Sunday, January 30, 2011

கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் யாவை?


கோவில்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் யாவை?

கோவிலுக்குச் சென்றால் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
1. நீராடாமலும் கை கால்களை சுத்தம் செய்யாமலும் சமயக்குறி இல்லாதும் செல்லக்கூடாது
2. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்
3. விளக்கேற்றும் பொழுதும் விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது
4. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக்கூடாது
5. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை இறைவனுக்கு அர்பணிக்கக் கூடாது
6. இறைவனின் மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனம் செய்யக்கூடாது
7. மணமில்லாத மலர்களை சமர்ப்பித்தலாகாது
8. கோவிலுள் குப்பை கூளம் இடலாகாது (வைத்தீஸ்வரன் கோவில் ஒரு குப்பை மேடாகவேகாட்சி தருகிறது)
9. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.
10. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லல் ஆகாது.
11. தரிசனம் முடிந்து திரும்பும் போது பகவானுக்கு முதுகுகாட்டி திரும்பக்கூடாது.
12. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக்கூடாது.
13. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தலாகாது. இறைவன் பிரசாதத்தை பிறர் கால்களில் படுமாறு கீழே பொடுவது நல்லதல்ல.
14. ஆடம்பரமற்ற தன்மை முற்றிலும் வேண்டும். சிலர் கோவில்களுக்கு செல்லும் போது தான் நிறைய நகைகளும் பட்டுப் புடவைகளும் அணிந்து தகதகவென்று செல்வார்கள். அதைத் தவிர்க்க வேண்டும்.
15. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு எரிக்கக் கூடாது.இவ்வாறு பெரியவர்கள் வழிகாட்டுகிறார்கள்.
இதில் சில விஷயங்களை சற்று விளக்கமாக பார்க்க வேண்டும்.
கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், லாகிரி வஸ்துக்களை உபயோகித்தல், சூதாடல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது. இவை மிகவும் முக்கியக கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.
தற்காலத்தில் கோவிலுக்கு வருபவர்களில் பலர் அங்கே கிடைக்கும் நேரத்தை நிறைய வம்பு பேச உபயோகப்படுத்துகிறார்கள். கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் கொஞ்சம் பெரிய கோவிலாகவும் அமைதியாகவும் இருந்தால் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடமாக மாறிவிடுகிறது.
ஓரமாக உட்கார்ந்திருந்தாலும் பரவாயில்லை. சிறு சன்னதிகளின் வாசல்களிலேயே சாமிக்கு முன்பாகவே கூட்டமாக அடைத்துக் கொண்டு பள்ளி மாணவர்கள் அமர்ந்து விடுவார்கள். நாம் சென்று சாமி கும்பிட்டால் என்ன இவன் நம்மைக் கும்பிடுகிறான் என்பது போல பார்த்து பிறகு போனால் போகிறது கும்பிட்டுப்போ என்பதுபோல ஒதுங்குவார்கள்.
இவ்வாறு நடந்து கொள்வதால் கோவில் என்ற மரியாதையும் பக்தி என்ற உணர்வும் குறைந்து போய்விடும். கோவிலுக்கு மரியாதை இல்லாமல் பொழுது போக்கு பூங்காவாக மாற்றி விட்டால் பக்திக்கு எந்த இடம் போவார்கள்? ஒரு இடத்திற்கு செல்லும் போது முதலில் நாம் என்ன உணர்வை பெறுகிறோமோ அதுவே நமது ஆழ்மனதில் பதிந்து விடும். பிறகு மீண்டும் அந்த இடம் செல்லும் போது அதே உணர்வு நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனால் தான் கோவிலுக்குச் சென்றால் அமைதியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பின் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றாலும் அமைதி நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனால் தான் இன்றும் பலருக்கும் கோவிலுக்குச் சென்று வந்தால் தான் மனது அமைதியாக இருக்கிறது என்று கூறுவார்கள். இந்த அமைதியான உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அனைவருமே கோவிலில் அமைதி காப்பதை தமது கடமையாகவே கொள்ள வேண்டும்.




No comments:

Post a Comment