Friday, September 20, 2013

நம்பிக்கை நெஞ்சில் வை!

நம்பிக்கை நெஞ்சில் வை!
----------------------------------

நம்மில் பலர், ஒரு சிறிய கஷ்டம் வந்துவிட்டால் கூட, கடவுளைத் தான் கடிந்து கொள்கிறோம்.
"உனக்கு தினமும் பூ, நெய் விளக்கு, பாயசம், பண்டமெல்லாம் படைத்து வழிபட்டேனே… எனக்குப் போய் இப்படி ஒரு கஷ்டத்தைத் தந்து விட்டாயே… இது உனக்கு அடுக்குமா, உனக்கு கொஞ்சமாவது நன்றியிரு...க்கிறதா…’ என்று, வாழ்வில் ஒருமுறையாவது இறைவனைக் கடிந்து கொள்வர். ஆனால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது தான், கடவுள் நம்மை நெருங்குகிறான் என்பது தான் ஆன்மிக விதி. துன்பங்கள் கூடக்கூட, நாம் பிறவா நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தஞ்சையில் வசித்த புகழ்த்துணையாரின் வரலாறு இதற்கு ஒரு உதாரணம்.
கும்பகோணம் அருகில் உள்ளது அழகாபுத்தூர் கிராமம். அந்நாளில், இவ்வூரை சிறுவில்லிப்புத்தூர், செருவில்லிப்புத்தூர், திருஅரிசிற்கரைபுத்தூர் என்றெல்லாம் அழைத்தனர். இத்தலத்தில், சிவன்கோவில் ஒன்று உள்ளது. சிவனுக்கு, "சுவர்ணபுரீஸ்வரர்’ என்றும், "படிக்காசு நாதர்’ என்றும் பெயர். இந்தச் சிவன் மீது இங்கு வசித்த, புகழ்த்துணையாருக்கு அதீத பக்தி. அருகில் உள்ள அரசலாற்றில் புனிதநீர் எடுத்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைப்பார்.
ஒருநாள் கூட, இதிலிருந்து அவர் தவறியதில்லை. "நான் இப்படியெல்லாம் செய்கிறேனே… எனக்கு ஏதாவது பலனைக் கொடு…’ என்று, கேட்டதுமில்லை. இவரது துணைவியாரும் கணவருக்கேற்ற மனைவியாக நடந்து கொண்டார்.
எந்த எதிர்பார்ப்புமில்லாத, இவரது தூய பக்தியை உலகத்தாருக்கு வெளிப்படுத்த சிவன் எண்ணினார். எந்த நன்மையைத் தருவதாக இருந்தாலும், அவர் சோதித்து தருவதே வழக்கம். அதனால், அந்த ஊரில், பெரும் பஞ்சம் ஏற்படச் செய்தார். அரசலாறு வறண்டு விட்டது; வயல்கள் காய்ந்தன. மக்கள், தங்கள் ஊரையும், இறைவனையும் அம்போவென விட்டுவிட்டு, பக்கத்து ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்று விட்டனர்.
புகழ்த்துணையாருக்கும் இதே நிலை தான். வீட்டில் இருந்த தானியமெல்லாம் தீர்ந்து போனது. கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்ததை, சிவனுக்கு நைவேத்யம் செய்தார். அரசலாற்றில் ஊற்று தோண்டி, தண்ணீர் ஊறும் வரை காத்திருந்து, முகர்ந்து வந்து அபிஷேகம் செய்தார்.
அனைவரும் ஊரை காலி செய்துவிட்ட நிலையில், தனக்கு சேவை செய்த, புகழ்த்துணையாரின் பக்தியை மெச்சிய சிவன், அவருக்கு காட்சி தந்தார். பெயரிலேயே, "சுவர்ணத்தை’ (தங்கம்) கொண்டிருந்த இறைவன், "புகழ்த்துணையாரே… நான் தினமும் ஒரு தங்கக்காசை இங்குள்ள பீடத்தில் வைத்து விடுவேன். அதைக் கொண்டு பிழைத்து வருவீராக…’ என்று, அருள்பாலித்தார்.
தனக்கு தினமும் கிடைத்த அந்தக்காசை கொண்டு, ஊரைக் காலி செய்து போன மக்களை திரும்பவும் ஊருக்கு வரவழைத்து, அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார் புகழ்த்துணையார். தனக்கென வாழாமல், பிறருக்காகவும், சிவனுக்காகவும் மட்டுமே வாழ்ந்த அவர், இறுதியில், சிவனுடன் கலந்தார். நாயன்மார்களில் ஒருவராகும் தகுதி பெற்ற இவருக்கு, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும்.
எவ்வளவு சோதனை வந்தாலும், கடவுள் மீது வைத்த நம்பிக்கை குறையாமல் இருந்தால், வெற்றி நிச்சயம். பிறருக்கு சேவை செய்வதே இந்த பூமிக்கு வந்ததன் குறிக்கோள்

No comments:

Post a Comment