Monday, February 14, 2011

விறன்மீண்டநாயனார்

விறன்மீண்டநாயனார் புராணம்


விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை
விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்
வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்

வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட
துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்
சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட
வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண
லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.
மலைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாகிய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, "அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள்ள சங்கம பத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கள் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் மிகமகிழ்ந்து, "இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது" என்று அருளிச் செய்தார். இந்தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனார் அவ்விறன்மிண்டநாயனாரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங்களுக்குத் தலைவராக்கியருளினார்.





No comments:

Post a Comment