Tuesday, February 15, 2011

பத்தராய்ப்பணிவார்

பத்தராய்ப்பணிவார் புராணம்


தொண்டரடித் தொழல்பூசைத் தொழின்மகிழ்த லழகார்
துளங்கியவர்ச் சனைபுரித றொகுதிய மங்கள்
கொண்டபணி திருவடிக்கே கொடுத்த லீசன்
குணமருவு மருங்கதையைக் குலவிக் கேட்டு
மண்டிவிழி துளும்பன்மயிர் சிலும்ப லுன்னன்
மருவுதிருப் பணிகாட்டி வருவ வாங்கி
யுண்டிகொளா தொழிதலென விவையோ ரெட்டு
முடையரவர் பத்தரென வுரைத்து ளாரே.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களுடைய சாதியை விசாரியாமல் அவர்களைச் சிவபிரானெனப் பாவித்து நமஸ்கரித்து குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்ந்து அத்தியந்த ஆசையுடன் பசுவுக்குப் பின் கன்று அணைதல் போல அணைந்து, அவர்களுடன் பேசுங்காலத்து அவர்களைப் பேசும் பூச்சிய வசனமும் தங்களைப் பேசும் நைச்சியவசனமுந் தப்புமோ என்னுங் கூச்சத்துடனே பேசி, அவர்களுக்கு வேண்டுங் கருமமே தங்களுக்கு வேண்டுங் கருமமாகச் செய்தலும், சிவபெருமானை மிகுந்த அன்பினோடு எவ்விடத்தும் யாவர்க்கும் விதிப்படி அருச்சித்தலைக் கண்டால் மனமகிழ்தலும் சிவபெருமானையும் அவருடைய அடியார்களையும் தெவிட்டாத விருப்பத்தோடு சைவாகம விதிப்படி அருச்சித்தலும், தங்கள் உடம்பினாலே செய்யும் புண்ணியங்களெல்லாவற்றையும் சிவபெருமானது திருவடிக்கே கொடுத்தலும், சிவசரித்திரங்களையே அன்பினோடு கேட்டலும், சிவபெருமானையே வணங்கி மன நெக்குநெக்குருகிச் சரீரநடுக்குற்று உரோமப்புளகம் உண்டாக மதகினிற் புறப்படுஞ்சலம்போல ஆனந்தபாஷ்பம் பொழிய நாத்தழும்பப் பரவசமாதலும், நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் உண்டாலும் துயின்றாலும் விழித்தாலும் சிவபெருமானை ஒருபோதும் மறவாதிருத்தலும், சிவவேடந்தரித்துத் திருத்தொண்டர்போல் நடித்து அதனாற் சீவனஞ் செய்யாமையும், ஆகிய இவ்வெட்டினையும் உடையவர்களே பத்தராய்ப் பணிவாரென்று சொல்லப்படுவார்கள்.



No comments:

Post a Comment