கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.
கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான்,எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.
அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.
முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள்.
முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது.
‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.
முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.
‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’
என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.
ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.
சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.
இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.
கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது. தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக் “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.
இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.
‘தன்னைத் தான் காதலாகில் எனைத் தோன்றும்
துன்னற்க தீவினைப் பால்’
துன்னற்க தீவினைப் பால்’
என்பது வள்ளுவர் மொழி.
அதாவது ‘நீ உன்னை விரும்பி, உனக்கு நன்மையை விரும்பி, தீவினை ஏதும் செய்யாமல் இருப்பாயாக’ என்று அறிவுறுத்துகிறார். சூரனோ எல்லா விதத் திறனும் அறிவும் உடையவனாய் இருந்தும், இறையருள் பெற்றவனாய் இருந்தும், தீவினை செய்து தன்னைத் தானே அழித்துக் கொண்டமை வள்ளுவர் வாக்கிற்குத் தக்கச் சான்றாகும்.
இயற்கையும் தெய்வமே
மூவுலகிற்கும் முதல்வன் குழந்தையானான். தேவர்களின் வேண்டுகோளின் படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பிறந்து ஆகாயத்தில் தவழ்ந்து வாயுவாலும் அக்கினியாலும் தாங்கப் பெற்று ப்ருதிவியிலே ‘சரவணப்பொய்கை’ ஜலத்திலே குழந்தையாய் மாறியது என்று இப்புராணம் சொல்லுகிறது. இப்படிச் சொல்வது பஞ்சபூதங்களினூடாக இறையாட்சியை அவதானிக்கச் செய்கிறது. முருகனின் தோற்றத்தில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது.
ஆலய கும்பாபிஷேகக் கிரியைகளில் ஆகாயச் சூரியனிலிருந்து ‘சூரியாக்கினி’ என்ற நெருப்புப் பெறப்படுகிறது. அந்த அக்கினி மண்ணில் உள்ள குண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வாயுவின் துணையுடன் வளர்க்கப்பெறுகிறது; பின், அதனை கும்பஜலத்தில் இணைத்து வழிபாடாற்றுவதுடன், இறுதியில் இறை திருவுருவத்தில் நீரால் அபிஷேகித்து இறைசாந்நதித்யம் உண்டாகப் பிரார்த்திக்கப்படுகிறது. இதைப் பஞ்சபூதங்கள் இணைந்து செயல்படும் நிகழ்வோடு இணைத்து நோக்கலாம்.
இந்த இடத்தில் ‘ஒருதிரு முருகன் வந்து உதித்தனன்’ என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். அதாவது என்றுமுள்ள இறைவன் இந்த வேளையில் முருகனாக உதித்தனன். (காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கிறான். ஏனெனில், அவன் முன்னரே இருப்பவன்.)
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.
No comments:
Post a Comment