Wednesday, February 2, 2011

இந்து மதம் – கேள்வி பதில்

இந்து மதம் – கேள்வி பதில்
1. பகவத் கீதையின் காலம் எது? மகாபாரதத்தின் காலம் எது? பகவத்கீதை மகாபாரதத்தில் ஒரு இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்கிற பேச்சு நிலவுகிறதே உண்மைதானா? இதற்குச் சாத்தியம் உள்ளதா? மகாபாரதம் கி.பியில் தான் உருவாக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்களே, உண்மையா?
பதில் : பகவத் கீதையின் காலம் குறித்து பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. மகாபாரதத்தில் விவரிக்கப்படும் தொடர்ச்சியான நிகழ்வுகள், தத்துவங்களுடன் கீதையும் வருகிறது. இடைச்செருகல் என்றால் தனித்துத் தெரியும். எனவே அது இடைச்செருகல் இல்லை.
கி.பிக்கு எல்லாவற்றையும் தள்ள முற்படுவது, Creationism கொள்கையின் ஒரு பகுதி. இவர்களது நம்பிக்கையின்படி கடவுள் தூங்கி, விழித்து உலகை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் படைத்தார். படைத்துவிட்டு பின்பு மீண்டும் ஓய்வெடுத்தார் என்பது. இவர்கள் உலக வரலாற்றை இந்த பைபிள் கதையுடன் தொடர்புபடுத்தி, அதிலிருந்து உலகத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்க முற்படுகின்றனர். இதன் நீட்சியே இந்த கி.பி கட்டுக்கதைகள்.
“காலனிய இந்தியவியலாளர்கள் இந்து வேதங்களை புராணங்களை கால மதிப்பீடுசெய்யும் போது அவர்களது கலாச்சாரத்தில் நிலவி வந்த படைப்புவாதம்Creationism) என்கிற (இது இன்று அறிவியலால் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது) கோட்பாட்டின் படி உலக வரலாற்றை எடை போட்டார்கள். வில்லியம்ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வேதங்கள் நோவாவின் பிரளயத்துக்குபின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென கருதினார்கள். எனவே கிமு 1200 இல்
வேதங்கள் எழுதப்பட்டதாக கருதினார்கள். இதன் கணக்கில் இதிகாசங்களின்காலமும் பின்னால் தள்ளப்பட்டது. எனவே நாம் இவற்றை ஏற்க முடியாது.வானவியல் தரவுகளின் அடிப்படையில் நர்ஹரியாச்சார் எனும் மெம்பிஸ்பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கிமு 3000 இல் நிகழ்ந்த நிகழ்வுகளின்அடிப்படையில் மகாபாரதம் எழுந்திருக்கலாம் என்கிறார். ஆனால் மகாபாரதம்எழுதப்பட்ட காலகட்டம் மகாபாரத நிகழ்வுக்கு சில தலைமுறைகளுக்கு பிறகாகஇருக்கலாம் என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ” [அரவிந்தன் நீலகண்டன்]
கி.முவிலான கிருஷ்ண வழிபாடு பற்றிய சான்றுகள் உலகின் பல பாகங்களின் கிடைக்கின்றன. இன்றைய ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலைகள், அர்மீனியாவில் இன்னமும் இருக்கும் பண்டைய இந்துக்கோவிலின் மீதமுள்ள பாகங்கள், இந்த தொன்மைக்கு சான்றாக நிற்கின்றன.
“கிருஷ்ணர் – அவர் ஒரு ஞானி என்பது உபநிடதக்காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று . (பௌத்தத்துக்கு முந்தையது என நிரூபிக்கப் பட்ட சாந்தோக்ய உபநிடதத்திலேயே

கிருஷ்ணன் என்கிற ஞானி பேசப்படுகிறார்.கிருஷ்ண வழிபாடு குறித்து கிமுவிலான கிரேக்க சான்றுகளே உண்டு:
02. ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன?
பதில் : ஸ்ருதி – நிலையானது. ஸ்மிருதி – காலத்துக்கேற்ப மாறுவது. ஸ்ருதி – அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும், ஸ்மிருதி – அந்த தத்துவங்களையொட்டி காலத்துக்கேற்ப ஏற்படுத்தப்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக்காலத்துக்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. ஸ்ருதியாக வேதங்கள், உபநிஷத்துகள் இருக்கின்றன.

03. கிருஷ்ண துவைபாயண வியாசன் என்பவர் யார்?
பதில் :
“கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அது வியாசன் என்ற கிருஷ்ணன் துவைபாயனனால் இயற்றப்பட்டது என்று கொள்ளுவது அறிவுலக வழக்கம். கிருஷ்ண துவைபாயனன் மகாபாரதத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். அவர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பிதாமகன். கிருஷ்ணனுக்கு மிகவும் வயதில் மூத்தவர். அவர் பாரதபோர் முடிந்த பிறகு மகாபாரதத்தை எழுதினார் என்பது ஒரு காவிய உருவகம். ஆனால் மகாபாரதம் அதன்பிறகும் பல தலைமுறைக்காலம் நீண்டு ஜனமேஜயன் காலகட்டம் வரை வருகிறது. அப்படியானால் கிருஷ்ண துவைபாயன வியாசன் எத்தனைகாலம் வாழ்ந்தார் – நம் புராணமரபின்படி அவர் மரணமற்றவர் சிரஞ்சீவி. அதை அப்படியே ஏற்பது ஒரு வழி. தர்க்கபூர்வமாக பார்த்தால் வேறுசில ஊகங்களுக்கு வரமுடியும்.”
04. பதஞ்சலி யோகத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆன்மிகத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்கிறார்களே. பதஞ்சலி யோகம் என்பதுதான் என்ன? உண்மையில் அதற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லையா?
பதில் : இந்து மதத்தின் சுதந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களின் கூற்று இது. பதஞ்சலி யோகம், இந்து மதம் அளிக்கும் ஆன்மீக சுதந்திரத்தின் விளைவாக உள்ளாழ்ந்து ஆன்மீக வழிமுறைகளை, பயிற்சிகளை கண்டு அதை தொடந்து வாழையடிவாழையாக மேம்படுத்திய ஒரு பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடு. பதஞ்சலியின் யோகமுறைகள், தந்திர சாஸ்திரம், அந்த யோக முறைகளின் அடிப்படையில் எழுந்த ஆலய வழிபாடு என்று ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட முறைகள் இந்து மதத்தின் பல்வேறு அங்கங்களாக இருக்கின்றன.
இவற்றிலிருந்து யோகத்தை மட்டும் பிரித்தெடுத்து அதற்கு தனியே வர்ணம் பூசி, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முற்படுவது அப்பட்டமான அபகரிப்பு. நமது மஞ்சளை, மூலிகைகளை, பல தலைமுறைகளாக பயிற்சி செய்து கண்டுபிடித்த வைத்திய முறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்து, மார்கடிங் செய்து லாபம் ஈட்டி அந்த பொருளாதார வலுவால் பூர்வகுடிகளை அழிப்பதுபோல, சில அந்நிய மதங்கள் உலகெங்கும் பூர்வகுடி மதங்களின் கடவுள்களை, வழிபாட்டு முறைகளை அபகரித்து அந்த அபகரித்த ஆன்மீக முறைகளை தமதாக்கி அவற்றின் மூலமே பூர்வகுடி வழிபாட்டு முறைகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கின்றன. இந்த அபகரிப்பு முறையின் ஒரு பகுதியே இந்து மதத்திலிருந்து யோகத்தை பிரிக்க முயலும் முயற்சிகள்.

05. திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது?

பதில் : இது குறித்து திரு.ஜடாயு, விரிவான பதிலை*நீதி, தர்மம், திருவள்ளுவர்,
சமணம்* என்ற பதிவில் எழுதியுள்ளார். அதில், இது குறித்து ஜாவா குமார் எழுதி பிரசுரமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஆதாரபூர்வமான கட்டுரையும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

06. ஹிந்துத்துவம் என்பது என்ன?
பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

07. ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.
08. கடவுள் மேல் பற்றில்லாதவன் ஹிந்துவாக இருக்கமுடியாதா?

பதில் : இருக்கலாம். இந்து மதம் தரும் எல்லையில்லா சுதந்திரத்திற்கு இன்னுமொரு அடையாளம் இது. மற்ற மதங்களில் கடவுள் மற்றும் கடவுளின் தூதராக, மகனாக தங்களை சொல்லி மதத்தை உருவாக்கியவர்களை நம்பாதவர்கள், பற்றாதவர்கள் அந்த மதத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் அப்படி எந்த தடையும் இல்லை. இயல்பாக இருக்கும் எவரும் இந்துவே.

09. ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

10. சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

11. பாரதி ஒரு இந்துத்துவ தீவிரவாதி என்று ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் கூற, இன்னொரு எழுத்தாளர் ஆதரிக்கவும் செய்கிறாரே? பாரதி உண்மையில் ஒரு தீவிரவாதியா?
பதில் : இந்துத்துவம் பற்றி மேலே கொடுத்துள்ள விளக்கத்தை படித்தால் இந்த கேள்வியே எழாது. பாரதி தீவிரமானவர். பாரதி உறுதியாக தம்மை இந்துவாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தொடர்ந்து வரும் யோகிகளின் பரம்பரையில் வந்தவராக தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்து சமூகத்தை சீர்படுத்த, மேம்படுத்த இடையறாது சிந்தித்து உழைத்தவர்.
12. இந்து மதத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் இடைச்செருகல்கள் என்கிறார்களே? (உ.ம்: திருக்குறள், கீதை, யோகம்) இதை ஒரு வளர்ந்து விட்ட எழுத்தாளர் திருவள்ளுவர் எழுதும்போது அருகிலிருந்து பார்த்தது போலவும், பெரிதும் மதிக்கப்படும் ஆழ்வார் ஒருவரைப் பைத்தியம் என்றும் எழுத,இன்னொரு எழுத்தாளர் ‘ஒரு எழுத்தாளருக்கு எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது’ என்றும் கூறுகிறார்களே? அப்படி அவர் எழுதுவதைப் படித்து உள்ளம் கொதித்துக் குமுறும் அன்பர்களின் கூக்குரல்,எழுத்தாளரின் புனைவை விட சகிக்க முடியாத ஒன்று என்றும் எழுத்தாள அன்பர்கள் மனம் நொந்து கொள்கிறார்களே?
பதில் : மேலே பதஞ்சலியோகம் பற்றிய கேள்விக்கான பதிலை பாருங்கள். அதிலேயே இதற்கான பதிலும் இருக்கின்றது.
13. கிருஷ்ணர் ஒரு யாதவ குல அரசன் என்றும், அதை வெளி உலகிற்குத் தெரியாமல் சிதைத்துப் பிற்காலத்தில் மகாபாரதம் என்ற ஒன்றை எழுதி அதில் அவரைக் கடவுளாக்கி விட்டார்களாமே?
பதில் : யாதவ குல அரசன் என்றுதானே மகாபாரதம் தெரிவிக்கிறது?இது குறித்த கீழ்க்காணும் கட்டுரைகள் பல விஷயங்களை தெளிவுபடுத்தும்:
ஜடாயு – கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன்

பாமரத்தனம்

அரவிந்தன் நீலகண்டன் – கண்ணன் எனும் தமிழர் கடவுளும் ஆனந்தவிகடனும்

14. புராணங்கள் உண்மையா பொய்யா?
பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

15. சுவர்க்கம், நரகம் என்பது என்ன?
பதில் : நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.
ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி – மத பாகுபாடெல்லாம் கிடையாது.

மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.

எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் – நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.

16. புண்ணியம் – பாவம் என்பது என்ன?
பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது -


श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥
ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம்

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம்

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”
17. தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.
18. ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?
பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

19. நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா?

பதில் : ஓ தாராளமாக. அப்படி மாறிய பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனரே. சாகர்களிலிருந்து, ஹூனர்களிலிருந்து ,யவனர்களிலிருந்து, இன்று மதம் மாறும் இஸ்கான்(ISKCON) வெள்ளைக்காரர்கள் வரை எத்தனையோ கோடி நபர்கள் சரித்திரமெங்கும் இந்துக்களாக மாறி இருக்கின்றனர்.

20. சோதிடம் உண்மையா?
பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

21. “சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.



22. தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

23. ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?
பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

24. ஜாதிகளைப் பற்றி வரலாறு உண்டா? உண்மையில் ஜாதிகள் எப்படி தோன்றின?
பதில் : இந்து மதத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமே ஜாதிகள். பல குழுக்கள் தத்தமது கலாச்சாரங்களை பின்பற்ற முனைகிறபோது இந்து மதம் அந்தக்கலாச்சாரங்களை அழிக்க முயல்வதில்லை. அதனாலேயே ஜாதிகள் எழுந்தன. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்பது தேவைதானா என்பது நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

25. வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன?
பதில் : வர்ணம் வேறு, ஆசிரமம் வேறு. ஒருவரின் இயல்பு – தேர்வு – விருப்பத்திற்கேற்றவாறு செயல்புரிவது வர்ணம், ஆசிரமம்.
வேதகால சமூகத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வெறும் வித்தியாசமான பாதைகளாகவே இருந்தன. உயர்வு தாழ்வு இல்லை. ஒரே குடும்பத்திலிருந்து தமது விருப்பத்திற்கேற்றவாறு பல வர்ணங்களை சார்ந்திருந்தார்கள். ஆன்மீக நாட்டமுடையவன் அந்தணன் ஆனான் என்பதை வேதகாலத்திற்குப் பிறகும் காண்கிறோம். இன்றும் பழைய இந்துமதத்தைப் பின்பற்றும் பாலித்தீவு ஹிந்துக்களிடையே இப்படிப்பட்ட முறையே காணப்படுகிறது. அங்கே வர்ணங்கள் நான்கும் இருந்தாலும், உயர்வு தாழ்வு இல்லை, மணவுறவுக்கு இந்த வர்ணங்கள் தடையாயில்லை.
அதே போல,வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரமங்களை அன்று மனிதர் ஏற்றனர். படிக்கிற காலத்தில் மாணவனாகவும், மணம் புரிந்து பொருளீட்டிய காலத்தில் இல்லறமென்னும் ஆசிரமத்திலும், அதற்குப் பிறகு வனப்பிரஸ்தம் என்ற நாடோடி-சிந்தனையாளன் நிலையிலும், கடைசியாக அனைத்தின் மீதும் உள்ள பற்றைத் துறந்து, துறவறம் மேற்கொள்வன் அதற்குரிய ஆசிரமமான சந்நியாச ஆசிரமத்தை சார்ந்தவனாக காணப்படுகிறான்.
ஆனால், தோற்றங்கள் எப்படி இருந்தாலும் ஜாதிகளைப் போலவே இவையும்(வர்ணம்+ஆசிரமம்) இன்றைய காலகட்டத்தில் தேவையா என்பது நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

25. ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும் நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா? கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்த வேண்டும்? அதனால் பயன் என்ன? அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு உதவினால் என்ன?

பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிட கோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறது என்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா




No comments:

Post a Comment