Friday, July 13, 2012
சிவராத்திரி பிரார்த்தனை
சிவராத்திரி பிரார்த்தனை
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment