படிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட் பி த பெஸ்ட்! இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? ஒரே ஒரு அறிவுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்! சத்குரு: டெலிவிஷன் கேட்ட தோழி எப்படிப்பட்டவனைக் காதலனாக ஏற்க முடியும் என்று பெண்கள் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. ஒருத்தி சொன்னாள்… “அவன் பார்க்க அழகாக இருக்க வேண்டும். நான் சொன்னால் மட்டுமே பேச வேண்டும். நிறுத்தச் சொன்னால் நிறுத்த வேண்டும். உலக நடப்புகள் பற்றி எது கேட்டாலும் சொல்ல வேண்டும். பிசினஸ் மட்டுமில்லாமல் நாடகம், இசை, சினிமா என எல்லாவற்றிலும் ஆர்வமிருக்க வேண்டும். இருந்த இடத்திலிருந்து அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எனக்குத் தர வேண்டும்!” யாருடனும் ஒப்பிட்டு உங்களை முதன்மை ஆக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். தாழ்த்திப் பார்த்தும் வேதனை கொள்ளாதீர்கள் அடுத்த பெண் சொன்னாள்… “நீ கேட்பது காதலன் இல்லை. டெலிவிஷன்!” ஒற்றை அறிவுரையில் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பதும் இப்படித்தான் இருக்கிறது. வாழ்க்கைக்குப் பல தன்மைகள் உண்டு. ஒவ்வொரு தன்மைக்கும் தக்கபடி அனுசரித்துச் செயல்புரிய வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே வழிமுறை வேலை செய்யாது. தியானம் செய்யக் கண்களை மூடச் சொல்லலாம். வாகனம் செலுத்தும்போது, கண்களை மூடிக் கொண்டால், என்ன ஆகும்? அதற்குச் சொன்னதை இதற்குச் செய்து பார்க்க முடியுமா? நிற்பது எப்படி, நடப்பது எப்படி விழுந்தால் எழுந்திருப்பது எப்படி என ஒவ்வொன்றையும் இன்னொருத்தர் அறிவுறுத்திக் கொண்டு இருந்தால், உங்களுக்கு எதற்கு புத்திசாலித்தனம்? இன்னொரு விஷயம் யாருடனும் ஒப்பிட்டு உங்களை முதன்மை ஆக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். தாழ்த்திப் பார்த்தும் வேதனை கொள்ளாதீர்கள். வந்ததற்கு பெருமை… போவதற்கு வருத்தம்… மைதனாத்தில் ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டு இருந்தது. ஒரு ஈ வந்து அதன் கொம்பில் உட்கார்ந்து, சற்று நேரம் பொறுத்து காண்டா மிருகத்திடம் அது கேட்டது… “நான் புறப்படட்டுமா?” கண்டாமிருகம் சொன்னது… “அட, நீ வந்ததையே நான் கவனிக்க வில்லை! இத்தனை நேரம் இருந்ததையும் உணரவில்லை! விட்டுப் போவதற்காக மட்டும் கவலைப்படப் போகிறேனா?” இந்தப் பிரபஞ்சத்தில் நீங்களும் அப்படித்தான். வந்ததையும் பெருமையாக நினைக்காதீர்கள். போவதற்காகவும் வருந்தாதீர்கள். எப்போது இது மேல், இது கீழ் என்று மனதில் நிர்ணயிக்கிறோமோ, அப்போதுதான் பிரச்சனை பிறக்கும். கடல் ஆழமாக இருப்பதால், உயரமாக இருக்கும் மலையைவிட மட்டமா? எல்லாவற்றிலும் நான்தான் எல்லோருக்கும் தலைமையான இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், வாழ்க்கையே போராட்டமாகிவிடும். அந்தப் பதைப்பில், மிகச் சுலபமாக தீர்வு கூட சில சமயம் புரியாமல் போய்விடும் எங்கே கால் வைக்கக் கூடாதோ, அங்கே கால் வைப்பது போன்ற முட்டாள்தனங்கள் நேர்ந்துவிடும். சங்கரன்பிள்ளையின் அகங்காரம் தன்னம்பிக்கை வேறு. தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு விமான நிலலயத்தில் சங்கரன்பிள்ளை தன் நண்பரைச் சந்திக்க காத்திருந்தார். சற்றுத் தள்ளி, நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிகப் பிரபலமான நடிகர் வந்து அமர்வதைக் கவனித்து, அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்… “ஒரு சிறு உதவி செய்வீர்களா? இப்போது என் நண்பர் வருவார். அவருடன் நான் பேசிக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சும்மா என்னிடம் வந்து ஒரு ஹலோ சொன்னால், என் மதிப்பு சர்ரென்று உயரும். அவர் அசந்து போவார்” என்று கேட்டுக் கொண்டார். நடிகரும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார். நண்பர் வந்தார். சங்கரன்பிள்ளை அவரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, சூப்பர் ஸ்டார் அவர்களை நெருங்கினார். விழிகளில் ஆச்சர்யம் காட்டி, “ஹலோ சங்கரன்பிள்ளை… எங்கே இந்தப் பக்கம்?” என்றார். சங்கரன்பிள்ளை முகத்தைச் சுருக்கிக் கொண்டார்.. “அடடா உங்கள் தொந்தரவு தாங்க வில்லையே..! நான் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டு இருக்கிறேன். அப்படிப் போய் உட்காருங்கள். நேரமிருந்தால் அப்புறம் பார்க்கிறேன்.” எல்லாவற்றிலும் முதன்மை என்பது ஆர்வத்தில் ஆரம்பித்து, சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது போல் அகங்காரத்தில் கொண்டு விட்டுவிடும். சாராயமே மருந்து! வாழ்க்கையில் முதன்மையான இடத்துக்கு வர, ஒவ்வொரு அடியையும் நீங்கள் அல்லவா முழு விழிப்பு உணர்வுடன் எடுத்து வைக்க வேண்டும்? போகும் இடத்திலெல்லாம், ‘ஒரு அட்வைஸ் கொடுங்கள். என் வாழ்க்கையையே மேம்படுத்திக் கொள்ள ஒரே ஒரு அறிவுரை சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டு இருப்பதால் எந்த லாபமும் இல்லை. தெலுங்கில் விளையாட்டாகச் சொல்வார்கள்… ‘சகல வியாதிகளுக்கும் சாராயமே மருந்து’ என்று. தொடர்ந்து சாராயம் குடித்தால், வியாதி என்ன, ஆளே போய்விடுவான் என்பதைத்தான் அப்படிச் சொன்னார்கள் போலும்! அப்படியொரு மருந்தை என்னிடம் எதிர்பார்த்தால், நான் கொடுப்பது விஷமாகத்தான் இருக்கும். உயர்ந்தது, தாழ்ந்தது என்ற அளவுகோல்கள் வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சூழ்நிலைகளுக்குத் தேவையானதைத் திறமையாகச் செய்து முடிப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது! யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. உங்களுக்குப் புரிந்தது அடுத்தவருக்குப் புரியாமல் போகலாம். வேறொருவருக்கு எளிதாக இருப்பது உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம். தன்னம்பிக்கை வேறு. தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு. உங்கள் திறமையை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அது போதும்! வரைபடத்தை வைத்துக் கொண்டு வழி தேடுவது போல், கையேடு வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தேட முடியாது.
No comments:
Post a Comment