நெற்களை வேலியிட்டு காத்த சிவபெருமானைத் தெரியுமா ?
பாண்டியநாட்டை ராமபாண்டியன் ஆட்சி செய்து வரும் போது, வேணுவனம் (வேணு-மூங்கில்) வேதபட்டர் என்பவர் வேதங்களை கற்றுத்தேர்ந்து சிவதொண்டு புரிந்து வந்தார். தினமும் வீடுவீடாக சென்று நெல்லை சேகரித்து நைவேத்தியத்திற்கு பயன்படுத்தி வந்தார். வேதபட்டரின் பெருமையை உலகுக்கு அறிய வைக்க இறைவன் திருவுளம் கொண்டு அவருக்கு வறுமை அருளினார். ஒருநாள் தான் பெற்ற நெல்லை சன்னதி முன்னர் உலர வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை கொட்ட, நெல் நனைந்துவிடப் போகிறது என்று பதறியடித்து சன்னதிக்கு விரைந்தார். என்னே ஆச்சர்யம் ! நெல்லைச் சுற்றி அணை கட்டியது போல் நீர் நிற்க, வெயிலில் அந்த நெல் காய்ந்து கொண்டிருந்தது. இந்த அதிசயத்தை மன்னனிடம் சொல்ல, அவரும் விரைந்து வந்து பார்த்தார். இறைவனின் திருவருளை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார். அன்று முதல் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்ற திருநாமம் கிடைக்கப் பெற்றது. அந்த ஊர் திருநெல்வேலி என்று அழைக்கப்பட்டது. நெல்லுக்கு வேலியிட்டு இறைவன் காத்த இந்நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழாவின் போது திருநெல்வேலியில் இன்றும் திருவிளையாடலாக நிகழ்கிறது.
முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றி வந்த ராமக்கோனார் என்பவர் ஒருவர் ஒருநாள் கல் இடறி பால் முழுவதும் அந்த கல்லில் மேல் விழுந்தது. இதே நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, இந்த விடயத்தை மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் அந்த கல்லை கோடாரியால் அகற்ற முயல, அந்த கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அவர்கள் செய்வதறியாது அரண்டு நிற்க, அப்போது வானில் அசரீரி ஒலித்தது. தலையின் இடது பக்கத்தில் வெட்டுக்காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. இவரே இக்கோவிலின் மூலவர். இப்போதுள்ளது 21 ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் அறியப்படுகிறது.
பஞ்ச சபைகளில் திருநெல்வேலி தாமிரசபையாகும். சிவபெருமான் நடனமாடிய 5 தலங்களில் இதுவும் ஒன்று. பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற 14 தலங்களில் இதுவும் ஒன்று. நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக அருள் பாலித்து வருகிறார். வாருங்கள். அருள் பெறுங்கள்.
No comments:
Post a Comment