Friday, March 7, 2014

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?







நல்ல ‘நண்ப’ நாய்…

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

”இது சிறிய உயிர்; அது பெரிய உயிர்! இது படித்தவன் உயிர்; அது படிக்காதவன் உயிர்! இது பணக்காரனின் உயிர்; அது பரதேசியின் உயிர்’ என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது சாதாரண மனிதர்களது வழக்கம்.

எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணி, போற்றுபவர்கள் மகா ஞானிகள். இதனால்தான் இவர்களை உலகமே புகழ்கிறது. அப்படிப்பட்ட புகழும் பெருமையும் கொண்ட மகாஞானி சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவம் இது!

சிறு வயது முதல், அனைத்து உயிர்களிலும் தான் வழிபடும் இறைவனின் திருவுருவைக் கண்டவர் சுவாமி விவேகானந்தர். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவிடுவதுடன், அவற்றுடன் விளையாடுவதிலேயே தனது பால்ய காலத்தைக் கழித்தார் விவேகானந்தர்.

சற்று நேரம் அந்தப் பறவையையோ விலங்கையோ பார்க்கவில்லை என்றால் துடித்துப் போவார். தேடியலைந்து பார்த்து, அழைத்து வந்து விடுவார். அவை துள்ளிக் குதிப்பதிலும் ஓடுவதிலும் ஆடுவதிலும்… இறைவனே ஆடுவது போலவும் குதிப்பது போலவும் ஓடுவது போலவும் கண்டு சிலிர்த்தார்.

அன்பர்கள் ஆட… ஆண்டவனும் ஆடுவான்; ஆண்டவன் ஆட… அன்பர்களும் ஆடுவர் என்பதை சிறு வயதிலேயே அறிந்து புரிந்ததால்தான் அவர் மாபெரும் ஞானியாக விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் இவர் காட்டிய அன்பும் பரிவும் புதியதொரு ஞானத்தை விதைத்தது.

அது 1901-ஆம் ஆண்டு. வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விட்டு, பேலூருக்குத் திரும்பினார் விவேகானந்தர். இதையடுத்து வெளியூர் செல்வதை ஓரளவு குறைத்துக் கொண்ட விவேகானந்தர், மடத்தில் சிறிது காலம் தங்கினார். இந்தக் காலகட்டத்தில், எப்போதும் போல பிராணிகளிடம் மிகுந்த பாசத்துடன் பழகி வந்தார் விவேகானந்தர். இந்த பிராணிகளில் பாகா எனும் நாய்க்குட்டியும் ஒன்று!

நீண்ட நாட்களாக மடத்திலேயே இருந்த இந்த பாகா நாய்க்குட்டி, விவேகானந்தரைப் பார்க்காமல் ஒருபோதும் இருக்காது. கிட்டத்தட்ட விவேகானந்தரை தாயாகவே கருதியது அந்த பாகா நாய்க்குட்டி!

ஒருநாள்… பாகா ஏதோ தொந்தரவு செய்து விட்டது போலும். மடத்தின் ஊழியர்கள் வெறுத்துப் போய், நாய்க் குட்டியை கங்கைக் கரைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கே, மறுகரைக்குச் சென்று கொண்டிருந்த படகில் ஏற்றி அனுப்பிவிட்டனர். படகுக்காரனும் மறுகரையில் பாகாவை இறக்கி விட்டான்.

பாகா, நிலை கொள்ளாமல் தவித்தது; விவேகானந் தரைப் பார்க்க முடியாமல் கண்ணீர் விட்டது. எப்படியேனும் சென்று விவேகானந்தரிடம் சேர்ந்துவிட வேண்டும் என அல்லாடியது.

இந்த நிலையில், சிறிய படகு ஒன்று எதிர் கரைக்குக் கிளம்பியது. இதைக் கண்ட பாகா ஓடி வந்து, படகில் தாவி ஏறியது. படகில் பயணித்தவர்கள் பாகாவை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், எதுவும் பலிக்கவில்லை. படகின் ஓர் ஓரமாக எவருக்கும் பயப்படாமல் அமர்ந்து கொண்டது. எவரேனும் கையை ஓங்கினால், உடனே குரைப்பதும் கடிக்க முயலுவதுமாக போக்குக் காட்டியது. ஒருகட்டத்தில், படகில் இருந்தவர்களும் சலித்தபடி பாகாவை விரட்டுவதில் இருந்து பின்வாங்கினர்.

படகு கரையைத் தொட்டதும் விருட்டென்று தாவி கரைக்கு வந்த பாகா, நாலு கால் பாய்ச்சலில் எவர் கண்ணிலும் படாமல் மடத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.

மறுநாள்! அதிகாலையில் எழுந்த விவேகானந்தர், நீராடுவதற்காக குளியல் அறைக்குச் சென்றார். அப்போது வழியில்… அவருடைய காலில் ஏதோ ஒன்று இடறவே, உற்றுப் பார்த்தார். அங்கே வாலை ஆட்டியபடி, உடலை வளைத்தும் நெளித்தும் நின்றபடி ஏக்கமும் துக்கமுமாக விவேகானந்தரையே பார்த்துக் கொண்டிருந்தது பாகா.

பாகாவை வாரி எடுத்து தடவிக் கொடுத்த விவேகானந்தர், ”பயப்படாதே உன்னை என்றென்றும் காப்பாற்றுவேன்” என்று சைகை மூலம் பாகாவுக்கு உணர்த்தினார். பாகாவைக் கண்டதால் விவேகானந்தரின் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. இதேபோல் பாகாவும் நெகிழ்ந்து போனது.

தாம் செய்த குறும்புக்கு சுவாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அப்போதுதான் தனக்கு மடத்தில் இடம் கிடைக்கும் என்பதை பாகா உணர்ந்தது வியப்புக்கு உரிய ஒன்று. அதேபோல், சுவாமியை தனிமையில் சந்திக்கிற நேரத்தையும் இடத்தையும் அறிந்து வைத்திருந்ததும் ஆச்சரியப்படத்தக்க ஒன்று. அப்படியெனில், விவேகானந்தரின் தினசரி வாழ்க்கையை அந்த பாகா எப்படி கவனித்திருக்கிறது? முக்கியமாக, இத்தனை அன்பும் பரிவும் கொண்டு பாகாவுடன் விவேகானந்தர் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதையும் உணர முடிகிறதுதானே?!

விவேகானந்தர் இறைவனின் திருவடியை அடைந்த சில நாட்களிலேயே பாகாவும் இறந்தது. பிறகு மடத்துக்கு அருகில் ஓடிய கங்கா நதியில் பாகாவின் உடலை விட்டனர். அப்போது பேரலை ஒன்று எழும்பி, பாகாவின் உடலை நடுக்கடலில் கொண்டு சேர்த்தது. அடுத்த விநாடி, மற்றொரு அலை பாகாவின் உடலை நடுக்கடலில் இருந்து மடத்துக்கு அருகிலேயே கொண்டு வந்து சேர்த்தது.

இதைக் கண்ட மடத்தின் துறவிகளுக்கு வியப்பு. பாகா எனும் நாயின் அன்பை உணர்ந்து சிலிர்த்தனர். ‘உயிருடன் இருந்தபோது மடத்தை விட்டுப் பிரியாமல் இருந்தது. இறந்த பிறகுகூட மடத்தின் மீது பற்றுடன் இருக்கிறதே?’ என்று நெகிழ்ந்தவர்கள், பாகாவின் உடலை எடுத்துச் சென்று புதைத்ததுடன் சமாதி ஒன்றும் எழுப்பினர்.

கொல்கத்தாவை அடுத்த பேலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் செல்லும் அன்பர்கள், அன்பின் வடிவமான பாகாவின் சமாதியை இப்போதும் காணலாம்!
..

No comments:

Post a Comment