ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான ஆயுதம் படைக்கப்பட்டது ஏன்?
இறைவனிடம் உள்ள இந்த ஆயுதங்கள், நாம் இவ்வுலகில் காணும் இரும்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட ஜடமான ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவை இறைவன் சம்பந்தத்தால் அபூர்வ சக்தியை உடையவை. தெய்வ வடிவானவை. இறைவனுக்கு உள்ள நிக்ரஹம் (தண்டித்தல்) அனுக்ரஹம் (அருள்புரிதல்) போன்ற இறை சத்தியானது அந்த இறைவன் கைகளில் தாங்கியுள்ள ஆயுதங்களுக்கும் உண்டு. முருகனின் கையிலுள்ள வேல் மட்டும் முருகனிடமிருந்து பிரிந்து தன்னந்தனியே சென்று மலைவடிவில் நின்றிருந்த அசுரனைப் பிளந்து சூரபத்மனின் தலையை அழித்தது.
சிவன் கையில் தாங்கியுள்ள சூலாயுதமே தனியாகச் சென்று தங்கம், வெள்ளி, செப்பு என மூன்று நகரங்களாக நின்றிருந்த திரிபுரன் என்னும் அசுரனை சம்கரித்தது. மகாவிஷ்ணு கையில் தாங்கியுள்ள சுதர்சனம் என்னும் சக்கரம், பக்தனான அம்பரீஷ மகாராஜாவை சிரமப்படுத்திய துர்வாச மகரிஷியை விரட்டிச் சென்று பாடம் புகட்டியது. இவ்வாறு எண்ணிப்பார்த்தால் ஒவ்வொரு இறைவனிடமும் உள்ள ஆயுதங்கள் இறைவன் செய்ய நினைக்கும் செயலை தாங்கள் மட்டும் தனியாகச் செய்து முடிக்கும் தனித்திறன் வாய்ந்தவை என்பது புலப்படும். ஆகவேதான், ஆயுதங்களுடன் சேர்த்து முருகன் போன்ற கடவுள்களை வழிபடுவதைப்போல், இறைவனிடம் உள்ள ஆயுதங்களை மட்டும் தனியாகப் பிரித்து வழிபடுவதும் உண்டு. முருகனிடமுள்ள வேலை மட்டும் தனியாக பாலாபிஷேகம் செய்து அர்ச்சித்து தோத்திரம் செய்து பூஜிப்பது முருகனை பூஜிப்பதைவிட அதிகமான பலனைத் தரும் என்பது அனுபூர்வ உண்மை.
மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை மட்டும் தனியே அமைத்து பூஜிப்பதும், சுதர்சன மந்திரங்களால் வழிபாடு செய்வதும் உண்டு. சரி; தத்வார்த்தமாக யோசித்தால், காலத்தின் சுழற்சியை உணர்த்தும் சக்கரத்தை காக்கும் கடவுளான திருமால் கொண்டிருக்கிறார். மனிதனை பிறக்கச் செய்யும் மும்மலங்களைப் போக்கும் மூவிலைச் சூலத்தை சிவபிரான் கொண்டிருக்கிறார். உடல் பலத்தோடு புத்தி பலமும் தேவை என்றுணர்த்த அனுமனுக்கு கதாயுதம்... இப்படிச் சொல்லலாம் தவிர, இறைவனிடமுள்ள ஆயுதங்கள் பக்தர்களைத் தீய சக்திகளின் பயத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே தவிர யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல.
No comments:
Post a Comment