Wednesday, October 3, 2012
குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள்
இந்து சமயத்தில் குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை;
கர்ப்பதானம்
நல்ல உடல் நலமும், நல்ல மனநிலையும் உடைய ஆணும் பெண்ணும் தூய உணர்வுடன், முழு மகிழ்ச்சியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும். மன ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பருவத்தே இணைந்து கர்ப்பத்தை அடைய வேண்டும்.இந்தக் கர்ப்பதானம், நிஷேகம், புத்ரேஷ்டி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
பும்ஸவனம்
உருவான கரு முற்றிலும் உடல் நலத்துடன் வளர, தம்பதியர்கள் அடக்கத்துடனும் அளவாகவும் பழக வேண்டும். உடலை நல்லுணவாலும், உள்ளத்தை நல்லெண்ணங்களாலும் வளர்க்க வேண்டும். மனத்தைக் கெடுக்கும் எந்தப் பொழுது போக்கிலும் ஈடுபடக்கூடாது. இதற்குப் பும்ஸ்வனம் என்று பெயர்.
சீமந்தோன்னயனம்
குழந்தையின் மூளையும், உறுப்புகளும் நல்ல முறையில் வளர வேண்டும். பெற்றோரின் நல்ல பண்புகள் குழந்தையிடமும் கருவிலேயே தோன்ற வேண்டும். உணவின் சத்தும், உள்ளப்பாங்கும் குழந்தைக்கு நல்லமுறையில் கிடைக்க வேண்டும். அதனால், குழந்தையின் நன்மைகளை நாடிச் செய்யப்படும் சடங்கு சீமந்தோன்னயனம் என அழைக்கப்படுகிறது.
ஜாதகர்மம்
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன்பு நடத்தப்படும் சடங்கு ஜாதகர்மம் எனப்படுகிறது. உலகிம் முழுமையாக வந்து சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அது அடையாளம். குழந்தையின் நாவில் “ஓம்” என எழுதி மந்திரங்களால் ஆசி வழங்குவதே இச்சடங்கின் நோக்கமாகும்.
நாமகரணம்
குழந்தை பிறந்த பதினோராவது நாளிலோ அல்லது 101வது நாளிலோ குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு நடக்கிறது. (இதில் பதினாறாவது நாள், முப்பதாவது நாள் போன்றவை வழக்கத்திலுள்ளன) சீரும் சிறப்பும் நல்ல கல்வியும் பெறக்கூடிய வகையில் வளம் நிறைந்த பெயரை வைத்திட வேண்டும். சடங்கில் கலந்து கொண்ட பெரியவர்கள், குழந்தைக்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும், ஞானமும், நற்குணங்களும் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும். இச்சடங்கிற்கு நாமகரணம் என்று பெயர்.
நிஷ்கிரமணம்
குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு மாதப் பருவ காலத்தில், வீட்டிலிருந்து வெளியில் கொண்டு வந்து இளவெயிலும், மாலைமதியின் ஒளியும் மேனியில் படும்படி செய்ய வேண்டும். இப்படி செய்யும் சடங்கு நிஷ்கிரமணம் எனப்படுகிறது.
அன்னப்ராசனம்
குழந்தையின் ஆறாம் மாதத்தில் பிறந்த நட்சத்திரத்தில் உணவு ஊட்டும் சடங்கு அன்னப்ராசனம் எனப்படுகிறது. இதன்படி முதலில் தேன், நெய், தயிர் ஆகிய மூன்றையும் கலந்து விதிப்படி கடவுளுக்கு நைவேத்தியம் செய்து, பிறகு குழந்தைக்கு அதை ஊட்ட வேண்டும்.
தடாகருமம்
குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் உத்தராயண காலத்து வளர்பிறையில் நடப்பது தடாகருமம். இதை சௌளகருமம் என்றும் சொல்வதுண்டு. கருவிலேயே முளைத்த தலைமயிரைக் களைந்து மீண்டும் இயல்பான தலைமயிர் வளரச் செய்யும் சடங்கு இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment