"இடது கைக்குத் தெரியாமல், துயருற்றவனைத் தேடிச் சென்று எவனொருவன் வலது கையால் தானம் அளிக்கிறானோ அந்த ஈரமுள்ள மனிதனே என் படைப்பில் எல்லாவற்றிலும் வலிமை வாய்ந்தவன்''
தமிழருவி மணியன்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஆண்டவன் பூமியைப் படைத்தபோது, அது நிலையாக நிற்காமல் கொஞ்சம் அதிர்ந்து அசைந்தது. அப்போது உயிர்க்குலம் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. தான் படைத்த பூமி அசைவதைப் பார்த்து இறைவன் அதன்மேல் பிரம்மாண்டமான மலைகளைப் பொருத்தினான். அதன் பின், பூமி அசைவற்றும் அதிர்வற்றும் நிலையாக நின்றது.
மலைகளின் வலிமையைக் கண்டு வானவர்களின் விழிகள் வியப்பால் விரிந்தன. ""மலைகள்தான் உன்னுடைய படைப்பில் மிக்க வலிமை வாய்ந்தவையா?''என்று அவர்கள் அடிபணிந்து கேட்டனர். ""இல்லை! அந்த மலைகளை உடைத்துத் தகர்க்கும் கடினமான இரும்பை நான் படைத்திருக்கிறேன். பாறையைவிட என் படைப்பில் இரும்பு அதிக வலிமையானது'' என்றான் இறைவன்.
""இரும்பை விடவும் வலிமையானது உன் படைப்பில் வேறொன்றும் இல்லையா?'' என்று அவர்கள் மீண்டும் கேட்டதும், ""இருக்கிறது. இரும்பை உருக்கும் நெருப்பும் என் படைப்பே!'' என்றான் ஏகநாயகன். ""நெருப்பினும் வன்மையானது உன் படைப்பில் உண்டோ?'' என்று விடாமல் அவர்கள் வினா எழுப்ப, ""நெருப்பை அணைக்கும் நீரைப் படைத்திருக்கிறேன்'' என்று புன்னகைத்தார் அந்தப் பேரருளாளன்.
""நீரைவிட ஆற்றல் மிக்கது அகிலத்தில் இல்லையா?'
என்று வானவர்கள் வினவ, ""அந்த நீரைக் கிளர்ந்தெழச் செய்யும் காற்று இருக்கிறதே!'' என்று வாய்விட்டுச் சிரித்தான் இறைவன்.
""அப்படியானால் உன் படைப்பில் எல்லாம் வல்லது காற்றுத்தானா?'' என்று ஆர்வத்துடன் அவர்கள் கேள்விக்கணை தொடுத்ததும் மௌனத்தில் ஆழ்ந்த ஆண்டவன், சிறிது நேர இடைவெளிக்குப்பின், ""இடது கைக்குத் தெரியாமல், துயருற்றவனைத் தேடிச் சென்று எவனொருவன் வலது கையால் தானம் அளிக்கிறானோ அந்த ஈரமுள்ள மனிதனே என் படைப்பில் எல்லாவற்றிலும் வலிமை வாய்ந்தவன்'' என்று சொல்லி அமைதியானான்.
No comments:
Post a Comment