தற்போது சமூகத்தில் பள்ளி செல்லும் குழந்தையிடமிருந்து, நாட்டை ஆளும் அதிகாரிகள் வரை பரவலாக பேசப்படும் ஒரே வார்த்தை “மன அழுத்தம்”. இது வரக் காரணங்கள் என்ன, நாம் எங்கே தவறு செய்கிறோம்?! இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு… சத்குரு: இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு வார்த்தைகள் stress Management. நிர்வாகம் பற்றி பேசும் எல்லா இடங்களிலும், மன அழுத்தத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி சொல்லித் தர, மனவியல் நிபுணர்கள் தலையெடுத்துவிட்டார்கள். வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல! உங்கள் தொழிலை, குடும்பத்தை, செல்வத்தையெல்லாம் நிர்வகிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள விரும்புவதில் அர்த்தம் இருக்கிறது. மன அழுத்தம் என்பது விட்டுத் தொலைக்க வேண்டிய விஷயம் அல்லவா? அதைக் கூடவே வைத்துக் கொண்டு நிர்வகிப்பது எப்படி என்று எதற்காகக் கற்றுக் கொள்ள வேண்டும்? வளர்ச்சி… பணம்… நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்கவே முடியாதது என்றாகிவிட்டது. காரணம், வளர்ச்சி என்றாலே அதிக செல்வம் என்று நினைத்துவிட்டதால் வந்த குழப்பம் இது. வாழ்வின் மற்ற பல முக்கிய அம்சங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பணமே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆபத்து இது. நிர்வாகம் என்றாலே, அதைப் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தும் அவலத்தால் வந்த நிலை இது. யார் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? ஒரு வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று முதலில் உங்களுக்குத் தெரிந்திருந்தால்தானே, அதை நீங்கள் அடுத்தவருக்குச் சொல்லித் தர முடியும்? சங்கரன்பிள்ளையின் நிர்வாக யுக்தி சங்கரன்பிள்ளை தன் மகனை அழைத்தார். “நீ மேஜராகப் போகிறாய். எனக்குப் பிறகு நிர்வாகத்தை நீதான் கவனிக்க வேண்டும். ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்!” என்றார். அன்று மாலை, மகனை கிளப்புக்கு அழைத்துப் போனார். அங்கே எல்லோரும் மது அருந்திக் கொண்டு இருந்தனர். சங்கரன் பிள்ளையும் ஒரு மதுக் கோப்பையை எடுத்துக் கொண்டார். “நீயும் எடுத்துக் கொள்” என்று மகன் கையிலும் ஒரு கோப்பையைக் கொடுத்தார். சிலரை அறிமுகம் செய்து வைத்தார். “பெரிய மனிதர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ளும் இடம் இதுதான். மற்றவர்களைக் குடிக்கவிடு. நீ நிதானம் இழப்பதற்கு முன்னால் குடிப்பதை நிறுத்திவிடு. இதுதான் முதல் பாடம்” என்றார். அதற்கு முன் குடித்துப் பழக்கம் இல்லாததால், மகன் சற்றுப் பதற்றமாக இருந்தான். சங்கரன் பிள்ளையோ, கோப்பைக்குப் பிறகு கோப்பை என்று நிறுத்தாமல் குடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மகன் அவரை நிறுத்தினான். “அப்பா…” “என்ன மகனே?” “நிதானம் இழந்துவிட்டேனா என்று எப்படித் தெரிந்து கொள்வது?” சங்கரன்பிள்ளை பக்கத்து மேஜையைக் காட்டினார். “அங்கே உட்கார்ந்திருக்கும் நான்கு பேர் உனக்கு எட்டுப் பேராகத் தெரிந்தால், நிதானம் இழந்துவிட்டாய் என்று அர்த்தம். அதற்கு மேல் ஒரு சொட்டுகூட குடிக்காதே!” மகன் பதறினான்… “ஆனால், அங்கே இரண்டு பேர்தானே இருக்கிறார்கள் அப்பா?” சங்கரன்பிள்ளையின் நிர்வாகம் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். யாரை நிர்வகிக்க வேண்டும்? மற்றவர்களை நிர்வகிக்கும் திறனை நீங்கள் முழுமையாகப் பெற வேண்டுமென்றால், அடிப்படையில் உங்களை அல்லவா முதலில் நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? உங்கள் உடலை, மனதை, உணர்ச்சிகளை எல்லாம் திறமையாகக் கையாளக் கற்றுக் கொண்ட பின்தானே, நீங்கள் மற்றவர்களை நிர்வகிக்க முனையலாம்? ஓய்வாக இருந்தபோது, வேலை கிடைக்காதா என்று ஏங்கினீர்கள். கிடைத்தவுடன் சந்தோஷத்தையெல்லாம் இழந்து, படபடப்புடன் ரத்த அழுத்த நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்! பதவி உயர்வு கிடைக்கும்வரை, அதற்காகப் போராடினீர்கள். இப்போது நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் என்கிறீர்கள். இன்னும் உயரத்துக்குப் போனால், என்ன சொல்வீர்களோ? ‘முன்னால் நிம்மதியாக இருந்தேன். இப்போது அமைதியே போயிற்று’ என்பீர்களா? வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல! தோல்வியால் உண்டான துன்பத்துக்காவது அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், வெற்றி என்பது நீங்கள் வியர்வை சிந்தி, கடுமையாகப் போராடி உங்களால் எவ்வளவு கடினமாக ஈட்டப்பட்டது? அந்த வெற்றியாலும் துன்பம் வந்தால், உங்கள் அடிப்படையிலேயே தவறு இருக்கிறதே! உங்களால் கையாள முடியாததை எதற்காக விரும்பினீர்கள்? நீங்கள் கடைநிலைத் தொழிலாளியானால் என்ன, கட்டுப்படுத்தும் முதலாளியானால் என்ன? உங்களை நிர்வகித்துக் கொள்ளும் முழுமையான திறனின்றி, நீங்கள் மேல்நிலைக்கு வர முனைந்தால், அது ஒரு விபத்தாகவே முடியும். வெளிச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல், உங்கள் உள்தன்மையை நிர்வகிக்க முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சுற்றியிருப்பது சகதியாக இருந்தாலும் அதையே தன் உரமாகக் கொண்டு, தாமரை தன் பூரண அழகை வெளிப்படுத்துகிறது அல்லவா! நறுமணத்தை பரப்புகிறது அல்லவா? உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் அமைய வேண்டும். சுற்றுப்புறம் எப்படி இருந்தாலும், உறுதியோடு செயல்பட்டு, அதிலிருந்து உங்களுக்கான உரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல், உங்களை ஆனந்தமாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், நம்ப முடியாதவற்றைக் கூட நிகழ்த்திக் காட்டலாம்.
No comments:
Post a Comment