Monday, March 3, 2014

இதயக்கோயிலில் குடியேறிய ஈசன்!

.....!!!!


இதயக்கோயிலில் குடியேறிய ஈசன்!

அவர் பரம ஏழை. ஆனால் சிவபக்தியில் செல்வந்தர். உடல் முழுவதும் திருநீறைப் பூசுவதனால் அவரின் இயற்பெயரே மறைந்து ‘பூசலார்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பிட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணியிருந்தார் அவர். பலரிடமும் நிதி கேட்டு இறைஞ்சினார். அவருக்கு உதவிட எவரும் முன்வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பூசலார் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது...தன் சித்தத்தில் உறையும் சிவனுக்கான ஆலயத் திருப்பணியை தன் மனதிலேயே நடத்தி தன் அபிலாஷையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

நல்ல நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார். மூடிய கண்களுக்குள் முழுமையாக வாழத் தொடங்கினார். ஆகம விதிகளின் படி ஆலயம் அமையத் திட்டமிட்டார்; பாவனையிலேயே கல் தச்சர்களை வரவழைத்து கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார்; பிராகாரங்களை எழுப்பினார்; தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளை செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கைலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் குவித்து வேண்டுகோள் விடுத்தார்.

அதே நேரத்தில்... நகரங்களில் சிறந்த காஞ்சியில் கைலாசநாதரின் கோயிலை அழகுறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்க அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்- தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பும் ஆலயத்தில் உறையப் போவதாகவும், வேறொரு நாளில் பல்லவ்ன கும்பாபிஷேகம் நடத்தட்டும் என்றும் கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவனுக்கு மனமெல்லாம் வியப்பு. பல ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்து தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று இறைவன் அங்கு செல்லத் தீர்மானித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு ஆன்‌றோர் புடைசூழ திருநின்றவூர் வந்தான்.

ஹ்ருதயாலீஸ்வரர்

என்ன ஆச்சர்யம்! கும்பாபிஷேகம் நடக்கும் ஊர் மாதிரி எந்தப் பரபரப்புமில்லாமல் ஊர் அமைதியாக இருந்தது. அங்குள்ளவரிடம் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடில உக்காந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் எதும் கட்டின மாதிரி தெரியலையே’’ என்று பதில் கிடைத்தது. பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வெள்ளம். அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவரும் காண முடிந்தது. உரிய நேரத்தில் தனக்கான சந்நிதியில் நமச்சிவாயன் அனைவரும் பார்க்க குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசித்து மன்னனும் மற்றையோரும் பேறு பெற்றனர். படைபலம் மிக்க பல்லவன், எளியவரான பூசலாரின் கால்களில் விழுந்து, பணிந்து அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிஜத்திலேயே நிர்மாணித்துத் தர அனுமதி கேட்டான்.

பூசலார் புளகாங்கிதம் அடைந்தார். அவர் அருளாசியுடன் திருநின்றவூரில் (சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரம்) ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் ஈசன், இருதயாலீஸ்வரன் என்று பெயர் கொண்டு இவ்வாலயத்தில் எழுந்தருளினார்.

ஆலய தரிசனம செய்வதற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிறப்பொன்றைச் செப்பிட விழைகின்றேன். இருதயாலீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் இதய வடிவில் நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இங்கு வந்த இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பு. இப்போது ஆலயத்தினுள் நுழைவோம்.

ஆலயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்ததும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிமரம். அடுத்து பலிபீடம். அதையடத்து சிறு தனி மண்டபத்தில் நந்திதேவரின் திருவுருவம். விநாயகரும், வேலவனும் இருபுறமும் வாசம் செய்ய, நேர் எதிரில் இறைவனின் இனிய சன்னிதி. கருவறை வாயிலில் மற்றொரு நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. விரும்பி வழிபட்ட பக்தனின் இதயத்தில் குடியேறிய இருதயாலீஸ்வரன் இங்கே லிங்க ரூபத்தி்ல் காட்சி அருள்கிறார்.

ஈசனை இதயபீடத்தில் அமர்த்தி கும்பாபிஷேகமே நடத்திப் பார்த்த பூசலாருக்கு கருவறையிலேயே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு இடதுபுறம் நின்றிருக்கிறார் பூசலார். லிங்கமே அவர் பக்கம் சற்று சாய்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. லிங்கத்தின் நெற்றியில் மூன்று பட்டையாகத் திருநீறு. சரவிளக்குகளில் பூத்திருக்கும் தீச் சுடர்கள். பூசலாரின் வலது கரத்தில் சின் முத்திரை, இடது கரம் இதயத்தின் அருகில் இருக்க, அதி்ல சிறு லிங்கமாக இருதயாலீஸ்வரன்.

பூசலார்

உமாபதியை வணங்கி, சந்நிதியை வலம் வருகையில் அது கஜபிருஷ்டம் என்கிற அரைவட்ட வடிவில் அமைந்துள்ளதை உணர முடிகிறது. சந்நிதியின் வெளிச் சுவரில் தென்புறத்தில் திருமுகத்தில் குமிழ் சிரிப்புடன் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணுவின் பிம்பம். அடுத்திருப்பது சிருஷ்டிக் கடவுள் பிரம்மன். வடபுறத்தில் துன்பங்களைத் துரத்தி அடிக்கும் அன்னை துர்க்கை ‌குடி கொண்டிருக்கிறாள்.

மூலிகை வண்ணங்களால் எழுதப்பெற்ற ஆலயத்தின் மேற்கூரையிலுள்ள ஓவியங்களை ரசித்தபடி கடந்து வந்தால், சந்நிதியின் தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், வடமேற்கு மூ‌லையில் வள்ளி-தெய்வானையுடன் வரம்தரும் சிவசுப்ரமணியர். வடக்கில் சிவகாமி சமேதராக விளங்கும் நடராஜருக்கான தனி அறை. அருகிலேயே பள்ளியறை. அதையடுத்து ஸ்ரீ பைரவர். வெளியே வந்ததும் இவ்வாலயத்தை நிர்மாணித்துத் தந்த ராஜசிம்ம பல்லவனின் சிற்பம் கைகூப்பிய நிலையில் அழகுற மிளிர்கிறது.

இருதயாலீஸ்வரரின் ஆலயத்தில் மரகதாம்பிகை என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அன்னை உறைகிறாள். தென்திசை நோக்கிய நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் மலரும், பாசமும். கீழ் இரு கரங்களில் அபயஹஸ்த முத்திரை, வலது கரத்தில் அன்போடு வீற்றிருக்கும் கிளி. அன்னைக்கு அர்ச்சித்த மலர்களும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ‌பொதுவாக ஈசானிய மூலையில் காணப்படும் நவக்கிரகங்கள் இந்த ஆலயத்தில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தனை பிராகாரங்களையும் இறைச் சிற்பங்களையும், கலை நுணுக்கமுடன் மனதிலேயே அமைத்து வழிபட்டு, இறைவனருள் பெற்ற பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல்லவன் பாங்குறப் படைத்த இந்த ஆலயத்தை தரிசித்து முடிந்து இல்லம் திரும்புகையில் மனமெங்கும் மகிழ்வும் அமைதியும் வியாபித்திருக்கும். ஒரு முறை சென்று தரிசித்து, உணர்ந்து பாருங்கள்.

No comments:

Post a Comment