Thursday, March 6, 2014

ஒரு ஆதர்ச குடும்பம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு சிவபெருமானின் குடும்பத்தைத் தவிர வேறு சிறந்த உதாரணம் கிடைப்பது அரிது!

ஒரு ஆதர்ச குடும்பம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு சிவபெருமானின் குடும்பத்தைத் தவிர வேறு சிறந்த உதாரணம் கிடைப்பது அரிது! நாம் இருவர், நமக்கு இருவர்! என்ற கோட்பாட்டைவலியுறுத்துவது போல பார்வதி பரமேசுவரனுக்கு, கணசேன், முருகன் என்று இரண்டே பிள்ளைகள்! மொத்தம் நான்கு பேரே கொண்ட அந்தக் குடும்பத்திற்குள் தான் எத்தனை எத்தனை முரண்பாடுகள்? குடும்பத் தலைவரா பிறைசூடிய பித்தன், பார்க்கப்போனால் ஒரு போதை விரும்பி! அவர் அணியும் ஆடைகளோ (புலித்) தோலாடைகள்! வசிப்பதோ சுடுகாடுகளில்! பிசாசுகளும், பூதகணங்களும் அவருடைய தோழர்கள். மண்டையோடுகளையும், விஷப்பாம்புகளையும் வேறு ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கிறார். உடம்பு முழுவதும் சாம்பலைப்(நீறு) பூசித் திரிகிறார். உடுக்கையடித்துக் கொண்டு தாண்டவமாடுகிறார்.

நந்தி என்ற காளை மாட்டை வாகனமாக்கி வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய இல்லத்தரசி பார்வதியோ அவருக்கு நேர் எதிர்! முத்துகளும் வைரங்களும் இழைத்த நகைகளை அணிந்து, அழகு சொட்ட காட்சியளிக்கிறாள். கையில் ஆயுதங்களையும் வைத்திருக்கிறாள். அலங்கோல ஆடைகளுடன் அவளை எப்போதுமே பார்க்க முடியாது. தங்கச் சரிகைக் கரை போட்ட பட்டுச் சேலைகளைத்தான் அணிந்துகொள்கிறாள். சிங்கத்தைத் தன் வாகனமாகக் கொண்டு சிம்ம வாஹினி என்று பெயர் பெற்று விளங்குகிறாள். இவர்களுடைய மூத்த பிள்ளை விநாயகரோ, பெரிய ஞானக் களஞ்சியம்! ரித்தி-சித்தி கொடுக்கக்கூடியவர். விக்னங்களை (தடைகளை) நீக்கும் விக்னேசுவரர். தீராப்பசி கொண்டவர். லட்டு மோதம் என்றால் உயிர். இவருக்கு வாகனம் சுண்டெலி. இளைய பிள்ளை முருகனோ, அசுரர்களை வதம் செய்வதற்கென்றே பிறந்தவன். போர் என்றாலே பூரித்துப் போவான். தேவர்களுக்கு சேனாதிபதி எப்போதும் வெற்றி வாகை சூடியே பழக்கப்பட்டவன். அவனுக்கு வாகனம் மயில்.

இந்த நான்கு பேருடைய வாகனங்களுக்கும், வாழ்க்கை முறைகளுக்கு மிடையில்தான் எத்தனை முரண்பாடுகள்? எத்தனை வேறுபாடுகள்? எத்தனை பகைமைகள்? பரமசிவனின் வாகனம் மாடு என்றால், பார்வதியின் வாகனம் சிங்கம் அதற்குப் பகை! முருகனின் மயிலுக்கும், தந்தையின் ஆபரணமான பாம்புக்கும் ஜென்ம விரோதம். விநாயகரின் வாகனமான எலியோ, பாம்பின் இயற்கையான இரை. போதை விரும்பி கணவன், சித்தன் போக்கு சிவன் போக்கு என்றிருப்பவன் மனைவியோ ஏகப்பட்ட நகைகளையும் தங்கச்சரிகை போட்ட சேலைகளையும் அணிந்து அழகு பார்ப்பவள். ஒரு பிள்ளை பிரமஞானி, ஆனால் போஜனப் பிரியன். மற்றொருவன் போர்வீரன். இத்தனை முரண்பாடுகளுடன் நால்வரும் கயிலையிலேயே ஒன்றாகத்தானிருக்கின்றனர். இருந்தும், சிங்கம் நந்தியைத் தாக்குவதில்லை. பாம்பு மயிலைப் பார்த்து அஞ்சுவதில்லை. எலியைப் பாம்பு விழுங்குவதில்லை!

மனைவி(பார்வதி) எப்போதுமே கணவனைக் குறை கூறுவதில்லை. அவருடைய பழக்கவழக்கங்களைப் பற்றி விமர்சிப்பதோ, எள்ளி நகையாடுவதோகூட இல்லை. ஐயா சுவாமி! இந்த கஞ்சா பழக்கத்தை விட்டொழியுங்கள்! சர்வேசுவரனா, லட்சணமா போய்க் குளித்துவிட்டு, நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்! இதென்ன பாம்புகளை கழுத்தைச் சுற்றி வைத்துக் கொண்டு! தூக்கி எறியுங்கள். பூதகணங்களின் சகவாசத்தை விட்டொழியுங்கள்! வீட்டிற்குள் சிவனே என்று அமைதியாக அமருங்கள்! என்றெல்லாம் பரமசிவனுக்கு அவள் அட்வைஸ் செய்வதுமில்லை. கணவனோ மனைவிக்கு எதிரில் மூச் விட்டால்தானே? அம்மணி! போதும் இந்த நகை, தங்க உடை மோகம்! தேவையா இதெல்லாம்? உம் ! அப்புறம் இன்னொன்று ஞாபகமிருக்கட்டும் உன் சிங்கத்திடம் சொல்லி வை, என் நந்தி இருக்கும் திசைப் பக்கம் அது திரும்பிக்கூடப் பார்க்கக் கூடாது ஜாக்கிரதை! என்று அவரும் மனைவிக்கு உத்தரவு போடுவதில்லை. அதேபோல் பிள்ளைகளையும் பெற்றோர்கள் கண்டிப்பது கிடையாது. அப்பா பிள்ளையாண்டானே கணேசா! சாப்பாட்டிலே கொஞ்சம் கட்டுப்பாடா இருப்பா, எதுக்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி நான் தான் முன்னாலே இருப்பேன் என்னைத்தான் எல்லாரும் முதல்லே கும்பிட்டு பூஜிக்கணும் என்கிற பிடிவாதத்தையும் கர்வத்தையும் விட்டுடு! இல்லா விட்டால் என் சர்ப்பம், உன் எலியை ஒரே வாயிலே முழுங்கிடும்! என்று தந்தை எப்போதும் பிள்ளை(யாரை)யை மிரட்டுவதில்லை. இத்தனை பகைவர்களும் பகையை மறந்து பகைவர்களும் பகையை மறந்து ஒரே இடத்தில் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனுமிருக்கிறார்கள்.

சிவபெருமானுக்கு எந்தவிதமான மோகமோ பற்றோ கிடையாது. அவர் சுயம்பு, அனாசக்தர், தர்மபத்தினியோ கணவனின் உடலில் பாதியைத் தன் உறைவிடமாக்கிக் கொண்டவள். சிவனின் வலதுகாலை முன்னெடுத்து வைத்து நகர்ந்தபின்தான் அவள் தன் காலை எடுத்து வைத்து அவரைப் பின்பற்றிச் செல்கிறாள் இருவரும் ஆதர்ச பெற்றோர்களாக விளங்குகிறார்கள். பிள்ளை கூவியழைப்பதற்கு முன்னமே ஓடோடிச் சென்று, அவன் முன்னால் நிற்பவன்தான் உண்மையான தந்தை, பெற்றோர் வாய்திறந்து கேட்பதற்கு முன்னாலேயே கொடுப்பவன்தான் உண்மையான பிள்ளை. கணவன் தன் மனதில் ஒன்றை நினைத்தவுடனேயே, அதைச் செய்து முடிப்பவள்தான் உண்மையான பத்தினி. எஜமானர் சொல்லாததற்கு முன்னமேயே தன் பணியைச் செய்து முடிப்பவன்தான் உண்மைச் சேவகன்! என்று பர்த்ருஹரி கூறியிருக்கிறார். கலகமோ, சண்டைசச்சரவோ, இல்லாத குடும்பத்தைவிடச் சிறந்த சொர்க்கம் உலகில் வேறு ஏது?

No comments:

Post a Comment