Monday, February 14, 2011

சண்டேசுரநாயனார்

சண்டேசுரநாயனார் புராணம்

வேதமலி சேய்ஞ்ஞலூ ரெச்ச தத்தன்
விளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர்
கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே
கொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்
றாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்
தாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்
காதிமலர்த் தாமமுயர் நாமமுண்ட
கலமகனாம் பதமருளாற் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன், இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் வேதாங்கங்களையும் சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயர்கள் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்து, தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.
பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் அநாதிமலபெத்தர் என்பதும், நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் பொருட்டுச் சிருட்டிதிதி சம்காரம் திரோபவம் அநுக்கிரகம் என்கின்ற பஞ்ச கிருத்தியங்களையும் செய்வாராகிய ஒருபதி உண்டு என்பதும், அப்பதிக்குத் தம்வயத்தராதல், தூயவுடம்பினராதல், இயற்கையுணர்வினராதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல்; பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எட்டுக்குணங்களும் இன்றியமையாதன என்பதும், அக்குணங்களெல்லாம் உடைய பதி சிவபெருமானே என்பதும், அவர் அத்தொழில் இயற்றுதல் தம்மோடொற்றுமையுடைய சிவசத்தியாலாகும் என்பதும், அதுபற்றி அவ்விருவருமே நமக்குப் பரமபிதா மாதாக்கள் என்பதும், அதனால் அவர்களிடத்தேயே நாம் அன்புசெய்யவேண்டும் என்பதும் அவ்வன்பை மற்றோர் பிறவியில் செய்குவமெனின் அதற்குக் கருவியாய்ச் சிறந்துள்ள இம்மானுடப்பிறவி பெறுதற்கரியது என்பதும், அப்படியாகில் இப்பிறவியிற்றானே இன்னுஞ்சிலநாட் சென்றபின் செய்குவமெனின் இப்பிறவி நீங்குமவதி அறிதற்கரியது என்பதும், அங்ஙனமாகையால் அவ்வன்பு செய்தற்கேயன்றி மற்றொன்றிற்கும் சமயமில்லை என்பதும், அது செய்யுமிடத்தும் நமக்கு ஓர்சாமர்த்தியமுளதெனக் கருதி அதனை முன்னிடாது திருவருளையே முன்னிட்டு நின்று செய்ய வேண்டும் என்பதுமே வேதாகம முதலிய நூல்களெல்லாவற்றானும் துணியப்படும் மெய்ப்பொருள் என்று சந்தேகவிபரீதமறத் துணிந்து கொண்டார். அந்த யதார்த்தமாகிய துணிவு தோன்றவே, அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.
ஒருநாள் அவர் தம்மொடு அத்தியயனஞ் செய்கின்ற பிள்ளைகளோடும் அவ்வூரவர்களுடைய பசுநிரைகளுடன் கூடிச்சென்றபொழுது, ஓரீற்றுப்பசு ஒன்று மேய்ப்பானாகிய இடையனைக் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான் மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதை பதைப்போடும் அவன் சமீபத்திற்சென்று, மகாகோபங்கொண்டு, பின்னும் அடியாதபடி அவனைத் தடுத்து நின்று, பசுக்கள் சிவலோகத்தினின்றும் பூமியில் வந்த வரலாற்றையும், அவைகளின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருத்தலையும், அவை தரும் பஞ்சகவ்வியங்கள் சிவபிரானுக்கு அபிஷேகத் திரவியமாதலையும், சிவசின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும் சிந்தித்து, அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்கும்படி விரும்பி, அவ்விடையனை நோக்கி, "இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்" என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான்.
விசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும், தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார்.
இப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன. பிராமணர்கள் நித்திய ஓமாகுதியின் பொருட்டு விட்டிருக்கின்ற தங்கள் பசுக்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கியபின் முன்னிலும் அதிகமாகக் கறக்கக்காண்கையால் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். பசுக்கள் எல்லாவகை யுபசரிப்பினாலும் அளவிறந்த களிப்பை அடைந்து, வீட்டிலே கட்டப்பட்டிருக்கின்ற தங்கள் கன்றுகள் பிரிந்தாலும் சிறிதும் வருத்தமுறாதவைகளாகிய, மிகுந்த அன்போடு தங்களைமேய்க்கின்ற விசாரசருமர் சற்றாயினும் பிரிவாராகில் அப்பிரிவாற்றாமல் தாய்போல உருகி, அவர் சமீபத்திலே சென்று கனைத்து, மடிசுரந்து ஒருவர் கறக்காமல் தாமே பால்பொழியும். அது கண்ட விசாரசருமர் அப்பால் பரமசிவனுக்குத் திருமஞ்சனமாந் தகுதியுடைமை நினைந்தார். நினையவே அவருக்குச் சிவார்ச்சனையினிடத்தே பேராசை தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையிலிருக்கின்ற ஒரு மணற்றிட்டையிலே திருவாத்திமரத்தின் கீழே மணலினாலே ஒரு சிவலிங்கங்குவித்து, திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் வகுத்து, திருவாத்திப்பூ முதலிய புஷ்பங்களும் பத்திரமும் பறித்துத் திருப்பூங்கூடையிலிட்டுக்கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிய குடங்களைத் தேடி வாங்கிக் கொண்டு வந்து, கறவைப் பசுக்கள் ஒவ்வொன்றினிடத்திலும் சென்று, முலையைத் தீண்டினார். அவைகள் கனைத்துப் பாலைப்பொழிந்தன. பாலினாலே நிறைவுற்ற அக்குடங்களைக் கொண்டுபோய் ஆலயத்திலே வைத்துப் பத்திரபுஷ்பங்களால் சுவாமியை அருச்சித்து, பாலினால் அபிஷேகஞ்செய்தார். பரமசிவன் அவ்விலிங்கத்தினின்று அவ்விசாரசருமர் அன்போடு செய்யும் அருச்சனையைக் கொண்டருளினார்; விசாரசருமர் சிவபூசைக்கு அங்கமாகிய திருமஞ்சனம் முதலிய பொருள்களுள், கிடையாதவைகளை மானசமாகக் கிடைத்தனவாகக் கொண்டு நிறைவு செய்து, விதிப்படி அருச்சித்து வணங்கி வந்தார். பசுக்கள் அபிஷேகத்தின்பொருட்டு இவ்விசாரசருமர் கொண்டு வரும் குடங்கள் நிறையப் பாலைச் சொரிந்தும், பிராமணர்க்கும் முன்போலக் குறைவுதீரப் பாலைக் கொடுத்துவந்தன.
இப்படி நெடுநாளாகப் பார்ப்பவர்களுக்கு விளையாட்டுப் போலத் தோன்றி சிவார்ச்சனையைச் செய்து வரும்பொழுது, அதைக்கண்ட ஒருவன் அதின் உண்மையை அறியாதவனாகி, அதை அவ்வூர்ப்பிராமணர்களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அதைச் சபையாருக்குத் தெரிவிக்க; சபையார் எச்சத்தனை அழைத்து, "பிராமணர்கள் ஓமாகுதியின் பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் உம்முடைய புத்திரனாகிய விசாரசருமன் அன்புடனே மேய்ப்பவன் போலக் கொண்டு போய்ப் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிந்து விளையாடுகின்றான்" என்றார்கள். எச்சதத்தன் அதைக் கேட்டுப் பயந்து, "சிறுபிள்ளையாகிய விசாரசருமன் செய்கின்ற இந்தச் செய்கையை இதற்குமுன் நான் சிறிதாயினும் அறிந்திலேன். அக்குற்றத்தை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்" என்று குறையிரந்து வணங்கி, "இனி அவன் அப்படிச் செய்வானாயின், அக்குற்றம் என்மேலதாகும்" என்று சொல்லி அச்சபையாரிடத்திலே அநுமதி பெற்றுக்கொண்டு, வீட்டுக்குப் போய் விட்டான்.
மற்றநாட்காலையில் அந்தச் சமாசாரத்தைச் சோதித்தறிய விரும்பி, விசாரசருமர் பசு மேய்க்கப்போனபின்பு, அவர் அறியாதபடி அவர்பின்னே சென்றான். விசாரசருமர் பசுக்களை ஓட்டி மண்ணியாற்றின் மணற்றிட்டையிலே கொண்டுபோனதைக்கண்டு, எச்சதத்தன் அருகில் இருந்த ஒருகுராமரத்தில் ஏறி அங்கே நிகழ்வதை அறியும்படி ஒளிந்திருந்தான். விசாரசருமர் ஸ்நானம் பண்ணி, முன் போல மணலினாலே திருக்கோயிலுஞ் சிவலிங்கமுஞ்செய்து, பத்திரபுஷ்பங்கள் பறித்துக்கொண்டுவந்து வைத்து, பின்பு பாற்குடங்களைக் கொண்டுவந்து தாபித்து, அருச்சனைக்கு வேண்டிய பிறவற்றையும் அமைத்து, மிகுந்த அன்பினோடு பூசைக்கு ஆரம்பித்து, சிவலிங்கத்துக்குப் பத்திரபுஷ்பங்களைச் சாத்தி, பாற்குடங்களை எடுத்து அபிஷேகம் பண்ணினார். குராமரத்தில் ஏறியிருந்த எச்சதத்தன் அதைக் கண்டு, மிகுந்த கோபங்கொண்டு சீக்கிரம் இறங்கிப்போய்த் தன் கையிலிருந்த தண்டினால் அவ்விசாரசருமருடைய திருமுதுகிலே அடித்துக் கொடுஞ் சொற்களைச் சொல்ல; அவருடைய மனம் பூசையிலே முழுவதும் பதிந்து கிடந்தபடியால் அது அவருக்குப் புலப்படவில்லை பின்னும் எச்சதத்தன் கோபங்கொண்டு பலமுறையடிக்க; விசாரசருமர் அவ்வடியாலாகிய வருத்தந் தோன்றிப் பெறாதவராகி, அபிஷேகத்திருத் தொண்டினின்றுந் தவறாதிருந்தார். அவருடைய உள்ளன்பை அறியாத எச்சதத்தன் மிகக் கோபித்துத் திரு மஞ்சனப் பாற்குடத்தைக் காலினால் இடறிச் சிந்தினான். உடனே விசாரசருமர் அதைக்கண்டு, அது செய்தவன் பிதாவும் பிராமணனும் குருவுமாகிய எச்சதத்தனென்ன்பதை அறிந்தும், அவன் செய்தது அதிபாதகமாகிய சிவாபராத மாதலால், அவன் காலைத் துணிக்கக்கருதித் தமக்குமுன் கிடந்த ஒரு கோலை எடுக்க. அது மழுவாயிற்று. அதினாலே அவன் கால்களை வெட்டினார். சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர் முன்போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றியருளினார் விசாரசருமர் அது கண்டு மனம்களிந்து விழுந்து நமஸ்கரித்தார். பரமசிவன் அவரை தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, "நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச்செய்து; அவரை அணைத்து, அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார். சிவபிரானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று. பரமசிவன் அவரை நோக்கி, "நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக்கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்" என்று திருவாய்மலர்ந்து, தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார். அவ்விசாரசருமர், சமஸ்தரும் ஆரவாரிக்கவும், எவ்விடத்தும் புஷ்பமழைபொழியவும், சிவகணங்கள் பாடியாடிக் களிகூரவும், வேதங்கள் கோஷிக்கவும், நானாபேதவாத்தியங்கள் முழங்கவும், சைவசமயம் நிலை பெறும்படி பரமசிவனைக் கும்பிட்டு. அவராலே தரப்பட்ட சண்டேசுரபதத்தை அடைந்தார். எச்சதத்தர் சிவத்துரோகஞ்செய்தும், சண்டேசுரநாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.









No comments:

Post a Comment