Friday, June 7, 2013

மகாபாரதக் கதை!

யாகசாலையில் விழுந்து புரண்ட தங்கக் கீரிப்பிள்ளை –


இறைவனிடம் நமது பக்தியை செலுத்த வேண்டுமானால் கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கிறோம். சற்று சிறப்பாக பிரார்த்திக்கவேண்டும் என்றால் கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம். கொஞ்சம் வசதியிருப்பவர்கள் தேங்காய், பூ, பழம் முதலியவற்றை வாங்கி அர்ச்சனை செய்கின்றனர். இன்னும் கொஞ்சம் வசதியிருப்பவர்கள் அபிஷேக ஆராதானைகள் செய்கின்றனர்.

இப்படி அவரவர் வசதிக்கேற்றபடி அனைத்தையும் செய்கின்றனர்.

இதற்கும் மேல் ஏதேனும் இருக்கிறதா என்றால் ஹோமங்கள் செய்யலாம். அதற்கும் மேல் என்றால் யாகங்கள் செய்யலாம். அந்தக் காலத்தில் சக்கரவர்த்திகள் அரசர்கள் என எல்லோரும் யாகங்கள் தான் செய்வார்கள். நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான புரோகிதர்களையும் அந்தணர்களையும் கொண்டு ஏகப்பட்ட பொருட்செலவில் யாகங்கள் செய்வர். இறுதியில் அன்னதானம், கோ-தானம், சுவர்ண தானம், பூமிதானம் உள்ளிட்டவை நடைபெறும். இப்படி செய்யப்படும் யாகங்களுள் முதன்மையானது அசுவமேத யாகம். குதிரையை கொண்டு செய்யப்படும் இந்த யாகம் மிக மிக பிரசித்தி பெற்றது.

பராதப்போரின் போது பாண்டவர்கள் தர்மரின் தலைமையில் அது போன்று ஒரு யாகம் ஏற்பாடு செய்தார்கள். வெகு விமரிசையாக அனைவரும் பாராட்டும்படி அந்த யாகம் நடைபெற்றது. “இப்படி ஒரு யாகத்தை இது வரை கண்டதில்லை. இதுபோன்ற விருந்தும் சாப்பிட்டதில்லை” என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.

எங்கே இது கர்வமாக மாறி யாகத்தின் பலன் பாண்டவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று பகவான் கிருஷ்ணர் கவலையுற்றார். (செய்கின்ற தர்மம் குறித்து கர்வம் கொண்டால் அதன் பலன் கிடைக்காது போய்விடும்!). எனவே அவர்களின் கர்வத்தை ஒடுக்கவும்… அதே சமயம் இந்த உலகத்திற்கு அதன் மூலம் மிகப் பெரிய செய்தி ஒன்றையும் சொல்ல முடிவு செய்தான் பரமாத்மா.

ஏகப்பட்ட ஜனங்கள் சேர்ந்து தர்மரை ஆஹா..ஓஹோ… என்று புகழ்ந்துகொண்டிருந்த நேரத்தில் அந்த யாகசாலைக்குள் திடீரென்று கீரிப்பிள்ளை ஒன்று வந்தது.

கீரிப்பிள்ளை என்றால் அது சாதாரணமான கீரிப்பிள்ளை அல்ல. அதன் உடலில் ஒரு பாதி முழுதும் தங்க நிறத்தில் இருந்தது.



யாகசாலைக்குள் நுழைந்த அந்த கீரிப்பிள்ளை…. அன்னதானம் நடைபெற்ற இடத்தில் விழுந்து புரண்டது. மேலும் அங்கிருப்பவர்களை பார்த்து சொன்னது, ”இது என்ன பெரிய தானம்? இதென்ன பெரிய யாகம்? அந்தக் குருக்ஷேத்திரத்து உஞ்சவ்ருத்தி பிராம்மணர் பண்ணின தானத்துக்கு கால் தூசிக்கு கூட இது ஈடாகாது”என்று தூக்கி எறிந்து பேசிற்று.

உஞ்சவ்ருத்தி என்றால் என்ன அர்த்தம் என்று முதலில் தெரிந்துகொள்வோம். ‘உஞ்சவ்ருத்தி’ என்றால் தற்காலத்தில் பிச்சை எடுப்பது, வீடு வீடாகப் போய்த் தான்ய பிச்சை வாங்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி தெருத் தெருவாகப் போய் பாட்டு பாடி அரிசி வாங்குவதை உஞ்சவ்ருத்தி பஜனை என்று கூட சொல்வார்கள். தியாகராஜர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் இப்படி வாழ்ந்தவர்கள் தான். ஆனால் நம் தர்ம சாஸ்திரங்களின்படி பார்த்தால், உஞ்சவ்ருத்தி என்பதற்கு அர்த்தமே வேறு. களத்திலே நெல்லடித்து, சொந்தக்காரன் அந்த தான்யத்தைக் கொண்டு போகிறபோது, அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல், கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிட வேண்டும். இதைத்தான் சோற்றுக்கு வேறு வழி இல்லாத பிராம்மணர்கள் பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ‘உஞ்சம்’என்றால் ‘சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது’என்றே அர்த்தம். இப்படி களத்திலே மிச்ச மீதி உள்ள நெல்லை பொறுக்கிக்கொண்டு வந்து அதை வைத்து உயிர் வாழ்பவர்களே உஞ்சவ்ருத்தி பிராமணர்கள் எனப்படுவர்.

கீரிப்பிள்ளை இவ்வாறு பேசியதும் அந்த பகுதியே பரபரப்படைந்தது.

“ஹே…. இதென்ன அதிசயம்? கீரிப்பிள்ளை பேசுகிறது? அதுவும் தங்க நிறத்தில் கீரிப்பிள்ளை? இங்கே ஏன் விழுந்து புரள்கிறது?” என்று அந்த இடமே பரபரப்பில் மூழ்கிவிட பஞ்சபாண்டவர்களும் தர்ம புத்திரர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள்.

“உன் உடலில் எப்படி தங்க நிறமாக ஒரு பாதி மாறியது? மேலும் நீ ஏன் இங்கு வந்து இப்படி புரள்கிறாய்? எப்படி உனக்கு பேசும் ஆற்றல் கிடைத்தது? யார் அந்த உஞ்சவிருத்தி பிராமணன்? அவன் அப்படி செய்தது என்ன” என்று தருமர் அடுக்கடுக்காக கேட்க…

அதற்கு அந்தக் கீரிபிள்ளை பதில் சொல்ல ஆரம்பித்தது.

குருக்ஷேத்திரத்தில் சில காலம் முன்பு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பெரிய பெரிய செல்வந்தர்களே அன்னத்துக்குப் பரிதவிக்கும்டியான நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு ஏழை உஞ்சவ்ருத்தி பிராம்மண்ணன் நிலை எப்படி இருக்கும்? எப்போதோ எங்கேயோ பொறுக்கி வந்த கோதுமை கொஞ்சம் கை வசம் இருந்தது. அதை மாவாக அரைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய குடும்பத்திலே நாலு ஜீவன்கள். பிராம்மணன், அவனுடைய பத்தினி, பிள்ளை, மாட்டுப்பெண் – இந்த நாலு பேருக்கும் சேர்த்து ஒரு வேளைக்குத்தான் இந்த மாவு போதும். ‘ஏதோ இந்த வேளையை இப்படித் தள்ளுவோம்; அடுத்த வேளை அவன் படியளப்பான். அதுவும் இல்லாவிட்டால் ப்ராணன் போக வேண்டியதுதான்’என்று நினைத்துக்கொண்டார்கள். மாவை வைத்து மனைவி சப்பாத்தி இட்டாள். ஆளுக்கு ஒரு சப்பாத்தி வந்தது. அதையாவது சாப்பிடலாம் என்று உட்கார்ந்தார்கள்.

இந்த நேரம் பார்த்து ”பவதி பிக்க்ஷான் தேஹி!”என்று சொல்லிக்கொண்டு ஒரு யாசகர் அங்கு வந்து சேர்ந்தார்.

“சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு அம்மா.. ஏதாவது சாப்ப்பிட இருந்தா கொடுங்களேன்….” என்று அந்த யாசகர் கேட்க்க…. அந்த ஸந்தர்ப்பத்திலுங்கூட அந்தக் குடும்பத்தில் ஒருத்தராவது விருந்தோம்பல் பண்பில் பின்வாங்கவில்லை. “நீங்கள் மூன்று பேரும் உங்கள் பங்கை சாப்பிடுங்கள். என் பங்கை நான் அதிதிக்கு தருகிறேன்” என்று அந்த இல்லத்தரசி கூறினார். “இல்லை… இல்லை…. நான் தான் தருவேன்” என்று மற்றவர்கள் கூற.. இப்படி பிராம்மணன், அவனுடைய பத்னி, புத்திரன், மாட்டுப்பெண் ஆகிய நாலு பேருமே போட்டி போட்டுக்கொண்டு அதிதிக்குத் தங்கள் பங்கு உணவை கொடுக்க முன்வந்தார்கள்.

கடைசீயில், அந்த பிராம்மணன், “நீங்கள் மூவரும் பட்டினி கிடந்து மடிந்து போனால் அந்த பாவம் என்னையே சாரும். ஏனெனில், குடும்பத் தலைவன் என்ற முறையில் உங்களை காப்பது என் கடமை. எனவே அதிதிக்கு நான் என் பங்கை தருகிறேன்.” என்று கூறி தன் ஒரு பங்கை வந்த அதிதிக்கு கொடுத்துவிடுகிறார்.

அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பசி தீரவில்லை என்றார். உடனே பத்னி தன் பங்கை அவருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தாள். அதையும் சாப்பிட்டுவிட்டு, ‘இன்னமும் கொண்டா!’ என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி. கொஞ்சம்கூடக் கோபமே இல்லாமல் பிள்ளையும் தன் பங்கு உணவை அவருக்குக் கொடுத்தான்.அதையும் ஏப்பம் விட்டுவிட்டு, இன்னும் வந்தாலும் கொள்ளும் என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி. கடைசியில் மாட்டுப்பெண்ணும் அவருக்கு மனஸாரத் தன் பங்கு மாவைக் கொடுத்தாள்.

அதிதி அதைச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுவிட்டு போய்விட்டார்.

ஏற்கனவே சாப்பிடாது இருந்தபடியால் அடுத்த சில மணிநேரங்களில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்து விடுகிறார்கள்.

சற்று நேரத்தில் ஒரு அசரீரி கேட்கிறது.

”நான்தான் தர்மதேவதை. உங்களைப் பரிசோதிக்கவே யாம் யாசகராக வந்தோம். பரீட்சையில் நீங்கள் அற்புதமாக ஜயித்துவிட்டீர்கள். உயிரைக் கொடுத்தாவது விரும்தோம்பலை நடத்திக் காட்டுவதில் உங்கள் குடும்பத்தைப்போல் எங்குமே கண்டதில்லை. அவரவரும் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு ஸ்வர்கத்திலேயே இடம் ‘பிடி’த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான சுவர்க்கத்துக்கு வந்து சேர்வீர்களாக”என்று அந்தக் குரல் கூறிற்று.

அடுத்த நொடி புஷ்பக விமானம் ஒன்று வந்து அவர்கள் நால்வரையும் மேலே ஏற்றிக்கொண்டு சென்றுவிடுகிறது.

இந்தக் கதையைச் சொன்ன கீரிப்பிள்ளை, ”அந்த நேரத்தில் நான் அந்த வீட்டருகே தான் இருந்தேன். அவர்கள் தானம் கொடுத்த மாவு ஏதோ துளித் துளி கீழே சிந்தியிருந்தது. நான் அந்த இடத்துக்கு மேலாக ஓடுகிறபோது என் சரீரத்தின் இந்தப் பக்கத்தில் அந்த மாவு பட்டதனால்தான் இந்தப் பக்கமே தங்க மயமாகிவிட்டது!”

“ஒரு பக்கம் தங்கமாகிவிட்டது. மற்றொரு பக்கமும் தங்கமாகிவிடாதா என்கிற ஆசையில் நான் அலைந்துகொண்டிருந்தேன். காட்டில் கண்ட ஒரு ரிஷியிடம் இது பற்றி கேட்டேன்… அவர் “அந்த உஞ்சவிருத்திப் பிராம்மணனின் மனை மிகவும் புண்ணியம் பெற்றது. பவித்த்ரமானது. அதை விட பெரிய தானம் நடக்கிற இடத்திற்கு நீ சென்றால் உன் மீதி உடலும் தங்கமாக மாறிவிடும்” என்றார்.

”நானும் முழுக்கத் தங்கமாகலாமே என்கிற ஆசையில் பெரிய பெரிய யாகசாலைகள், அன்னசாலைகள், தர்மசத்திரங்களுக்கெல்லாம் போனபடிதான் இருக்கிறேன். ஆனால் என் மறுபாதி தங்கமாக மாறவேயில்லை. தர்ம புத்ரர் மஹா பெரிய யாகம் பண்ணி, அன்னதானம் செய்கிறாரே இங்கே போனாலாவது என் சரீரத்தின் பாக்கி பாதி தங்கமாகுமாக்கும் என்றுதான் இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். இங்கேயும் பலனைக் காணோம்!” என்று கீரிப்பிள்ளை முடித்தது.

உடனே தர்மபுத்திரர் வெட்கி தலை குனிந்தார்.

No comments:

Post a Comment