என்று ஒழுக்கசீலர்களாக மாற்றிக்கொள்கிறோமோ, அப்போது உலகத்தில் உள்ளவர்களின் ஒழுக்கம் நம் கண்ணில் படும்.
ஆசைக்கு எல்லை வேண்டும்."பெரியவர்கள் சொல் கேட்க வேண்டும்.
ஒரு ஆட்டுக்குட்டிக்கு கீரை என்றால் ரொம்ப உயிர். விதவிதமான கீரைகளை தோட்டங்களுக்குள் புகுந்து சாப்பிடும். அந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் தர்மவான்கள் என்பதால் "ஆடு தானே! தின்று விட்டுப் போகிறது' என்று விட்டு விடுவார்கள்.
ஒருநாள், அது மேயப்போன போது எல்லா தோட்டங்களிலும் இருந்த கீரையைப் பறித்து விட்டனர். அது தாய் ஆடுடன் அலைந்து திரிந்தது. ஒரே ஒரு தோட்டத்தில் உயர்ரக கீரை ஒன்றை பயிரிட்டு, வேலியிட்டு மறைத்திருந்தனர். அதன் உரிமையாளர் மகாகஞ்சப்பிரபு, கொடூரனும் கூட. ஆடுகள் தன் தோட்டத்துக்குள் புகுந்து விட்டால், அவற்றை கறியாக்கி சமைத்து விடுவான்.
குட்டி ஆடு அந்த தோட்டத்துக்குள் புக முயன்றது. தாய் ஆடு அதைத் தடுத்தது.
""மகளே! உள்ளே செல்ல முயற்சிக்காதே! இந்தத் தோட்டக்காரன் மற்றவர்களைப் போல் அல்ல! நம் மூத்தோர் பலர், இவனிடம் சிக்கி கறியாகி விட்டார்கள். நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லலாம். அவர்களுக்கும் அந்தப் பொருள் அவசியம் என்றாலும், இயற்கையாகவே ஊறும் இரக்க குணத்தின் காரணமாக நம்மை விட்டு விடுவார்கள். சிலர் குச்சியால் நம்மை இரண்டு தட்டு தட்டி விரட்டி விடுவார்கள். இவனோ, கொடூரன். கொன்று விடுவான்,'' என்றது. குட்டி ஆடு தாய் சொல் கேளாமல், வேலி தாண்டி உள்ளே புகுந்தது. ஆசை ஆசையாய் கீரையை உண்டது. தோட்டக்காரன் பார்த்து விட்டான். அரிவாளுடன் விரட்டினான். நான்கு பக்கமும் அவனது பணியாட்கள் சூழ்ந் தனர். தப்ப முடியாத ஆடு, அன்றிரவு அவர்களின் உணவானது.
ஆசைக்கு எல்லை வேண்டும். நல்லவர்கள் துணையை மட்டுமே நாட வேண்டும். "பெரியவர்கள் சொல் பெருமாள் சொல்' என்ற அனுபவ சுலவடையை இனியாவது ஏற்று நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்கும். புரிகிறதா!
இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம்
<ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து,""கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். இறைவழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய்,'' என்று அறிவுரை சொன்னார்.
அவள் அதைக்கேட்டு நடுங்கினாள்.
""சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே! நான் என்ன செய்வேன், இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன்,'' என்றாள். பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள். ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள்.
ஆனால், பாழும் சமுதாயம் அவளை விடவில்லை.
""உன் பரம்பரையே இந்தத்தொழில் செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே! இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா?'' என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள்.
வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள். இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி அழுதாள். அவளது மனமாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என கோபமடைந்தார். ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல் தினமும் உயர்ந்து கொண்டே வந்தது.
ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி, ""நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே!'' என்று கடிந்து கொண்டார். அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,""கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக்கொள்,''என்று கதறியழுது பிரார்த்தித்தாள்.
அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான். அன்றிரவே அவளது உயிர் போனது. சந்நியாசியும் அதே நாளில் இறந்தார். தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள். நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது. சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன. அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர். சந்நியாசி கதறினார். ""பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா?'' என்றார்.
""துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள். மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள். அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச்செயலை மட்டுமே சிந்தித்தீர். அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம்,'' என்றனர்.
இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா!
நாகசதுர்த்தி விரதம்
<இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் பாம்பை வழிபடும் வழக்கம் இருக்கிறது. சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு இருந்து வந்துள்ளது.
விவசாயிகள், ஆடியில் தங்கள் பணிகளைத் தொடங்குவது வழக்கம். அவர்களுக்கு பாம்பு மற்றும் பூச்சிகளால் இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இறைவழிபாடு செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு கழுத்திலும், இருக்கையாகவும் பாம்புகளை உருவாக்கினர். இன்னும் ஒரு படிமேலாக, பாம்புக்கே மூலஸ்தானம் அமைத்து, நாகராஜர் கோயில்களையும், புற்றுக்கோயில்களையும் உருவாக்கினர். பாம்புக்குரிய தினமாக நாகசதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பது குறித்து கதை ஒன்றும் உள்ளது.
அரசன் ஒருவனின் பிள்ளைகளான ஏழுபேர் ஒரே சமயத்தில் நாகம் தீண்டி இறந்தனர். அவர்களோடு பிறந்த தங்கை ஒருத்தி மட்டும் இருந்தாள். அவள் விரதமிருந்து. பாம்பிருந்த புற்று மண்ணை நீரில் கரைத்து, இறந்த சகோதரர்களின் உடலில் பூசினாள். அவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அந்த நாளே நாகசதுர்த்தி என்பர்.
இந்த விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் கடைபிடிப்பது வழக்கம்.இந்த ஆடியில் வருகிறது. இந்நாளில், அரசமரத்தடியில் உள்ள ஒன்பது நாகர்களான அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரிஅப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் நாக விக்ரஹங்களுக்கு பால் அபிஷேகம் செய்வர். புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வர். இந்த விரதத்தால் நாகதோஷம், புத்திர தோஷம் நீங்கும். ராகுகேதுவால் உண்டாகும் திருமணத்தடை அகலும். நாகசதுர்த்தியன்று அரசமரத்தடியில் பாம்புக்கல்லை பிரதிஷ்டை செய்வது சிறப்பு.
கருடஜெயந்தி
<கருடஜெயந்தி
பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கருடபஞ்சமி விரதத்தை ஆவணி வளர்பிறை பஞ்சமியில் அனுஷ்டிப்பர்.
(இவ்வாண்டு பஞ்சாங்க மாற்றத்தால் ஆடியிலேயே வருகிறது) அடிக்கடி பாம்பு எதிர்ப்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் சிரமப்படுபவர்கள் இதனை மேற்கொள்வது நல்லது. கருடன் அவதரித்த நாளே கருட பஞ்சமி. சிலர் அவரது நட்சத்திரமான சுவாதியின் அடிப்படையில், ஆடி சுவாதியன்று கருட ஜெயந்தியைக் கொண்டாடுவர்.
வேதகால மகரிஷியான கஷ்யபருக்கும், விநதைக்கும் பிறந்தவர் கருடன். தன் அன்னையின் பெயரால் "வைநதேயன்' என இவர் அழைக்கப்பட்டார். ஒருசமயம், விநதை தன் சக்களத்திக்கு அடிமையாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிமைத்தளை தீர வேண்டுமானால், தேவலோகம் சென்று அமுதக்கலசத்தைக் கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் வைநதேயனாகிய கருடன். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அன்னையை விடுவித்தார். இவரது அசாத்திய வலிமை கண்ட விஷ்ணு, இவரைத் தனக்கு வாகனமாக்கிக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த கிரீடாசலத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்து திருப்பதி ஏழுமலையை உருவாக்கியவர் கருடன். அதில் கருடனின் பெயரால் "கருடாத்ரி' என்றொரு மலையும் உண்டு.
ராவணன் மகனான இந்திரஜித், லட்சுமணன் மீது தொடுத்த நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தபோது கருடன் அவரைக் காப்பாற்றினார். திருப்பாற்கடலின் மத்தியிலுள்ள சுவேதத்தீவில் இருந்த பாற்கட்டிகளை பூலோகத்திற்கு கொண்டு வந்ததும் கருடனே! இக்கட்டியே "சுவேதமிருத்திகை' என்னும் நாமக்கட்டியாக பயன்படுகிறது.
தட்சிணாயன ஆறுமாதமும் அம்மனுக்கு
ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்வதை "தட்சிணாயன காலம்' என்பர். "தட்சிணம்' என்றால் "தெற்கு'. (இதனால் தான் தெற்குமுக கடவுளை தட்சிணாமூர்த்தி என்று சொல்வர்) இந்த ஆறுமாதமும் தேவலோகத்தில் இரவாக இருக்கும். இந்த மாதங்களில் பூலோகத்திலும் இரவுநேரம் கூடுதலாக
இருக்கும். பகல் பொழுதைக் குறிக்கும் தை முதல் ஆனி வரையான உத்ராயணத்தில் சிவனையும், இரவுப்பொழுதைக் குறிக்கும் தட்சிணாயனத்தில் அம்பிகையையும் வழிபடுவர். இதன் அடிப்படையில் ஆடியில் மாரியம்மன் வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி, மார்கழி பாவைநோன்பு ஆகியவை நடக்கிறது.பாவை நோன்பு கார்த்தியாயினி தேவிக்குரிய விரதமாக அக்காலத்தில் இருந்தது. ஆண்டாள், மாணிக்கவாசகர் காலத்திற்குப்பின் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பாக மாறி விட்டது.
அவ்வையார் விரதம்.
கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்துவேப்பிலை, புளிய இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இந்த வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச்செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி' என்று சொல்வர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம். ஆண்களுக்கு இந்த விரதத்தில் பங்கேற்க அனுமதியில்லை. கொழுக்கட்டை பிரசாதம் கூட தருவதில்லை.
ஆயிரம் கண் கொண்டவள்'
<தெய்வத்தின் திருநாமங்களை வரிசைப்படுத்தி அர்ச்சிப்பது அர்ச்சனை. இதில் அம்பிகைக்குரிய ஆயிரம் திருநாமங்களைக் கூறுவது லலிதா சகஸ்ரநாமம். அதில் "சகஸ்ராக்ஷி' என்ற திருநாமம் உண்டு. இதற்கு "ஆயிரம் கண் கொண்டவள்' என்று பொருள். கண்ணாத்தாள், ஆயிரம் கண்ணுடையாள், கண்ணுடைய நாயகி, கண்ணாயிரத்தாள் என்று அம்பாளைக் குறிப்பிடுவது இதனால் தான்.
ஆடியில் அம்பாள் வழிபாடு ஏன்?
ஆடி என்னும் அரக்கன் ஒருமுறை அம்பிகை இல்லாத நேரத்தில் கைலாயம் வந்தான். பார்வதியின் தோழியான உத்தாலகுசுமை அங்கிருந்தாள். அவளது காவலை மீறி உள்ளே நுழைவது கடினம் என்பதை அறிந்து, பாம்பு வடிவில் புகுந்தான். சிவன் இருக்கும் இடத்தை அடைந்ததும் பார்வதியாக உருமாறினான். எல்லாம் அறிந்த சிவன், அசுரன் வந்திருப்பதை அறிந்தாலும், ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார். அன்பு மொழி பேசி அருகில் அழைத்தார். அரக்கன் சிவனை நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார். சிவ மகாபுராணத்தில் இந்த அரக்கனின் வரலாறு இடம்பெற்றுள்ளது. தன்னுடைய வடிவில் வந்தவன் என்பதால், தேவி அவனிடம் இரக்கம் கொண்டு நற்கதி வழங்கினாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே "ஆடி' என்ற பெயர் ஏற்பட்டது. அந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் அம்பிகை மனம் குளிர்ந்து அருள்புரிவாள்
ஆடி என பெயர் வந்தது ஏன்?
பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பவுர்ணமி அமையும்.ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம்,பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது "பூராடம்' என்றும், உத்தர ஆஷாடம் "உத்திராடம்' என்றும் சொல்லப்படுகிறது. உத்திர ஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் "ஆஷாடீ' எனப்பட்டது. அதுவே தமிழில் "ஆடி' என்று மருவி விட்டதாகச் சொல்வர்.
நான்காம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு என்பது உண்மையா?
நான்காம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு என்பது உண்மையா?
நாய் என்ன படாதபாடு படுவதைக் கண்டீர்கள்? அவை சொகுசாக இருப்பதற்காகப் பலர் படாதபாடு படுவதைத் தான் இன்று கண்டு கொண்டிருக்கிறோம். மூன்றாம் பிறை பார்த்தால் நீண்டஆயுள் கிடைக்கும் என்றார்கள். அப்ப நான்காம் பிறை பார்த்தால் என்று ஒருவர் கேட்கிறார். "நாய்படாத பாடுதான்' என்று கூறிவிட்டார்கள். மூன்றாம் பிறை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டதே தவிர, நான்காம்பிறை பார்ப்பவர்களுக்கெல்லாம் நாய்பாடு ஏற்படும் என்பதல்ல. நான்காம்பிறையைப் பார்க்கக் கூடாது என்று கண்ணை மூடிக் கொண்டு நடந்து எங்காவது கீழே விழுந்து விடாமல் இருந்தால்
சரி தான்.
சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?
ஒன்றும் தவறில்லை. அழகாகவும், மங்களகரமாகவும் இருக்கும். எனினும், வீட்டு வாசல், பூஜையறை, சமையற்கட்டு, கொல்லைப்புறம் முதலிய இடங்களில் அரிசிமாவில் கோலம் போட வேண்டும்.
* சூரிய நமஸ்காரத்தைப் பெண்களும் செய்யலாமா
சூரியனுக்கு யார்வேண்டுமானாலும் நமஸ்காரம் செய்யலாம். இதற்கு தடையேது! அதுசமயம் சொல்லவேண்டியஸ்லோகங்களை
யாரிடமாவது தெரிந்து கொண்டு சொல்லலாம். கோளறு பதிகமும் சொல்லலாம்.
* திருஷ்டி கழிக்க ஏற்ற நாள் செவ்வாயா, வெள்ளியா? ஏன்?
நீங்கள் கேட்ட இரண்டு நாட்களுமே ஏற்புடையது தான். திருஷ்டியின் பாதிப்புகளைப் போக்கும் தெய்வங்களாக முருகனும் துர்க்கையும் உள்ளனர். முருகனுக்கு செவ்வாயும், துர்க்கைக்கு வெள்ளியும் ஏற்ற நாட்கள்.
* விரதகாலத்தில் கறுப்புநிற உடை உடுத்துவது சரியா?
விரதமும் ஒரு சுபநிகழ்ச்சி தான். இதில் கறுப்பு நிற உடை உடுத்துவது கூடாது.
* சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும்போது, தென்னாடுடைய சிவனேபோற்றி என்று கூறுவது ஏன்?
வடக்கில் இருப்பது பூலோக கயிலாயம். சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் என்பது எல்லா உலகங்களுக்கும் மேலான இடம். மோட்சம் எனப்படும் வீடுபேறு அங்கே தான் உள்ளது. வடக்கு, தெற்கு பிரச்னை வழிபாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணிக்கவாசகர் "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பாடினார்.
**
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிடுவது ஏன்?
காசிக்குத் தினமும் லட்சக்கணக்கானவர்கள் செல்கிறார்கள். இவர்கள் எதையாவது விட்டு விட்டால் இந்தியாவின் பொருளாதாரம் சரியாகி விடுமா என்ன! இவ்வாறு விட்டு வருதல் என்பது கயா சென்று சிராத்தம்(திதி கொடுப்பது) செய்பவர்களுக்கு மட்டும் தான். கயாவில் செய்யும் பிதுர்காரியம் மிக உயர்ந்த புண்ணியத்தை தரும். இதைச் செய்துவிட்டு வந்த பிறகு, மனதில் எழும் அல்ப ஆசைகளை விடுத்து, தர்மநெறியில் வாழ்ந்தால் அந்த புண்ணியம் நம்மைக் காப்பாற்றும் என்பதால் அப்படிக் கூறுகிறார்கள். அதாவது நமக்குப் பிடித்தமான ஒன்றுக்காக சில சமயம் நெறி தவற நேரிடுகிறது. எனவே, தான் ஏதாவது ஒன்றை என்றில்லாமல், நமக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு விட வேண்டும்.
சுபம், அசுபம் இரண்டிலும் சங்கு ஊதுகிறார்களே ஏன்?
சங்கு ஊதுவது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள். சுபநிகழ்ச்சியில் ஊதப்படுவதால் தேவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அசுபத்தில் ஊதுவதால் பிதுர்கள் (நம் முன்னோர்) அவர்களது பிரிவால் சோகத்திலுள்ள நாம் மீண்டும் மகிழ்ச்சி பெற வாழ்த்துவார்கள்
** பெண் தெய்வப்படங்களை விரித்த கூந்தலுடன் சித்தரிப்பது ஏன்?
பெண் தெய்வங்களின் தலை அலங்காரத்தை மூன்று விதமாகச் செய்யலாம் என சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரீடம், கரண்டமகுடம், அளகபாரம் என்பவை. கிரீடம், கரண்ட மகுடம் போன்றவை சித்தரிக்கப்படும்போது விரித்த கூந்தலாகவே அமைய வேண்டும். அளகபாரம் என்ற வகையில் தான் ஜடை பின்னலிடுதல்(வேணி பந்தம்), ஜடை மகுடம்(உச்சிக் கொண்டை) போன்ற முறைகள் கூறப்பட்டுள்ளன. கோப வடிவான சில சக்திகளை மட்டும் தான் மகுடம், கிரீடம் போன்றவை இல்லாமல் விரித்த கூந்தலுடன் சித்தரிக்கப்படுவதுண்டு.
*வழிபாட்டில் காற்றடித்து கற்பூரம், விளக்கு அணைந்துவிட்டால் மனம் வருந்துகிறது. பரிகாரம் கூறுங்கள்.
காற்றடிப்பதை நிறுத்த இயலாது. இது இயற்கையாக நிகழ்வது. இதுபோன்ற இடங்களில் நாம் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். கனத்த திரியாகப் போட்டு விளக்கேற்றலாம். கற்பூரத்தை கட்டியாக வைக்காமல் நொறுக்கி தூளாக நிறைய வைத்து ஏற்றலாம். இவையும் மீறி காற்றில் அணைந்தாலும் வருத்தப்படத் தேவையில்லை. மீண்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
மனத்தூய்மை பெற எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்?
ஐந்துமுக ருத்ராட்சம் மிக உயர்ந்தது. கண்,காது,மூக்கு, வாய், மெய் என்னும்
ஐம்புலன்களே மனதில் எழும் எண்ணங்களுக்கு காரணமாகின்றன. ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து அதில் ஐம்புலன்களும் பொருந்திவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். புலன்கள் மனதைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது தடுக்கப்படும். தவறான எண்ணங்கள் ஏற்படாவிட்டால் மனம் தூய்மை பெற்றுவிடும்.
ஆண்டாள்
* ஆண்டாள் காட்டிய உயர்ந்தவழி சரணாகதி தத்துவம். இறைவனிடம் முழுமையாக சரணடைய வேண்டும். அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும், இந்த உலகை வெறுக்க இறைவனிடம் சரணடைவதைத் தவிர சிறந்த வழியில்லை.
* சுவாமிதேசிகன் ஆண்டாளைச் சிறப்பிக்கும் கோதாஸ்துதியில், ""விஷ்ணு சித்தரின் திருமகளான கோதை( ஆண்டாள்)
என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதுக்கு இனியவளான அவள் எப்போதும் இதயத்தில்
பிரகாசிக்கவேண்டும்,'' என்று பிரார்த்தனை செய்கிறார்.
* பூமாதேவியே ஆடிப்பூரத்தில் அவதரித்தாள். பெரியாழ்வார் அவளுக்கு "கோதை' என்று பெயரிட்டு வளர்த்தார். "கோதா' என்னும் சொல்லுக்கு "நல்ல வாக்கு தருபவள்' என்று பொருள். அவளைத் தியானம் செய்தால் நமக்கு நல்ல வாக்கைக் கொடுத்தருள்வாள்.
* மாயவனாகிய திருமாலைக் கட்டிப்போட ஆண்டாள் இருவித மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூமாலை. மற்றொன்று பாமாலை. பாமாலையைப் பாடிச் சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவனுக்கு உகந்து அளித்தாள். அதனால், "சூடிக்கொடுத்த
நாச்சியார்' என்னும் பெயர் பெற்றாள்.
* ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் கிருஷ்ணபக்தியில் திளைத்தவர். எப்போதும் அவளிடம் கிருஷ்ண சரிதத்தை எடுத்துச் சொல்லி வந்தார். இதனால் பிஞ்சுமனதில் கிருஷ்ணபக்தி ஆழமாக வேரூன்றியது. சின்னப் பெண்ணானாலும் திருமாலைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால், சிறுமியான அவள் இந்த விஷயத்தை பிறரிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்தாள். இதனால் தான், வரவரமுனிகள் ஆண்டாளை "பிஞ்சாய்ப் பழுத்தாளை' என்று குறிப்பிட்டுள்ளார்.
* ஆண்டாள் என்றால் "ஆள்பவள்' . அவள் அன்பினால் பூமாலை புனைந்து கண்ணனை ஆண்டாள். நம்மையும் இன்று ஆண்டு கொண்டிருக்கிறாள்.
* ஆண்டாள் பாடிய திருப்பாவையில் 30 பாசுரங்கள் உள்ளன. அதில் முதல் பத்தில் திருமாலின் திருநாமத்தைச் சொல்லவும், அடுத்த பத்தில் திருவடியில் மலர்களை இட்டு அர்ச்சனை செய்ய வேண்டுமென்றும், மூன்றாம் பத்தில் நம்மையே இறைவனுக்கு ஆத்ம சமர்ப்பணமாக கொடுக்க வேண்டுமென்றும் சொல்கிறாள்.
* வேதம் படிப்பது கடினமானது. வேத மந்திர ஒலியை நாபி, கழுத்து, உதடு என்று உடம்பில் ஒவ்வொரு இடத்தில் இருந்து எழுப்ப வேண்டியிருக்கும். அதற்குரிய ஸ்வரம் பிடிபடுவது அதை விட கஷ்டம். ஆனால், வேதத்தின் சாறைப் பிழிந்த ஆண்டாள் பாசுரமாக்கி திருப்பாவையாக நமக்கு வழங்கி இருக்கிறாள். அதைப் படிப்பது எளிது.
* யாகசாலையில் வேள்வி நடத்தும் அந்தணர்கள் திரவியங்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் சேர்ப்பார்கள். ஆண்டாளோ, தன்னுடைய உடல்,பொருள்,ஆவி என்னும் மூன்றையும் பக்தி என்னும் நெய்தடவி வடபத்ரசாயி பெருமாளிடம் சேர்த்து விட்டாள்.
* மனம் நினைப்பதையே சொல்ல வேண்டும். சொல்வதையே செயலாக்க வேண்டும். மனச்சுத்தத்தோடு ஆண்டாளின் பெயரை அடிக்கடி சொல்லுங்கள். பலனைப் பெறுங்கள்.
வரலட்சுமி விரதம்
பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது. ஆந்திராவில் இந்த விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நோன்பை மாமியார், மருமகளுக்கு எடுத்து வைப்பது மரபு. புதிதாக திருமணமான பெண்கள், அந்த ஆண்டிலேயே விரதத்தை துவங்கி விடுவது சிறப்பு. ஒருவேளை, இவ்வளவு நாள் விட்டுப் போயிருந்தாலும் இப்போது துவங்கலாம். இதனை "தலைநோன்பு' என்பர். தலைநோன்பு துவங்குவோர் லட்சுமி தாயாருக்கு லட்டு, மைசூர்பாகு, திரட்டுப்பால் நைவேத்யம் செய்யலாம். இதுதவிர, வழக்கமான பாயாசம், வடை, கொழுக்கட்டை, எள்ளுருண்டை, இட்லி தயாரித்து ஏழைப்பெண்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். நல்ல உடையும் கொடுக்கலாம்.
தோரக்ரந்தி பூஜை!
வரலட்சுமி பூஜை செய்பவர்கள், முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இட்ட, மஞ்சள் தடவிய நோன்புச்சரடை வரலட்சுமிக்கு அணிவிக்கவேண்டும். அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் கயிறை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் குடும்பத்தலைவியே கட்டி விட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு "தோரக்ரந்தி பூஜை' என்று பெயர்.
புனர்பூஜை செய்யுங்க!
வரலட்சுமி விரதத்தன்று மாலையில் வரலட்சுமிக்கு தூபதீபம், கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். பின் ஆரத்தி எடுக்கவேண்டும். வீட்டுக்கு அழைத்த சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்கு, தாம்பூலம்,உடை கொடுத்து வழியனுப்ப வேண்டும். நிவேதனம் செய்த பலகார வகைகளை இரவில் சாப்பிடவேண்டும். அடுத்த நாள் காலையில் மறுபூஜை செய்ய வேண்டும். இதற்கு புனர்பூஜை என்று பெயர். இதனைச் செய்ய இயலாதவர்கள் முதல்நாளே சுண்டல் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அரிசிப்பானையில் கலசம்!
வரலட்சுமி பூஜையில் கலசம் வைப்பதுண்டு. இதை அன்று இரவில் அரிசி பாத்திரத்தில் வைக்கவேண்டும். இதனால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். கலசத்தில் இருந்த தேங்காயை, மறுவெள்ளியன்று பால்பாயசம் செய்ய பயன்படுத்தலாம். விரதம் இருந்த அனைவரும் இந்த பாயசத்தைப் பருகுவது அவசியம்.
விரத பலன்கள்
சுமங்கலிப்பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதத்தால் வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். லட்சுமி அருளால் செல்வவளம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும்.
வீட்டில் செல்வ வளத்தை பெருக்க ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் ஒரு பூஜை தான் வரலட்சுமி பூஜை. அந்த பூஜை செய்யும் நாளானது வருடத்திற்கு ஒரு முறை, அதிலும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் தான் வரும். அதுவும் அந்த பூஜையை செய்யும் போது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, ஒரு பெரிய விஷேசம் போல் பெண்கள் செய்வார்கள். அதிலும் இந்த பூஜையை விரதம் இருந்து, சுமங்கலிகள் செய்தால் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்றும், கன்னிப் பெண்கள் செய்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் என்றும் நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும்?
வரலட்சுமி பூஜையின் முதல் நாள் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். மேலும் வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் மேற்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைக்க வேண்டும். மேலும் பழங்கள், இனிப்புகள் வாங்கி வைக்க வேண்டும்.
அம்மன் கலசம் செய்ய...
கலசம் செய்ய ஒரு சொம்பை எடுத்து, அதில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, தகரத்தால் வெள்ளி முலாம் பூசப்பட்ட அம்மன் முகத்தை, அந்த தேங்காயில் வைத்து பத்திரமாக கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறு சேலைத்துணியை அந்த கலசத்தில், சேலையை கட்டுவது போல் கட்டிவிட வேண்டும். பின் அம்மனுக்கு வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் அழகான பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்போது கலசமானது தயாராகிவிட்டது.
பூஜை அன்று...
பூஜை செய்யும் முன் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்ய பால் பாயாசம் செய்து வைக்கலாம். பூஜையில் ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பின்பு அந்த கயிற்றை வலது மணிக்கட்டில் கட்ட வேண்டும்.
அதிலும் விரதம் இருப்பவர்கள் அந்த தினத்தில் லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
பின்பு சுமங்கலிப் பெண்களை அழைத்து, பூஜை முடிந்ததும், அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு போன்ற தட்சணைகளைக் கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறெல்லாம் பூஜை செய்தால் வீட்டில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Friday, July 20, 2012
சைவ ஆகமங்கள்சிவனுடைய திருமேனியிலிருந்து தோன்றின
சைவ ஆகமங்கள் 28 ஆகும்.அவை சிவனுடைய திருமேனியிலிருந்து தோன்றின.
அவை முறையே,
காமிகம் - திருவடிகள்
யோகஜம் - கணைக்கால்கள்
சிந்தியம் - கால்விரல்கள்
காரணம் - கெண்டைக்கால்கள்
அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
தீப்தம் - தொடைகள்
சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
சுப்ரபேதம் - தொப்புள்
விஜயம் - வயிறு
நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
ரௌரவம் - செவிகள்
மகுடம் - திருமுடி
விமலம் - கைகள்
சந்திரஞானம் - மார்பு
பிம்பம் - முகம்
புரோத்கீதம் - நாக்கு
லளிதம் - கன்னங்கள்
சித்தம் - நெற்றி
சந்தானம் - குண்டலம்
சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
கிரணம் - இரத்தினா பரணம்
வாதுளம் - ஆடை
Wednesday, July 18, 2012
நவ நிதிகள்
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன்.
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை?
1) பத்மம்
2) மஹாபத்மம்
3) மகரம்
4) கச்சபம்
5) குமுதம்
6) நந்தம்
7) சங்கம்
8) நீலம்
9) பத்மினி
குபேரன்
இவற்றுள் மிக முக்கியமான நிதிகள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி. அள்ள அள்ள வற்றாமல் கூடிக் கொண்டே இருக்கும் அபூர்வ ஆற்றல வாய்ந்த இந்த நிதிகளைப் பற்றி அப்பர் முதல் அருளாளர்கள் பலரும் தங்களது பாக்களில் பாடியுள்ளனர்.
குபேரன் சிவ பெருமானது உற்ற தோழன். அவனுக்கு 'சிவ சகா' என்ற பெயரே உண்டு. சிவ புராணத்தில் ருத்ர சம்ஹிதையின் பத்தொன்பதாவது அத்தியாயம் ஒரு அழகிய சம்பவத்தை வர்ணிக்கிறது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு சிவ-குபேரனின் நட்பு என்பதாகும்.
அளகாபுரியின் அதிபதியான குபேரன் கடுந்தவத்தை மேற்கொண்டான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபிரான் உமையுடன் தோன்றினான். ஆயிரக்கணக்கான உதயசூரியன்களின் பிரகாசத்தைத்தோற்கடிக்கும் பேரொளியைக் கண்ட குபேரன் அந்த ஒளியால் கண்கள் கூசவே கண்களை மூடிக் கொண்டான்.
"உன் திருவடிகளைக் காணும் பார்வையைக் கொடு' என்று வேண்டினான். சிவபிரான் தன் உள்ளங்கையால் அவனைத் தொட குபேரன் பார்வை பெற்றான். முதலில் அவன் பார்வை உமையின் மேல் பட்டது.
சிவனின் பத்தினியான உமையின் ஒளியையும் அழகையும் கண்டு வியந்த குபேரன் "சிவனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பெண்மணி யார்? என்னை விட எப்படிப்பட்ட பெருந்தவத்தை (சிவனின் அருகில் இருக்கும்படி) மேற்கொண்டாள் இவள்? என்ன உருவம்! என்ன அன்பு! என்ன அதிர்ஷ்டம்! என்ன பெரும் புகழ்!' என்று திரும்பத் திரும்ப குபேரன் கூறினான்.
அவனின் பார்வை அம்பிகையை விட்டு அகலாதிருக்கவே தேவியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்துத் தெறித்தது.
"இவனது பார்வை என்ன பார்வை; பொறாமையுடன் கூடியதா" என்று தேவி சிவபெருமானை வினவ சிவபிரான் சிரித்தார்.
"இல்லை தேவி! இவன் உனது மகனே! உன் தவத்தின் ஒளியைக் கண்டு அவன் வியந்து என்ன அழகு! என்னஒளி! என்ன உருவம் என்று புகழ்கிறான்." என்று கூறிய சிவபிரான் குபேரனை நிதிகளுக்கு நாயகனாக்குகிறான்; அத்தோடு குஹ்யர்களுக்கும் அதிபதி ஆக்குகிறான்.
குஹ்யர்கள் என்றால் மறைந்திருப்பவர்கள் என்று பொருள். யட்சர்களைப் போல இவர்களும் குபேரனுக்கு சேவகம் செய்யலாயினர்.ஒரே கண்ணை உடையவனாதலால் "ஏக பிங்களன்" என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு. வைஸ்ரவணன் என்பதும் குபேரனின் பெயரே.அஷ்டதிக் பாலர்களில் குபேரனும் ஒருவன். வடதிசைக்கு அதிபதி. தீபாவளியன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து பாரதம் முழுவதும், குறிப்பாக வட இந்தியாவில், வழிபடுகின்றனர்.
நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் சிலையை சென்னையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் காணலாம்.
பாரத ரிஸர்வ் வங்கியின் வாசலிலுல் குபேரனுக்கு ஒரு இடம் உண்டு. (இந்தக் கட்டுரையைப் பார்த்த "செகுலர் பர்ஸன்" யாரேனும் குபேரனுக்க ரிஸர்வ் வங்கி வாசலில் இடம் என்றால் தேசத்தின் செகுலரிஸம் என்னாவது என்று முழங்கி அதை அகற்ற வேண்டும் என்று கூறாமல் இருக்க வேண்டும். முஸ்லீம்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸ் பெயர் கருடா ஏர்வேஸ் என்று இருக்கலாம்; ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட பெயர்கள் இருந்தால் நம் மதச்சார்பின்மை என்னாவது?!)
குபேரனுக்கு ஒரு கோலம் உண்டு.
எந்தப் பக்கம் கூட்டினாலும் 72 வரும் இந்த மாயச்சதுரம் குபேரனுக்குரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வரப்படுகிறது.
குபேரனுடைய தியான ஸ்லோகம் பின் வருமாறு:-
மநுஷ்யவாஹ்ய விமாந வரஸ்திதம் கருடரத்ந நிபம் நிதி நாயகம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜே துந்திலம்
இதனுடைய பொருள் :- மனிதர்களால் தாங்கப்பெறும் உத்தமமான விமானத்தில் வீற்றிருப்பவரும், கருடரத்தினம் (மரகதம்) போன்று ஒளி வீசுபவரும், நவ நிதிகளின் தலைவரும், சிவ பெருமானின் தோழரும், சிறந்த கதை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவரும் பொன் முடி முதலிய ஆபரணம் பூண்டவரும் தொந்தியோடு விளங்குபவரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானை வணங்குகிறேன்.
குபேர மந்திரம் பின் வருமாறு:-
ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய
தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா
வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இந்தக் குபேர சக்கரத்தை அல்லது யந்திரத்தை உரியவர்களைக் கொண்டுவீட்டில் பிரதிஷ்டை செய்வது மரபு.
அல்லது தாமிரத் தகட்டில் பொறித்து கடைகளில் விற்கப்படும் இந்த யந்திரத்தை வாங்கி வணிகக் கடைகளிலும், இல்லங்களிலும், பர்ஸிலும் குபேரனை நாடி வழிபடுவோர் வைத்திருப்பர்.
'சிவ சகா' என்பதால் சிவனை வழிபட்டாலும் குபேரனது பார்வை சிவபிரானின் பக்தர்கள் மீது திரும்பும்.
குபேரனது சக்கரத்தை வைத்து பக்தியுடனும் வழிபட்டால் செல்வம் வந்து சேரும் என்று அற நூல்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன
Friday, July 13, 2012
நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வருகிறேன். இதை என் ஆயுள் முழுவதும் கடைபிடிப்பது சரிதானா
?
ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு? தினமும் கோயிலுக்குச் சென்று மனநிறைவோடு வலம் வாருங்கள். ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் நடத்துங்கள்
உண்மை பேசினால் என்ன நன்மை?
உண்மையை மட்டுமே பேச வேண்டும், சத்தியநெறியை மட்டும் கடைபிடிக்க வேண்டும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் இதயத்து மாளிகையில் சத்தியத்தை மட்டுமே குடியமர்த்த வேண்டும். இதனால், என்ன லாபம் என்பதற்கு உதாரணகர்த்தா திருக்கடையூர் அபிராமி பட்டர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், சரபோஜி ராஜாவிடம் சென்று, நமது ஊர் அபிராமி கோயிலில் ஒரு பைத்தியம் வேலை செய்கிறது. அம்பாள் முன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஏதேதோ பிதற்றுகிறது. இவரது பிதற்றலைக் கேட்டு அம்பாளுக்கும் கஷ்டம், பக்தர்களுக்கும் கஷ்டம், என்றனர். ஆனால், அம்பாள் எல்லாம் அறிந்தவள் அல்லவா! அபிராமிபட்டர் சத்தியநெறி தவறாதவர், தன் முன்னால் அமர்ந்து சத்தியத்தை மட்டுமே பேசுபவர் என்பதை ஊருக்கு உணர்த்த முடிவெடுத்தாள். ஒருநாள் சரபோஜி கோயிலுக்கு வந்தார். இன்று என்ன திதி? என பட்டரிடம் கேட்டார். அவர் அம்பாளின் முகத்தை பூரணசந்திரனாகக் கற்பனை செய்து லயித்திருந்த வேளை அது. பவுர்ணமி என்றார். இன்று அமாவாசையல்லவா! பவுர்ணமி என்கிறானே, நிச்சயம் இவன் பைத்தியம் தான், என்று நினைத்த சரபோஜி, இதுதான் பவுர்ணமி வானமா? என்று கேலியாக சிரித்தபடியே தலையைத் தூக்கினார். நிஜமாகவே வானில் சந்திரன் இருந்தான். அதாவது, சத்தியம் பேசுபவர்கள், தவறாகவே ஏதும் சொன்னாலும் கூட அது சத்தியமாகி விடுகிறது. அதனால் தான் சத்தியத்தைக் கடைபிடிக்கும் மகான்கள் சொல்வதெல்லாம் பலித்து விடுகிறது. சத்தியத்தின் மதிப்பை அறிந்து சத்தியத்தின் பக்கம் திரும்புங்கள். கலியுகத்தில் இது சாத்தியமா என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்லாமல் சத்தியத்தின் பக்கம் போனால் நன்மை நமக்குத்தான்!
அசைவம் சாப்பிடுவது பாவமா?
அஹிம்சா பரமோ தர்ம என்கிறது சாஸ்திரம். பிற உயிர்களைத் துன்புறுத்தாமையே மேலான தர்மம். எந்த உயிரையும் கொல்லாமல் வாழ்வதைத் தம் வாழ்நாள் தவமாக ஞானிகள் ஏற்று வாழ்ந்தனர். இந்து தர்மத்தின் அடிப்படையான கொள்கையே அகிம்சை என்னும் தர்மம் தான். அசைவம் சாப்பிட்டால் அஞ்ஞானம் உண்டாகும். மருத்துவ உலகம் உடல்நலனுக்கு சைவ உண்வையே சிபாரிசு செய்கிறது. மாமிசம் உண்பதைப் பாவமா? என்று கேட்டிருக்கிறீர்கள். மகா மகா பாவம் என்ற உண்மையை உணருங்கள். மரக்கறி உணவே ஆன்மிக வாழ்விற்கு உகந்தது.
Subscribe to:
Posts (Atom)