இறை வழிபாடு விளக்கம்:
இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும்.
அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள, இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே ஆலயங்களிலே சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். அத்துடன் ஒரு பசுவின் உடல் முழுவதும் இரத்தம் வியாபித்திருந்தாலும், அந்தப்பசுவின் மடியில்(முலையில்) தான் இரத்ததை பாலாக மாற்றித் தரும் சுரப்புகள் உள்ளன. அதேபோல இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும்; ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள மந்திர, யந்திர, பூசைகளின் சக்திகளினாலே சுரக்கப் பெறும் இறைவனின் கருணையை சுலபமாக பெற முடிகின்றது.
பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
இதன் பொருள்:-
நிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது)
நீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)
தீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)
காற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)
ஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)
கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?
இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது. நாம் காணாத இறைவனை, அதைக் கண்ட யோகிகள், ஞானிகள் அது இப்படித்தான் இருக்கு என்று கூறும் போது அதை நம்பியே ஆகவேண்டி உள்ளது.
"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?
ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.
அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?
சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது.
சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-
அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதி
நடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதி
மேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி
என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.
உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்?
விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும்.
இவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன?
அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது.
"சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்
கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்".
என்று பட்டினத்தார்" கூறுகின்றார்.
அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதான் என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?
கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.
புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது?
புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.
கருவறையில் உள்ள மூர்த்திக்கு “அஷ்ட பந்தனம்’ சாற்றப்படுவது ஏன்? அதில் என்னென்ன கலந்துள்ளன?
விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் “அஷ்டபந்தனம்’ என்ற கலவையைச் சாற்றுவது வழக்கம்.
கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
எருமை வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு
சுக்கான்தூள் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு
ஆகிய எட்டு விதமான பொருட்களை அளவுப்படி கலந்து, இடித்துச் சேர்த்து சூடாக்கி அணிவிப்பது அஷ்டபந்தனமாகும்.
கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?
கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.
கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.
கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப் படும்.
1. தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.
2. கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.
3. ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.
4. கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.
கோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன?
இறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.
இறைவன் கருணை உள்ளங் கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக?
இறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது.
சில கோவில்களிலே கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதே?
ஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது. அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் "இலிங் கோற்பவர்". திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு.
தெய்வங்களாகிய திருமாலும் பிரம்மாவும் தங்களிலே யார் பெரியவரென்று கொண்ட அகம்பாவம் சரியா னதா ?
அகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறைவனைக் காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணர்த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.
தண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா?
அதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள்.
1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள்.
2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது.
இறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா?
கோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள் எவை?
சூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல்
சந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம்
செவ்வாய் --- பொங்கல்
புதன் --- புளியோதரை
குரு ---- தயிர்சாதம்
சுக்கிரன் ---- நெய்ப்பொங்கல்
சனி ----- எள்ளுசாதம்
ராகு ---- உளுந்து சாதம்
கேது ---- அன்னம
போன்றவையாகும்.
தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை) செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா?
இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.
ஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் ஐந்து கலைகளையும் குறிக்கின்றது.
மூன்று அடுக்கள்ள தீபம் மூன்று தத்துவங்களையும் குறிக்கின்றது.
நாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும்
இடபதீபம் பசுவிருத்தியின் பொருட்டும்
புருசதீபம் சகல சித்தியின் பொருட்டும்
நட்சத்திரதீபம் மல நிவாரணத்தின் பொருட்டும்
கும்பதீபமும் அதனுடனிருக்கும் ஐந்து தட்டைகளும் முறையே மலநிவாரணத்தின் பொருட்டும், ஈசானம் முதலிய ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும்
கற்பூர ஆராத்தியானது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடையும் குறிப்பை உணர்த்துவதாக செய்யப்படுகின்றது. அதாவது கற்பூரம் வெண்மை நிறம் கொண்டது. அக்கினி பற்றிக் கொண்டதும் அதன் வடிவாகி முற்றுங் கரைந்து ஒளியிலே சங்கமமாவது போல ஆன்மாவும் ( வெண்மை நிறமான )சாத்வீக குணம் பொருந்தி ஞானாக்கினியாகிய இறையருளில் முற்றாக தன்வடிவிழந்து இறைவ னுடன் இரண்டறக் கலக்கின்ற தத்துவத்தை உணரத்த்தும் பொருட்டும் செய்ய ப்படுகின்றது.
மற்றும் கண்ணாடி முதல் ஆலவட்டம் வரை காட்டி ஆராதனை செய்யப்படுவது
கண்ணாடியிலே சிவசக்தியும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் அதைக்கொண்டு ஆராதித்தால் சிவலோக பதவி கிட்டும்.
குடையிலே சூரிய மண்டலமும் அதனுடைய காம்பிலே சூரியனும் இருப்பதால் இதனால் ஆராதனை செய்வதனால் மிகுந்த பலத்தையும் அடையமுடியும்.
சாமரையிலே வாயுவும் அதன் காம்பிலே கார்க்கோடனும் இருப்பதால் மலநீக்கம் பெற்று திருவருள் கிட்டுமென்று கூறப்படுகிறது.
விசிறியிலே சூரியனும் அதன் காம்பிலே பதுமன் என்ற பாம்பும் இருப்பதால் இதுகொண்டு ஆராதனை செய்வதனால் சகல போகங்களும் கிடைக்கும்.
ஆலவட்டத்தினாலே ஆராதனை செய்வதனால் தர்க்காயுளும் சகல சுகபோகங்களும் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது.
நாம் விநாயகரை வணங்கும் பொழுது எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?
எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார்.
அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.
முதலிலே குட்டி வணங்கிய பின்னரும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு தீபாராதனைக்கும் குட்டி வணங்க வேண்டுமா?
வழிபாடு ஆரம்பிக்கும் பொழுது ஒரு தடவை (தலையிலே மூன்று முறை) குட்டி வணங்குதல் போதுமானதாகும். அதாவது எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் முதலிலே நாங்கள் வணங்க வேண்டியது விநாயகரையே. எனவே தான் முதலிலே ஒரு தடவை குட்டி வணங்குதல் போதுமானதென்று கூறப்படுகின்றது.
ஆலயங்களில் திரையிடப் பட்டிருக்கும்பொழுது வழிபாடு செய்யலாமா?
இறைவனுக்கு அபிசேகம் முடிவடைந்து அலங்காரம் செய்யும் பொழுதும், திருவமுது செயயும் பொழுதும் வணங்கலாகாது.
ஆலயங்களில் எங்கே எவ்வாறு விழுந்து வணங்கல் வேண்டும்?
ஆலயங்களிலே விழுந்து வணங்கும் பொழுது எப்பொழுதும் பலிபீடம் கொடிமரத்துக்கு அப்பால் வடதிசை நோக்கி தலையும் தென்திசை நோக்கி காலும் இருக்கும்படியாக ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து வணங்கலாம்.
அப்படியாயின் பரிவார மூர்த்திகளை எவ்வாறு விழுந்து வணங்குவது?
பரிவார மூர்த்திகளை விழுந்து வணங்குவதென்றால் மற்றத் தெய்வங்களின் பக்கம் கால்கள் நீட்டப்படாதவாறு பாh;த்துக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டுதான் சில ஆலயங்களின் உட்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அப்படியாயின் பலிபீடம், கொடிமரத்துக்கு அப்பால் மட்டும் விழுந்து வணங்குதல் போதுமானதா?
ஆம். ஆலயத்தின் பலிபீடத்தை வணங்கி, எம்மிடத்திலுள்ள அகங்காரம் மற்றும் தீய எண்ணங்களையெல்லாம் அங்கே பலியிட்டு தூய மனதோடு இறைவனை வணங்க வேண்டுமென்ற பாவனையாகத்தான் நாம் இந்த அட்டாங்கநமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் போன்றவற்றை செய்கின்றோம்.
உட்பிரகாரத்தைச் சுற்றிவரும் பொழுது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
சுற்றிவரும் பொழுது சந்நிதானத்தின் புறச்சுவர்களில் தலையை முட்டிவணங்குவது , சூடம் ஏற்றுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
இது போன்று வேறு எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?
நல்ல கேள்வி. நிறைய விடயங்கள் இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் எல்லாவற்றையும் சரிவரச் செய்வதென்பது முடியாதகாரியம். இருப்பினும் எம்மால் செய்யக்கூடியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களில் பரிவார மூர்த்திகளுக்குரிய சந்நிதானங்கள் மிகவும் சிறிய அளவிலேயே அமைக்கப்படுவதால் அங்கே எழுந்தருளியிருக்கின்ற விக்கிரகங்களும் வெளியே நிற்பவர்களின் கைக்கெட்டிய தூரங்களில் தான் அமைகின்றன. எவ்வளவுதான் கைக்கெட்டிய தூரத்திலிருந்தாலும் கைகளினாலே இறைவனைத் தொட்டு வணங்குவதோ அல்லது நாம் கொண்டு சென்ற மலர்களை இறைவனுக்கு நாமாகவே சாத்துவதோ செய்யத்தக்கதன்று.
அத்தோடு இவ்வாறான சந்நிதானங்களினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் விபூதி மடலினுளிருந்து நாமாகவே விபூதி எடுப்பது, உத்தரணியிலிருந்து தீர்த்தம் எடுப்பது போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். (வெளியே வைக்கப்பட்டிருக்கும் விபூதிமடலையோ உத்தரணியையோ இங்கே குறிப்பிடவில்லை இதிலிருந்து விபூதியோ தீர்த்தமோ வேண்டியவற்றை பக்தர்கள் தாமாகவே எடுத்துக் கொள்ளலாம்). அடுத்து வாகனங்களின் பட்டடைகள் மீது உட்காருவது, வாகனக்கொம்புகள் (திருவாடு தண்டு) வாகனத்துடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் (சுவாமி எழுந்தருளுவதற்காக) வாகனக் கொம்புகளைக் கடந்து செல்வது, அவற்றின் மேல் உட்காருவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
ஆலயங்களில் வீண்வார்தை பேசக்கூடாது என்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
உண்மைதான் ஆலயங்களிலே ”பரம் பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க” என்று தான் கூறுவார்கள். இங்கே பிறவார்த்தை அல்லது வீண்வார்த்தை என்பது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்படியாக நாங்கள் பேசுவதையே வலியுறுத்தி நிற்கின்றது. எனவே நாங்கள் ஏதாவது பேசவேண்டுமென்றால் பக்கத்திலே நின்று வணங்குகின்றவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சற்று அப்பால் சென்று மெதுவாகப் பேசிக் கொள்ளலாம். அதிலும் பூசை நடைபெறும் பொழுதும் வேதபாராயணங்கள் ஓதப்படும்பொழுதும் அமைதி காக்கப்படவேண்டும்.
அர்ச்சனைப் பொருட்களோ அல்லது படையல்செய்யும் பொருட்களோ எவ்வாறு கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்?
கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள். அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவையென்று கூறமுடியுமா?
சிவன் ------ வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.
பார்வதி ------ சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.
விநாயகர் ------ மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.
முருகன் ------ வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு.
பெருமாள் ------ லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.
பூசை நேரங்களில் தீபாராதனை காண்பதற்காக ஒருவரையொருவர் முட்டிமோதி ஓடிச்சென்று வழிபாடு செய்வது சரியாகுமா?
இது சரியா அல்லது பிழையா என்பது முக்கியமல்ல. நாம் தீபாராதனை காண்பதற்காக அவசரமாகச் செல்லும் பொழுது வயதானவர்கள் மீதோ அல்லது ஒரு சுகவீனமானவர் மீதோ மோதி அவர்களின் உடலிலோ உள்ளத்திலோ வலியினை ஏற்படுத்திவிட்டு தீபாராதனை காண்பதில் பயனேதுமில்லை. இது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதுமட்டுமல்ல பரிவார மூர்த்திகளுக்கு பூசை நடைபெறும் பொழுது சிலசமயங்களில் பக்தர்கள் முன்னே ஓடிச்சென்று சந்நிதானத்தின் வாயிலையே முற்றுகையிடுவதால் பூசை செய்யும் சிவாச்சாரியார்களே உள்ளே செல்ல சிரமமான நிலை ஏற்படுவதுமுண்டு.
திருக்கோவில்களை எத்தனை முறை வலம்வந்து வணங்க வேண்டும்?
சிவன் கோவில்கள் :-- குறைந்தது 3 முறை : அதன் மேல் 5, 7, 9 ------------இவ்வாறாக
விநாயகர் :- ஒரு முறை
அம்பாள் :- 4 முறை
விஷ்ணு :- 4 முறை
முருகன் :- 3 முறை
மேலே குறிப்பிட்டவாறு கோவில் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக 3 முறையோ அல்லது விரும்பினால் அதற்கு மேல் 5,7,9 ----- இவ்வாறாக வணங்கலாம். சில ஆலயங்களின் பிரகாரத்தினுடைய உட்சுவர்களிலே மேற்பாகம், நடுப்பாகம், கீழ்ப்பாகம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியிலே தொடங்கி தொடர்ச்சியாக இறைவனின் திருச்செயல்களைச் சித்திரமாக விபரிப்பது, தேவாரங்களை எழுதிவைப்பது போன்ற முறையுமுண்டு. இப்படியான சித்திரங்களையோ அல்லது தேவாரப் பதிகங்களையோ நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு சென்று தொடங்கிய இடத்துக்கே வந்து திரும்பவும் இரண்டாம் மூன்றாம் முறையென்று எம்மையறியாமலே பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றி வந்துவிடுவோம்.
” யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம்வருவார்”
என்று சிவஞான சித்தியார் கூறுகின்றது. எனவே சிவன்கோவில் வலம்வரும் முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லையென்று கூறப்படுகின்றது.
ஆச்சாரியார்களிடத்தில் பிரசாதம் ( விபூதி, தீர்த்தம் போன்றவை ) பெறும் பொழுது எவ்வாறு பெறுதல் வேண்டும்?
இடது கையானது கீழேயும் வலது கையானது மேலேயும் இருக்கும்படியாக இரண்டு கைகளையும் சேர்த்து பெறவேண்டும்.
ஓற்றை விரலினாலே விபூதி தரிக்கலாமா?
எப்பொழுதும் விபூதி தரிக்கும் பொழுது சிவசிவ என்று சொல்லி வலது கையின் நடுவிரல்கள் (சுட்டுவிரல்,நடுவிரல், மோதிரவிரல்) மூன்றினாலும் நெற்றியிலே தரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக தரித்துக்கொள்வதை உத்தூளனமாகத் தரித்தல் என்றும், நீரிலே குழைத்து மூன்று குறிகளாக தரித்துக்கொள்வதை திரிபுண்டரமாகத் தரித்தல் என்றும் சொல்லப்படும்.
திரிபுண்டரமாகத் தரிக்கத்தக்க அங்கங்கள் எவை?
சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுக்கள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
சந்தனம், குங்குமம் போன்று ஒருவிதமான கரியநிறப் பொட்டும் சிலசமயங்களில் வழங்கப்படுகின்றதே?
ஆம், அதன் பெயர் ”யாகரட்சை” என்பதாகும். இது அக்கினிகாரியம் செய்யும்பொழுது ஓமகுண்டத்தைச் சுற்றி வைக்கப்படும் தர்ப்பையை ஓமாக்கினியிற் சுட்டு நெய் சேர்த்துக் குழைக்கப்பட்டு நெற்றியிலே பொட்டாக அணியப்படுகின்றது. திருநீற்றுக்கு இரட்சையென்ற பெயருமுண்டு. இறைவனை வேண்டி நிகழ்த்தப்பட்ட யாகத்தில் பெறப்பட்டதால் ”யாகரட்சை” என்று பொருள்கொள்ளலாம்.
விபூதி தரித்துக் கொள்வதன் காரணம் என்ன?
சிவபக்தர்களுக்குரிய இலட்சணங்கள் மூன்று. அதாவது விபூதி தரித்தல் , உருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் செபித்தல் போன்ற மூன்றாகும். இம்மூன்றிலும் விபூதிதரித்தலானது மிகச்சிறிய பராயத்திலேயே ஆரம்பிக்கக் கூடியதொன்றாகும். எனவே சைவர்களாகிய நாமெல்லாம் விபூதி தரித்துக்கொள்ள வேண்டுமென்பதையே சைவசமயம் கூறுகின்றது.
”கங்காளன் பூசுங் கவசத்திருநீற்றை
மங்காமற் பூசிமகிழ்வாரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”
என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
கடைகளில் விற்கப்படும் விபூதிகளெல்லாம் பசுவினது சாணத்திலிருந்து தான் தயாரிக்கப் பட்டவையா என்பது தெரியவில்லை. ஆனாலும் பசுவினது சாணத்திலிருந்து கற்பகவிதிமுறையில் (இது பற்றிய விளக்கத்தைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாகும். சில கோவில்களில் கோபூசை (பசு பூசை) சிறப்பிடம் பெறுகின்றது.
பசுவின் வலது கொம்பில் ----- கங்கையும்
பசுவின் இடது கொம்பில் ----- யமுனையும்
பசுவின் மத்திய பகுதியில் ----- சரஸ்வதியும்
பசுவின் முன்காலில் ---------------- பிரம்மனும்
பசுவின் பின்காலில் ----------------- உருத்திரனும்
பசுவின் குளம்புகளில் ------------- தேவர்களும்
பசுவின் பால்சுரக்கம் மடியில் -----சமுத்திர தேவர்களும்
வாசம் செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இப்படியான புனிதத்தன்மை வாய்ந்த பசுவினுடைய சாணத்திலிருந்து பெறப்படுகின்ற விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியதென்று புராண வரலாறுகள் கூறுகின்றன. திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் இதன் பெருமையை விரிவாகக் காணலாம்.
பலிபீடத்துக்கும் மூலமூர்த்திக்குமிடையே குறுக்கே செல்லலாகுமா?
பலிபீடமென்று நாம் பேசிக்கொள்ளும்பொழுது அங்கே முதலாவதாக கொடிமரமும் அடுத்து பலிபீடமும் அதனையடுத்து மூலமூர்த்தியை நேராக நோக்கியவாறு அவருக்குரிய ஊர்தியும் (அந்தந்த தெய்வத்துக்குரிய வாகனம் உதாரணமாக விநாயகருக்கு பெருச்சாளி போன்று) அமைந்திருக்கும். இங்கே கூறப்படுவது யாதெனில் பரமாத்மாவாகிய இறைவனுக்கும் அவரை அடையும்பொருட்டு சதாசர்வகாலமும் அவரையே நோக்கியவாறு அமைந்திருக்கும் சீவாத்மாவாகிய ஊர்திக்குமிடையே குறுக்கே சென்று இடையூறு செய்யக்கூடாதென்றே கூறப்படுகின்றது.
அப்படியாயின் கொடிமரத்துக்கப்பால் சென்றுதான் நாம் மற்றப்பக்கம் செல்ல வேண்டுமா?
ஆம், அவ்வாறு செல்லும்பொழுதிலும் தம்பத்துப் பிள்ளையாரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடியவர்கள் கொடிமரத்தையண்டிக் குறுக்காகச் செல்லும் பொழுது (விரைவாக) அவர்களது ஆடை கொடிமரத்துக்கு கீழேயிருக்கும் பிள்ளையாரின்மீது படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஆலயங்களிலே பக்தர்கள் ”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?
அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.
நன்றி - திரு. பேரி
ஆலயங்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன? நெய்தீபம் ஏற்றுவது எதனால்?
கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது. ஒளி வடிவான இறைவனை ஒளி மூலம் நாம் தரிசித்து பக்திப்பூர்வமாக மகிழ்கிறோம். ஞானமே வடி வான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம். இந்த மகத்தான தத்துவத்தைக் காட்டுவதே கற்பூர தரிசனத் தின் விளக்கமாகும். தற்போது கற்பூரங்களில் ரசாயனம் சேர்ந்து வருவதால் சுத்த நெய் தீபத்தில் கோவில்களில் ஆரத்தி காண்பிக் கப்படுகிறது.
புண்ணிய நதிகளில் குளிப்பதால் பாவங்கள் விலகுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி யின்போது கங்கா ஸ்நானம் என்பது சிறப் பாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் காசிக்குச் சென்று கங்கையில் குளிப்பது அவ சியமா? காசிக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்வது?
புண்ணிய நதிகளில் மகான்கள் வந்து குளிப்பதால், அது நம் பாவங்களைப் போக்கக்கூடிய சக்தியைக் கூடுதலாக அடைகிறது.
காசியில் தீபாவளி சமயத்தில் நீராடுவது மிகச் சிறந்ததாகும். இதனால் பித்ருக்கள் நலமடைவார்கள். அதனால் நமது குடும்பம் நலமாக இருக்கும். வறுமை நீங்கும்; புத்திர பாக்கியம் ஏற்படும்; சந்ததிகள் நலமாக இருப்பார்கள்.
தீபாவளியன்று, காசியில் உள்ள விஸ்வநாதரின் தரிசனமும் தங்க அன்னபூரணியின் தரிசனமும் புண்ணிய பலனை அளிக்கக்கூடியது.
தீபாவளியன்று அதிகாலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் அங்கு வர இயலாதவர் களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு நீராடினால், அதனால் ஏற்படும் புண்ணியம் அவர்களைச் சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கங்கையில் மடி, தீட்டு பார்ப்பது இல்லை. கங்கை நீரின் துளிகளைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் கங்கையில் நீராடிய பலன்களை அடைய முடியும்.
கங்கை நீரை சொம்பில் அடைத்து எடுத்து வந்து வைத்துக் கொண்டால் பல காலம் அது கெட்டுப் போகாமல் இருக்கும். அந்தப் புண்ணிய நீரை, மரணம் அடைந்தவர்களின் சரீரத்தில் தெளித்தாலும் அதனால் முழுக்காட்டினாலும் காசியில் மரணமடைந்த புண்ணியம் உண்டாகும்.
நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே- அது எவ்வாறு?
நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது. மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்; சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்; மணிபூரகம்- மகா மண்டபம்; அநாகதம்- ஸ்நாந மண்டபம்; விசுத்தி- அலங்கார மண்டபம்; ஆக்ஞை-சபா மண்டபம்.
உபவாசத்தின்போது பலகாரங்கள் சாப்பிடலாமா?
உபவாச காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள் வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படு கிறது. இது தவறு. இது உண்மையான உபவாசம் ஆகாது. ஜீரண உறுப்பு களுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே உபவாசத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு உபவாசம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி உபவாசம் இருப் பதே சிறந்ததாகும்.
விபூதியை பஞ்சாட்சரம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
திருநீறு மிகவும் புனிதமானது. இதற்குப் பல பெயர்கள் இருக்கின் றன. நம்மை ரட்சிப்பதால் அதனை ரட்சை என்று குறிப்பிடுகிறார்கள். வினைகளை அழித்துப் பொடிபடச் செய்வதால் அதனைத் “திருநீறு’ என்று சொல்லுகிறோம். மகத்தான பெருமை பொருந்திய ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை “விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்தை ஓதித் தருவதால் விபூதியை பஞ்சாட் சரம் என்றும் குறிப்பிடுகிறோம்.
ஆன்மிகம், மருத்துவம், ஜோதி டம் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கிய சித்தர்கள் எந்தெந்த ஊர்களில் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவு செய்து கூற முடியுமா?
காயகல்பம் மூலமாக என்றும் இளமையுடன் வாழ்ந்து, உரிய காலம் வந்தவுடன் தமது உடலை உயிருடன் ஜீவ சமாதியாக்கிக் கொண்டவர்கள் சித்தர்கள். அவர் கள் ஜீவசமாதியாகும்போது அங்கே என்ன ஆற்றல் விளைய வேண்டும் என்று எண்ணி முடிவு செய்தார் களோ, அந்த ஆற்றல் அவ்விடங் களில் இன்றும் அவர்களது சக்தியுடன் எழும்பிக் கொண்டிருக்கிறது என் பதுதான் விசேஷ தத்துவமாகும். அப்படி சித்தர் கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.
கமலமுனி- திருவாரூர்.
கும்பமுனி- கும்பகோணம்.
அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி.
இடைக்காடர்- திருவண்ணாமலை.
திருமூலர்- சிதம்பரம்.
சட்டைமுனி- சீர்காழி.
மச்சமுனி- திருப்பரங்குன்றம்.
போகர்- பழனி.
குதம்பைச் சித்தர்- மயிலாடுதுறை.
கொங்கணர்- திருப்பதி.
அகத்தியர்- திருவனந்தபுரம்.
கோரக்கர்- பேரூர்.
இப்படிப்பட்ட தலங்களில் உள்ள தீர்த்தங் களில் நீராடி, சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசிப்பது சிறப்பான நன்மைகளைத் தரும்.
தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங் கள் கூறுகின்றன. எதையெதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் விளையும் என்பதைக் கூறுங்களேன்.
அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.
பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.
வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.
தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்- துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.
வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.
பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.
சாதாரண மந்திரங்களுக்கும் பீஜா மந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? குறிப்பிட்ட பயன்களை அடைவதற்காக மந்திரங்களைப் பிரயோகம் செய்வது சரிதானா?
பீஜம் என்பது விதை என்று சொல்லப்படும். பீஜாட்சரங்கள் என்றால், மந்திரங்களின் வித்துகள் என்று பொருள் கொள்ளுகிறோம். பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொன்னால்தான் மனதில் அலை எழுப்ப முடியும். அவை மனதைத் தூண்டும் சக்தி உடைவை.
பீஜா மந்திரங்களில் “ஐம்’ என்பது சரீரத்தை யும், “ஹ்ரீம்’ என்பது மனத்தையும், “ஓம்’ என்பது மூலாதாரத்தையும் ஊக்குவிக்கும். மேலும், இந்த பீஜாட்சரங்கள் உச்சரிப்பவரின் உட லுக்குள் சென்று பக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் பக்குவத்தையும் ஏற்படுத்தும். அதனால் பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொல்வதே சிறந்த பலனைத் தரும்.
மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொழுது, அவை எதனைக் குறித்துச் செய்யப் படுகின்றனவோ, அந்தப் பலன்களை உறுதியாக அளிக்கும். மந்திர உபாசனை செய்யும்போது நல்லதற்கும் தீயதற்கும் அவை உதவும். சரியான உச்சரிப்புடன் சொற்சோர்வு இல்லாமல், நல்ல நோக்கங்களுக்காக உச்சாடனம் செய்தால் நாம் எதிர்பார்க்கும் நன்மை உண்டாகும். உதாரண மாக, சந்தான கோபால கிருஷ்ணனுக்குரிய மந்திரத்தை பக்தியுடன் ஜெபம் செய்து ஹோமத்தில் பிரயோகம் செய்தால் நிச்சயமாகப் புத்திர பாக்கியம் உண்டாகும். வெண்ணெய்யில் மந்திர உச்சாடனம் செய்து கொடுத்தால் சந்தான பாக்கியம் ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.
ஆலய தரிசனம்:
திருக்கோயிலுக்கு எப்படிப் செல்லுதல் வேண்டும்?
குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.
திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?
தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.
திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.
எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
பெண்கள் எப்படி வணங்க வேண்டும்?
ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.
ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்
எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?
மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?
முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷ¢ணாமூர்த்தி), சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.
விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?
இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.
எந்தக் காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது?
திருமஞ்சனம், அமுது செய்வித்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.
திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?
உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது. வந்தால் இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.
வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு, இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத் தடவி ஏதும் கொண்டு செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட வேண்டும்.
ஏன் சண்டேசர் வழிபாட்டில் இவ்வாறு செய்யல் வேண்டும்?
சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான அனைத்து பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே அவரது அனுமதி இன்றி எந்தப் பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம்.
சண்டேசர் வழிபாட்டின் பின் யாது செய்தல் வேண்டும்?
கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?
ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்து கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்து கழித்த பொருள்களை மிதித்தல், கொடி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மித்தல், வீண் வார்த்தை பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?
விநாயகமூர்த்தி, மூலலிங்கம், சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம், அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத் தரிசிக்கவேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன் நந்திதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க வேண்டும்.
பரிவார தேவர்கள் யார்?
இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும் சோமாஸ்கந்தமூர்த்தமுந் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர், நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.
எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?
கிழக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில் நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத் தென்புறத்தில் நின்றும், வடக்குநோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்கவேண்டும்.
துவஜஸ்தம்பத்தில் பணியவேண்டிய கிரமமெப்படி?
கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் அக்கினி மூலைக்கு எதிராகச் சமீபத்தில் சிரசுவைத்து மார்பு பூமியிலேபடும்படி இரண்டு கைகளையும் வடக்காக நேரே நீட்டிப் பின்பு தோள்களிலே மண்படும்படி இரண்டு கைகளையும் தெற்கே நீட்டி இரண்டு காதுகளையும் பூமியிலே பொருந்தச் செய்து அஷ்டாங்கவந்தனஞ் செய்யவேண்டும். கைகளைத் தெற்கே நீட்டும்போது முன்னதாக வலக்கை நீட்டிப் பின்பு இடக்கை நீட்டவேண்டும். காது மண்ணில் பொருந்தச் செய்யும்போது முந்தி வலக்காதும் பின்பு இடக்காதும் பொருந்தவேண்டும்.
தெற்கு நோக்கிய சந்நிதியானாலும் மேற்கு நோக்கிய சந்நிதியானாலும் பலிபீடத்தின் நிருதிமூலையில் முன்சொன்ன முறைமைப்படியே சிரசுவைத்து நமஸ்காரம் செய்தல்வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் வாயுமூலையில் சிரசுவைத்துக் காலை மேற்காக நீட்டி முன்சொன்னப்படிப் பணியவேண்டும். ஆனால் பகல் பதினைந்து நாழிகைக்கு மேற்பட்ட காலத்தில் தரிசிக்கப்போனால் மேற்கே காலை நீட்டக்கூடாமையினாலே அஷ்டாங்க பஞ்சாங்கத்துடன் பணியாமல் நின்றபடி இரண்டு கைகளையுங்குவித்து உச்சியின் மேல் வைததுக்கொண்டு தரிசிக்க வேண்டும்.
பகல் பதினைந்து நாழிகைக்குமேல் தரிசனம் செய்வதற்குக் காரணமென்ன?
சூரியகிரகணம், மகரசங்கராந்தி முதலாகிய புண்ணிய காலங்கள் பகல் பதினைந்து நாழிகைக்குமேல் வருமானால் தரிசிக்கப்போக வேண்டும்.
சூரிய அஸ்தமனத்தின்பின் தரிசிக்கப்போனால் எப்படிப் பணியவேண்டும்?.
பகல் பதினைந்து நாழிகைக்குமேல் சூரிய அஸ்தமனமாவதற்கு முன்வரையில், அஷ்டாங்கத்துடன் பணியலாகாதேயன்றி மற்றக் காலங்களிலே யெல்லாம் அஷ்டாங்கத்துடனே தான் பணியவேண்டும்.
அஷ்டாங்க பஞ்சாங்க மென்பதை யல்லாமல் வேறு விதமான நமஸ்காரங்களுமுண்டோ?
ஏகாங்கம், துவிதாங்கம், திரிவிதாங்கம் என மூன்றுமாம்.
மேற்கூறிய நமஸ்காரங்களை முறையே விளக்குக?
சிரசினால் மாத்திரம் வணங்குவது ஏகாங்கமாம்.
சிரசின் மேல் வலக்கரத்தைக் குவித்து வணங்குவது துவிதாங்கமாம். இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்து வணங்குவது திரிவிதாங்கமாம்.
பஞ்சாங்கமாவது சிரமும், இரண்டு வைகளும், இரண்டு முழந்தாள்களும் பூமியின்மேல் படும்படி வணங்குதலாம்.
அஷ்டாங்கமாவது சிரம், இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள், இரண்டு காதுகள், நெற்றி இவைகள் பூமியிற்படிய வணங்குதலாம்.
பிரதக்ஷணம் செய்யவேண்டிய முறைமை யெப்படி?
காமியத்தை விரும்பினர்வள் வலமாகவும், மோக்ஷத்தை விரும்பினவர்கள் இடமாகவும், காமியத்தையும், மோக்ஷத்தையும் விரும்பினவர்கள் வலமிடமாகவும் பூரணகர்பபவதி எண்ணெய் நிறைந்த குடத்தைச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு காலில் விலங்கு பூட்டப்பட்டவளாய் நடப்பதுபோல அதிக மெதுவாய்ப் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். அப்போது பரமசிவனது பாதங்களைச் சிந்தித்துக்கொண்டும செபவடங் கையிலே வைத்துக்கொண்டும் பஞ்சாக்ஷரசெபஞ் செய்து கொண்டும் இரண்டு கைகளையும் மார்புக்குச்சரியாக வைத்துக்கொண்டும் வரவேண்டும்.
சிவசந்நிதியில் எத்தனை பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
மூன்று அல்லது ஏழு பிரதக்ஷணஞ் செய்ய வேண்டும். இந்தத் தொகைக்கு மேற்படவும் செய்யலாம்.
எந்தக் காலங்களில் ஆலயத்துக்குப் போக வேண்டும்?
காலை, உச்சி, அந்தி யென்னும் திரிசந்தி காலங்களிலும் போகலாம்.
இந்த மூன்று கால மல்லாத காலத்தில் தரிசனஞ்செய்ய ஆலயத்துக்குப் போகலாகாதோ?
கிரகண புண்ணியகாலம், சங்கராந்தி புண்ணியகாலம் நேரிடுமானால் தரிசனஞ் செய்யப் போகலாம்.
எந்த ஆவரணங்களில் பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
முதலாவரணந் (கருவறை) தவிர மற்ற ஆவணங்களில் பிரதக்ஷணஞ் செய்யலாம்.
ஆவரணங்களின் முறைமை யெப்படி?
சிவலிங்கப் பெருமானைக் கெர்ப்பக்கிரகத்தில் சூழ்ந்து வரத்தக்கதாக இருப்பதே முதலாவரணம். மற்றைய ஒன்றின்பின்னொன்றாய் இரண்டு முதல் ஐந்து ஆவரணங்களாம். அதற்கப்பால் ஊரின்புலமே ஆறா மாவரணம்.
இப்படி வரும் ஆவரணங்களில் ஸ்தூபி நிழலாவது துவஜஸ்தம்ப நிழலாவது நேரிடுவதாயிருந்தால் அந்த ஆவரணத்தைவிட்டு அப்புறத்திலிருக்கும் ஆவரணத்தில் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். சுவாமி உத்சவங்கொண்டருளுகின்ற காலத்தில் சுவாமியின் பின்வரும்போது மேற்சொன்ன நிழலிருக்குமானாலும் குற்றமில்லை.
பிரதக்ஷணம் இத்தனை நாழிகை செய்ய வேண்டு மென்கிற நியதியுண்டோ?
ஒரு ஜாமப் பொழுதளவு செய்யவேண்டும்; அவ்வாறு செய்தால் ஜெனனமரணம் நீங்கிச் சிவலோகம் அடைவார்கள்.
சோமசூக்தப் பிரதக்ஷணமென்பது யாது?
அதாவது பிரதக்ஷணஞ்செய்யத் தொடங்கும்போது நந்திதேவரைத் தரிசித்துக்கொண்டு அங்கிருந்தபடியே யிடமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பிவந்து மறுபடியும் நந்திதேவரைத் தரிசித்து அங்கிருந்து வலமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துத் திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசித்துப் பின்பு சிவலிங்க தரிசனஞ் செய்து பணியவேண்டும். இவ்வாறு ஒரு பிரதக்ஷணஞ் செய்தால் அனந்தம் பலனுண்டு. பிரிந்து வருகின்றபடியே பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். இந்தப் பிரதக்ஷணம் பிரதோஷ காலத்திற் செய்தால் விசேஷமான பலனுண்டு.
பிரதோஷ காலமாவது எது?
பகல் இருபத்தாறேகால் நாழிகைக்கு மேற்பட்ட மூன்றே முக்கால் நாழிகையளவும் சூரியாஸ்தமனமான மூன்றே முக்கால் நாழிகைக்கு உட்பட்டதுமான காலம் பிரதோஷகாலம். இக்காலத்திற் சிவதரிசனஞ் செய்வது முக்கிய மானதால் சிவனடியார்களாயுள்ளாரியவரும் அவசியம் சிவதரிசனம் செய்யவேண்டும்.
பிரதோஷமென்பதற்குப் பொருளென்ன?
இராத்திரியின் முன் என்பதாகும். சம்ஸ்கிருதத்தில் ரசனி முகமென்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு சொல்லப்படுகின்ற பிரதோஷகாலம் திரியோதசி திதியிற் சிறந்தது. பிரதோஷ விரதமும் இந்தத் திதியிலனுஷ்டிக்க வேண்டும்.
திரயோதசி திதியிற் சிறந்ததற்குக் காரணமென்ன?
கங்காதர மூர்த்தியாகிய பரமசிவம் ஆலகால விஷமுண்டருளியபோது ஒரு க்ஷணநேரம் சும்மாவிருந்தார். அன்று ஏகாதசிதிதி. அப்போது தேவாகள் பரமசிவனை அருச்சித்துக் கொண்டிருந்து மறுநாள் துவாதசி திதியில் பாரணஞ்செய்து பூர்த்தியடைந்தார்கள். அன்று மறுநாள் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் பரமசிவன் பராசத்தி யெதிரில் சூலஞ் சுழற்றிக்கொண்டு கயிலாசகிரியில் ஒரு ஜாமம் நடனஞ்செய்தருளினார்.
இந்தக் காரணத்தினால் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் சிவதரிசனஞ் செய்கின்றவர்கள் நந்திதேவரைப் பரிசித்து நந்திதேவருடைய இரண்டு கொம்பு மத்தியில் பிரணவ சகிதமாக அரகரவென்று சொல்லிக்கொண்டு சிவலிங்க தரிசனஞ் செய்ய வேண்டும். இவ்வாறு தரிசிக்கும் சிவனடியார்கள் சிவசாரூபம் பெறுவார்கள். சனிப் பிரதோஷம் மிகுந்த சிறப்புள்ளதாக ஆகமம் சொல்லுகின்றது. சிவலிங்க தரிசனஞ் செய்கின்றவர்கள் வில்வத்தினால் சிவார்ச்சனை செய்விக்கவேண்டும். பிரதோஷவிரத மனுஷ்டிப்பவர்கள் சிவனடியார்களுக்கு அமுது படைத்துப் பின்பு புசிப்பது உத்தமம்.
பிரதோஷ விரத மனுஷ்டித்துப் பேறு பெற்றவர்கள் யாவர்?
உஜ்ஜயினி மாகாளமென்னும் நகரத்துக்கு அரசனாகிய சந்திரசேன மகாராஜன் சனிப்பிரதோஷ விரத மனுஷ்டித்து இம்மையில் அரசர்களெல்லாம் தன்னை வணங்கும்படி செங்கோல் செலுத்திச் சிவபதம் பெற்றான். இந்த ராஜன் பூஜை செய்ததைப்பார்த்த ஒரு இடைப்பிள்ளைக்குப் பக்தியுண்டாகி வீதியில் மணலினால் ஆலய முதலானவைகளும் அமைத்துக் கொண்டு ஒரு சிலையை நாடிச் சிவலிங்கமாகப் பாவித்துப் பூசைசெய்து பேறுபெற்றான். இன்னும் பலர் இவ்விரத மனுஷ்டித்துப் பேறுபெற்றார்கள்.
இவ்விரதம் நிறுத்திவிடுவதானால் யாது செய்தல் வேண்டும்?
பிரதோஷவிரத மிருப்பவர்கள் தேக அசக்தியினால் நிறுத்தி விடுகிறதாயிருந்தாலும், மேலுமிடைவிடாமல் அனுஷ்டிப்பதாயிருந்தாலும் உடனுக்குடன் உத்தியாபனஞ் செய்ய செய்யவேண்டும். அப்படிச் செய்யாமலிருந்து தேகம் நழுவிவிடுமானால் விரத பலன் சித்தியில்லையாம். ஆதலினால் ஆகம விசாரணையுள்ளவர்களால் தெரிந்துகொண்டு நடக்கவேண்டும்.
சிவதரிசனஞ் செய்யும்போது நந்திதேவருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கும் மத்தியில் ஏன் போகலாகாது?
அப்படிப்போவது முப்பத்திரண்டு குற்றங்களிலொன்றாம். ஆதலால் போகலாகாது.
மேற்கூறிய முப்பத்திரண்டு குற்றங்கள் யாவை?
நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல், தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல், ஒருகை குவித்து தரிசித்தல், ஒரு பிரதக்ஷணஞ் செய்தல், மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல், கோபுரச்சாயையைக் கடத்தல், கோயிலிலுண்ணுதல், நித்திரைசெய்தல், நின்மாலியத்தைத் தாண்டுதல், அதனைத் தீண்டுதல், கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல், ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல், அவர்களோடு பேசுதல், நோக்குதல், வீணான வார்த்தைகள் பேசுதல், கோயிற்காரிய மல்லாத சொல்லைச் சொல்லுதல், தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல், உத்தமர்களை யவமதித்தல், அற்பர்களை மதித்துப்பேசுதல், அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளையபேக்ஷ¢த்துப் பார்த்தல், வேதங்களால் சொல்லப்படாத சிறுதெய்வங்களைப் பணிதல், வேதமுதலான கலைகள் பாடமோதுதல், உன்னதஸ்தானத்திலிருத்தல், ஆசனத்திலிருத்தல், ஒருவரைப் பார்த்து நகைத்தல், பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல், அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல், சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின் நூல் கிழித்துவைத்தல், பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல், திருக்கோயிலினுள் பொடிமுதலிய போடுதல், திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல், இரண்டொரு பிரதக்ஷணஞ்செய்தல், சிரேஷ்டமல்லாத கீர்ததனங்கள் பாடுதல் என்னுமிவையாம்.
அன்றி சிவதீர்த்தத்திலும் நந்தன வனத்திலும் செய்யத் தகாத காரியமென்ன?
சிவ தீர்த்தத்தில் உமிழ்நீர் துப்பலாகாது. மூக்குச் சிந்தலாகாது. மற்றுமுள்ள அசுசியான காரியஞ் செய்யலாகாது. நந்தனவனத்தும் இப்படியே.
நந்தனவனம் சிரேஷ்டமானதற்குக் காரணமென்ன?
சிவார்ச்சனைக்கு யோக்கியமான பூச்செடிகளையுடையதாகையால் சிரேஷ்டமாயது. இதுவுமன்றிப் பரமசிவம் சில மலர்களிலும் பராசக்தி சில மலர்களிலும் வாசமாயிருப்பதனாலும் சிரேஷ்டமாயது. இதன் விபரம் புட்பவிதியில் கண்டு கொள்க.
பாடல்பெற்ற ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களுக்கு அபாயம் நேரிடுவதாயிருந்தால் என்செய்வது?
அக்காலங்களி லங்கிருக்கும் சுயம்புமூர்த்தி சலனப்படுத்தத் தக்கதாயிருந்தால் வேறே ஆலயமேற்படுத்தி, அந்தச் சிவலிங்கத்தைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். சலனப்படுத்தக் கூடாததாயிருந்தால் வேறே லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் சுயம்பு மூர்த்தியேயாம்.
திருவிழாவாவது யாது?
ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.
மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?
மஹா - பெரிய
உத் - உயர்வான
ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.
திருவிழா ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் மண் எடுப்பதும், முளை இடுவதும் எதைக் குறிக்கின்றன?
மண்ணைப் பதம் பண்ணி வித்திடுவது படைத்தலைக் குறிக்கின்றது.
கொடியேற்று எவ்வாறு நடைபெறுகிறது?
நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம்.
கொடியேற்றத்தின் தத்துவம் யாது?
( அ ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களாகி, அந்நான்கு குணங்களையும் உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.
( ஆ ) திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாம்.
மர வாகனத் தத்துவம் யாது?
இதை ‘விருத்திக் கிரம சிருஷ்டி கோலம்' என்பர். மரத்தின் இலைகள், கிளைகள் முதலியன போல தத்துவங்களாகவும், எண்ணிறந்த சீவராசிகளாகவும் கடவுள் விளங்குகிறார் என்பதை இது குறிக்கின்றது. மரத்தின் வேரில் பீடமிட்டு அதில் அம்மையப்பராகக் கடவுள் விளங்குகிறார். அ•தாவது, இத்தகைய படைப்புக்கெல்லாம் வேராக இருப்பது அருள் என்ற சக்தியோடு கூடிய அறிவு என்ற சிவமே என்பதாம்.
சூரியப் பிரபை, சந்திரப் பிரபைகளில் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?
இது “விருத்திக் கிரம ஸ்திதிக் கோலம்" உலகத்திலுள்ள உயிர்கள் பிழைத்து இருப்பதற்குக் காரணம் சூரிய வெப்பம். அவ்வெப்பம் இல்லாவிடில் புசிப்பதற்கு புல்லும் கிடைக்காது. அவ்வெப்பமே கடலில் நீரையுண்டு மேகங்கள் மூலமாய் மழையைத் தருவிக்கின்றது. இன்னும் எல்லாவகையான தொழில்களுக்கும் அது மூலசக்தியாய் விளங்குகின்றது. எனவே உலகத்தைக் காப்பாற்றுவது சூரியனது தொழில். சந்திரன் இன்பத்தை தருபவன். ஆகையால் சூரியப் பிரபையிலும், சந்திரப் பிரபையிலும் இறைவனை வைத்து வணங்குதல் காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகும்.
நந்தியின் மேலும் பூத வாகனத்தின் மேலும் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?
மான், மழு, நாற்தோள், முக்கண் முதலிய அடையாளங்களையுடைய சிவனுருவப் பதவி பெற்ற விஞ்ஞான கலர் என்ற ஆன்மவர்க்கத்துள் சிறந்தவர் அதிகார நந்தி என்பவர். பூதகணங்களோ எனின், இறந்தவுடன் ஆன்மாக்களைக் கொண்டு போகும் தொழிலுடையன. இவ்விரண்டு வாகனங்களின் மேலும் இறைவன் ஏறிவருவது சங்காரத்திற்கு அறிகுறியாகும்.
நாகப்பாம்பு வாகனம் எதை உணர்த்துகின்றது?
நஞ்சு, மாணிக்கம், படமாகிய மூன்றையும் மறைத்து, வேண்டும்போது வெளிப்படுத்தும் திறமையுடையது நாகப்பாம்பு. அல்லாமலும் இது, தானும் மறைந்திருந்து வேண்டும்போது புற்றிலிருந்து வெளிவரும் தொழிலுடையது. எனவே நாகப்பாம்பு வாகனம் மறைத்தல் தொழிலாகிய ‘திரோபாவம்' என்பதற்கு அறிகுறியாகும். குண்டலி சக்தி, சுழுமுனை நாடி முதலியவற்றோடு ஒப்பிட்டும் தத்துவம் கூறுவர்.
நந்தி வாகனக் காட்சி சிறந்த காட்சி ஆனதேன்?
சிவனடியார்களுக்கு இறைவன் நந்தி வாகனாரூடராகவே காட்சி கொடுத்திருக்கிறான் என்று அறிகிறோம். நந்தி எவ்வகையான மாசும் அற்றது. சுத்த வெள்ளை நிறமுடையது. சமம் முதலிய நான்கு குணங்களைக் கால்களாக உடையது. ஆணவ மலத்தை ஒழித்து அருளொடு கூடிய அறிவைப் பணிவுடன் ஏற்று நிற்கின்றது. ஆன்மாக்கள் இங்ஙனம் ஆகும்போதுதான் இறைவன் பேரருள் சுரக்கிறான். ஆகையால் இக்காட்சி அருளல் காட்சியாயிற்று. எனவே இது சிறந்ததாம்.
ஆறாம் திருவிழாவில் இறைவன் யானை மீது ஏறிவரும் காட்சியின் தத்துவம் என்ன?
இது ‘லயக்கிரம ( ஒடுங்கும் முறை ) சிருஷ்டி கோலம்' ஆகும். மரம் படைத்தலை உணர்த்துவது போல விரிந்த பாகுபாடுகளெல்லாம் ஒடுங்கி ஒரே பிண்டமாகப் பருமனான உடம்பு கால்களையுடைய யானையைப் போல் ஒடுங்கிவிடுவது லயக்கிரமத்தில் கடைசிப் படியாகவுள்ள படைத்தலைக் குறிக்கிறது.
கயிலாய மலை வாகனம் எதை உணர்த்துகிறது?
இராவணன் ஆணவ மலம் நிறைந்த உயிர். இமயமலை பிரபஞ்சம், இராவணன் இமயமலையைத் தூக்க முயல்வது பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதற்கு உவமையாகின்றது. இராவணன் அவ்வாறு தூக்கமுடியாமல் துன்பம் அடைந்தான். அவ்வாறே ஆணவமலம் நிறைந்த உயிரும் இறுதியில் ஆணவத்தை இழந்து, கடவுளைத் தியானித்து, வரம் பெற்று, இறைவன் திருவடி சார்ந்து இன்புறுகிறது. இதனையே இவ்வாகனம் உணரச் செய்கிறது.
நடராசர் உற்சவத்தில் அடங்கிய தத்துவங்கள் எவை?
நடராசர் திருவுருவத்தில் ஐந்தொழிலும் உள்ளனவென்பது. ‘தோற்றம் துடியதனில்' என்ற பாடல் மூலம் விளங்கும். அ•தாவது, படைத்தல் உடுக்கையிலும், காத்தல் அபயக்கரத்திலும், அழித்தல் எரிதாங்கிய கையிலும், மறைத்தல் ஊன்றிய காலிலும், அருளல் தூக்கிய காலிலும் குறியீடாக உள்ளனவென்று சிவஞான சாத்திரங்கள் கூறுகின்றன. இங்ஙனமே நடராசர் உற்சவத்திலும் ஐந்தொழில்கள் உள்ளன. சபையை விட்டுப் புறப்படுதல் படைத்தல், அபிடேகம் காத்தல், சாந்தணிதலும் அலங்கார தீபாராதனையும் அழித்தல், வெள்ளைச் சாத்துபடி மறைத்தல், வீதிவலம் வந்து மட்டையடி தரிசனம் அருளல்.
தேரின் தத்துவங்கள் யாவை?
தேரின் அமைப்பு பிண்டத்திற்குச் சமானம். விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிலிருக்கும் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம், அதற்கடுத்தது மஸ்தக ஆதி ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக மத்திய ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம், அதற்கடுத்தது புருவ மத்தியஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் தத்துவக் கால்கள், முன் மூன்று துறைகள் கண்கள், பின்னவை சிகையும் இடவலக் காதுகளுமாகும்.
இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ், குதிரைகள் சூரிய சந்திர கலைகள், சாரதி அக்னிகலை, இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், அதையடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், அதையடுத்த அடுக்கு நாபி, அதற்கடுத்த அடுக்கு கண்டலிஸ்தானம், பத்துச் சக்கரங்களும் தச வாயுக்கள், இறைவன் இதற்குக் கர்த்தா தான் ஒருவனே என்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்ட தத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி லயப்படுத்தி, முறையே இரதக் குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவ மத்திக்கும் ஏற்றி லயப்பட்டு, சும்மாவிருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் எரித்தது ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கும் அறிகுறியாகிறது.
வாகனாதிகளின் அறிகுறி என்ன?
முதல் நாள் விருக்ஷத்தடியில் சேவை. மாயை வித்துப் போன்று விருக்ஷத்திற்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் ஒத்த சர்வ லோகங்களுக்கும் காரண பூதமாயிருந்து சர்வ சாக்ஷ¢யாய் இருப்பதை யுணர்த்தும். இதுசிருஷ்டியென அறிக.
2-ம் நாள். சூரிய பிரபை சந்திரப் பிரபையில் எழுந்தருளி தரிசனந்தருவது, காண்பானாகிய ஆன்மாவுக்குக் காட்டுவான்தான் என்பதை யுணர்த்த காணுங்கண்ணுக்குக் கதிரொளியாய் நின்றதை உணர்த்தும். இது திதியென அறிக.
3-ம் நாள். பூதவாகனம்: ஆன்மாக்களுக்குக் கன்மானு கூலமான மரணாவஸ்தை விதிக்கின்றோமென சம்ஹார கோலத்தைக் காட்டுகின்றது. அன்றி, பஞ்ச பூதங்களினின்றும் விளங்குவோன் தானே என்பதையும் காட்டும்.
4-ம் நாள். கைலாசவாகனம் : ஆன்மாக்களின் ஆணவத்தைப் போக்கி நிரதிசயானந்த ஜோதிமயபர ஆகாசமாகிய பரசிவலோகம் எனப்படும் கைலாசத்தைக் கொடுத்தருளும் பரமபதி தானே என்பதைக் காட்டும்.
5-ம் நாள். ரிஷபவாகம் : பசுபதி தான் என்பதையும் தர்ம தேவதையை இடமாகக் கொண்டவன் என்பதையும் உணர்த்தும். அன்றி, சதுஷ்பாதம்போன்றது அந்தக்கரணம். ரிஷபம் போன்றது ஆன்மா. இதன்மேல் பதியாகிய ஈசுவரன் விளங்குகின்றான் என்று அனுக்கிரகக் கோலத்தை காட்டும்.
6-ம் நாள். யானைவாகம் : தும்பிக்கைபோன்ற சுழிமுனை நாடியின் வழியாய்த் தன்னைத் தரிசிக்கவேண்டும் என்பதைக் காட்டும். அன்றி, பிரணவதாரகன் தான் என்பதையுங் காட்டும்.
7-ம் நாள். நந்திவாகனம் : ஆசாரியனை அதிட்டித்து நின்று ஆன்மாக்களைப் பரிபக்குவப் படுத்துவார் என்பதைக் காட்டும்.
8-ம் நாள். குதிரை வாகனம் : வாசிநாடியில் சுவாசாகார அஸ்வசாரியைக் காட்டும். சுவாசம் மேலும் கீழும் செல்வது வாசியாகும்.
9-ம் நாள். இரதம் விஸ்வவிராட் சொரூபமே எட்டடுக்குத் தத்துவமாய் உச்சிக்கலசம் சோடசாந்தமெனவும், அதனடுத்த கீழடுக்கு துவாதசாந்தமெனவும், அதனடுத்தது மஸ்தக ஆதிஸ்தானமென்றும், அதனடுத்தது மஸ்தகமத்தியஸ்தானமென்றும், அதனடுத்தது மஸ்தக அந்தஸ்தான மென்றும், ஐந்தாமடுக்கு லலாட மத்தியஸ்தான மென்றும், நடுவேதாங்கும் குத்துக் கால்கள் தத்துவக்கால்க ளென்றும், முன்மூன்று துறைகள் மூன்று கண்களென்றும், பின்னவை சிகையென்றும், இடம் வலம் காதுகளென்றும், ஈஸ்வரனெழுந்தருளியிருக்கும் கேடயபீடம் முப்பாழென்றும், சூரிய சந்திர கலைகளே வாசிகளென்றும், சாரதி அக்கினிக்கலை யென்றும் (இவை நாசியென்றும் ) எட்டாமடுக்குக் கண்டஸ்தானமென்றும் அதனடுத்தது இருதயஸ்தானமென்றும் அதனடுத்தது நாபிஸ்தானமென்றும், அதனடுத்தது குண்டலிஸ்தானமென்றும் தசசக்கரங்களும் தசவாயுவென்றும் காட்டி, கர்த்தா தானொருவனே யென்றுணர்த்தி இது அண்டதத்துவ சொரூபமாய், பிண்டதத்துவசரீரமாயும் விளங்கும் எனவும் உணர்த்தி, தசவாயுச்சகக்கரத்தை நிறுத்த மனது அசைவற்று அச்சுப்பட்டடை உந்திகுண்டலியிலிருந்து கீழப்பட்டடை நாபிக்கு ஏற்றி லயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய இருதயத்துக்கு ஏற்றி லயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய கண்டஸ்தானத்துக் கேற்றி லயப்படுத்தி, பின்னடுத்த பட்டடையாகிய வாய்க்கு ஏற்றி லயப்படுத்தி, பின்முறையே இரதக்குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து இரண்டு கண் வழியாயும் நடுவழியாயும் மேல் நோக்கிஆறாம் அடுக்காகிய புருவமத்தியத்திற்கேற்றி லலாடம் முதல் துவாதசந்தம்வரை ஏற்றி லயப்படுத்தி, சும்மாயிருந்த படியிருக்கும் நித்தியசுகியாயிருந்திடல் வேண்டுமென்று லயக்கிரம கோலத்தைக் காட்டுகின்றது. அன்றிப் புராணவாயிலாகத் திரிபுரசம்ஹார கோலத்தையுங் காட்டும்.
10-ம் நாள். பிக்ஷ¡டனமூர்த்தி : ஆவரணம் ஏழையு மொழித்துவிட திரோபவ கோலத்தைக் காட்டும்.
11-ம் நாள். நடராஜகோலம் : அனுக்கிரகத்தைக் காட்டும். இவ்வுத்ஸவங்கள் தத்வார்த்தக்காட்சிகளாகியும் பஞ்சகிருத்திய ரகசிய தரிசனங்களாகவும் விளங்குமென்பது காமிகாதி ஆகமங்களாலும் சிவத்விஜர்களாலும் அறிந்திடுக.
உத்ஸவமென்பதன் தாற்பரியமென்ன?
திருஷ்டிமார்க்கத்தைக் குறிப்பதென்பது பொருள். இது பஞ்சகிருத்தியம் நடைபெறுவதை சூசிப்பிக்கும்.
உத்ஸவமெத்தனை விதம்?
ஆறுவிதம்: அவை பைத்ருகம், சௌக்கியம், ஸ்ரீகரம், பார்த்திவம், சாத்வீகம், சைவம் என அறிக.
அவற்றினை முறையே விளக்குக?
முறையே பன்னிரண்டு, ஒன்பது, ஏழு, ஐந்து, மூன்று நாட்களும் ஒரு நாளும் கொண்டாடுந் திருவிழாக்கள்.
இன்னும் வேறுவிதங்கள் உளவோ?
பதினொனறும், பதின்மூன்றும், பதினைந்தும், பதினேழும், இருபத்தொன்றும் மேற்பட்டதுமான நாட்கள் உத்ஸவம் செய்வதாம். அவை முறையே புக்தி, கௌமாரம், சாயுத்ரம், சாந்தரம், சௌரம், சாவரம் எனப் பெயர்பெறும்.
இவ்வுத்ஸவங்களுக்குப் பலன் யாது?
ஒருநாள் - ராஜவிர்த்தி, மூன்று - சிவத்தைச்சந்தோஷிப்பித்தல், ஐந்து - போகம், ஏழு - சிவப்பிரியம், ஒன்பது - சாந்திகம், பதினொன்று - புஷ்டி, பன்னிரண்டு - முத்தி, பதின்மூன்று - சர்வசித்தி, பதினைந்து - ஜனங்களுக்குச் சுகம், பதினேழு - புண்ணியப்பிரதம், இருபத்தொன்று - லோகவிர¨க்ஷ.
உத்ஸவங்கள் செய்யாவிடின் குறைவென்ன?
கிராமத்துக்கும் ஜனங்களுக்கும் க்ஷேங்கிடையாது.
அயனாதி புண்ணியகாலங்களில் நடத்தும் உத்ஸவங்களின் பலனென்ன?
அயனோத்ஸவம் - புண்ணியபலம், மாதோத்ஸவம் - இராஜதோஷநிவர்த்தி, அமாவாசை - தாரபத்திராதி இஷ்டகாமியசித்தி, பௌர்ணமி - சகலபாப நிவாரணம், கிர்த்திகை - சௌக்கியம், திருவாதிரை - சகலசம்பத்து, பூசம் - புஷ்டி, மகம் - சுஜனசிரேஷ்டத்துவம், பூரம்- சௌபாக்கியம், உத்திரம் - சீலம், சித்திரை - ரூபலாவண்யமனைவி, விசாகம் - விசேஷகாமபலன், மூலம் - ஆரோக்கியம், பரணி - ஆயுள்விருத்தி, திருவோணம் - சுகபோகங்கள் பலனாம். இவ்வாறு ஒவ்வொரு நக்ஷத்திரங்களுக்குள்ள பலனைக் காமிகாதி ஆகமங்களிற் காண்க.
மலை, வனம், ஆறு, குளமுதலிய இடங்களுக்குச் செல்லும் உத்ஸவங்களின் பலனென்ன?
அவ்வவ்விடங்களிலுள்ள நால்வகையோனி எழுவகைத் தோற்ற பேதங்களுக்குப் பலப்பிராப்தியுண்டாகும்.
வாரோத்ஸவ பலன்களென்ன?
ஞாயிறு - ருத்ரபதவி, திங்கள் - சௌக்கியம், செவ்வாய் - கிராமலாபம், புதன் - சர்வகாமியசித்தி, வியாழன் - சாஸ்திராதி வித்தை, வெள்ளி - விசேஷ செல்வம், சனி - அபமிர்த்தியுநாசம்.
உத்ஸவ காலங்களிலே ஆலயங்களில் நடக்கும் கிரியைக ளெவை?
விருஷயாகம், துவஜாரோகணம், ப்ரகத்தாளம், அங்குரம், யாகசாலை, அஸ்த்ரயாகம், பலிதானம், யானக்கிரமம், பரிவேஷம், நீராஜனம், கௌதுகம், தீர்த்தசங்கிரகணம், சூர்ணோத்ஸவம், தீர்த்தம், அவரோகணம், ஸ்நபனம், விவாகம், பக்தோத்ஸவம் என்னும் அஷ்டாதசக் கிரியையாம்.
இவை பஞ்சகிருத்தியங்களை யெவ்வாறுணர்த்தும்?
சிருஷ்டி அங்குரார்ப்பணம் விவாகம், துவஜாரோகணம், ரக்ஷ¡பந்தன மிவைகளாலும், திதி வாகனாதி யுத்ஸவம், ஓமம் பலியிவற்றாலும், சம்ஹாரம் சூர்ணோத்ஸவம், ரதாரோகணம், கிருஷ்ணகந்தோத்ஸவமிவற்றாலும் திரோபவம் - மௌனவுத்ஸவத்தாலும், அனுக்கிரகம் - சக்தியூடலாலும், உணர்த்தப்படுவதறிக. அன்றி சிருஷ்டி - அபிஷேகத்தாலும் திதி கௌதக பந்தனத்தாலும், சம்ஹாரம் - அகருதூபத்தாலும், திரோபவம் - கற்பூரதீபத்தாலும், அனுக்கிரகம் - கற்பூர அடுக்குத் தீபத்தாலும் சூசிப்பிக்கப்படும்.
மகோத்ஸவ தினங்கள் பத்தினாலும் உணர்த்தப்படுவது யாது?
முதல்நாள் - தூலநீக்கத்தையும், இரண்டாம்நாள் - ஸ்தூல சூக்குமநீக்கத்தையும், மூன்றாம்நாள் - மூவினை முக்குணம் முக்குற்றம் முப்பற்று முப்பிறப்பு நீக்கத்தையும், நான்காம்நாள் நாற்கரணம் நால்வகைத்தோற்ற நீக்கத்தையும், ஐந்தாம்நாள் ஐம்பொறி ஐந்தவத்தை ஐம்மல நீக்கத்தையும், ஆறாம்நாள் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரிய மென்னும் ஆறுகுற்ற நீக்கத்தையும், ஏழாம்நாள் எழுவகைப்பிறப்பு நீக்கத்தையும், எட்டாம்நாள் எண்குண விளக்கத்தையும், ஒன்பதாம் நாள் நவபேத விளக்கத்தையும், பத்தாம்நாள் பரானந்தக் கடலிற் படிவதையும் உணர்த்தும்.
உத்ஸவமூர்த்திக்குச் செய்யுந் திருவிழா சிவலிங்க மூர்த்திக்கு எவ்வாறு சேரும்?
யோகம், போகம், வீரம் எனச்சக்திகள் மூன்று; அவற்றில் லிங்கபீடம் யோகசக்தி, விஸ்வயோநி போகசக்தி, உத்ஸவமூர்த்தி வீரசக்தி. ஆதலால் வீரசக்திக்கு உத்ஸவம் கொண்டாடுதலறிக.
சிவாலயங்களில் கொண்டாடப்படும் உத்ஸவங்களெவை?
நித்தியோத்ஸவம், வாரோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாதோத்ஸவம், அயனோத்ஸவம், வருஷோத்ஸவம் என்பவைகளாம்.
நித்தியோத்ஸவ மென்றால் யாது?
தினந்தோறும் உமாசகிதராய்ச் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதாம்.
வாரோத்ஸவ மென்றால் யாது?
சுக்கிரவாரந்தோறும் உமையை எழுந்தருளச் செய்வதாம்.
பக்ஷோத்ஸவமென்றால் யாது?
பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ தினங்களில் கொண்டாடப்படும் உத்ஸவம்.
மாதோத்ஸவ மென்றால் யாது?
மாதப்பிரவேசத்தன்று கொண்டாடப்படும் உத்ஸவமாம்.
அயனோத்ஸவமென்றால் யாது?
உத்தராயண தக்ஷ¢ணாயன புண்ணிய காலங்களில கொண்டாடப்படும் உத்ஸவமாம்.
வருஷோத்ஸவ மென்றால் யாவை?
பிரமோத்ஸவம், தெப்போத்ஸவம், சைத்ரோத்ஸவம், வசந்தோத்ஸவம் முதலிய உத்ஸவங்க ளொவ்வொன்று பப்பத்துநாட்களில் கொண்டாடப்படும் உத்ஸவங்களாம்.
ஆலயங்களிலே சிவலிங்கப்பெருமானுக்கெததனை காலங்களில் அபிஷேகாதி வைபவங்கள் நடத்தப்படுகின்றது?
திருவனந்தல், காலைசந்தி, உச்சிக்காலம், சாயர¨க்ஷ, இராக்காலம், அர்த்தசாமம் ஆகிய ஆறுகாலங்களிலும், திருவனந்தல் சாயர¨க்ஷ யொழிந்து நாலுகாலங்களிலும் அவற்றிற்குக் குறைந்த காலங்களிலும் வரவுக்கேற்ப அபிஷேகாதி வைபவங்கள் நடத்தப்படுகின்றன.
சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வருஷத்தில் ஆறு அபிஷேகங்கள் நடத்துவதற்குக் காரணமென்ன?
மனிதர்களுக் கொருவருஷங்கொண்டது தேவர்களுக் கொருநாளாகவே, ஸ்ரீ சிற்சபேசன் தேவர்கள் தேவனென்பது விளங்க பிராதஹ்காலத்துக்குச் சமமாகிய மாழ்கழி மாதத்துச் சிவரூபமாகிய திருவாதிரையன்று அபிஷேகமும் தரிசனங்கொடுத்தலும், காலைசந்திக்குச் சமமாக மாசிமாதம் பூர்வ பக்ஷசதுர்த்தசியிலும், உச்சிக்காலத்துக்குச் சமமாக சித்திரை திருவோணத்திலும், சாயர¨க்ஷ காலத்துக்குச் சமமாக ஆனிமாதத்தில் உத்திரத்திலும், இராக்காலத்துக்குச் சமமாக ஆவணி மாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியிலும், அர்த்தசாமத்துக்குச் சமமாக புரட்டாசிமாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியிலும், அபிஷேகமும் நடத்தலறிக.
அவ்வவிஷேகங்கள் நக்ஷத்திரம் மூன்றிலும் சிறந்ததற்குக் காரணமென்ன?
திருவாதிரை சிவநக்ஷத்திர மாதலாலுந் திருவோணம் அச்சுத நக்ஷத்திரமாதலாலும் உத்திரம் சூரிய நக்ஷத்திரமாதலாலும் சிறந்தமை காண்க.
Very useful Information
ReplyDelete