Saturday, June 14, 2014

விதுரருக்கு கிடைத்த பெரும் பாக்கியம்

பாண்டவர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்பதையே தன் வாழ்வின் லட்சியமாக கொண்ட கவுரவர்கள், குருசேத்திரப் போரே இதற்கு சரியான தீர்வு என்று முடிவு செய்தனர். இரு பக்கங்களிலும் சொந்தங்களே சூழ்ந்திருக்கும் நிலையில், இந்த போரின் மீது பாண்டவர்களுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் இது சொந்தங்களுக்கு எதிரான போர் அல்ல, அதர்மத்துக்கு எதிரான போர் என்பதால் அவர்கள் ஒருவாறாக தங்கள் மனதை தேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி முறையாக கவுரவர்களிடம், ‘போர் வேண்டாம்’ என்று பேசிப் பார்க்கும்படி கிருஷ்ணரிடம் வேண்டினர் பாண்டவர்கள்.

நடப்பவை அனைத்திற்கும் சூத்திரதாரியாக இருக்கும் கிருஷ்ணபகவான், எதிர்காலத்தை கணித்து வைத்திருந்தாலும், பாண்டவர்களின் வார்த்தைக்காக அவர் களின் தூதுவனாக தனது சேனைகள் புடைசூழ அஸ்தினாபுரத்திற்கு பயணப்பட்டார். அவரது வருகையை அறிந்ததும், பீஷ்மர், துரோணர் மற்றும் துரியோதனன் தவிர்த்த ஏனைய திருதிராஷ்டிரப் புதல்வர்கள் அனைவரும் அஸ்தினாபுரம் நகரை அலங்கரித்தனர். பகவானின் வருகை என்பது எவ்வளவு பெரிய சிறப்பு வாய்ந்தது.

அதற்கான மரியாதையை செலுத்தியாக வேண்டுமே! கிருஷ்ண பகவானை காண வேண்டி அஸ்தினாபுரம் நகர வீதிகளில், பொதுமக்கள் குழுமி இருந்தனர். கூட்ட மிகுதி காரணமாக, கிருஷ்ண பகவானின் தேரானது நகர வீதிகளில் மெதுவாக தவழ்ந்து வந்தது. ஒருவாறாக நகர வீதிகளின் வழியாக, திருதிராஷ்டிரனின் பொன்மாளிகையை அடைந்தார் கிருஷ்ணர்.

அவர் உள்ளே நுழைந்ததும் அருகில் இருந்தவர்கள் கூறியதன் பேரில் கிருஷ்ணரின் வருகையை உணர்ந்து, அவரை ஆரத் தழுவி வரவேற்றார் திருதிராஷ்டிரர். கிருபர், பாகுலிகர், சோமதத்தர் முதலிய அனைவரும் கிருஷ்ணபகவானை வரவேற்று உபசரித்தனர். பிதாமகர் பீஷ்மர், ஆசாரியார் துரோணர் ஆகியோரின் வரவேற்பும் அமோகமாக இருந்தது.

திருதிராஷ்டிரர் அனுமதியின் பேரில் அங்கிருந்த பொன் ஆசானத்தில் அமர்ந்த கிருஷ்ண பகவான், தன் அத்தையான குந்திதேவியை பார்த்து பேசிவிட்டு, அதன் பிறகு துரியோதனனுடைய பெரிய அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார். அஸ்தினாபுரம் வந்து பல மணி நேரங்கள் கடந்தும் கூட அங்கு எவரிடத்திலும் கிருஷ்ணர் உணவு சாப்பிட ஒப்புக்கொள்ளவில்லை.

துரியோதனன் ஆயிரம் அரசர்கள் சூழ காணப்பட்டான். கண்ணனைப் பார்த்ததும், துச்சாதனன், சகுனி போன்றோர்களுடன் ஓடிவந்து அவரை வரவேற்றான் துரியோதனன். கிருஷ்ணன் அவர்களுடன் தகுதிக்கு தகுந்தவாறு பேசினார். சுமூகமாக நடந்து போரை தவிர்ப்பது பற்றி பேசினார். அதற்கு கவுரவர்கள் கூட்டம் ஒப்புக்கொள்ளவில்லை.

பேச்சு வார்த்தை முடிந்ததும், சிறந்த உணவுகளைத் தயாரித்து, கிருஷ்ணரை விருந்துக்கு அழைத்தான் துரியோதனன். அதற்கு கிருஷ்ணபகவான், ‘துரியோதனா! நான் பாண்டவர்களின் தூதுவனாக இங்கு வந்திருக்கிறேன். தூதர்கள் காரியம் முடியும் முன் புசிப்பதில்லை. நீ பாண்டவர்களை பகைக்கின்றாய். பாண்டவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்.

அவர்களை பகைத்தவர்கள் என்னைப் பகைப்பவர்களே!. அவர்களை நேசிப்பவன், என்னையும் நேசிப்பவனே!. எவன் ஒருவர் ஆசையும், கோபமும் கொண்டு குணவானை விரோதிக்கிறானோ, அவனுடைய அன்னம் உண்ணத்தக்கதன்று. மனதையும், கோபத்தையும் ஜெயிக்காமல் எந்த அதர்மன் நற்குணமுள்ளவர்களை பகைக்கிறானோ, அவன் வெகுகாலம் செல்வத்துடன் நிலைத்திருக்க மாட்டான்.

அவனுடைய அன்னமும் புசிக்கத் தக்கதன்று. அப்படிப் பார்க்கையில் விதுரர் அளிக்கும் அன்னம் ஒன்றே புசிக்கத்தக்கது’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். விதுரர் எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்பவர். சிறந்த தவ யோகியான அவர், பலமுறை பாண்டவர்களுக்கு அவர்களுக்கான உரிமையை அளிக்கும்படி கூறியதன் காரணமாக, துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களின் பகையை சம்பாதித்துக் கொண்டவர்.

போர் நடைபெற்றால் தான் யார் பக்கமும் இருக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தவர். அத்தகையை நியாயவாதியான விதுரரின் திருமாளிகைக்கு அடுத்த சில நிமிடங்களில் எழுந்தருளினார் கிருஷ்ணபகவான். விதுரர், பகவானை எதிர்கொண்டு வரவேற்று, வாயார வாழ்த்தி உபசரித்தார்.

பகவானை நோக்கி அருந்தவம் புரியும் முனிவர்களுக்கே எளிதில் கிடைக்காத பாக்கியம் தனக்கு கிடைத்ததை எண்ணி விதுரரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. அஸ்தினாபுரத்தில் பீஷ்மர், துரோணர் போன்ற மகாபுருஷர்கள் இருக்கும் நிலையில் தன் வீட்டில் உணவருந்த வந்த பகவானை நினைந்து உள்ளம் உருக துதிப்பவரானார் விதுரர்.

No comments:

Post a Comment