Wednesday, February 18, 2015

குருஷேத்திரம்

கிருதயுகத்தில் வாழ்ந்த சம்வர்ணன் என்ற அரசன் நன்கு வித்யைகளைக் கற்றவன். தன் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான்.சில காலம் கழித்து மன்னன் சில காலம் ஏகாந்த வாசம் செய்யத் தீர்மானித்து, ராஜ்ய பாரத்தை தன் குரு வசிஷ்டரிடம் பரிபாலனை செய்ய ஒப்புவித்து வனம் சென்றான்.வனத்தில் சூரிய பகவான் மகள் தபதியை சந்தித்து மனதை பறி கொடுத்தான். இருவரும் ஒருவரையொருவர் விரும்பினர்.
மன்னன் நாட்டிற்குத் திரும்பினான். அவன் உற்சாகமின்றி இருப்பதைக் கண்ட வசிஷ்டர் காரணத்தை புரிந்து கொண்டார். அவர் தமது யோக சக்தியின் மூலம் சூரிய மண்டலத்தை அடைந்து சூரிய பகவானிடம் பேசி சம்வர்ணன் தபதி திருமணத்தை நடத்தி வைத்தார்.அவர்களுக்கு குரு என்ற மகன் பிறந்து எல்லா கலைகளையும் கற்று உரிய வயதில் அரியணை ஏறி செங்கோலாச்சி மக்களிடம் நற்பெயர் பெற்றான். யோக கலைகளில் வல்லவனாக விளங்கினான். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தான்.
தனது மக்களுக்கு அஷ்டாங்க யோகமாகிய நற்செல்வங்களை வழங்க நினைத்து அவற்றை வளர்க்க ஏற்ற இடத்தை தேடி, முடிவில் ‘சரஸ்வதி’ நது ஓடிய ‘சமந்தகம்’ என்ற இடத்தை அடைந்தான் குரு.
[எட்டு வித யோகம் – தவம், உண்மை, மன்னிப்பு, கருணை, தூய்மை, தானம், யோகம், பிரம்மச்சரியம்]
அங்கே சிவபெருமான், எமன் இவர்கள் வாகனங்களைக் கொண்டு அந்த நிலத்தைத் தங்கக் கலப்பையால் உழுதார். இந்திரன் இதைப் பார்த்து பரிகாசம் செய்தான். குரு அதைப் பொருட்படுத்தவில்லை.அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, “மன்னா! உன் எண்ணம் நல்லது தான் ஆனால் யோக விதைகளை விதைக்காமல் பயிர் எப்படி வரும்” என்றார்.
‘பகவானே, என் உடலில் அஷ்டாங்க தர்மங்கள் உள்ளன. பூமியை உழும் போது என் உடல் நசிந்து பூமியில் கலந்து விடும். அப்போது அந்த தர்மங்கள் முளைக்கும்’ என்றான் குரு.அதற்கு பகவான் கூறினார் ‘அதற்கு வெகுகாலம் பிடிக்கும். மாறாக உன் அங்கங்களையே விதையாகக் கொடு. உனக்காக நான் இந்த நிலத்தை உழுகிறேன் என்றார்.உடனே குரு தனது அங்கங்களையெல்லாம் வெட்டி பகவானே இதை ஏற்றுக்கொண்டு யோக விதைகள் முளைக்க அருள் புரியுங்கள் என வேண்டினான். மக்களுக்காக குரு செய்த தியாகத்தை மெச்சி மகாவிஷ்ணு அவனை ஆசிர்வதித்தார்.
உடனே குரு வெட்டுண்ட அங்கங்களைத் திரும்பப் பெற்றான். “ஓ ராஜனே! இனி இந்தத் தலம் உன் பெயரால் குருஷேத்திரம் என்று அழைக்கப்படும். இது தர்மஷேத்திரமாகவும் விளங்கும். இன்று முதல் நானும் மற்ற தேவர்களும் இதனைக் காவல் காப்போம். இங்கே யுத்தத்தில் மடிந்தவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் கிடைக்கும்” என்று வரம் அளித்தார் மகாவிஷ்ணு.மகத்தான காரியத்தைச் சாதித்த குரு சொர்க்கம் அடைந்தான். குருஷேத்திரம் இப்படியான ஒரு தர்ம பூமி என்பதால் தான் கௌரவர்களும், பாண்டவர்களும் இங்கே தர்மயுத்தம் செய்தனர்.

No comments:

Post a Comment