Monday, February 14, 2011

அரிவாட்டாயநாயனார்

அரிவாட்டாயநாயனார் புராணம்

தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்
தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்
றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்
துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை

யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த
வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே
மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி
வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார். செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.
இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார். இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது" என்று துக்கித்து, "இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார். அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வ்ந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் "இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று.



No comments:

Post a Comment