நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!
கடவுளரின் மொழி
வளர்ந்து வரும் விஞ்ஞானத் துறைகளுள் ஒன்று மொழியியல் துறை! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்தத் துறை புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை உலகினருக்கு அறிவித்து வருகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று சம்ஸ்கிருத மொழியின் அதிசயம்! கடவுளரின் மொழி என்றும் தேவ நாகரி என்றும் அழைக்கப்படும் சம்ஸ்கிருதம் என்றால் சம்பூர்ணமான மொழி - perfect language - என்று பொருள்!
ஒலி அதிர்வுகளின் மகிமையை உள்ளுணர்வாலும் தவத்தாலும் அறிந்த மகரிஷிகள் ஒலி ஆற்றலைப் பயன்படுத்த சம்ஸ்கிருதமே சிறந்த கருவி என்று கண்டறிந்தனர். ''உண்மையைத் தேர்வோம்'' என நினைத்த அவர்கள் பயன்படுத்தியது சம்ஸ்கிருத மந்திரங்களேயாகும். உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று சம்ஸ்கிருதம்! எளிமையானது, தூய்மையானது, கடவுளின் படைப்பின் மகிமையை உணர்த்துவது. ஜோஸப் காம்பெல் சொன்னது போல உலகின் ஆன்மிகக் களஞ்சியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது இது.
அல்பெரூனி வியந்த புராணம்இந்தியா வந்த அல்பெரூனி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புராணங்களைக் கண்டு வியந்து ''அதில் எல்லாம் இருக்கிறது'' என்று அதிசயித்துக் கூறினார். 18 புராணங்களையும் வரிசையாகக் குறிப்பிட்டுள்ள அவர், தன்னால் மத்ஸ்ய, ஆதித்ய, வாயு புராணங்களின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க முடிந்தது என்று ஆதங்கப்படுகிறார்.
ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் சுலோகங்களில் அனைத்தும் அடக்கம்!
இனி 18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-
பிரம்ம புராணம் - சுமார் 13000 ஸ்லோகங்கள்
பாத்மம் - சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு - சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ - சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம் - சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் - சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் - சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம் - சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் - சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் - சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் - சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் - சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் - சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் - சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம - சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் - சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் - சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் - சுமார் 12000 ஸ்லோகங்கள்
ஆக, சுமார் 370548 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும் கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும் வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.
நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சில பதிப்புகளை வைத்தே இந்த கணக்கீடு உள்ளது என்பதால் அனைத்துப் பதிப்புகளையும் நன்கு ஆராய்ந்தால் சில ஆயிரம் ஸ்லோகங்கள் கூடுதலாகவும் இருக்கலாம். ஆக சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அறிவையும், இவ்வுலக வாழ் நெறிகளையும், மோட்ச வாழ் நெறிகளையும், மோட்ச மார்க்கத்தையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். இவற்றில் இல்லாதது வேறெங்கும் இருக்கப் போவதில்லை!
நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி !
ஆனால் இப்படிப்பட்ட மொழிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?எல்லா மொழிகளையும் தன் பயன்பாட்டிற்காக ஆராய்ந்த நாஸா சம்ஸ்கிருதம் ஒன்றே பூமியில் உள்ள ஒரே தெளிவான மொழி என்று கூறுகிறது. நாஸாவைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ் தனது நீண்ட கட்டுரையில் இதன் பெருமைகள் பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.
இதனுடைய இலக்கணம் பரிபூரணமானது. உலகெங்கும் உள்ள அறிஞர்களைத் தன் வசம் இழுத்துள்ளது. சமீபத்தில் கணினி விஞ்ஞானிகள் கணினி பயன்பாட்டிற்கான சிறந்த மொழி சம்ஸ்கிருதமே என்று அறிவித்துள்ளனர்!
வியக்க வைக்கும் மொழி அமைப்பு!
1984ம் ஆண்டு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் - AI- என்ற பத்திரிக்கை மெஷின் ட்ரான்ஸ்லேஷனுக்கு - இயந்திர மொழி பெயர்ப்பிற்கு சம்ஸ்கிருதம் சிறந்த இடை மொழியாக இருக்கிறது என்று அறிவித்தது. அதாவது ஜப்பானிய மொழியை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டுமென்றால் முதலில் ஜப்பானிய மொழியை சம்ஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்க வேண்டும்; பின்னர் அதை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கான காரணம் சம்ஸ்கிருத மொழியின் அமைப்பேயாகும். உதாரணத்திற்கு ஒரே ஒரு எளிமையான எடுத்துக்காட்டு.
லிஸா புஸ்தகம் படிக்கிறாள் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் லிஸா ரீட்ஸ் எ புக் (Lisa reads a book) என்று ஆகும். இதையே சம்ஸ்கிருதத்தில் கீழே கண்டபடி எப்படி எழுதினாலும் அர்த்தம் மாறுவதில்லை.
லிஸா புஸ்தகம் படதி
புஸ்தகம் லிஸா படதி
புஸ்தகம் படதி லிஸா
படதி புஸ்தகம் லிஸா
படதி லிஸா புஸ்தகம்
லிஸா படதி புஸ்தகம்
ஆறு விதமாக மேலே கண்டபடி எழுதினாலும் அர்த்தம் ஒன்றுதான்! ஆனால், ஆங்கிலத்தில் Lisa reads a book என்பதை A book reads Lisa என்பது அர்த்தத்தை விபரீதம் ஆக்கி விடும். ஒரு புஸ்தகம் லிஸாவைப் படிக்கிறது என்றால் எப்படிப்பட்ட விபரீத அர்த்தம்!
ஆகவே சம்ஸ்கிருதத்தின் இந்த ஒரே அமைப்பே கணிணி மொழிகளில் ஏராளமான நன்மைகளைச் செய்யும் போது அதன் இதர அமைப்பு முறைகள் அதை ஒப்பற்ற மொழியாக ஆக்குகின்றன. 4000 மூலச் சொற்களில் அனைத்தும் அடக்கம்!
லட்சக்கணக்கான சம்ஸ்கிருத சொற்கள் சுமார் 4000 மூலச் சொற்களிலிருந்தே பிறக்கின்றன என்றால் ஆச்சரியமாக இல்லை? இவையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலங்களால் ஆனவை. மூலத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டு அதன் அடிப்படை மூலங்களைப் பிரித்தால் வார்த்தையின் அர்த்தம் தானாகத் தெரிய வரும். இதனால் சம்ஸ்கிருத அகராதி 4000 மூலச் சொற்களுக்குள் அடங்கி விடும் அற்புதத்தைக் காணலாம்!
இயந்திரத் தகவல் தொடர்புக்கு பொருத்தமான ஒரு மொழியை விஞ்ஞானிகள் தேட ஆரம்பித்தனர். ஆங்கிலம் இதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை உணர்ந்த அவர்களின் கவனம் சம்ஸ்கிருதத்தின் பால் திரும்பியது. அதன் அமைப்பை உணர்ந்து அதிசயித்த அவர்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
ஒலி நுட்பம் உணர்ந்த பாணிணி!
வார்த்தையையும் அதன் ஒலியையும் ஆராய்ந்த பாணிணி அற்புதமாக சம்ஸ்கிருத இலக்கணத்தைச் செப்பனிட்டு உலகிற்கு ஈந்தார். யாக்ஞவல்ய ஸ்மிருதி வார்த்தையை உச்சரிக்கும் விதத்தை வர்ணிக்கும் போது எப்படி ஒரு புலி தன் குட்டியை வாயில் தூக்கிக் கொண்டு போகும் போது அதற்கு வலிக்காத படி அதைத் தூக்கிச் செல்கிறதோ அதே போல வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது!.
இந்த உச்சரிப்பை ஆராய்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி. சம்ஸ்கிருதத்தை நன்கு ஆராய்ந்த அவர் அது ஒரு பெர்ஃபெக்ட் லாங்வேஜ் - செம்மொழி என அறிவித்தார். அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றி சில சொற்சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.
உயிருள்ள மொழி!
சம்ஸ்கிருதம் இறந்த மொழி அல்ல. கர்நாடகத்தில் ஷிமோகாவிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாத்தூரில் கிரிக்கெட் மைதானத்தில் கூட சிறுவர்கள் சீக்ர தாவே (வேகமாக ஒடு) என்று சம்ஸ்கிருத மொழியில் பேசி விளையாடுவதைப் பார்க்கலாம். இங்குள்ள 5000 பேர் பேசுவது தாய் மொழியான சம்ஸ்கிருதத்தில்தான்!
இது மட்டுமின்றி மேலை நாடுகளில் ஏராளமான சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையங்கள் மூலம் சம்ஸ்கிருதம் பேசப்படுகிறது; பரப்பப்படுகிறது. இந்நிலையில் மெய்ஞான மொழியான சம்ஸ்கிருதம் கணினி விஞ்ஞானத்தால் ஆராயப்பட்டு தன் பழம் பெருமையை மீட்டு ஜொலிப்பதைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம். இதைப் பேணிக் காப்பது இதன் சொந்தக்காரர்களான நமது கடமை அல்லவா?
இதைப் போற்றுவோம்; காப்போம்!
No comments:
Post a Comment