Tuesday, May 27, 2014

'சத்யோபதேசக் கதை'

'சத்யோபதேசக் கதை'
ஒரு முறை விஷ்ணுவிடம் சென்ற நாரதர் கேட்டார், '' பெருமானே எனக்கொரு சந்தேகம். நீங்கள் முன்பொருமுறை என்னிடம் கூறி உள்ளீர்கள். பந்த பாசத்தை துறந்து துறவிகளாகி விட்டால் பிட்ஷை எடுத்தே உண்ண வேண்டும். அந்த நிலையில் தரப்படும் பிட்ஷை கடவுள் கொடுக்கும் உணவிற்கு சமமானது. ஏன் எனில் பிட்ஷை போடுவது யாராக இருந்தாலும், பிட்ஷை போடும் அந்த ஷணத்தின் போது அவர்கள் தெய்வீகமாக இருப்பார்கள். ஆகவே தெய்வமே வந்து பிட்ஷை போட்ட உணவை தூக்கி எறிந்து விடக் கூடாது. ஒரு வேளை, கிடைத்த பிட்ஷை அதிகமாகி விட்டால் அவற்றை உண்டவுடன் தூக்கி எறிந்து விடாமல் அவற்றை பசு உண்பதற்குக் கொடுக்க வேண்டும்.
அதனால்தான் பிட்ஷை எடுத்தால் கூடியவரை பசுமாட்டின் அருகில் அமர்ந்தபடியேதான் அதே உண்ண வேண்டும் என்பது நியதி. அதைக் கருத்தில் கொண்டுதான் மடங்களில் பசு மாடங்களை வைக்கின்றார்கள் என்று கூறினீர்களே. இப்படியாக சாஸ்திரங்களை பெருதும் மதித்து நடந்து வந்த, பிட்ஷை எடுத்தே உண்டு வந்த ஆசார பிராமணர் ஒருவரும், நேற்று வரை பிரும்ம ராக்ஷசனாக இருந்தவானாலும், இன்றைக்கு உங்கள் வைகுண்டதில் எப்படி வர முடிந்துள்ளது? பிரும்ம ராக்ஷஷன் நரகத்துக்கு அல்லவா சென்று இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் என்ன புண்ணியம் செய்தாலும், பாபம் செய்தாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதானே என்ற எண்ணம் மனிதருக்கு வராதா? இது சரியான நீதியா என்பதை எனக்கு விளக்க முடியுமா? '' என்று கேட்க விஷ்ணு பகவான் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தப் பின் அவருக்கு நடந்த சம்பவத்தைக் கூறலானார் :
'' நாரதா இந்தக் கதையைக் கேள்...
சில காலத்துக்கு முன்னால் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்த ராமனாம சர்மா என்ற ஒரு பிராமணர் பல சாஸ்திரங்களையும் கற்றறிந்து குருகுல வாசத்தை மேற்கொண்டு இருந்தார். தினமும் நான்கு வேளை பூஜைகள் செய்தும், விரதங்களை கடுமையாக அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவாறு, பிட்ஷை எடுத்தே உண்டு வந்தார். அதனால் அவருக்கு பெருமளவில் புண்ணியம் சேர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவர் பிட்ஷை எடுத்துக் கொண்டு ஆஸ்ரமத்திற்கு வந்து கொண்டு இருந்த வழியில் ஒரு மாட்டு வண்டி தறிகெட்டு ஓடி வந்தவாறு இருந்தது. அதை ஓட்டி வந்தவன் வண்டியை வேகமாக ஓடுவதற்காக அதை அடித்துக் கொண்டே இருக்க, வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்த மாட்டின் கால்கள் சாலையில் இருந்த மண்ணைத் தட்டித் தட்டி புழுதியைக் கிளப்பி விட்டபடி சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த சாலை வழியே சென்று கொண்டு இருந்த ராமனாம சர்மாவின் கையில் இருந்த பாத்திரத்தின் மீதும் புழுதி வந்து விழ 'அடடா,பாத்திரத்தை துணியால் மூடிக் கொண்டு செல்ல மறந்து விட்டேனே, அதனல்தானே தெருவில் இருந்து பறந்து வந்த புழுதி உணவில் விழுந்து விட்டது. ஆகவே இதை எப்படி உண்பது' என வருத்தமுற்று அதை அப்படியே பக்கத்தில் இருந்த சாக்கடையில் கொட்டி விட்டு மீண்டும் பிட்ஷை எடுத்துக் கொண்டு ஆஸ்ரமத்திற்குச் சென்று விட்டார்.
ஆனால் அதற்கு தண்டனையாக அவர் அடுத்த ஜென்மத்தில் ஒரு சண்டாளனாகப் பிறந்து வாழ வேண்டும் என நியதிப்படி அவர் சண்டாளனாகப் பிறவி எடுத்தார். ராமனாம சர்மா மரணம் அடைந்து சண்டாளப் பிறவி எடுத்து இருந்தாலும், அவர் சேர்த்து வைத்து இருந்த பெருமளவு புண்ணியத்தினால் மனம் மகிழ்ந்திருந்த பிரும்ம தேவர் சண்டாளப் பிறவியிலும், ராமனாம சர்மா சேர்த்து வைத்து இருந்த அனைத்துப் புண்ணியங்களும் அவருடன் சேர்ந்து செல்லும் என்று அருள் புரிந்து இருந்தார்.
சண்டாளப் பிறவி எடுத்து இருந்த ராமனாத சர்மாவிற்கு தனது பூர்வ ஜென்ம வினைப் பயன் தெரியாது. ஆனால் அவருடன் சென்று இருந்த புண்ணியங்களின் பலனாக சண்டாளனாகப் பிறப்பு எடுத்திருந்தாலும் அவர் இறை வழிபாட்டை கை விடவில்லை. அது அவருக்கு இயற்கையாகவே அமைந்து இருந்தது. சண்டாளன் என்பதினால் கிராமங்களிலும் சரி நகரங்களிலும் சரி அவர்களை ஆலயங்களில் நுழைய விட மாட்டார்கள் என்பதினால், அவன் காட்டிற்குள் சென்று அங்கிருந்தக் குளத்தில் குளித்து விட்டு அருகில் பாழடைந்துக் கிடந்த ஆலயம் ஒன்றில் சென்று விஷ்ணுவை வழிபட்டு விட்டு வருவான். இது பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாப விமோசனம் பெற்று, அவனுக்கு அந்தப் பிறவி முடிவுக்கு வரும் காலம் வந்தது.
அப்போது ஒரு நாள் எப்போதும் போல அந்த சண்டாளன் காட்டிற்குள் சென்று குளித்து விட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு பிரும்ம ராக்ஷஷன் அவரை தடுத்து நிறுத்தியது. தான் பல நாட்களாகப் பட்டினியாகக் கிடப்பதினால் தனக்கு உணவு வேண்டும் என்பதினால் அவனைக் கொல்லப் போவதாகக் கூறிற்று. சண்டாளனோ அதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். 'பிரும்ம ராக்ஷசனே , நீ என்னைக் கொல்வதற்கு முன்னால் என்னை ஆலயத்துக்கு என்றும் போல சென்று இறைவனின் வழி பாட்டை செய்து விட்டு வருவதற்கு அனுமதிக்க வேண்டும்' .
அதைக் கேட்ட பிரும்ம ராக்ஷசன் 'உன்னை நான் எப்படி நம்புவது? நீ அங்கிருந்து ஓடிவிட்டால் என்ன செய்வது?' என்று கேட்டதும், பல விதத்திலும் வேண்டியும் அது தனது பேச்சைக் கேட்காததினால், முடிவாக ஒரு நிபந்தனையை சண்டாளன் கூறினான். ' சரி, நான் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறேன். நான் கூறியபடி ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டு உன்னிடம் நான் திரும்பி வராவிட்டால் இதுவரை நான் செய்த அனைத்து புண்ணியங்களும் உன்னை அடைந்து விடும். ஆனால் நான் திரும்பி வந்து விட்டால் அவை என்னுடனேயே இருக்கும். ஆகவே நான் இங்கு வைத்துவிட்டுச் செல்லும் புண்ணியங்களை சுமக்கும் இந்த இடத்து மண்ணை பாதுகாத்தபடி நான் வரும்வரை இங்கேயே காத்து இருக்க வேண்டும், சரியா?' எனக் கேட்க அந்த பிரும்ம ராக்ஷசன் அதை ஏற்றுக் கொண்டு அவனை ஆலயத்துக்கு செல்ல வழியை விட்டது.
சண்டாளனோ முன் பிறவியில் சத்தியத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்து வந்த பிராமணனாக இருந்தவன். ஆகவே அவன் உள்ளத்தில் அந்த உணர்வு இந்த ஜென்மத்திலும் தொடர்ந்து கொண்டு இருந்தது என்பதற்குக் காரணம் அவனுடன் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்திருந்த பூர்வஜென்மப் புண்ணியங்களின் காரணம்தான் என்பதினால் ஆலயத்தில் என்றும் போலவே பூஜைகளை முடித்து விட்டு திரும்பி வந்தான். அவனைக் கண்டது பிறவி அதிசயப்பட்டது .
திரும்பி வந்த சண்டாளனிடம் பிரும்ம ரக்ஷஷன் கேட்டது ' ஐயா, உன் நேர்மையைக் கண்டு நான் வியக்கின்றேன். பூர்வ ஜென்மத்தில் நீ பிராமண குலத்தில் பிறந்து பூஜை புனஸ்காரங்களை செய்து கொண்டு தர்ம நெறியில் வாழ்ந்து கொண்டு இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். இல்லை என்றால் கொடுத்த வாக்கை காப்பாற்ற நீ இப்போது இங்கு வந்திருக்க மாட்டாய். மேலும் நீ ஆலயத்துக்குப் போகும் முன் சத்தியத்தை செய்து உன் புண்ணியங்களை இங்கு வைத்து விட்டுச் சென்றபோதே உன்னை நான் புரிந்து கொண்டேன். ஆகவே உன்னை நான் கொல்ல விரும்பவில்லை. நீ இங்கிருந்து போகலாம். ஆனால் எனக்கு ஒரு சிறிய உதவி செய்வாயா?' என்று அந்த பிரும்ம ராக்ஷஷன் அந்த சண்டாளனிடம் கேட்கவும், 'தாராளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேள். என்னால் ஆன உதவியை செய்கிறேன்' என அவன் பதில் கொடுத்தான்.
பிரும்ம ராக்ஷஷன் கூறியது ' ஐயா, நானும் பூர்வ ஜென்மத்தில் ஒரு பிராமணனாகவே இருந்தேன். பல தர்ம காரியங்களை செய்து கொண்டு, சாஸ்திரத்தை மீறாமல் வாழ்கையை ஓட்டி வந்தேன். ஒருமுறை நான் ஹோமகுண்டம் வளர்த்து ஒரு பூஜையை செய்து கொண்டு இருந்தபோது, என் கண்ணின் முன்னால் வந்து சுற்றிக் கொண்டு, என்னை தொந்தரவுபடுத்திக் கொண்டு இருந்த ஈயை அங்கிருந்து ஓட்ட நினைத்து அதைத் தட்டினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது ஹோம குண்டத்தில் விழுந்து இறந்தது. அந்த ஈயோ அதன் பூர்வ ஜென்மத்தில் ஒரு முனிவராக இருந்திருந்தது. ஆகவே அறியாமல் அந்த முனிவரைக் கொன்று விட்ட தோஷத்தினால் பிரும்ம ராக்ஷசனாகப் பிறந்துள்ளேன். ஆகவே நீ பெற்றுள்ள புண்ணியத்தில் சிறு துளியை எனக்குத் தந்தால் நான் இதில் இருந்து சாப விமோசனம் பெற முடியும்'' என்று கூறவும் சண்டாளனோ ' பிரும்ம ராக்ஷஷா , நான் யார் என்பது எனக்குத் தெரியாது. எனக்குப் புண்ணியம் உள்ளதா என்பதும் எனக்குத் தெரியாது. காரணம் நான் ஒரு சண்டாளன். ஆகவே என்னையே அறியாமல் நாம் புண்ணியங்களை அடைந்திருந்தேன் என்றால் அதில் உனக்கு பாதி சேரட்டும் ' எனக் கூற அந்தப் புண்ணியத்தைப் பெற்றுக் கொண்ட பிரும்ம ராக்ஷஷன் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்று விட்டது.
அங்கிருந்து கிளம்பிச் சென்ற சண்டாளன் தினமும் அங்கு வந்து தனது ஆலய பூஜைகளை நிறுத்தாமல் செய்து கொண்டு இருந்தான். சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் அந்த இடத்தை இடத்தை வந்து சேர்ந்த போது, அவனுக்கு திடீர் என பூர்வ ஜென்ம நினைவு நிழல் போல கண் முன் வந்து நின்றது. பூர்வ ஜென்மத்தில் தான் பிராமணனாக இருந்த காலத்தில் செய்த அனைத்தும் அவன் முன் வந்து நிழலாட அப்படியே அங்கு அமர்ந்து கொண்டவனை திடீர் என வந்த விஷ நாகம் கொத்திவிட அவன் அங்கேயே மரணம் அடைந்தான். அவனுக்கு பெருமளவு புண்ணியம் இருந்ததினால் அவன் வைகுண்டத்திற்குச் சென்றான். அங்கு ஏற்கனவே பிரும்ம ராக்ஷசனாக இருந்தவரும் வந்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியுடன் அவருடன் இணைந்து கொண்டார்.
நாரதா, அந்த இருவரும் அவர்கள் வைத்துள்ள புண்ணியங்களினால் வைகுண்டத்திற்கு வந்து உள்ளார்கள். சண்டாளனாக இருந்த பிராமணன் தனது புண்ணியங்களில் பாதியை பிரும்ம ராக்ஷசனுக்குத் தந்துவிட்டாலும், சண்டாள ஜென்மத்திலும் , என்னை வந்து தவறாமல் பூஜித்ததின் மூலம் இன்னும் பெருமளவு புண்ணியத்தைத் தேடிக் கொண்டான். அவன் தந்த பெருமளவிலான புண்ணியங்களே பிரும்ம ராக்ஷசனுக்கும் வைகுண்டத்தை தந்துள்ளது என்பதற்கு இன்னும் ஒரு காரணம், நீ நினைப்பது போல பிரும்ம ராக்ஷஷன் கெட்டவன் அல்ல . பூர்வ ஜென்ம கர்மாவை அனுபவிக்கவே பிரும்ம ராக்ஷஷனாக பிறந்து இருந்துவிட்டு, அதிலும் நேர்மையை கடைப் பிடித்துவிட்டப் பின் பெரும் புண்ணியங்களை பெற்றுக் கொண்டு இங்கு வந்துள்ளான். ஆகவே இங்கு வந்துள்ள இருவருமே நேர்மையான பிராமணர்களே'' என்று கூற நாரதர் மனம் தெளிவடைந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

No comments:

Post a Comment