Thursday, October 4, 2012

கல்வி, கலை, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும்

சிவபெருமானுக்கு ஒருநாள் சிவராத்திரி; திருமாலுக்கு ஒருநாள் வைகுண்ட ஏகாதசி. ஆனால் அம்பிகைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி! இதை சாரதா நவராத்திரி என்றும் அழைப்பர்.

(ஸ்ரீவித்யா உபாசகர்கள், பராசக்தியின் சேனைத் தலைவியான வாராஹி நவராத்திரியை ஆடி மாதத்திலும்; பராசக்தியின் மந்திரியான சியாமளா நவராத்திரியை மாசி மாதத்திலும்; லலிதா நவராத்திரியை பங்குனி மாத ராமநவமி சமயத்திலும் கொண்டாடுவர்.)


சாரதா நவராத்திரியின் முதன் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பிகையை வழிபடுகிறோம்.

பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். அந்த நாளில் எந்த நல்ல செயல்களைத் தொடங்கினாலும் வெற்றிபெறும் என்பதால், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் உட்பட பல செயல்களை விஜயதசமியில் தொடங்குகிறோம்.

வங்காளிகள் இவ்விழாவை துர்க்கா பூஜை என்ற பெயரில் மூன்று நாட்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள். சஷ்டியில் ஆரம்பித்து விஜயதசமியன்று விசர்ஜனம் செய்வர். கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை போல வங்காளிகளுக்கு துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாம் சரஸ்வதியை நவராத்திரியின்போது பூஜிப்போம். ஆனால் வங்காளிகள் தை மாதத்தில் வசந்த பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதியைப் பூஜிக்கின்றனர். எவ்வாறாயினும் மூன்று தேவியர் வழிபாடென்பது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலுமே நடைபெறுகிறது.

கஜமுகாசுரனை அழிக்க கணபதி வினோத வடிவம் கொண்டார். இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு நரசிம்மமாக வடிவம் கொண்டார். மகிஷனை அழிக்க ஹரிஹர புத்திரன் என்னும் சாஸ்தா அவதரித்தார். சூரபத்மாதியர்களை அழிக்க சிவனே கந்த னாக அவதரித்தார். இராவணனை அழிக்க மகாவிஷ்ணு மனித வடிவம் கொண்டார். அசுரர்கள் பெற்ற வரத்திற்கேற்ப இறை அவதாரங்கள் நிகழ்ந்தன.

அதுபோல, பெண் பலவீனமானவள் என்ற எண்ணத்தில், பெண்களால் அழிவு நேரக்கூடாது என்ற வரத்தை மகிஷாசுரன் பெறவில்லை. எனவே, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சக்திகள் ஒருங்கிணைந்த துர்க்கையாக பராசக்தி அவதாரம் எடுத்தாள். மகிஷாசுரனை வதைத்தாள். ஆகவே இந்த அன்னை வெற்றிக்குத் துணைபுரிபவள். மன்னர்கள் போருக்குச் செல்லும்போது துர்க்கையை வணங்கிச் செல்வது மரபு.

அதுபோல கல்வி, கலை, ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும். படைக்கும் தொழில் செய்யும் பிரம்மதேவனின் சக்தி அம்சமே சரஸ்வதி தேவி. இவள் துர்க்கா சரஸ்வதியாக சும்ப நிசும்ப ராட்சஸர்களை அழித்தவள். சும்ப நிசும்பர்களை அழித்த சரஸ்வதியைக் குறித்து தேவர்கள் 32 துதிகள் செய்தனர் என்று துர்க்கா சப்தசதி கூறுகிறது.

ஸர்வஸ்ய புத்தி ரூபேண
ஜனஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதே
ஸ்வர்க அபவர்கதே தேவி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி வினாசானாம்
சக்தி பூதே சனாதனி
குணஸ்ரயே குணமயி
நாராயணி நமோஸ்துதே

என்னும் துதிகளில் சரஸ்வதி அம்சமும் குறிக்கப்படுகிறது.

தேவி பாகவதம் சரஸ்வதியின் அவதாரத்தை எவ்வாறு குறிக்கிறது என்று காண்போமா?

கணேச ஜனனி துர்க்கா ராதா
லக்ஷ்மி சரஸ்வதி ஸாவித்ரி ச
ஸ்ருஷ்டி விதௌ ப்ரக்ருதி
பஞ்சதாஸ்ம்ருதா.

ஆதிசக்தியிலிருந்து ஐந்து பிரதான சக்திகள் தோன்றின. அவற்றுள் சரஸ்வதியும் ஒருத்தி. துர்க்கா, ராதா, லட்சுமி, சாவித்ரி ஆகியோர் மற்ற சக்திகள்.

மகாவித்யா, மகாவாணி, பாரதி, வாக் சரஸ்வதி, ஆர்யா, ப்ராம்மி, காமதேனு, வாகீஸ்வரி, ருத்ர வாகீஸ்வரி, விஷ்ணு வாகீஸ்வரி, பர சரஸ்வதி, பாலா சரஸ்வதி, நகுலி சரஸ்வதி, வாணி சரஸ்வதி, சம்பத் சரஸ்வதி, தாரகா சரஸ்வதி என கலை மகளுக்குப் பல திருநாமங்கள் உண்டு.

"ஐம்' என்பது சரஸ்வதியின் வாக்பவ பீஜ மந்திரம். இது ஓங்காரம் போன்று மூன்று வேதங்களின் முதல் அட்சரங்களால் (அ, இ, ஏம்) பிணைக்கப்பட்ட பீஜாட்சரம் என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

சரஸ்வதி தேவியின் லீலாவினோதங்கள் சிலவற்றைக் காண்போமா?

வால்மீகி ராமாயணம் பிறந்த கதை

வேடனாக இருந்த வால்மீகி நாரதரிடம் ராம நாம உபதேசம் பெற்று அந்த மந்திரத்தை ஓதத் தொடங்கினார். "ராம' என்று உச்சரிக்க வராமல் "மரா' என்று உச்சரித்தே இறையருள் பெற்றார். அதன்பின் ராமாயணம் இயற்றத் தொடங்கும் சமயத்தில், வேடனொருவன் ஒன்றாக இருந்த இரு பறவைகள் மீது அம்பெய்தான். அதில் அடிபட்டு ஆண் பறவை கீழே விழுந்தது. அதைக் கண்டு வருந்திய வால்மீகி,

"மாநிஷாத பிரதிஷ்டாம் த்வமகம:
சரஸ்வதி: ஸமா: யத் கௌஞ்ச
மிதுனாதேகம் அவதீ: காமமோஹிதம்'

என்று சபித்தார். அதாவது, "ஏ வேடனே! காமத்தில் திளைத்திருந்த அந்த இரு பறவைகளில் ஆண் பறவையைக் கொன்று விட்டாயே. அதனால் நீ பல்லாண்டு வாழ மாட்டாய்' என்று சாபமிட்டார்.

அதன்பின், ராமாயண காவியம் இயற்ற ஆரம்பிக்கும் வேளையில் இத்தகைய துக்ககரமான சொற்கள் வெளிப்பட்டுவிட்டனவே என்று மிகவும் வருந்தினார். அப்போது நாரதர், ""வருந்த வேண்டாம் முனிவரே. நீ கூறியது மகாவிஷ்ணுவுக்கு மங்களாசாசனம் தான். "ஹே லட்சுமிபதியே, நீ பல்லாண்டு வாழ்வாயாக. காமமோகம் கொண்டவனான இராவணனை அழித்தீரல்லவா?' என்பதே நீ கூறியதன் பொருள். சரஸ்வதியே உமது வாக்கில் அமர்ந்து இத்தகைய மங்களச் சொற்களை உகுத்துள்ளாள். அவள் அருளால் உன் வாக்கிலிருந்து ராமாயணம் மிளிரும்'' என்றாராம்.

கம்பரும் ராமாயணமும்

கம்பநாட்டாழ்வார் சரஸ்வதி தேவியின் அருளால்தான் ராமாயண காவியம் படைத்தார் என்பர். சரஸ்வதியின் திருவுளப் படியே அது ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றப் பட்டது.

சரஸ்வதியும் ஒட்டக்கூத்தரும்

மூன்று சோழ அரசர்களிடம் அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். பூந்தோட்டம் சரஸ்வதியின் அருளால்தான் அவர் புலமை பெற்றார் என்பர். பூந்தோட்டத் திலுள்ள சரஸ்வதி ஆலயம் ஒட்டக்கூத்தரால் அமைக்கப் பெற்றதென்றும்; அவர் பெயரா லேயே அத்தலம் கூத்தனூர் என்று பெயர் பெற்றதென்றும் கூறுவர். ஒட்டக்கூத்தர் சரஸ்வதி புகழ்பாடி அந்தாதி இயற்றியுள்ளார்.

புருஷோத்தமனுக்கு சரஸ்வதியின் அருள்!

சாரங்கபாணி தீட்சிதர் என்பவர் கும்ப கோணத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மகன் புருஷோத்தமன் பிறவி ஊமை. மருந்துகள், மந்திரங்கள், தந்திரங்கள் என எதுவும் பயன்தரவில்லை. அவர் பூந்தோட்டம் சரஸ்வதி ஆயலத்துக்கு வந்து உள்ளன்புடன் ஒரு மண்டலம் பூஜை செய்தார். பூஜை முடியும் நாளில் ஒரு சுமங்கலிப் பெண் அவரிடம் வந்து "வாயைத் திற!' என்றாள். வாயைத் திறந்ததும், அந்தப் பெண் தன் வாயிலிருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து, "சாப்பிடு' என்று சொல்லி கருவறைக்குள் சென்று மறைந்தாள். தாம்பூலம் உண்ட புருஷோத்தமன் கவிபாடத் தொடங்கினார். அந்த ஞானத்தைக் கொண்டே அன்னையின் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்தார் என்று கல்வெட்டு கள் கூறுகின்றன.

குமரகுருபரரும் சரஸ்வதியும்

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சிறுவனான குருபரன் செந்திலாண்டவன் அருளால் பேசும் வல்லமை பெற்று கந்தர் கலிவெண்பா பாடினார். பின்னர் பாண்டிய மன்னன் முன்பு மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடினார். அப்போது ஒரு சிறு பெண் அங்கு வந்து, பாண்டிய மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலையை குமரகுருபரனுக்கு அணிவித்து மீனாட்சியாகக் காட்சியளித்து மறைந்தாள்.

அதன்பின்னர் பல தலங்களையும் தரிசித்து காசி சென்ற குருபரர், அங்கு மடம் ஒன்றை ஸ்தாபிக்க நினைத்தார். அதற்கு அப்பகுதியை ஆண்ட முகம்மதிய மன்னனிடம் இடம் கேட்டார். "இந்துஸ்தானி மொழியில் வாதிட்டு வென்றால் இடம் தருகிறேன்' என்று அவர் கூறிவிட, அம் மொழியை அறிந்திராத குமரகுருபரர் சரஸ்வதி அன்னையை மனதாரத் துதித்து "சகலகலாவல்லி மாலை' பாடினார். அன்னை யின் அருளால் பன்மொழி ஞானம் கைவரப் பெற்று, தன் எண்ணப்படி காசியில் மடத்தை நிறுவினார். அந்த மடத்தை இப்போதும் காசி யில் கங்கைக் கரையோரம் காணலாம்.

இவ்வாறு சரஸ்வதி அருளால் பெரும்புலமை பெற்றோர் பலருண்டு.

ஆதிசங்கரரும் சாரதையும்

கர்நாடக மாநிலம், சிருங்கேரி மடத்தில் கோவில் கொண்டுள்ள சாரதா தேவி சரஸ்வதியே. இவள் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். இந்த தேவி இங்கு எவ்வாறு குடியமர்ந்தாள்?

பிரம்மதேவர் மண்டனமிஸ்ரராக அவதரித்தார். பிரம்மபத்தினி சரஸ்வதி தேவி மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியாக அவதாரம் செய்தாள். சிவாம்சமான ஆதிசங்கரர் மண்டனமிஸ்ரருடன் 17 நாட்கள் வாதம் செய்தார். அதற்கு நடுவராக இருந்தவள் உபயபாரதி. மண்டனமிஸ்ரர் தோற்கும் தறுவாயில், "என்னையும் வாதத்தில் வென்றால்தான் நீங்கள் வெற்றி பெற்றவராவீர்' என்று கூறிய உபயபாரதி, காம சாஸ்திரம் சம்பந்தமாகக் கேள்வி கேட்டாள். பிரம்மச்சாரியான ஆதிசங்கரர் அதுபற்றி அறியாத வராகையால் ஒரு மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அமருகன் என்ற அரசன் இறந்துவிட, அவனுடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சங்கரர், மன்னன் மனைவியிடம் காமசாஸ்திரம் சம்பந்தமாக அறிந்துகொண்டு மீண்டும் மண்டனமிஸ்ரர் இல்லம் நோக்கி வந்தார். அவரை வரவேற்ற இருவரும், "நீங்கள் சதாசிவ அம்சம் என்பதை அறிவோம். போட்டி யில் வென்றவர் நீங்களே' என்று பணிந்தனர். மண்டனமிஸ்ரர் சுரேஷ்வரர் என்ற பெயரில் சங்கரரின் சீடரானார். அப்போது உபயபாரதி மறையத் தொடங்க, ஆதிசங்கரர் அவளிடம், "தாங்கள் சரஸ்வதி தேவியே என்பதை நானறி வேன். என் கோரிக்கையேற்று சிருங்கேரியிலும் காஞ்சியிலும் சாந்நித்யம் கொண்டருள வேண்டும்' என்று வேண்டினார். சரஸ்வதியும் அதற்கிணங்கினாள். அதனால்தால் சிருங்கேரி மடத்தையும் காஞ்சி காமகோடி மடத்தையும் சாரதாபீடம் என்று கூறுகின்றனர்.

காஞ்சி காமாட்சி கோவிலில் பணிபுரிந்த ஊமை ஒருவருக்கு மூகன் என்றே பெயர். சுமங்கலியாய் வந்த காமாட்சி தாம்பூலத்தை உமிழ்ந்து உண்ணச் சொல்ல, ஊமை கவிஞனா னார். "மூக பஞ்சசதி' என்னும் பெயரில், சௌந்தர்யலஹரிபோல 500 துதிகள் பாடினார். மூக சங்கரர் என்னும் பெயரில் காஞ்சி மடாதி பதியாகவும் எழுந்தருளினார். அவர் பாடிய துதிகளை காஞ்சி காமாட்சி ஆலயத்தில் கல்வெட்டுகளாக இன்றும் காணலாம்.

சரஸ்வதியின் அருளுக்கு எல்லை உண்டோ?

ஆண்டவனுக்கு பக்தி சிரத்தையுடன் நாம் அளிக்கும் எதுவும், உலக நன்மைக்கு அனைவருக்குமே பயன்படும்

பாண்டவர்கள் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக, துரியோதனன் அவரை ஆயிரம் சீடர்களான யோகிகளுடனும், பாண்டவர் வனவாசம் செய்யும் எளிய ஆசிரமத்துக்கு நண்பகல் வேளையில் அனுப்பி வைத்தான். அவர்கள் எல்லோரும் பசியுடன் அங்கு சென்றார்கள். திரௌபதியிடம் ஒரு அமுதசுரபி உண்டு. அதில் எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும். ஆனால், அதிதிகள் அனைவருக்கும் உணவு அளித்த பின்பு, பாண்டவர்களும், திரௌபதியும் உணவருந்தி முடித்து அதை மூடி வைத்து விடுவார்கள். அதன் பிறகு அது உணவு தராது. அன்றும் அதைப் போல் அனைவரும் உணவருந்தி முடித்தபின்பு திரௌபதி அதை மூடி வைத்து விட்டாள். அப்போதுதான் துர்வாச முனிவர் ஆயிரம் யோகிகளுடன் அங்கு வந்திருந்தார். தருமர் அவர்களை வரவேற்றார். நதியில் நீராடித் திரும்பும்படியும், அதற்குள் உணவு தயாரித்து விடுவதாகவும் சொல்லி அவர்களை ஆற்றங்கரைக்கு அனுப்பி வைத்தார்.அவர்களும் ஆற்றங்கரைக்குச் சென்று விட்டார்கள். ஆயிரம் பேருக்கும் எப்படி உணவு தயாரிப்பது? என்ற கவலையுடன் திரௌபதி கிருஷ்ணனை நினைத்து வேண்டினாள். சில நொடிகளில் கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்து விட்டார். கிருஷ்ணனைப் பார்த்ததும், அவர் தன்னைக் காப்பாற்றி விடுவார் என்கிற நினைவில் மகிழ்ந்து போனாள். ஆனால், கிருஷ்ணரோ அவளைப் பார்த்து, “அம்மா திரௌபதி, நான் நெடுந்தொலைவிலிருந்து வந்தது எனக்குப் பசியாக இருக்கிறது. எனக்கு உடனே ஏதாவது உணவைக் கொடு” என்றார். திரௌபதி கண்கலங்கிப் போனாள். அவள், “கிருஷ்ணா, இங்கு வந்திருக்கும் ஆயிரம் பேருக்கு எப்படி உணவளிப்பது? என்று நான் உன்னை உதவிக்கு அழைத்தால், நீயும் இப்போது பசிக்கிறது... உணவு வேண்டும் என்கிறாயே... எனக்கு ஒன்றும் புரியவில்லை... நானோ சாப்பிட்டு முடித்தாகி விட்டது. இனி உணவுக்கு நான் எங்கே செல்வது?” என்று கண்ணீர் வடித்தாள். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “அப்படியெல்லாம் இருக்காது. உன்னிடமிருக்கும் அமுதசுரபியை இங்கே கொண்டு வா. நான் பார்த்துக் கொள்கிறேன். நிச்சயமாக, அதில் ஏதாவது உணவு இருக்கும்” என்றார். திரௌபதி உள்ளே சென்று கொண்டு வந்து காட்டிய காலிப் பாத்திரத்தை கிருஷ்ணர் வாங்கிப் பார்த்தார். அப்பாத்திரத்தினுள்ளே ஒரு கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயிலே போட்டுக் கொண்ட கிருஷ்ணர், “திரௌபதி எனக்கு வயிறு நிறைந்து விட்டது. இனி உனக்குக் கவலை வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். திரௌபதிக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த திரௌபதி முன்பு துர்வாச முனிவரும், ஆயிரம் யோகிகளும் வந்து நின்றனர். திரௌபதிக்கு கவலை அதிகமாகி விட்டது. துர்வாச முனிவர், “அம்மா, நாங்கள் நீராடத்தான் போனோம். நீராடிவிட்டு வெளியேறியதும், எங்களுக்குள்ளிருந்த பசி போய் விட்டது. எங்கள் வயிறு முழுமையாக நிறைந்து விட்டது. நாங்கள் அங்கு நீர் கூட அருந்தவில்லை. இருப்பினும் பசி போய் விட்டது. இதற்கு உன் நல்ல எண்ணமும், உள்ளமும்தான் காரணமாக இருக்கும் போலிருக்கிறது” என்றார். திரௌபதிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.கிருஷ்ணனுக்குக் கொடுத்த கீரை இலை போன்ற உணவு இவர்களனைவருக்கும் வயிறு நிறையச் செய்து விட்டது. இறைவனுக்கு உணவு படைப்பதும், அதைப் பிரசாதமாக நாம் ஏற்பதும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான். ஒரு பெரிய மரம் இருக்கிறது.அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. அடிமரத்தில் வேருக்குத்தான் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால், அதுமரத்தின் அனைத்து இலைகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது. இதுபோல் ஆண்டவனுக்கு பக்தி சிரத்தையுடன் நாம் அளிக்கும் எதுவும், உலக நன்மைக்கு அனைவருக்குமே பயன்படும் என்பதே இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம் 1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம். 1.2 அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான். 1.3 ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும். 1.4 சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது 1.5 முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம். 1.6 மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. 1.7 சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது. 1.8 ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம். 1.9 விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. (அவையாவன: 1. லிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. சந்திதர மூர்த்தி 4. கல்யாண சுந்தரர் 5. அர்த்த நாரீச்வரர் 6. ஸோமாஸ்கந்தர் 7. சக்ரவரதர் 8. திரிமூர்த்தி 9. ஹரிமர்த்தனம் 10. சலந்தராரி 16. திரிபுராரி 17. சரப மூர்த்தி 18. நீலகண்டர் 19. திரிபாதர் 20. ஏகபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. சந்திரசேகரர் 24. நடராஜர் 25. கங்காதரர்). இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம். 1.10 இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: (1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், (2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். (3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, (4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், (5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், (6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். (7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். (8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். (9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது. 1.11 இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 1. அஹிம்சை. 2. தயை, 3. சத்யம், 4. அடக்கம் 5. வளம், 6. புலனடக்கம் 7. எளியோர்க்கு வழங்குதல், 8. தியாகம், 9. ஜபம், 10. தியானம் - அல்லது 1. அஹிம்சை, 2. சத்யம், 3. பிறர் பொருள் விழையாமை, 4. சிற்றின்பம் துறத்தல், 5. அவா ஒழித்தல், 6. க்ரோதம் தவிர்த்தல், 7. பெரியோரைப் போற்றுதல், 8. தூய்மை, 9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத் தக்கது. 1.12 எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

பகவத்கீதையின் சிறப்பு

கீதை காட்டும் பாதை



 


பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர் -கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும்.


பகவத்கீதையின் சிறப்பு


"அமிர்த சாத்திரம்" - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத்கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.

இவ்வுலகில் அனைவரும் மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். அல்லது அச்சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மன உளைச்சல் பல்வேறு விதமான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. மனிதன் இம்மன உளைச்சலால் பல துன்பங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆளாகின்றான். இத்தகைய துன்பங்களில் இருந்து அவன் விடுபட்டு மன அமைதியுடன் வாழ வேண்டும். இத்தகைய மன அமைதியுடன் வாழும் வாழ்க்கையைப் பற்றியே பகவத்கீதை எடுத்துரைக்கின்றது.

உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. உளத்திற்கு ஊறு நேரிட்டால் அது உடலைப் பாதிக்கின்றது. உளம் அமைதி அடைந்தால் உடல் நலம் பெறுகின்றது. அத்தகைய உள அமைதியை நல்கும் உன்னத நூலாகப் பகவத்கீதை இருக்கின்றது. போர்க்களம் என்பது இவ்வுலக வாழ்க்கை. அதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகள். போராட்டம் நிறைந்த வாழ்வில் மனம் தடுமாற்றம் அடையாது வாழ்வதே உண்மையான வாழ்க்கை; அதுவே யோக வாழ்வு. இத்தகைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்று கூறும் வாழ்வியல் சாஸ்திரமாக பகவத்கீதை அமைந்திலங்குகிறது.


 



பகவத் கீதை தரும் யோகம் பற்றிய விளக்கம்


பகவத்கீதை மனம் இறைவனுடன் இணையும் வழியை எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் உயிரானது இணைகின்ற நெறிகளை யோகமாகக் கூறுகிறது. யோகமாவது சமத்துவம் ஆகும். இதனை, “மத்வம் யோக உச்யதே” என்று பகவத்கீதை மொழிகிறது. அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி என்பது இதன் நுவல் பொருளாகும்.

நீ ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய். “யோகத குரு கர்மாணி’’ என்று பகவத்கீதையில் கடவுள் கூறுகிறார். “யோகத்தில் நின்று தொழில்களைச் செய்” என்பது இதன் விளக்கமாகும்.

யோகநெறியில் வாழ்பவன் யோகி ஆவான். யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.

பகவத் கீதை தர்ம சாத்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோட்ச சாஸ்திரம். மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோட்ச மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் “தொழில் செய்’’, “தொழில் செய்’’ என்று போதிக்கின்றார். இதனால், அதனை வெறுமனே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. “சம்சயாத்மா விநச்யதி”, “ஐயமுற்றோன் அழிவான்” என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

 


“ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தைப் பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையும் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத சயரோகத்தில் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையும் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் சயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. சயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாக்கிக் கொண்டு, சயரோகி என்று தனக்கொரு பட்டம் சூட்டிக்கொண்டு வருந்திு மடிவது போல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.


ஞானயோகம்


“ஞானக் நிர்வ கர்மாணி பமத் குருதே” - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின். ஆனால், அதிலிருந்து இது ஞான சாத்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது. ‘‘முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, “தமாத் யுத்ய வ பாரத”- “ஆதலால், பாரதா, போர் செய்”, என்ற பல்லவி வந்து கொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் மறுக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதனை, இங்கு மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.

துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன்- ஜீவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இதுவே உண்மை. இங்ஙனம் வாழ்க்கையை நலமுடன் அனைவரும் மேற்கொள்ளக் குறியீடுகளைக் கொண்டு இறைவன் கிருஷ்ணன் விளக்கிச் செல்கிறார்.

கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்;

“நீ வாயு; நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )

கண்ணன் சொல்லுகிறான்;

“மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)

“நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’’ - (கீதை 10- ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)

எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும், கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள். கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாத்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ள இயலும்.


 



இயற்கை விதிப்படி வாழ்வதே யோகம்


கடவுளை வழிபாடு செய்வது எங்ஙனமென்பதை, கிருஷ்ணன் சொல்லுகிறார்

“நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)

எந்த உயிரகளுக்கும் துன்பம் செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த உயிரையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத்தகார். மாமிச உணவை உண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார். “அரிம் பரமோ தர்ம’’ - “கொல்லாமையே முக்கிய தர்மம்” என்பது. ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் “common sense” என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும். சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் மனிதர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், “நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்” என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கை இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது. நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் .ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துக் கொண்டுமிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.


கர்ம யோகம்


கீதையிலே பகவான் சொல்லுகிறான் - “அர்ச்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்யவேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்” ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் - “நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்’’ என்று கூறுகிறார். செயல் செய்வதே யோகமாகும். அது கர்ம யோகமாகும். கர்மயோகம் செய்பவன் கர்ம யோகியாவான். கடவுளும் கர்ம யோகியாவர்.

கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.

எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய உயிர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால், “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகமாக நடமாடக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது.

பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே பகவத்கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனித சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.


 



பாவம் புண்ணியம்


தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.

“இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை ஸ்ரீ கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார். “அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்ற தென்னே பராபரமே?” என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

இவ்வுலகத்தில் மனிதர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று கருதலாம். இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து உயிர் வாழ வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. நனவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லாப் பெரியவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.

கீதை கூறக்கூடிய யோகம் மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் யோகமாகும். இயற்கை விதியை மீறாது தனது கடமைகளைச் செய்து, அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்தி வாழ்பவன் யோகியாவான். அவன் கர்மங்களைச் செய்கின்ற போது கர்மாயோகி என்றழைக்கப்படுகின்றான். கடமையாகிய யோகத்தைச் செய்து கீதை காட்டிய வழியில் வாழ்ந்தால் யோகநிலையில் உயர்நிலையை மனிதன் அடைவது திண்ணம். கடமையைச் செய்வோம்! யோக நெறி வாழ்வோம்.

திருநீற்றை வழங்கும் முறை--- திருநீற்றை அணியும் முறை

குமரேச சதகம் என்ற நூல் புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் என்ற கிராமத்தை அடுத்துள்ள குமரமலையில் வீற்றிருக்கும் குமரேசக் கடவுளை முன்வைத்துப் பாடப் பெற்ற சதக நூலாகும். இச்சதக நூலை இயற்றியவர் குருபாததாசர் ஆவார். இந்நுல் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பழமையை உடையது என்று அறிஞர்கள் கருத்துகின்றனர். குருபாததாசர் முருகப் பெருமானை முன்வைத்து உலகியல் சார்ந்த நூறு பாடல்களை இந்நூலுள் பாடியுள்ளார். இந்நூல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகும். இதனுள் குறிக்கப்படும் நெறிகள் அனைவருக்கும் பொதுவான நெறிகளாக விளங்குகின்றன.

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலானவர்களின் குலஇயல்புகளை எடுத்துரைப்பதாகத் தொடங்கும் இந்நூல், இலக்குமி வாழும் இடங்கள், மூதேவி வாழுமிடங்கள், நற்புலவர் இயல்பு, தீப்புலவர் இயல்பு போன்ற பல கருத்துகளைத் தொகுத்தளிப்பதாக உள்ளது. பொதுக்கருத்துகளை உள்ளடக்கிப் பாடும் இந்நூல் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் "மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே '' என்ற மகுடத்தை கொண்டு அமைவதாகப் பாடப் பெற்றுள்ளது.

 


திருமகள் வந்தமர்ந்தால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் உயர்வுகளை இந்நூல் மிக அழகாக எடுத்துரைக்கின்றது. ஒருவருக்கு திருமகள் பார்வை ஏற்பட்டால் சிறப்பு உண்டாகும். செல்லும் பாதை எல்லாம் அவர் வழி போகும் பெரும்பாதையாகும். செல்லாத வார்த்தை எல்லாம் செல்லுபடியாகும். செல்வம் ஆறுபோல வந்து சேரும். மதியாதவர்கள் கூட மதிப்பர். சாதிதனில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் உண்டாகும். பகையாளி உறவாவான். பேச்சினில் பிழைவராது. வரும் என்று நினைத்த பொருள் வந்து சேரும். வல்லமைகள் மிக உண்டாகும் என்று திருமகள் வரவால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியல் இடுகிறது இந்நூல். இப்பாடலில் இடம்பெற்றுள்ள அத்தனைக் கருத்துக்களும் அனைவருக்கும் பொருந்தும்படியான பொதுமைத்தன்மை வாய்ந்தனவாகும். இக்கருத்துகள் அன்றும் இன்றும் என்றும் பொருந்தக் கூடியவை. இத்தகைய நிலையில் சொற்சிறப்பும், பொருள் சிறப்பும், கவிதைச் சிறப்பும் வாய்ந்த சதக நூலாக இந்நூல் விளங்குகின்றது.

இந்நூலில் இருபாடல்கள் திருநீறு பற்றி இடம் பெற்றுள்ளன. திருநீற்றை வழங்கும் முறை பற்றியும், திருநீற்றை அணியும் முறைபற்றியும் ஆன பல செய்திகளை இவ்விருபாடல்கள் தருகின்றன. இவ்விருபாடல்களும் சைவ வாழ்வு வாழும் எளிய மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டு விளங்குகின்றன.

 


பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
பருத்ததிண் ணையிலிருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் முன்றாலும் வாங்கினும்
திகழ்தம் பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநர கென்பர்கண்டாய்
வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. (87)

என்ற இந்தப் பாடல் திருநீறு வழங்குவது பற்றியும் பெறுவது பற்றியும் தெளிவுபடுத்துகின்றது.

1. திருநீற்றைக் குதிரை, சிவிகை, உயர் பலகை, திண்ணை முதலியவற்றில் அமர்ந்து கொண்டு பெறுதல் கூடாது.

2. திருநீறு வழங்குபவர் கீழ்நிற்க, பெறுபவர் மேலாக நிற்கவும் கூடாது. வழங்குபவர் மேல் நிலையிலும், பெறுபவர் கீழ்நிலையிலும் நின்று பெறுதல் சிறப்பாகும்.

3. ஒருகை கொண்டு திருநீறு பெறக்கூடாது. இருகைகளாலும் பெறவேண்டும். மூன்று விரல்களைப் பயன்படுத்தி வாங்குதல் கூடாது.

4. அரிய பாதையில் நடக்கின்றபோது, அசுத்தநிலத்தில் இருக்கின்றபோது திருநீற்றைப் பெறவும் கூடாது. சூடவும் கூடாது.

5. முக்கியமான குறிப்பு ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் அதனை வேண்டாது மறுக்கவும் கூடாது.

- இவ்வகையில் தவறுகளை நீக்கித் திருநீறு பெறவேண்டும். தவறுகளுடன் பெற்றால் நரகம் செல்ல நேரிடும் என்று எச்சரிக்கின்றது குமரேச சதகம்.

 


திருநீற்றைச் சூடிடுவதற்கு சில முறைமைகள் உண்டு. அதனைப் பின்வரும் பாடல் எடுத்துரைக்கின்றது.

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுய மீதுஒழுக
நித்தம் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
சத்தியும் சிவனுமென்னலாம்
மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. (88)

1. சிவ சிவ என்று சொல்லி திருநீற்றைப் பணிந்துப் பக்தியோடு பெற்றிட வேண்டும்.

2. நீற்றினைக் கையால் எடுத்து, தரையில் அது சிந்திவிடாதபடி விரல்களால் நெற்றியில் அழுந்தும்படி பூசவேண்டும்.

- இவ்வாறு பூசினால் நெடிய வினைகள் பூசியவரை அணுகாது. உடல் பரிசுத்தமாகும். இவர்களிடத்தில் நிமலன் நீங்காமல் இறைவியோடு முகத்தில் குடியிருப்பான். அகத்தில் அவன் நடனமாடுவான். இந்நீற்றினை அணிவதால் மனசஞ்சலம் ஏற்படாது. இச்செய்திகள் மேற்பாடலில் எடுத்துரைக்கப் பெறுகின்றன.

நாளும் திருநீறு வாங்குகையில் இந்நெறிமுறையைக் கடைபிடித்து அன்பர்கள் திருநீற்றின் பெருமை குன்றாமல் காக்கவேண்டும். சூடவேண்டும். போற்றவேண்டும். மந்திரமாவது நீறு என்ற சம்பந்தர் வாக்கு மெய்ப்பட குமரேச சதகமும் முயன்றுள்ளது.

சிவபெருமான் தனக்கான அனைத்துப் பொருள்களையும் தான் மட்டும் கொள்ளாது தன்னைச் சார்வோரான அடியார்களும் அப்பொருள்களை அனுபவிக்க அருளும் பெருங்கொடையாளன். எனவே சிவன் அவனே திருநீற்றை அணிந்து குருவின் வசம் அளித்து மக்கள் அனைவருக்கும் சென்றுசேரும் நடைமுறையில் திருநீற்றைப் படைத்தளித்துள்ளான். இந்நடைமுறையை வெற்றிகரமாகச் செய்து நலமுடன், பலமுடன் பக்தியுடன் வாழ்வோம்.


ஆறுமுகநாவலர் பெருமானை அறுபத்தி நான்காவது நாயனாராக ஈழவள மக்கள் கருதுவர். பெருமானார் ஆற்றிய சிவதொண்டுகள் ஏராளமாயினும் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய எழுத்துநடையில் உருவாக்கிய சைவவினா விடை தமிழ் உலகிற்கு கிட்டிய அரிய சொத்து எனலாம். இத்தகு பெருமையுடைய சைவவினா விடையில் இருந்து திருநீற்றுவியலை பதிவிடுகிறேன்.

திருச்சிற்றம்பலம்

திருநீற்று இயல்

1) சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு

2) திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

3 ) எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு.

4 )திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

5) திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

6) திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?
நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவ சிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

7). திருநீறு நிலத்தில் சிந்தினால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை எடுத்து விட்டு, அந்த இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும்.

8). திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?
கூடாது.

9). திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?
தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் விளக்கிய உடனும், சூரியன் தோன்றி மறையும் போதும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும் திருநீறு அணிய வேண்டும்.

10) ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

11). கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?
முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

12). திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல்.

13). திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

14). முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?
தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

15). முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

16). மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

17). மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

18) முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

19) சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

20). அவைகளுண்டான வகை எப்படி?
பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

21). அதனை அணிவதானால் பயன் என்ன?

மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொத்த விபூதியை பசுவின்சாணத்தினால் விளைக்கவேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

22). கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

பங்குனிமாதத்தில் ஈசானத்தில் மேய்ந்துவந்து நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையி லெடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு உண்டையாக்கி முன் விளைத்திருக்கிற சிவாக்கினியிலிட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். அதனைச் குருபாலறிக.

23). அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?
காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

24). உபகற்ப விபூதியாவது யாது?

இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

25). விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

26). எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?
புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

Wednesday, October 3, 2012

சிவனின் திருஉருவங்கள்

சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.


வ. எண். பெயர் தொழில் திசை வடிவம் நிறம்
1. சத்யோ ஜாதம் படைத்தல் மேற்கு நிலம் பால் நிறம்
2. வாமதேவம் காத்தல் வடக்கு நீர் சிகப்பு
3. அகோரம் அழித்தல் தெற்கு நெருப்பு கருப்பு
4. தற்புருடம் மறைத்தல் கிழக்கு காற்று மஞ்சள் குங்குமம்
5. ஈசானம் அருளல் வடகிழக்கு ஆகாயம் படிகம்


 



சிவனின் அடையாளங்கள்


சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வரும் அடையாளங்கள் கொள்ளப்படுகின்றன.

  • நெற்றிக்கண் காணப்படல்.
  • கழுத்து நீலநிறமாக காணப்படல்.
  • சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
  • நீண்ட சுருண்ட சடாமுடி
  • தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
  • உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
  • புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
  • கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
  • கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
  • நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
  • இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
  • சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்


  •  



    சிவனின் திருஉருவங்கள்


    சிவபெருமானின் திருஉருவங்கள் என கீழ்காணும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

  • சந்திரசேகரர்.
  • உமாமகேஸ்வரர்.
  • ரிஷபாரூடர்.
  • நடராஜர்.
  • கல்யாணசுந்தரர்.
  • பிட்சாடனர்.
  • காமதகனார்.
  • காலசம்ஹாரமூர்த்தி.
  • திரிபுராந்தகர்.
  • சலந்தரர்.
  • கஜாசுர சம்ஹாரர்.
  • தக்க்ஷ யக்ஞவதர்.
  • ஹரியர்த்தர்.
  • அர்த்தநாரீசுவரர்.
  • கிராதகர்.
  • கங்காளர்.
  • சண்டேச அநுக்கிரஹர்.
  • நீலகணடர்.
  • சக்ரப்ரதர்.
  • விக்னப்ரசாதர்.
  • சோமாஸ்கந்தர்.
  • ஏகபாதர்.
  • சுகாசனர்.
  • தட்சிணாமூர்த்தி.
  • லிங்கோத்பவர்.
  • ரிஷபாந்திகர்.
  • அகோரவீரபத்ரர்.
  • அகோராஸ்ரமூர்த்தி.
  • சக்ரதானஸ்வரூபர்.
  • சிவலிங்கம்.
  • முகலிங்கேஸ்வரர்.
  • சர்வஸம்ஹாரர்.
  • ஏகபாத திரிமூர்த்தி.
  • திரிபாதமூர்த்தி.
  • ஜ்வரஹரேஸ்வரர்.
  • ஊர்த்துவதாண்டவர்.
  • வராக் ஸம்காரி .
  • கூர்மஸம்ஹாரி.
  • மச்சஸம்ஹாரி.
  • சரபேசர்.
  • பைரவர்.
  • சார்த்துலஹரி.
     


  • லகுளீசர்.
  • சதாசிவர்.
  • உமேசர்.
  • புஜங்கலளிதர்.
  • புஜங்கத்ராசர்.
  • கங்காதரர்.
  • கங்காவிசர்ஜனர்.
  • யக்ஞேஸ்வரர்.
  • உக்ரர்.
  • ஆபதோத்தாரணார்.
  • ஷேத்ரபாலர்.
  • கஜாந்திகர்.
  • அச்வாரூடர்.
  • கௌரீவரப்ரதர்.
  • கௌரீலீலா சமன்விதர்.
  • கருடாந்திகர்.
  • பிரம்ம சிரச்சேதர்.
  • ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
  • சிஷ்யபாலர்.
  • ஹரிவிரிஞ்சதாரணர்.
  • சந்தியா நிருத்தர்.
  • பதிணெண் புராணங்கள்

    1. பிரம்ம புராணம் பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. 2. பத்ம புராணம் காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 3. பிரம்ம வைவர்த்த புராணம் கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. 4. இலிங்கப் புராணம் பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது. 5. விஷ்ணுப் புராணம் விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது. 6. கருட புராணம் கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது. 7. அக்கினி புராணம் அக்கினியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது. 8. மத்ஸ்ய (மச்ச) புராணம் பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது. 9. நாரத புராணம் நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. 10. வராஹ புராணம் திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது. 11. வாமன புராணம் வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது. 12. கூர்ம புராணம் கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது. 13. பாகவத புராணம் விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது. 14. ஸ்கந்த புராணம் முருகப் பெருமானின் வரலாறு சொல்லப்படுகிறது. 15. சிவ புராணம் சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. 16. மார்க்கண்டேய புராணம் மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. 17. பிரும்மாண்ட புராணம் பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. 18. பவிஷ்ய புராணம் பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில் நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் ஸ்மிருதிகள்

    இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் ஸ்மிருதிகள் 1. மநுஸ்மிருதி 2. யாக்ஞவல்யஸ்மிருதி 3. அத்ரிஸ்மிருதி 4. விஷ்ணுஸ்மிருதி 5. ஹரீதரஸ்மிருதி 6. உஸனஸ்மிருதி 7. அங்கீரஸஸ்மிருதி 8. யமஸ்மிருதி 9. காத்யாயனஸ்மிருதி 10. ப்ருஹஸ்பதிஸ்மிருதி 11. பராசரஸ்மிருதி 12. வியாசஸ்மிருதி 13. தக்ஷஸ்மிருதி 14. கௌதமஸ்மிருதி 15. வசிஷ்டஸ்மிருதி 16. நாரதஸ்மிருதி 17. ப்ருகுஸ்மிருதி 18. ஸங்கஸ்மிருதி

    இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் மகரிசிகள்

    இந்து சமயம் குறிப்பிடும் பதிணெண் மகரிசிகள் 1. மனு 2. பிரஹஸ்பதி 3. தக்ஷர் 4. கௌதமர் 5. யமர் 6. அங்கிரஸ் 7. யாக்ஞவல்யர் 8. பிரசேதஸ் 9. சாதாதபர் 10. பராசரர் 11. சம்வர்த்தர் 12. உசநஸ் 13. சங்கரர் 14. லிகிதர் 15. அத்ரி 16. விஷ்ணு 17. ஆபஸ்தம்பர் 18. ஆரீதர்

    தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?

    தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? தர்மம் நான்கு வகைப்படும். அதில் முதலாவது சாமான்ய தர்மம். பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் இராமர். இரண்டாவது சேஷ தர்மம். சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன். மூன்றாவது விசேஷ தர்மம் தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன். நான்காவது விசேஷதரதர்மம் பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம். சத்ருகன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக, இந்த நான்கு தர்மங்களையும் இராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

    கந்தன் கருணை என்று சொல்வது ஏன்?

    சூரபதுமன் முருகப் பெருமானைத் தெய்வம் என்று ஏற்காமல், “கோலவாள் எயிறு இன்னும் தோன்றாக் குதலைப் பாலகன்” என்று பேசினான். ஆனால் போரின் முடிவில், முருகப் பெருமான் மரமாக நின்ற சூரனை வேல் கொண்டு இரு கூறுகளாகப் பிளந்து ஒன்றை மயிலாகவும், ஒன்றைச் சேவலாகவும் மாற்றினான். மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஆக்கிக் கொண்டு விட்டான். அதாவது சூரபதுமனின் ஆணவத்தை மட்டும் அழித்து, சூரபதுமனைத் தன் வாகனமாக்கிக் கொண்டு, தன்னைப் பணியும் பக்தர்கள் யாவரும், மயிலும் சேவலுமாய் இருக்கும் சூரபதுமனைத் தொழும்படி அருளிவிட்டான். இதுதான் கந்தனின் தனிக் கருணை என்கிறார்கள். இதை விளக்கமாகச் சொன்னால், இராமன், இராவணனின் ஆணவத்தை அழித்து, இராவணனையும் கொன்று அழித்தார். கண்ணன் துரியோதனாதியரின் ஆணவத்தை அழித்து, துரியோதனாதியரையும் அழியச் செய்தார். கந்தன் மட்டுமே சூரபதுமனின் ஆணவத்தை மட்டும் அழித்து அவனை வாகனமாகவும், தனது கொடியாகவும் மாற்றிக் கொண்டார். இதுதான் கந்தன் கருணை.

    மழை பொழிய வைக்கும் பாடல்!

    <முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் என்பாவாய் இப்பாடல் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவையில் இருக்கிறது. இப்பாடலைத் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராக மூன்று நாட்கள் இடைவெளி இல்லாமல் பாடினால் கட்டாயம் மழை பொழியும் என்கின்றனர்.

    ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

    ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில் யதுவம்சோ அவதீர்ணஸ்ய பவக: புருசோத்தம: சரஸ்சதம் வ்யதீதாய பஞ்ச விம்சாதிகம் ப்ரபோ: பொருள்: “புருசோத்தமரே! பிரபுவே! யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன. இதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள். மகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது. திருதராஷ்டிரருடன் அஸ்தினாபுர வாசம் - 13 வருடங்கள் அரக்கு மாளிகையில் - 1 வருடம் பாஞ்சால மன்னன் வீட்டில் - 1 வருடம் ஏகசக்ரபுரத்தில் - 1 வருடம் மீண்டும் திருதராஷ்டிரனுடன் - 5 வருடங்கள் இந்திரப்பிரஸ்தத்தில் தனி அரசு - 23 வருடங்கள் வனவாசமும், அஞ்ஞாதவாசமும் - 13 வருடங்கள் குருசேத்திர போருக்குப் பின்பு ஆட்சி - 36 வருடங்கள் இதன் பிறகு பர்சித் மகா சக்கரவர்த்திக்கு பட்டாபிசேகம் செய்து விட்டு மகா பிரஸ்தானம் இப்படி கணக்கெடுக்கும் போது, மொத்தம் 93 வருடங்கள். பாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது; யுதிஷ்டிரன் வயது - 16 வருடங்கள் பீமன் வயது - 15 வருடங்கள் அர்ச்சுணன் வயது - 14 வருடங்கள் ஸ்ரீ கிருஷ்ணர் வயது அர்ச்சுணனை விட 3 மாதங்கள் அதிகம், தர்மரை விட பதின்மூன்றே கால் வருடம் குறைவு. இந்தக் கணக்குப்படி ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் வாழ்ந்தது 106 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது.

    ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?

    பாலினுள்ளே நெய் மறைந்திருப்பதைப் போல், எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதாலும், துதிப்பதனாலும், வழிபடுவதினாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன. கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெந்த சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை (லென்ஸ்) வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகி விடுகிறது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயிலுக்கு உண்டு. பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரியகாந்தி கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது நமது பாவங்களை எரிக்க, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைப்பது போலாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் வழிபாடு செய்வது இன்றியமையாததாகும். “மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே” என்பது சிவஞானபோதம். நமது திருக்கோயில்களில் உள்ள திரு உருவங்கள், தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் போன்றவர்களால் நிறுவப்பட்டு, துதிக்கப்பட்ட காரணத்தால் மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும். - “வாரியார் வாக்கு” எனும் நூலில் திருமுருக கிருபானந்த வாரியார்.

    காதறந்த ஊசி

    ஊசி ஒன்று தன் ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது. ஆனால் தன் மறுமுனை ஓட்டையாக இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது. ஒரு நான் அதன் மறுமுனை உடைந்து போனது. காதறந்த நிலையில் அந்த ஊசியைப் பயன்படுத்தியவர் தூக்கியெறிந்தார். அப்போதுதான் அந்த ஊசிக்குத் தான் அவமானமாக நினைத்த மறுமுனையின் முக்கியத்துவம் தெரிந்தது. ஒருவர் கூர்மையான புத்தியுள்ளவராக இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. கூர்மையான ஊசி தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் அது பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. காதறந்த ஊசி பயன் இல்லை. அது போல் பிறரைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் அன்பு இருந்தால் மட்டுமே சிறந்தவனாகத் திகழ முடியும்.

    இராமன் சாப்பாட்டு இராமனா?

    ராமன் வனவாசத்தின் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார். ராமனை வரவேற்ற முனிவர் தன் ஆசிரமத்தில் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு இராமன், தான் திரும்பும் போது அவசியம் உணவு உண்பதாகக் கூறிச் சென்றார். இராவண வதம் முடிந்ததும், இராமன் திரும்பி வரும் வழியில் பரத்வாஜ முனிவர் ஆசிரமம் சென்றார். விருந்து தயாரானது. ஆனால் அப்போதுதான் இராமனுக்கு பரதனின் நினைவு வந்தது. உடனே அனுமனை அழைத்து, “நீ உடனே அயோத்தி சென்று, தம்பி பரதனிடம் நான் வந்து கொண்டிருப்பதாகச் சொல். நான் இன்று திரும்பாவிடில் அவன் அக்கினிப் பிரவேசம் செய்து விடுவான்” என்றார். அனுமன் அயோத்தி சென்றான். அங்கு பரதன் அக்கினிப் பிரவேசம் செய்வதற்காகத் தீயை மூட்டிக் கொண்டிருந்தான். இதைக் கண்டு பதறிப் போயிருந்த கோசலையிடம் அனுமன், “இராமன், பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் விருந்து உண்டுவிட்டு வது விடுவார். தம்பி பரதனின் அக்கினிப் பிரவேசத்தை நிறுத்தச் சொல்லி என்னை அனுப்பினார்” என்றார். இதைக் கேட்ட கோசலை, “இப்படி காலமறியாமல் இராமன் விருந்து சாப்பிடுகிறானே... சரியான சாப்பாட்டு இராமன்” என்று கடிந்து கொண்டார். ஆனால், இராமன் உண்மையில் அதுவரை சாப்பிடவில்லை. அவருக்கு, தம்பி பரதன் அவசரப்பட்டு அக்கினிப் பிரவேசம் எதுவும் செய்து விடக் கூடாது என்கிற கவலையே மேலோங்கி இருந்தது. ஒன்றுமே சாப்பிடாத இராமனுக்குத்தான் சாப்பாட்டு இராமன் என்று பெயர்.

    குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள்

    இந்து சமயத்தில் குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை; கர்ப்பதானம் நல்ல உடல் நலமும், நல்ல மனநிலையும் உடைய ஆணும் பெண்ணும் தூய உணர்வுடன், முழு மகிழ்ச்சியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும். மன ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பருவத்தே இணைந்து கர்ப்பத்தை அடைய வேண்டும்.இந்தக் கர்ப்பதானம், நிஷேகம், புத்ரேஷ்டி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. பும்ஸவனம் உருவான கரு முற்றிலும் உடல் நலத்துடன் வளர, தம்பதியர்கள் அடக்கத்துடனும் அளவாகவும் பழக வேண்டும். உடலை நல்லுணவாலும், உள்ளத்தை நல்லெண்ணங்களாலும் வளர்க்க வேண்டும். மனத்தைக் கெடுக்கும் எந்தப் பொழுது போக்கிலும் ஈடுபடக்கூடாது. இதற்குப் பும்ஸ்வனம் என்று பெயர். சீமந்தோன்னயனம் குழந்தையின் மூளையும், உறுப்புகளும் நல்ல முறையில் வளர வேண்டும். பெற்றோரின் நல்ல பண்புகள் குழந்தையிடமும் கருவிலேயே தோன்ற வேண்டும். உணவின் சத்தும், உள்ளப்பாங்கும் குழந்தைக்கு நல்லமுறையில் கிடைக்க வேண்டும். அதனால், குழந்தையின் நன்மைகளை நாடிச் செய்யப்படும் சடங்கு சீமந்தோன்னயனம் என அழைக்கப்படுகிறது. ஜாதகர்மம் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன்பு நடத்தப்படும் சடங்கு ஜாதகர்மம் எனப்படுகிறது. உலகிம் முழுமையாக வந்து சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அது அடையாளம். குழந்தையின் நாவில் “ஓம்” என எழுதி மந்திரங்களால் ஆசி வழங்குவதே இச்சடங்கின் நோக்கமாகும். நாமகரணம் குழந்தை பிறந்த பதினோராவது நாளிலோ அல்லது 101வது நாளிலோ குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு நடக்கிறது. (இதில் பதினாறாவது நாள், முப்பதாவது நாள் போன்றவை வழக்கத்திலுள்ளன) சீரும் சிறப்பும் நல்ல கல்வியும் பெறக்கூடிய வகையில் வளம் நிறைந்த பெயரை வைத்திட வேண்டும். சடங்கில் கலந்து கொண்ட பெரியவர்கள், குழந்தைக்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும், ஞானமும், நற்குணங்களும் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும். இச்சடங்கிற்கு நாமகரணம் என்று பெயர். நிஷ்கிரமணம் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு மாதப் பருவ காலத்தில், வீட்டிலிருந்து வெளியில் கொண்டு வந்து இளவெயிலும், மாலைமதியின் ஒளியும் மேனியில் படும்படி செய்ய வேண்டும். இப்படி செய்யும் சடங்கு நிஷ்கிரமணம் எனப்படுகிறது. அன்னப்ராசனம் குழந்தையின் ஆறாம் மாதத்தில் பிறந்த நட்சத்திரத்தில் உணவு ஊட்டும் சடங்கு அன்னப்ராசனம் எனப்படுகிறது. இதன்படி முதலில் தேன், நெய், தயிர் ஆகிய மூன்றையும் கலந்து விதிப்படி கடவுளுக்கு நைவேத்தியம் செய்து, பிறகு குழந்தைக்கு அதை ஊட்ட வேண்டும். தடாகருமம் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் உத்தராயண காலத்து வளர்பிறையில் நடப்பது தடாகருமம். இதை சௌளகருமம் என்றும் சொல்வதுண்டு. கருவிலேயே முளைத்த தலைமயிரைக் களைந்து மீண்டும் இயல்பான தலைமயிர் வளரச் செய்யும் சடங்கு இது.

    கழுதையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

    ஞானி ஒருவரிடம் அவரது சீடன், “குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும் தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்களே...? இந்தப் பண்பு உங்களிடம் எப்படி வந்தது?” என்று கேட்டான்.

    அவர் உடனே, “கழுதையிடமிருந்துதான்...” என்றார்.

    “என்னது கழுதையிடமிருந்தா...?” என்று அங்கிருந்த சீடர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கேட்டனர்.

    “ஆமாம், நான் கழுதையிடமிருந்துதான் அதைக் கற்றுக் கொண்டேன். காலையிலும், மாலையிலும் தெருவில் செல்லும் கழுதையை நீங்கள் பார்த்ததில்லையா? காலையில் அது அழுக்கு உடைகளைச் சுமந்து செல்லும். மாலை வேளையில் அது சுத்தமான உடைகளைச் சுமந்து வரும். காலையில் அழுக்கு உடைகளைச் சுமந்து செல்கிறோமே என்று அது வருத்தமடைவதுமில்லை. மாலையில் சுத்தமான உடைகளைச் சுமந்து வருகிறோமே என்று மகிழ்ச்சி அடைவதுமில்லை... கழுதையிடமிருந்துதான் அந்த நல்ல பண்பைக் கற்றுக் கொண்டேன்” என்றார் அந்த ஞானி.

    உங்கள் நண்பர்களைப் பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும்

    பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது.
    தமிழாசிரியர் சகவாச தோஷம் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
    ""மாணவர்களே! படிக்கும் பருவம் மிக முக்கியமானது. உங்கள் நண்பர்களைப் பொறுத்தே எதிர்கால வாழ்வு அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் கண்டதும் நட்பு பாராட்டி நண்பராக மாறி விடுகிறீர்கள். தீயவர்களிடம் பழகும் நல்லவனும் கெட்டுப் போவான். நல்லவர்களிடம் பழகும் தீயவனும் நல்லவன் ஆவான். அதனால்,மாணவர்களாகிய நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகுவதில் கவனமாக இருக்கவேண்டும்,'' என்று அறிவுரை சொன்னார்.
    அப்போது ஒரு மாணவன் ,""ஐயா! தீயவர்களுடன் பழகும் நல்லவன் அவர்களைத் திருத்த முயற்சிக்கலாமே!'' என்று கேட்டான்.
    அதற்கு பதிலளித்தார் ஆசிரியர்.
    ""அண்டா நிறைய தண்ணீர் இருக்கிறது. அதில் ஒருகுவளை பாலை கலந்தால் என்னாகும்? பால் தன் நிலையை இழந்து விடும். அதேசமயத்தில் ஒரு அண்டா பாலில், ஒரு குவளை தண்ணீரைச் சேர்த்தால் அது பாலின் தன்மையைப் பெற்று விடும். இதுபோல் தான் நட்பும்! பிறவிக்குணத்தை மாற்றுவது சிரமம்,'' என்றார்.
    ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு சரியெனப்பட்டது.

    யார் நிஜமான "சாமி'யார்

    ஆற்றங்கரை அரசமரத்தடிப் பிள்ளையார் கோயிலில் சாமியார் ஒருவர் இருந்தார். பசித்தால் ஊருக்குள் சென்று பிச்சை கேட்பார். மற்றபடி, ஒரு குண்டுக்கல் மீது அமர்ந்திருப்பார். இதனால் மக்கள் "குண்டுக்கல் சாமியார்' என்று அழைத்தனர்.
    ஒருநாள் சாமியார் பிச்சையெடுக்க சென்றிருந்த சமயத்தில் ஒருவர் வந்தார். பிள்ளையாரை வணங்கி திருநீறு இட்டுக் கொண்டார். சாமியார் அமரும் குண்டுக்கல்லில் அமர்ந்தார். திரும்பி வந்த சாமியாருக்கு குண்டுக்கல்லில் யாரோ புதியவர் அமர்ந்திருப்பதைபார்த்ததும்கோபம் வந்துவிட்டது.
    "" நான் உட்காரும் கல்லில் நீ எப்படி உட்காரலாம்? இப்போதே இடத்தைக் காலி பண்ணு,'' என்றார் வேகமாக.
    ""எல்லாவற்றையும் துறந்த சாமியாரான உங்களுக்கு, இந்தக் கல்லை விட மனசில்லையா? ஒன்பது கோடி சொத்துக்கு அதிபதியான பட்டினத்தார் துறவியானார். கையில் இருக்கும் திருவோட்டைக் கூட சொத்து என்று எண்ணி, அதை கீழே போட்டு உடைத்தார். ஆனால், உங்களால் ஒரு சாதாரணக் கல்லில், இன்னொருவன் உட்காருவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உம்மையும், இந்த ஊர்க்காரர்கள் சாமியார் என்று சொல்வதெல்லாம் கலியின் கொடுமை தான்!'' என்றார்
    ஆவேசமாக. இதைக் கேட்ட சாமியாருக்கு உண்மை உறைத்தது. ஒன்றும் சொல்ல இயலாமல் மவுனமாக நின்றார்.

    தாளத்துடன் பஜனை பாடுங்க!

    தாளத்தோடு கூடிய ராகம் தான் இனிக்கும். வெறும் ராகமாக பஜனை பாடுவதை விட மிருதங்கமோ, குறைந்தபட்சம்ஒரு வெண்கலத் தாளமோ வைத்துக் கொண்டால் அதன் இனிமையே அலாதி தான்.
    இவ்வாறு தாளம் வைத்துக் கொள்ள காரணமும் உண்டு. சிவபெருமான் நடராஜராக நர்த்தனம் புரியும் போது,வாசிக்கப்பட்டதை "ஹரிதாளம்' என்பர். ராமாயணத்தில் ராமனின் பிள்ளைகளான லவகுசர்கள், ராமாயணக்கதையை சொல்லும்போது தாளத்துடன் பாடியதாக தகவல் இருக்கிறது. கோகுலத்தில், கோபியர்கள் நடனமிடும் போது தாளம் வைத்துக் கொண்டனர். சுகபிரம்மர் பாகவதம் சொன்னபோது, பிரகலாதர். உத்தவர் ஆகியோர் தாளம் இசைத்ததாக பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
    சீர்காழி அருகிலுள்ள தாளபுரீஸ்வரர் கோயிலுக்கு ஞானசம்பந்தர் வந்து, சிவனைப் பாடிய போது, சிவன் அவருக்கு தங்கத்தாளம் கொடுத்தார். அந்த தாளத்தில் சத்தம் எழாததால், அம்பாள் வெண்கலத்தாளம் கொடுத்தாள். அதனால் அம்பாளுக்கு "ஓசை கொடுத்த நாயகி' என்று பெயர் வந்தது. இந்த தகவல்களை மருதாநல்லூர் சுவாமிகள் அருளியிருக்கிறார்.

    உலகை விட பெரியது எது? கடலை விட பெரியது எது? மலையை விட பெரியது எது?''

    தனது தந்தை அங்குமிங்கும் உலவுவதைக் கண்ட மகன் அருண்மொழித்தேவர் ஆச்சரியப்பட்டார். நாடாளும் ராஜாவின் ஆலோசகரான அவரது முகத்தில் இத்தகைய குழப்பத்தை அவர் இதுவரை பார்த்ததில்லை. ""தந்தையே! தங்கள் முகத்தில் ஏன் இந்தக் கலவரம்! வழக்கமாக, அதிகாலையே நீராடி, இறைவழிபாடு முடித்து அரண்மனைக்கு கிளம்பி விடுவீர்களே! இன்று ஏன் இன்னும் செல்லவில்லை! ஒருவேளை, பகைவர்கள் யாராவது சோழநாட்டிற்குள்....'' என்று தொடர்ந்து பேச முயன்ற மகனை சைகையால் நிறுத்தினார் தந்தை. ""அருண்மொழி! மாமன்னர் அநபாயச்சோழனை எதிர்க்க இப்பூவுலகில் திராணி யாருக்குண்டு! என் பிரச்னையை உன்னிடம் சொல்வதால் பயனில்லை. ஏனெனில், அதை உன்னால் தீர்த்து வைக்க முடியாது,''. ""தந்தையே! அப்படி முடிவு கட்டிவிட வேண்டாம். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் தானே!''. தந்தை அந்த இக்கட்டான நிலையிலும் சிரித்தார். ""அருண்மொழி! அந்த மூன்று கேள்விகள் தான் என் குழப்பத்திற்கு காரணம்! அதற்கு இரவு முழுவதும் பல நூல்களில் இருந்து பதில்களைத் தேடினேன்! கிடைக்கவில்லை!'' ""என்ன மூன்று கேள்விகள்? யார் உங்களிடம் கேட்டது?'' ""மாமன்னர் தான் கேட்டார். உலகை விட பெரியது எது? கடலை விட பெரியது எது? மலையை விட பெரியது எது?'' என்று! இவற்றுக்குப் பதில் தேடும் முயற்சியில் தோற்றுப்போனேன்! அரசரிடம் என்ன பதில் சொல்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்!'' அருண்மொழி கலகலவென சிரித்தார். ""சரியாப்போச்சு! இந்த எளிய விடைகள் தெரியாமல் தானா இந்தக் குழப்பம்! கொஞ்சம் பொறுங்கள்,' 'என்றவர் ஒரு ஓலையை எடுத்தார். மூன்று பதில்களையும் எழுதிக் கொடுத்தார். தந்தை அதைப் படித்தார். கண்கள் வியப்பில் விரிந்தன. ""ஆம்...ஆம்...இவை தான் விடைகள்!'' உணர்ச்சி வசப்பட்டு கூவினார். அரசரிடம் சென்று ஓலையை நீட்டினார். அரசர் ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார். ""ஆலோசகரே! விடைகள் மிகப் பொருத்தமானவை. ஆனால், இதை எழுதியது நீர் அல்ல என்பது கையெழுத்திலிருந்து புரிகிறது! இந்த பதிலைச் எழுதியவர் யார்?'' ""என் மகன் அருண்மொழித்தேவர்''. அரசர், உடனடியாக அருண்மொழித்தேவரை தகுந்த மரியாதையுடன் பல்லக்கில் ஏற்றி வர ஏவலர்களுக்கு ஆணையிட்டார். அருண்மொழியும் வந்து சேர்ந்தார். ""தாங்களே! இந்த பதில்களைப் படியுங்கள்'' என்றார் அரசர். ""அரசே! ஒருவனுக்கு தேவைப்படும் போது, சரியான சமயத்தில் கிடைக்கிற சிறிய உதவியே உலகத்தை விட பெரியது. அடுத்து, எந்தச் செயலை எடுத்தாலும் அதை நிலையான தைரியமான மனதுடன் யார் செய்கிறானோ, அவனது மனம் மலையை விட உறுதியானது. பயன்கருதாமல் செய்யப்படும் உதவி கடலை விட பெரியது அருண்மொழித்தேவர் இதை வாசித்துவிட்டு அரசரை ஏறிட்டுப் பார்த்தார். ""அறிவிற் சிறந்தவரே! தாங்களே இனி இந்நாட்டின் அமைச்சர்,'' என ஆணையிட்டார் மன்னர். இவரே அநபாயனிடம் "உத்தமச்சோழ பல்லவர்' என்ற பட்டம் பெற்றவர். பிற்காலத்தில் ஆன்மிகத்தின் தலைமகனாக, "சேக்கிழார்' என்னும் பெயர்தாங்கி, பெரியபுராணம் என்னும் பெருங்காவியத்தைப் படைத்தார்.

    தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை,''.

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச்சென்றான். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ, இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன். கண்விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். ""யாரப்பா நீ! எதற்காக இங்கே நிற்கிறாய்! ""முனிவரே! நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன். நான் வெற்றி பெற. தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன்,''. ""சரி...எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல்,''. ""உங்களுக்கு குளிரும் என்று தானே அணிவித்தேன்!''. ""தேவையில்லை! நான் ஏற்கனவே பணக்காரன். இந்தச் சொத்தையும் சேர்த்து சுமக்க தயாராக இல்லை''. ""என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் கொடுத்தேன். இதை ஏற்பதில் என்ன தயக்கம்!'' ""மகனே! உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். அப்படியானால், உனக்கு தேவை இருக்கிறது. தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை,''. அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு, நாடு திரும்பினான்.

    சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறுபவன் இறைவனின் தண்டனைக்கு ஆளாவான்.

    புலி ஒன்றுக்கு கடும் பசி. காட்டாறு ஒன்றின் கரையில் நின்ற அது, ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், நடுப்பகுதியில் ஒரு மணல்திட்டில் மேய்ந்து கொண்டிருந்த எருமை ஒன்றைப் பிடிக்கச் சென்றது. புலி வருவதை பார்த்த எருமை வேகமாகச் சென்று ஒரு புதர் பகுதியில் மறைந்து கொண்டது. எருமையைக் காணாத புலி, அது வெளியே வரட்டுமே என காத்திருந்தது. எருமை வருவதாகக் காணோம். ஒரு பாறையில் படுத்திருந்தது. அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புலியால் எங்கும் செல்ல முடியவில்லை. திடீரெனக் கண்ணைப் பொத் தியது. இன்று எப்படியும் பட்டினி தான்! இதையே இறைவனை நினைக்கும் விரதமாகக் கருதிக்கொண்டால் என்ன! அது கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தது. புலியின் சந்தர்ப்பவாதத்தை தோலுரிக்க இறைவன் வந்து விட்டார். காணாமல் போன எருமையின் வடிவில்! வெள்ளத்தில் அந்த எருமை "மா...மா..' என கதறியபடியே தத்தளித்து வந்தது. சப்தம் கேட்டு புலி கண்களைத் திறந்தது. "ஆகா! தேடி வந்தது கிடைத்து விட்டது' என்று. பாறையில் இருந்த படியே எருமையின் கழுத்தைக் கவ்வி இழுத்தது. அங்கே இறைவன் பிரசன்னமானார். ""புலியே! நீ ஒரு சந்தர்ப்பவாதி. உணவு கிடைக்காவிட்டால் விரதம் இருப்பது போல் நடிக்கிறாய். உணவைக் கண்டதும் விரதத்தை கைவிட்டு விடுகிறாய். நீ சரியான சந்தர்ப்பவாதி. அடுத்த பிறவியில், புலியையும் விட கேவலமான ஜந்தாகப் பிறப்பாய்,' 'என சாபமிட்டு மறைந்தார். சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறுபவன் இறைவனின் தண்டனைக்கு ஆளாவான். அவனது பிறவியின் நிலை தாழ்ந்து கொண்டே போகும்.

    நல்ல பெயர் வாங்குங்க! விரும்புகிறார் காஞ்சிப்பெரியவர்

    கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால், அந்தப் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்வில் முன்னுக்கு வரவே முடியாது. நல்லபிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். கடவுளின் அருளைத் துணை கொண்டால் எளிதாகச் சாதித்து விடலாம். நல்லவன் என்று பெயர் வாங்கி விட்டால் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் கெட்டவன் தண்டனை அடையத் தான் செய்வான். ஸ்வாமியின் பாத கமலங்களை விடாமல் பிடித்துக் கொண்டு, ""எனக்கு வேறு கதியில்லை; நீ தான் நல்ல வழி காட்டவேண்டும்'' என்று வேண்டிக் கொள்ள வேண்டும். உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத்தூய்மையை இளம்வயதிலேயே பெறுவது தான் நல்லது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப்போக விட்டால் நல்லவழி தேட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைப்பதோடு, ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்.

    தானம்

    சுப்ரோத்தோ மித்ரா என்ற இளைஞர் வங்காளத்தைச் சேர்ந்தவர். சுவிஸ் நாட்டிலுள்ள மைக்ரோஸ் ஒழுங்குமுறை கடைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது மாதச்சம்பளம் ரூ.600. முதல் மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு தாய்நாடு வந்தார். அதை யாருக்காவது தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருள் இருந்தது. தனது தாயாரிடம்,""அம்மா! இதை யாருக்குத் தானம் செய்யலாம்?'' என்றார். அவர்கள் இந்துக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்தத்தாயின் வாயில், ""மகனே! அன்னை தெரசா இங்கு தானே இருக்கிறார். அவரை நேரில் சந்தித்துக் கொடு,'' என்றார். அவர் அன்னை தெரசாவைப் பார்க்க வந்தார். ஏராளமானோர் அவரைப் பார்க்க தங்கள் விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்து விட்டுக் காத்திருந்தனர். இளைஞரும் தன் கார்டை உள்ளே அனுப்பினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தார். சாதாரணப்பட்டவர் என்றாலும், அந்த ஊழியரையும் உள்ளே அழைத்த அன்னை, அவருடன் கருணையுடன் பேசினார். ஒரு நடுத்தர குடும்பத்தினர், ""மகன் எப்போது முதல் மாத சம்பளம் வாங்குவான்? அதைக் கொண்டு தங்கள் தேவைகளையெல்லாம் நிறைவேற்றலாம் என்று தான் கணக்குப் போடுவார்கள். ஆனால், அந்த இளைஞனின் குடும்பம் அதைத் தானம் செய்தது கண்டு, அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். தகுதியான இடத்தில் தானத்தைச் சேர்த்த மகிழ்ச்சியில் இளைஞரும் ஆசிபெற்றார்

    குறிக்கோளை எட்ட முயற்சிக்கும் போது நெருப்பாற்றில் நீந்த வேண்டியிருக்கும்.

    வெள்ளையர்கள் கருப்பர்களை நிறபேதம் காட்டி அடிமைப்படுத்திய காலம். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் அகிம்சை வழியில் போராட முடிவெடுத்தார். கருப்பர்களுக்கு சகல உரிமையும் பெற்றுத்தருவதே அவரது குறிக்கோளாயிற்று. ""எனக்கு நான்கு குழந்தைகள். அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தங்களது தோலின் நிறத்தால் அல்லாமல், சிறப்பியல்புகளாலும், பண்புகளாலும் மதிக்கப்படுபவர்களாக மாற வேண்டும்,'' என்று அறைகூவல் விடுத்தார். இந்த வார்த்தைகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. அவரவரும் தங்கள் குழந்தைகளும் அவ்வாறே ஆக வேண்டுமென போராட்டக்களத்துக்கு வந்தார்கள். ஆனால் சும்மா கிடைத்து விடுமா சுதந்திரம்? மார்ட்டின் லூதர்கிங்கை வெள்ளைத் தீவிரவாதிகள் தாக்கினர். அவரது குடும்பத்தைக் கொலை செய்யும் நோக்கில் வீட்டில் வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், எல்லாவற்றையும் சமாளித்தார் கிங். இறுதியாக, எல்லா மாநிலங்களும் வெள்ளையருக்கு சமமான உரிமையை கருப்பு இனத்தவர்களுக்கும் அனுமதித்தன. அது மட்டுமல்ல! அமைதிக்கான நோபல் பரிசும் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு கிடைத்தது. குறிக்கோளை எட்ட முயற்சிக்கும் போது நெருப்பாற்றில் நீந்த வேண்டியிருக்கும். அதைக் கடந்து விட்டால் வெற்றி நிச்சயம்.

    பூஜ்யங்களை ஆதாரமாகக் கொண்ட பணராஜ்யம் நிலைத்திருக்காது

    1லட்சத்து 76 ஆயிரம் கோடி, 1லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று கோடிகள் இன்றைய அரசியலில் ஏலம் விடப்படுகின்றன. இவ்வளவு பணம் தங்களிடம் இருப்பதால் "நானே ராஜா' என்று பீற்றிக்கொண்டு திரிகின்றனர் சிலர். எண்ணுக்குப் பின்னே பூஜ்யங்களைத் தொடர்ந்து சேர்க்கும் போது கோடி கோடியென கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் பணத்தால் பயனே இல்லை என்கிறார், இந்த உலகத்துக்கே சொந்தக்காரரான ராமபிரான். ராஜா வீட்டுப்பிள்ளையான அவர், சிறுவனாக இருந்த போதே உலகை வெறுத்தார். அரசனுக்குரிய எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. விஸ்வாமித்திரர் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். ராமரும் அதற்கு பதிலளித்தார். அப்போது செல்வத்தைப் பற்றி ராமர் கருத்து சொல்கிறார். ""உலகில் செல்வத்தை ஒரு வரம் என எண்ணுகிறார்கள். ஆனால், அது எல்லாப் பிரச்னைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எப்படி கிணற்றுக்குள் பூத்த பூவால் யாருக்கும் பயனில்லையோ, அதுபோல் செல்வத்தால் பெரிய பயன் கிடையாது. தீப்புண் பட்டவனால் எப்படி ஒரே இடத்தில் நிற்கமுடியாதோ, அதுபோல் செல்வமும் ஓரிடத்தில் நிலைக்காது. அது பயனற்றவர்களைச் சென்று சேருகிறது. பாம்புக்கு பால் வார்த்தாலும் அதன் விஷம் எப்படி குறையாதோ, அதுபோல் செல்வத்தை வாரி இறைத்தாலும் தீமைகள் தான் உண்டாகும்,'' என்றார் பூஜ்யங்களை ஆதாரமாகக் கொண்ட பணராஜ்யம் நிலைத்திருக்காது என்பது இப்போது புரிகிறதா

    நேர்மையான ஆன்மிகவாதிகளையும், அரசியல் தலைவர்களையும் நமது தேசத்துக்கும் ஆண்டவன் தருவானா!

    தலைவன் என்பவன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை கடைபிடிப்பவனாகவும், ஒழுக்கத்தையும் உடையவனாக இருக்க வேண்டும். இப்போது, ஒழுக்கசீலர்களான தலைவர்களைப் பூதக்கண்ணாடி கொண்டு தான் அலச வேண்டியிருக்கிறது. கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. விஷத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அப்போது அவர் தன் சீடர்களான பைடோ, கிரீட்டோ ஆகியோரை அழைத்தார். ""நான் எக்ஸ்ளிப்யாஸி என்பவரிடம் ஒரு கோழி கடன் வாங்கினேன். அதைத் திருப்பிக்கொடுப்பதற்குள் என் நிலைமை இப்படியாகி விட்டது. நீங்கள் அவருக்கு அதை வாங்கிக்கொடுத்து என் கடனைத் தீர்த்துவிடுங்கள்,'' என்று சொல்லி உயிரை விட்டார். நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கடைபிடித்ததால் தான், இன்று அவர் நம்மால் நினைக்கப்படுகிறார். நேர்மையான ஆன்மிகவாதிகளையும், அரசியல் தலைவர்களையும் நமது தேசத்துக்கும் ஆண்டவன் தருவானா! >

    விளையாட்டாக கோயிலுக்குப் போனால் கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார்.

    ஒரு கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர். அவர்கள் அங்குள்ள முருகன் கோயில் முன்பு மாடு மேய்ப்பது வழக்கம். தண்டபாணி மட்டும் கோயிலுக்கு பிரசாதம் வாங்குவதற்காகப் போவான். முருகையாவோ அதைக் கூட செய்வதில்லை. ஒரு புதன்கிழமை. கோயிலில் கூட்டமில்லை. முருகையா மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பசுக்கன்று திடீரென ஓடி விளையாட ஆரம்பித்தது. சாலையில் போகிற வண்டிகளில் போய் விழுந்து விட்டால், ஆபத்தாகி விடுமே என பயந்த முருகையா, அதைப் பிடித்துக் கட்ட எழுந்தான். அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கன்று ஓட ஆரம்பித்தது. நேராக கோயிலுக்குள் போய் விட்டது. பிரசாதத்துக்காக கூட கோயிலுக்கு போகாத முருகையா, அன்று தான் முதன் முதலாக நுழைந்தான். கன்றைப் பிடிக்கப் பாய்ந்தான். அது பிரகாரத்தைச் சுற்றி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. முருகையாவும் தன் பலத்தையெல்லாம் திரட்டிப் பாய்ந்தான். ஆனால், அது சிக்க வேண்டுமே! உஹும்...11 தடவை பிரகாரத்தைச் சுற்றி முடித்த கன்றைப் பிடிக்க முருகையா அருகில் நெருங்கவும், அது பாய்ந்தோடி கருவறைக்குள் ஓடி முருகனின் பின்னால் நின்று கொண்டது. முருகையா முருகன் முன்னால் நின்றான். உள்ளே போக அவனால் முடியாதே! ஒரு வழியாக ஒளிந்து நின்று, கன்று வெளியே வரவும் அதைப் பிடித்து, நான்கு போடு போட்டு, மந்தைவெளிக்கு வந்து கட்டிப்போட்டான். இதற்குள் சர்க்கரைப் பொங்கலை ஒரு பிடி பிடித்த தண்டபாணி, கோயில் எதிரே உள்ள தீர்த்தக்குளத்தில் கையைக் கழுவினான். கையை உதறிய போது, அதிலுள்ள தீர்த்தம் அவன் தலையில் சிறிதளவு பட்டது. இப்படியே காலமும் போய்விட்டது. அவர்கள் மரணமடைந்தனர். தூதர்கள் எமன் முன்னால் அவர்களை நிறுத்தினர். சித்ரகுப்தன் அவர்களின் பாவ புண்ணியக்கணக்கைப் படித்தான். ""தர்மராஜா! இந்த தண்டபாணி பிரசாதத்துக்காக மட்டுமே முருகன் கோயிலுக்குப் போனவன். அதோ, அந்த தடியன் முருகையா இருக்கிறானே! அவன் அதற்காகக் கூட அந்தப் பக்கம் போனதில்லை. இவர்கள் இருவரையும் நரகத்திற்கு அனுப்பி விடட்டுமா!'' என்றான். தர்மராஜா சிரித்தார். ""சித்ரகுப்தா அவசரப்படாதே! இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும்படி முருகப்பெருமான் எனக்கு உத்தரவிட்டுள்ளார்''. ""ஆச்சரியமாக இருக்கிறதே! இவர்களுக்கா சொர்க்கம்!'' ""ஆம் சித்ரகுப்தனே! இந்த முருகையா கோயிலுக்கு வழிபாட்டுக்கென வராவிட்டாலும், கன்றுக்குட்டியைப் பிடிக்கிற சாக்கில், 11 தடவை கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தான். கருவறை முன்னாலும் நின்று முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அதோ! அந்த தண்டபாணி இருக்கிறானே! அவன் தினமும் கோயில் குளத்தில் கைகழுவி விட்டு, கையை உதறும்போது தீர்த்தம் தலையில் பட்டதே! அறியாமல் செய்தாலும், அதுவும் புண்ணியச் செயல்களே! அதற்காக கருணாமூர்த்தியான கந்தன், அவர்களை சொர்க்கம் அனுப்பச் சொல்லியுள்ளார்,'' என்றார். பார்த்தீர்களா! விளையாட்டாக கோயிலுக்குப் போனால் கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார். கிராமத்து கோயில்கள் நலிந்து விடக்கூடாது. கிராமமக்கள் தங்கள் ஊர் கோயிலுக்கு அடிக்கடி சென்று இரண்டு கால பூஜையாவது நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.