Saturday, January 29, 2011

மந்திர ஜெபம் செய்யும் முறை

மந்திர ஜெபம் செய்யும் முறை
ஒரு அரசனுக்கு தனது மந்திரியின் மேல் ஒரு சந்தேகம். மந்திரியின் புத்தி சாதுர்யத்திற்கு அவர் செய்யும் மந்திர ஜெபமே காரணம் என எண்ணினார். தானும் மந்திர ஜெபம் செய்தால் மந்திரியைப் போல புத்தியை அடையலாம் என நினைத்தான். ஒரு நாள் மந்திரியிடம் தனது ஆவலை தெரிவிக்க, மந்திரியோ, அரசனான நீங்கள் சரியான அதிகாரி இல்லை. உங்களுக்கு மந்திர ஜெபம் சித்திக்காது என்றான்.
அரசன் தனது அஹங்காரத்தாலும், அதிகார மோக உச்சத்திற்கு சென்றான். உன்னால் அந்த மந்திரத்தை கூற முடியுமா, முடியாதா? என கோபமாக கேட்டான். உடனே மந்திரி அருகில் இருந்த காவலரைப் பார்த்து இவரை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என கட்டளையிட்டார். காவல் வீரர்கள் அரசனை குழப்பமாக பார்க்க அரசன்கோபத்தின் உச்சத்திற்கு சென்று "முட்டாளே ! முதலில் இந்த மதிகெட்ட மந்திரியை சிறையில் அடையுங்கள்" என்றார். உடனே காவலர்கள் மந்திரியை சிறை பிடித்தனர்.
புன்னகை பூத்தவாரே மந்திரி கூறினார். "அரசே நான் கூறிய அதே வார்த்தையைத் தான் நீங்களும் கூறினீர்கள். உங்கள் வார்த்தைக்கு கீழ்படிந்தவர்கள், என் வார்த்தைக்கு கீழ்படியவில்லை. அது போன்றதே மந்திர ஜெபம்; நான் கூறினால் சித்திக்கும் மந்திர ஜெபம் நீங்கள் கூறினால் சித்திக்காது. தவறை உணர்ந்த அரசன் தான் அதற்கு அதிகாரி அல்ல என்பதையும் அறிந்தான்.
இந்த கதை மூலம் நாம் உணர வேண்டிய விஷயம் நாம் எந்த மந்திரத்திற்கு அதிகாரியோ, அதை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். மேலும் அதை உணர்ந்த குருவிடம் தீட்சையாக பெறவேண்டும். மந்திர ஜெபம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஜெபிக்கப்பட வேண்டும். உலக நன்மைக்காக, முக்தியை வேண்டி, உடல் குறைகளை போக்க, சித்திகளை பெற என நோக்கம் வேறுபட்டாலும் மந்திர ஜெபம் எனும் செயல் ஒன்று தான். மந்திர ஜெபம் செய்து நோக்கம் பூர்த்தி அடைவதை சித்தி அடைதல் என்பார்கள். மந்திர சித்தி அடைதல் இயல்பாக ஏற்படும் ஓர் விளைவு. முக்தியை வேண்டி மந்திர ஜெபம் செய்தால் நம்முடைய கூர்மையான எண்ணம், ஜெபிக்கும் முறை, நம்பிக்கையை பொறுத்து மந்திர சித்தி ஏற்படும்.
ஸ்வாமி சச்சிதானந்தா அவர்கள் மந்திர சாதனை பயிற்சியையும், மந்திர சித்தி அடைதலையும் எளிய உதாரணத்தில் விளக்குவார். குரு என்பவர் ஓர் பீஜ மந்திரத்தை கொடுப்பது என்பது பாலில் ஒருதுளி தயிரை சேர்ப்பது போன்றது. பால் போன்ற சிஷ்யனின் உள்நிலையில் ஓர் சிறிய மந்திரம் அவனை தயிராக மாற்றும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்தால், தயிரை மத்தால் கடைவதை போல கடைந்து கடைசியில் வெண்ணையாக அவனது மந்திர சித்தி கிடைக்கும். இதை பக்குவமாக ஆன்மீகம் எனும் தன்மையில் உருக்கினால் என்றும் அழியாத முக்தி எனும் நெய் கிடைக்கும். மந்திர யோகத்தை இதை விட எளிமையாக கூறமுடியாது என எண்ணுகிறேன்.
மந்திர ஜெபம் செய்யும் முறை மிகவும் முக்கியமானது.
1. ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.
2. வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம் செய்தால் பலன் இல்லை.
3. 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.
4. க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.
5. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.
வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.
6. ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
7. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.
8. தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.
9. எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.
வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.
10. சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஜெபத்தால் ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை ஏற்படும். நோய் உள்ளவர்களுக்கு அருகில் இருந்து ஜெபம் செய்தால் அவர்களுக்கு உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். மேலும் மந்திர ஜெபத்தை பிறர் நலனுக்கு பயன்படுத்தினால் மிக வேகமாக செயல்படும்.
மந்திர சாஸ்திரத்தை பற்றி விவரித்து சொன்னால் பல விஷயங்களை கூறலாம். மதங்கள் சடங்குகளை கடந்த மெய் ஞானத்தின் திறவுகோலான மந்திர யோகத்தை குருவின் மூலம் பெற்று உள் நிலையில் பூரணத்துவம் பெறுவோம்.

1 comment:

  1. naan thangalin karuthukalai padithu thirupthi adainthen,aanal oru nalla guruvai naan enge theduvathu,appadi kidaikkatha samayathil naan evvaru manthirathai jebbam seyvathu,guru illai entral naan en vazhkkaiyil manthira jebbam seya mudiyatha,enakku vilakkamaga kooravum.

    ReplyDelete