குளங்களில் முள்மரம் வெட்டிப் பிழைக்கும் கந்தசாமி ஒரு முருகபக்தன். பக்கத்து  ஊரிலுள்ள முருகன்கோயில் விழாவுக்கு, காவடி ஏந்தி சென்று விடுவான். ஒருமுறை, அவனது  குடும்பத்தில் ஏதோ விரயச் செலவு ஏற்பட்டது. அந்த ஆண்டு விழாவுக்கு சென்றபோது,  ""முருகா! இத்தனை காலமும் உனக்கு காவடி சுமந்து வந்திருக்கிறேன். ஆனால், எனக்கு  வறுமையைத் தானே பரிசாகத் தந்துள்ளாய்,'' என்று உருக்கமுடன் முறையிட்டபடியே  சென்றான். வழியில் அவனுக்கு மூச்சு வாங்கியது. காவடியை சற்றே இறக்கி வைத்து விட்டு  ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினான்.அப்போது, ஒரு பெரியவர் வந்தார்.""என்னப்பா!  பாதிதூரம் தாண்டவில்லை. அதற்குள் இளைப்பாற அமர்ந்து விட்டாய். முன்னேறிப்போ,''  என்றார்.கந்தசாமியின் காதுகளில் "முன்னேறிப் போ' என்ற வார்த்தை அழுத்தமாக  விழுந்தது.""ஆம்... தெரிந்த தொழில் என்ற பெயரில் விறகு வெட்டுவதை மட்டுமே இதுவரை  செய்து வந்தேன். குடும்பத்தின் தேவைக்கேற்ப வருமானத்தைப் பெருக்கும் வகையில் பிற  தொழில்களை நான் செய்து முன்னேறியிருக்கலாமே! இது ஏன் என் புத்திக்கு புலப்படவில்லை.  வள்ளியை ஆட்கொள்ள முதியவர் வேடத்தில் வந்த அந்த முருகனே, இப்போதும் என்னிடம் பேசி  விட்டு போனாரோ! இனி வேறு தொழில் செய்வேன். பணம் சம்பாதிக்க முயற்சிப்பேன். முருகா!  அதற்கு உன் துணை என்றும் வேண்டும்,'' என்று பிரார்த்தித்தான்.காவடியைச்  செலுத்திவிட்டு ஊர் திரும்பினான். அவனது மனைவிக்கு பசு பராமரிப்பு பற்றி நன்றாகத்  தெரியும். ஊர் பெரியவர் மிகவும் நல்லவர். அவரிடம் புதுத்தொழில் துவங்கும் ஆசையைச்  சொல்லி, அவரது உதவியுடன் வங்கியில் கடன் பெற்றான். மூன்று பசுக்களை வாங்கினான். அவை  நல்ல வருமானம் தந்தது. இரண்டு பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்பினான். அவர்கள் தந்த  சம்பளம் மாதம் ஆறாயிரம் வந்தது. கடனை குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக அடைத்ததால்,  வங்கி அவனுக்கு மேலும் கடன் வழங்கியது.ஒரு கட்டத்தில் அவன் அவ்வூரில்  குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி விட்டான். அடுத்த ஆண்டு விழாவுக்கு அவன் குடும்பமே  பால்காவவடி எடுத்து வந்தது. "முன்னேறிப் போ' என்று அன்று முருகன் சொன்னவார்த்தை  மீண்டும் காதில் விழுந்தது. அவன் பல தொழில்கள் செய்து, சில ஆண்டுகளில்  குடும்பத்துடன் காரில் கோயிலுக்குப் புறப்பட்டான். 
No comments:
Post a Comment