Sunday, September 1, 2013

கண்ணன் சிறப்பு தகவல்கள்

கண்ணனின் ஆபரணங்கள் :

பெருமாள் சிலையை 'திவ்ய மங்கள விக்ரகம்' என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் `திருவபிடேகம்' எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, `நூபுரம்' என்று பெயர். பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்பே, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

விஷ்ணுகிராந்தி :

வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி `விஷ்ணுகிராந்தி' இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

தீராத விளையாட்டு பிள்ளை : 

கண்ணன் செய்த லீலைகள் கணக்கில் அடங்காது. வெண்ணெய் உண்டது. தயிரைத் திருடியது. பூதனையைக் கொன்றது. கன்று மேய்த்தது. காளிங்க நர்த்தனம் செய்தது. உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது. பிருந்தாவனத்தில் கோபிய ரோடு ஆடியது, ஹம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார். இதனை கண்ணன் பாட்டில், "தீராத விளையாட்டுப்பிள்ளை கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை'' என்று பாரதியார் நகைச்சுவையுணர்வோடு பாடியிருக்கிறார்.

பணமில்லாமல் பசுதானம் :

`கோவிந்தா' என்று சொன்னால் `போனது வராது' என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், `பணம்' கோவிந்தா தானாப என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.

இதை `கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது `கோ' என்றால் `பசு' `இந்தா' என்றால் `வாங்கிக்கொள்' என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

பெயர் அர்த்தம் :

கிருஷ்ணா என்றால் காந்தம் போன்று ஈர்ப்பவன் அல்லது வசீகரிப்பவன் என்று பொருள். வாசுதேவன் என்றால் நிலைப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை கொண்டவன் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் இவற்றில் எந்த தெய்வம் காத்தலை செயல்படுத்துகின்றதோ அதுவே வாசுதேவன்.

சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

பஜகோவிந்தம் :

கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் "பஜகோவிந்தம்'' பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

16 ஆயிரம் மனைவிகள் :

ருக்மணிதான் கிருஷ்ணனின் பட்டத்து ராணி. மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா. இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட ப்ரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே ப்ரக்ருதியின் 8 பகுதிகள்.

இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

கோவிந்தா :

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்'', "பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

வாழ்ந்த ஆதாரம் :

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது.

மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

No comments:

Post a Comment