Thursday, August 22, 2013

மனிதனாக பிறந்து விட்டால்..!

சில பெண்கள் அதிகமாகவே கவலைப்படுகிறார்கள். என் கணவர் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுகிறார். இவர் எப்ப தான் திருந்துவாரோ! என்று. இதே போல, கோபப்படும் மனைவியைப் பற்றி கவலைப்படும் ஆண்களும் உண்டு. இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே ஏதோ ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்படுகிறான்.  ஏன்... அந்தக் கடவுளே பூமிக்கு மனிதனாக வந்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்! அது என்ன என்கிறீர்களா! குரு÷க்ஷத்ர யுத்தத்தில், ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார் கிருஷ்ணர். பீஷ்மருக்கு அவரது சபதத்தை உடைக்க ஆசை! ஒருநாள், போரில் அர்ஜுனன் மீது அணிஅணியாக பாணங்களை விட்டார். வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெற்றிருந்தாலும், அர்ஜுனன் செயலிழந்துவிட்டான். உடலெங்கும் அம்புகள் தைத்து ரத்தம் கொட்டியது. கிருஷ்ணர் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். பிதாமகரே! ஒரு சிறுவன் மீது அனுபவஸ்தரான நீர், இந்தளவுக்கு பாணங்களை தொடுக்கிறீரே! இனியும், பாணங்களை விட்டால், உம்மை சும்மாவிடமாட்டேன், என்று எச்சரித்தார். பீஷ்மர் அதை சட்டை செய்யவேஇல்லை. தொடர்ந்து பாணங்களைத் தொடுத்தார். கிருஷ்ணர் ஆவேசமாகி விட்டார். தேரில்இருந்து கீழே குதித்தார். தரையில் கிடந்த ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்தார். ஆவேசமாக பீஷ்மரை நோக்கி பாய்ந்தார். ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று கடவுளே செய்த சபதத்தை மீறச் செய்து விட்டான் ஒரு மனிதன்.  பின், பீஷ்மர் தலை வணங்கி, பரமாத்மா! உன் கையால் நான் சாகிறேன் என்றால் எனக்கு முக்தி தானே! என் உயிரை எடுத்துக் கொள், என்று வில்லைக் கீழே போட்டுவிட்டு நின்றார் என்பது வேறு கதை!  மனிதனாகப் பிறந்துவிட்டால், உணர்ச்சிவசப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது!

No comments:

Post a Comment