ஆலயம் '
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'...'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'... சும்மாவா சொன்னார்கள் ? நம் இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களா ? அதன் சிறப்பைக் கூறி ...வெறும் வழிபாட்டுத்தலங்கள் இல்லை என்கிறது
ஆலய சிவ ஆகமும், சைவ சித்தாந்தங்களும்... சரி ஆலய சிறப்பை அதன் அமைப்பை வைத்து பார்ப்போம்.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' -
என்பது திருமூலர் அருட்பாடல்.
இதன் பொருளைப் பாருங்கள், மிகச் சிறப்பாக இருக்கும், அதாவது
அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிறுத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.
கோயில் என்பதை கோ-இல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.
மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை- தலை, (2) அர்த்த மண்டபம் - கழுத்து, (3) மகா மண்டபம் - மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும் கூறுவர்.
அதே போல் (1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - −தயம், (7) சிவலிங்கம் -உயிர் என்றும் கூறுவர்.
உள்ளமே கோவில் என்று 'தத்துவார்த்தமாக' உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் அல்லவா ? படிப்பதற்கே மெய் சிலிர்கிறது.
No comments:
Post a Comment