நெற்றியில் திருநீறு ஏன் தெரியுமா?
பெண்கள், நெற்றியில் வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பெண்களின் தலை வகிட்டில், ‘அம்பாள்’ இருப்பதாக நம்பப்படுகிறது. ஆண்கள், நெற்றியில் விபூதி, திருமண், சந்தனம் இவற்றில் ஒன்றை தரிக்க வேண்டும். ‘நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு! விபூதி, திருமண் இட்டுக் கொள்வதால், தேஜஸ் உண்டாகும். விபூதியாலோ, சந்தனத்தாலோ, நெற்றியில் மூன்று கோடுகள் அகலமாக இட்டுக் கொள்ள வேண்டும். மேல் கோடு சாம வேதம், நடுவில் உள்ளது யஜூர் வேதம், கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
முக்தி என்னும் கன்னிகையை வசம் செய்ய, விபூதி ஒரு மருந்து என்றனர். ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், ‘இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோ, அதே போல, விபூதி அணிந்தவனை சிவனும், திருமண் அணிந்தவனை விஷ்ணுவும், மஞ்சள் பூசி, குங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்! விபூதி அணியும்போதும், குங்குமம் அணியும்போதும் அது கீழே சிந்தாமல் இருக்க வேண்டியது முக்கியம்.
கூர்ம புராணத்தில், ‘சிவனை, என் பக்தன் நிந்தித்தாலும், சிவபக்தன், என்னை நிந்தித்தாலும் இருவரும் நரகத்தையடைவர்!’ என்று சொல்லியிருக்கிறார் மகாவிஷ்ணு. விபூதியை ஐஸ்வர்யம் என்பர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை ரட்சிப்பதால், ‘ரட்சை’ என்ற பெயரும் அதற்கு உண்டு. விபூதியில் உயர்வானது, ‘அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதி. இது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும். அவரவர் வீட்டில் ஓளபாசனம் செய்த விபூதியை, அந்தந்த குடும்பங்களில் உபயோகிக்கலாம்.
அதற்கடுத்து, பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, பசு மாட்டின் கோமியத்தால், ‘விரஜா’ ஹோமம் செய்து, வீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது. இது, வேதோத்தமமான மந்திரத்தைச் சொல்ல ஹோமம் செய்யப்பட்டு தயாரிக்கப்படுவதால் ரொம்பவும் விசேஷமானது. எந்த விபூதியானாலும் சரி, நெற்றியில் விபூதி இடவேண்டியது முக்கியம்!
சின்ன பையனுக்கு நெற்றியிலே விபூதியிட்டு, குங்குமப் பொட்டு வைத்து, இடுப்பில் நாலு முழம் பட்டுவேட்டி கட்டி, கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலைப் போட்டு பார்த்தால், சாட்சாத் முருகன் மாதிரி தெரியும். நீங்களும் நெற்றி, மார்பு, கைகள், புஜம் ஆகிய இடங்களில் பட்டை, பட்டையாக விபூதியணிந்து, ருத்திராட்ச மாலை போட்டு, பஞ்சகச்ச வேஷ்டியுடன் நின்று பாருங்கள், சாட்சாத், சிவப்பழம் என்பர்! பரமேஸ்வரன் மகிழ்ச்சியடைவான். முக்திக்கும் வழி பிறக்கும்!
No comments:
Post a Comment