பஞ்சாமிர்தம்
தமிழர் வழிபாட்டு முறைகளில் கோயில் வழிபாடு சிறப்புப் பெற்றது. இறை உருவங்களை பிரதிட்டை செய்து நாளாந்தம் வழிபடும் முறையில் ”அபிடேகம்” முதன்மையானது. அபிடேகத் திரவியங்களில் வரையறை செய்யப்பட்ட பொருட்களும் உள. அவை பல நூல்களில் குறிப்பிடப்ப ட்டுள்ளன. மரபான வழிபாடு நடைபெற்ற போது இவைபற்றிய கருத்து வேறுபாடுகளுக்கு இடமேற்படவில்லை. ஆனால் இன்று புலம்பெயர் வாழ்வியலும் பிறபண்பாட்டின் செல்வாக்கும் சில கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளன. அபிடேகத் திரவியங்களில் ஒன்றான பஞ்சாமிர்தம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள.
இறைவனுக்குரிய அபிடேகத் திரவியமாக பஞ்சாமிர்தத்தை இன்று யாவரும் ஏற்றுள்ளனர். ஆனால் அதை தயாரிக்கும் நிலையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. ஐந்து பொருட்களின் இணைவே பஞ்சாமிர்தமாகும். ”பஞ்ச” என்ற வடசொல் இதனைத் தெளிவாய் உணர்த்துகின்றது. இன்று அந்த ஐந்துக்கு மேற்பட்ட பொருட்களால் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. ஐந்து பொருட்களால்தான் தயாரிக்கப்பட வேண்டுமென்ற உணர்வுடனிருப்பவர்களும் வெவ்வேறு பொருட்களை பயன்படுத்துவதைக்காண முடிகின்றது. சிலர் ஐந்து பழங்களின் கலவையே பஞ்சாமிர்தமென்பர். வேறுசிலர் மா,பலா,வாழை, என்ற முக்கனிகளுடன் தேனும் நெய்யும் கலந்து தயாரிப்பதே பஞ்சாமிர்தமென்பர். கிரியைபற்றி விளக்கம் தருபவரும். மா,பலா,வாழை, மாதுளை, தேங்காய்த்துருவல் என்பன சேர்ப்பதே பஞ்சாமிர்தம் என விளக்கம் தருகின்றனர். இங்கு பழங்களோடு தேங்காயும் இணைக்கப்பட்டுள்ளது. இந்துசமய சொல்லகராதி (கோக்கலை ஜே. ராஜன் 1992ல்) ”பஞ்சாமுதம்” எனச் சொல்லை குறிப்பிட்டு வருமாறு விளக்கம் தருகின்றார்.
பஞ்சாமுதம் - பஞ்சாமிர்தம்
தேவர்களுக்குப் படைக்கப்படும் உணவு. சர்க்கரை, தேன், நெய்,
பால், வாழைப்பழம்,திராட்சை இவை கலந்து தயாரிக்கப்படுவது. இது
இறைவனுக்கு அபிஷேகத்துக்குப் பயன்படுகின்றது.
எனவே தற்காலத்தில் ”பஞ்சாமிர்தம்” பற்றிய ஆய்வு தோன்றியதற்கு இத்தகைய வேறுபட்ட கருத்துக்களே காரணமாகும். வழிபாட்டு மரபுகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. அதனால் பஞ்சாமிர்தம் பற்றிய தௌpவான விளக்கங்கள் தேவைப்படுகின்றது. முக்கனிகளான மா,,பலா, வாழை மூன்றும் அந்த ஐந்து பொருட்களில் சேருவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஏனைய இரண்டும் தேனும் நெய்யுமாக அமைவதே சாலப் பொருந்தும். தேனும் நெய்யும் மனித உடலுக்கு மிகவும் நன்மையானவை. நெய், தேன் பலநோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகின்றது. "நெய்யுரிக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போமேபிணி" என்று பழையபாடற் பதிவொன்று அதன் சிறப்பை சொல்கிறது. எனவே நம்நாட்டின் மரபான பழங்களான மா, பலா, வாழையுடன் தேனும் நெய்யும் சேர்ந்தகலவையே நீண்ட ஆயுளைத் தரும் பஞ்சஅமிர்தமாகும். இதுவே இறைவனின் அபிடேகப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்பதே முடிவாகும்.
No comments:
Post a Comment