Thursday, August 22, 2013

ஒருவர் குருவாக இருக்க வேண்டுமானால் அவர் எப்படி இருக்க வேண்டும்? யார் சிறந்த குரு?

யார் சிறந்த குரு?

ஒருவர் குருவாக இருக்க வேண்டுமானால் அவர் எப்படி இருக்க வேண்டும்? சர்வ சாஸ்திரம் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஞானப் புதையலாக இருக்கவேண்டும். பரிசக்கல் என்ற ஒன்று உண்டு. இரும்பை அந்தக் கல்லில் தேய்த்தால், அந்த இரும்பு தங்கமாகிவிடும். அது போல குருநாதர் என்பவர் சம்சாரக் கடலில் மூழ்கி உள்ள ஒரு ஜீவனை உத்தமமான தங்கம் ஆக்குகிறார். ஆனால் பரிசக்கல்லுக்கும் குருவுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பரிசக்கல் இரும்பை தங்கமாக்கிவிடும். ஆனால், தங்கமாக மாறிய இரும்பு, வேறு எந்த இரும்பையும் தங்கமாக்காது. ஆனால், குருவிடம் ஞானம் பெற்ற சிஷ்யன் இருக்கிறானே... அவன் இன்னும் பத்து பேரை ஞானியாக்கலாம்.
ராமாயணத்தின் ஒவ்வொரு இடத்திலும் குருவின் முக்கியத்துவத்தை ராமர் உணர்த்திக்கொண்டே வருகிறார். நம் எல்லோருக்கும் குரு தேவைப்படுகிறார். ராமாயணம் எழுதிய வால்மீகியின் குரு நாரதர். குரு இல்லாமல் எந்தக் காரியத்தையும் சாதிக்கமுடியாது. ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றார். இலங்கையில் சாதுக்களே (குருமார்கள்) கிடையாதாம். சாதுக்கள் இல்லாத நகரம் அழிந்துவிடுமாம். ராவணன் பெரிய கோடீஸ்வரன், அழகான புஷ்பக விமானத்தில்தான் படுத்துக் கொள்வானாம். எல்லா ஐஸ்வர்யங்களைப் பெற்றிருந்தும் ராவணன் ஏன் அழிந்தான் என்றால் அவனுக்கு ஒரு குரு இல்லை! சுக்ரீவனின் மனைவி ருமாவை வாலி கவர்ந்துகொண்டான். சுக்ரீவனின் ராஜ்யமான கிஷ்கிந்தாவைத்தான் வாலி எடுத்துக்கொண்டான். சுக்ரீவனுக்குப் படுக்க இடம் கிடையாது. ராவணன் போல ஐஸ்வர்யங்கள் கிடையாது. ஆனால், சுக்ரீவனுக்கு குரு கிடைத்திருந்தார். அந்த குருதான் ஹனுமான். அவர்தான் சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தாவை மீட்டுக் கொடுத்து ராஜாவாகவும் ஆக்கினார். குருவின் மகிமை அப்பேர்ப்பட்டது! பரதனுக்கு குரு ராமர். சபரியின் குரு வசந்த மகரிஷி. சுக்ரீவனுக்கு ஹனுமான். விபீஷணனுக்கு ஹனுமான். அவ்வளவு ஏன் - ராமருக்கே குரு ஹனுமான். ராமாயணத்தில் ராமரிடம் இருந்து சீதையைப் பிரிக்கின்றான் ராவணன். இந்த இரண்டு பேரையும் சேர்த்து வைக்க ஹனுமான் என்கிற குரு வருகிறார். ஏனென்றால் குருவான ஹனுமான் ஒருவரால் மட்டுமே இவர்கள் இருவரையும் இணைக்க முடியும். குருவுக்குத்தான் எல்லாமே தெரியும்.
சிந்தாமணி என்ற மணியை சங்கிலியாகவோ, மோதிரமாகவோ செய்து போட்டுக் கொண்டால் எல்லாமே கிடைக்கும். கற்பக விருட்சம் என்ற மரம் இருக்கிறது. அதன் அடியில் அமர்ந்தால் நினைத்தது எல்லாம் நடக்கும். காமதேனு என்ற பசு உள்ளது. நாம் கேட்டதை எல்லாம் அது கொடுக்கும். அதுபோல் நமக்கு எது நல்லதோ அதை மட்டும் நடக்கும்படி நமக்கு அருள்பவர் குரு ஒருவர்தான்! ராமாயணமே சரணாகதி சாஸ்திரம்தான்! யாரிடம் சரணாகதி அடையவேண்டும், பகவானிடமா... குருவிடமா? இருவரிடமும் சரணாகதி அடைந்தால் அனுக்ரஹம் கிடைக்கும்! சபரிக்கு மோட்சம் கொடுத்துவிட்டு ராம-லட்சுமணர் ரிஷ்யமுக பர்வதம் வந்து சேர்ந்தார்கள். அங்கு எதிரே சுக்ரீவன் அமர்ந்திருக்கிறார். ராமரைப் பாரத்ததும் சுக்ரீவனுக்குப் பயம் அதிகமாகிவிட்டது. நம்மை வதம் பண்ண வந்திருப்பாரோ, வாலி அனுப்பி வைத்த நபரோ என பல விதங்களிலும் நினைத்து ராமரைப் பார்த்து அச்சப்படுகிறார். அவரிடம்தான் ஹனுமான் இருக்கிறார். ஏனென்றால் வாலி ஒரு துஷ்டன். ஆனால் சுக்ரீவன் மஹாத்மா. அதனால்தான் ஹனுமான் சுக்ரீவனுடன் இருக்கிறார். சுக்ரீவன் ஸ்ரீராமரைப் பார்த்து அச்சப்பட்டு ஹனுமானிடம் வந்து சேர, அப்போதுதான் முதன்முதலாக ஹனுமான் ஸ்ரீராமரைப் பார்க்கிறார். அவருடைய அழகில் மயங்கி, சுக்ரீவனிடம் இவரைப் பார்த்து ஏன் அச்சப்படுகிறாய்? இவரையே நாம் சிநேகம் செய்து அதன்மூலம் வாலியை வென்றுவிடலாம் என்று தான் திட்டமிட்டதை சுக்ரீவனிடம் கூறுகிறார் ஹனுமான். பிறகு சுக்ரீவனுடைய பெருமையை ராமரிடம் கூறும் பொருட்டு அவரை நோக்கி நடக்கிறார் ஹனுமான். ராமரைப் பார்த்ததும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார். சுக்ரீவன் என்ற இந்த ராஜாவிடம் மந்திரியாக இருக்கிறேன். அவருடைய சகோதரர் வாலி, சுக்ரீவனிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துக் கொண்டார். அவருக்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார் ஹனுமான்.
ராமர், சுக்ரீவனுக்கு உதவி செய்கிறேன் எனக் கூறியதும், ஹனுமான் அந்த இடத்திலேயே அக்னியை உருவாக்கி அக்னி சாட்சியாக சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் நட்பு ஏற்பட வேண்டும் என்று விரும்பி அக்னிதேவனை வேண்டினார். ஹனுமான் வேண்டியதால் அவர்கள் நண்பர்களாகிவிட்டனர். உடனே ராமர், உன் துக்கம் எல்லாம் எனக்கு வந்த மாதிரி, உன் துக்கத்தை விரைவில் அகற்றுவேன்! என உறுதிகொடுத்தார். அப்போது சுக்ரீவனுக்கு ஒரு சந்தேகம்... ராமனுக்கு வாலியை எதிர்க்கும் அளவுக்கு பலம் இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் வினவினார். நான் பலசாலி என்று எப்படி நிரூபிப்பது? என்று ராமர் திருப்பிக் கேட்டார். அதற்கு சுக்ரீவன் ராமரை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் சாலமரம் என்ற மரம் இருந்தது. அந்த மரத்தின் வேர்கள் பூமியின் ஆழம் வரை சென்றிருக்கும். சுக்ரீவன் அந்த மரத்தைக் காட்டி, இந்த மரத்தை மிகப் பெரிய பலம் கொண்டு வாலி பிடித்து உலுக்கினால், ஒரு இலைகூட மரத்தில் தங்காமல் கீழே விழுந்துவிடும். அவ்வளவு சக்தி அவனுக்கு! நீ உலுக்க வேண்டாம். உன் அம்பு அந்த மரத்தை துளையிட்டு இந்தப் பக்கம் வரவேண்டும். அப்படி வந்தால் உனக்கு பலம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார் சுக்ரீவன்.
ராமர் அதைப் புன்னகையுடன் ஏற்று தன் வில்லின் மூலம் ஒரு அம்புவிட்டார். விட்ட அந்த அம்பு அங்கிருந்த ஏழு மரத்தையும் துளைத்து பூமிக்குள் இருக்கும் ஏழு லோகங்களுக்கும் போய்விட்டு, பூமிக்கு மேலே இருக்கும் ஏழு லோகங்களுக்கும் பயணித்துவிட்டு ஒரு க்ஷணத்தில் திரும்பவும் ராமரிடமே வந்து சேர்ந்தது. சுக்ரீவன் ஆச்சர்யத்துடன் ராமபிரானின் கால்களில் விழுந்து வணங்கி, வாலியை எதிர்க்க சரியான வீரர் இவர்தான் என ஒப்புக்கொண்டார். பிறகு சுக்ரீவனுக்கும் வாலிக்கும் யுத்தம் நடந்தது. அந்தப் போரில் ராமர் வாலியை வதம் செய்தார். ராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமன் தர்மத்தை ஸ்தாபிக்க, இந்திரனுடைய புத்திரரான சுக்ரீவனைக் காப்பாற்றினார். ஆனால், மகாபாரதத்தில் சூரிய புத்திரனான கர்ணனை கிருஷ்ண பரமாத்மா வதம் பண்ணி, இந்திரன் புத்திரரான அர்ஜுனனைக் காப்பாற்றினார்

No comments:

Post a Comment