ஆசைக்கு வரைமுறை வேண்டும்
காட்டுவழியே சென்ற ஒரு இளைஞன் முன்பு ஒரு பூதம் வந்தது. ""உன் வீட்டில் ஏழு கலயம் தங்கம் வைத்துள்ளேன், எடுத்துக்கொள்,'' என்றது.அவன் ஓடினான், சொன்னது போலவே தங்கத்தைப் பார்த்தான். ஆறு கலயங்களில் முழுமையாகவும், ஒன்றில் மட்டும் பாதியும் இருந்தது. இந்தப் படுபாவி அதை எடுத்து செலவழிக்க வேண்டியது தானே! ஏழாவது கலயம் பாதியாக இருக்கிறதே! இதையும் நிரப்பியாக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. மனைவி, பெண் குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை வாங்கி கலயத்தில் போட்டான். அது நிரம்பவில்லை. அப்படியே இருந்தது. குடும்பத்தை பட்டினி போட்டு, வாங்குகிற சம்பளத்திற்கெல்லாம் தங்கத்தை வாங்கி உள்ளே போட்டான். மாற்றமில்லை. கடைசியாக மனநிம்மதியை இழந்தான். அவனும், குடும்பத்தாரும் பட்டினி கிடந்ததில் நோய்வாய்ப்பட்டனர். பூதத்தை மனதில் நினைத்தான். அவன் முன் அது தோன்றியது. ""இப்படி ஆகி விட்டதே என் நிலை!'' என்றான். ""இளைஞனே! பேராசையில்லாதவர்களுக்கே இது பயன்படும். இதைக் கொண்டு நீயும் உன்னை வளப்படுத்தி, பிறருக்கும் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஏழு கலயமும் பதினான்காக மாறியிருக்கும். நீயோ ஆசையில் இருப்பதையும் இழக்கப் போகிறாய். இதை எடுத்துப் போய், பேராசையற்ற இன்னொருவனிடம் கொடுக்கப் போகிறேன்,'' என்று சொல்லி மறைந்து விட்டது. கலயங்களும் மறைந்தன. அந்த இளைஞன் பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் இழந்தான். ஆசைக்கு வரைமுறை வேண்டும் என்பது புரிகிறதா!
No comments:
Post a Comment