Sunday, May 1, 2016

விவேக சிந்தாமணி

விவேக சிந்தாமணி
தேவை இல்லாமல் போகுதே
எல்லோரும் ஒரு கால கட்டத்தில் தேவை இல்லாதவர்களாகப் போய் விடுகிறோம்.
நம்மிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் வரை தான் உலகம் நம்மை வேண்டும், விரும்பும்.அதற்குப் பின், தூக்கிப் போட்டு விடும்.
எப்படி எல்லாம் என் பின்னால் சுற்றினார்கள், இப்போது ஒரு நாதியும் இல்லை எனக்கு என்று சொல்லும் ஒரு காலம் எல்லோருக்கும் வரும். அப்போது வருத்தப் படக் கூடாது என்று இப்போதே நம்மை தயார் படுத்துகிறது விவேக சிந்தாமணி.
பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் பெற்றோரின் சொல்லை கேட்க .மாட்டார்கள். வயதானால் மனைவி கணவனை மதிக்க மாட்டாள். எல்லா வித்தையும் கற்ற பின்னால் சீடன் ஆசிரியனை மதிக்க மாட்டான். நோய் குணமாகி விட்டால் நோயாளி மருத்துவனை மதிக்க மாட்டான்.
இது உலக இயற்கை. உலகம் சுயநலமானது. நம்மால் உபயோகம் இருக்கும் வரைதான் உலகம் நம்மை மதிக்கும். அது தகப்பனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி, ஆசிரியனாக இருந்தாலும் சரி, மருத்துவனாக இருந்தாலும் சரி....எல்லோருக்கும் இதே கதிதான்.
இவர்கள் தான் உலகம் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவர்களுக்காக செலவிடுவது உசிதமா ?
பாடல்
பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

No comments:

Post a Comment