Friday, June 14, 2013

கஷ்டத்தைத் தந்தால் அவரைத் திட்டுவது ஏற்புடையதல்ல.

குருநாதர் தலைமையில் சீடர்களுக்கு இரவு நேரப் பிரார்த்தனை நடக்கும். கண் மூடி அமர்ந்திருக்கும் குரு, "" இன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தது. இன்று உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி!'' என்பார். அவர் சொல்வதை சீடர்கள் திருப்பிச் சொல்வர்.
தினமும் குருவின் ஒரே மாதிரியான பிரார்த்தனை யைக் கேட்ட சீடர்களுக்கு போரடித்து விட்டது.
ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினர்.
ஒருநாள் குருவை பட்டினி போட்டு விட்டால், "உணவு தந்த கடவுளுக்கு நன்றி' என்று இவரால் எப்படி பிரார்த்தனை செய்ய முடியும்? இன்று பக்தர்கள் தானமாகத் தரும் உணவுப்பொருளை அவருக்கு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்.
அன்று ஒரு பழத்தைக் கூட குருவின் கண்ணில் அவர்கள் காட்டவில்லை. எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு, ""குருவே! இன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. உணவும் இல்லை,'' என்றனர்.
இரவு வந்தது. குருநாதர் வெறும் தண்ணீர் மட்டும் அருந்தியதால் சோர்வாக காணப்பட்டார்.
இருந்தாலும், இரவுப் பிரார்த்தனைக்கு வழக்கம்போல அமர்ந்தார். சீடர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
""இன்றையப் பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தது. பசியைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி!,'' என்று சொல்லிவிட்டு படுத்தார். குருவின் நன்றி மனப்பான்மையைக் கண்ட சீடர்கள் ஏதும் பேச முடியாமல் வாயடைத்து நின்றனர்.
நல்லதை செய்யும் போது மட்டும் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, கஷ்டத்தைத் தந்தால் அவரைத் திட்டுவது ஏற்புடையதல்ல.

No comments:

Post a Comment