Thursday, May 29, 2014

சங்கநாத ஒலியின் முக்கியத்துவம்


ஒவ்வொரு தெய்வீகத் தன்மை வாய்ந்த இறை சக்திகளும், ஒவ்வொரு பெயர் கொண்ட திருச்சங்கைத் தமது கரங்களில் ஏந்தியிருக்கிறார்கள். அது எதிரியை வெற்றி கொள்வதற்கான ஒரு உபாய முறையாகும். முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு முன்பு, அதற்கான அறிகுறியாக சங்கை முழங்க விடும் பழக்கம் இருந்துள்ளது.

அந்த சங்கில் இருந்து வெளிப்படும் நாதமானது, எதிரிகளின் மனதில் மிக எளிதில் பயத்தையும், மனக் கலக்கத்தையும் உண்டாக்கக் கூடியதாக இருந்தது என்பது அதனை பயன்படுத்தியதற்கான முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தமது கரங்களில் ‘பாஞ்சஜன்யம்’ என்ற சங்கை ஏந்தியிருந்தார்.

அது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரிச் சங்காகும். ஆயிரம் சிப்பிகளுக்கிடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதேபோல் ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு மத்தியில் ஒரு வலம்புரிச் சங்கு பிறப்பெடுக்கும். இவற்றைப் போலவே ஆயிரம் வலம்புரிச் சங்குகளுக்கு மத்தியில் ஒரு ‘சலஞ்சலம்’ என்ற அபூர்வ வகையைச் சேர்ந்த சங்கு உதயமாகும்.

இந்த சங்குகளின் பிறப்பின் உச்சகட்டமாக ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு மத்தியில் ஒரே ஒரு ‘பாஞ்சஜன்யம்’ என்ற சக்திமிக்க அபூர்வமான சங்கு அவதரிக்கும். அப்படிப்பட்ட படிநிலைகளைக் கடந்த, உச்சகட்டத் தோற்றமான பாஞ்சஜன்யம் என்ற சங்குதான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரங்களில் தவழும் பாக்கியத்தைப் பெற்றது.

இந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கில் இருந்து எழக்கூடிய ஓம்கார நாதமானது, அட்சரம் ஒரு துளியும் பிசகாத நாத பிரம்மமானது; அதன் ஒலியைக் கேட்கும் அனைவரையும் தமது மூல இயல்பான ஆத்மநிலையுடன் ஒரு கணம் ஒன்ற வைக்கும் விதமாக அவ்வொலி இருந்தது என்பதை மகான்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

சங்கின் நாதம் என்ன காரணத்திற்காக ஒலிக்கப்பட்டதோ, அக்காரணம் செயல் வடிவம் பெறத் தடையாய் உள்ள, அனைத்து இடையூறுகளையும் தமது சப்த ரூபத்தால் விலக்கிவிடும் வலிமை பெற்றதாகும். அதன்பொருட்டே ஒரு முக்கியமான விஷயத்தின் ஆரம்பத்திலும், மத்தியிலும், முடிவிலும் சங்க நாதம் ஒலிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment