Sunday, July 29, 2012
சீடர்களையும் மதித்த மாபெரும் மகான் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்த போது, மார்க்ரெட் நோபிள் என்ற கிறிஸ்தவப் பெண்மணி சுவாமியின் சிஷ்யை ஆக முடிவு செய்தார். அவருடன் இந்தியா வர விருப்பம் தெரிவித்தார்.
""அவசரம் வேண்டாம், உன் மனது பக்குவப்படட்டும்,'' என சுவாமி சொல்லிவிட்டார்.
பின்னாளில், சுவாமிஜி கோல்கட்டாவில் ஆஸ்ரமம் அமைத்திருப்பதை அறிந்த நோபிள், சுவாமிஜிக்கு கடிதம் எழுதினார். இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.
நோபிளுக்கு சுவாமி எழுதிய பதில் கடிதத்தில், ""இங்குள்ள மக்கள் மூடநம்பிக்கை மிகுந்தவர்கள். பாதி நிர்வாணமாக இருக்கும் இவர்கள் மத்தியில் நீ வாழ வேண்டும். கடும் வெயில் அடிக்கும்,'' என்று எழுதியிருந்தார்.
ஆனாலும், நோபிள் இந்தியா வந்தார். அவரே சகோதரி நிவேதிதை என்ற பெயரில் சுவாமியின் சிஷ்யை ஆனார்.
ஒருநாள், நிவேதிதை ஆஸ்ரமத்துக்கு சில பணிகள் தொடர்பாக வந்தார். சுவாமிஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்தார். பணிமுடிந்து அவரிடம் விடை பெற வந்தார்.
""சாப்பிட்டாயா?'' எனக்கேட்டார் சுவாமிஜி.நிவேதிதை ""இல்லை'' என்றதும் சுவாமிஜி அவரை அமர வைத்து பரிமாறினார். நிவேதிதை எவ்வளவோ தடுத்தும் கைகழுவ தண்ணீர் ஊற்றினார். குடிக்க பால் கொடுத்தார்.
""ஜி! நானல்லவா உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும், நீங்கள் செய்கிறீர்களே,'' என கண்கலங்க கேட்டார் நிவேதிதை.
""இயேசுநாதர் தன் வாழ்நாளின் இறுதியில் சீடர்களின் பாதங்களை கழுவியதை நீ அறிந்திருப்பாய் அல்லவா?'' என்று சுவாமிஜி எதிர்க்கேள்வி கேட்டார்.
ஆனால், அது அவரது வாழ்வின் இறுதிக்காலமாக இருக்கும் என்று சகோதரி நிவேதிதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சீடர்களையும் மதித்த மாபெரும் மகான் சுவாமி விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment