பார்த்தீபன் செய்யாத பாவமே இல்லை. பெற்றவர்களுக்கு கொடுமை செய்தான், மனைவியை தினமும் உதைப்பான், குடிப்பான், பெண் பித்தனாய், அடியாளாய் திரிந்தான். ஒருநாள், அவன் சாலையில் வரும்போது, ஒரு மூதாட்டி கையை நீட்டி, ""ஐயா! பசிக்குது'' என்றாள்.
என்ன நினைத்தானோ தெரியவில்லை! தன் கையில் இருந்த நூறு ரூபாயை அவளிடம் திணித்து விட்டு போய்விட்டான். சற்றுதூரம் தான் போயிருப்பான். ஒரு லாரி இவன் மீது மோதிவிட்டு போய்விட்டது. அந்த இடத்திலேயே இறந்து விட்டான்.
அவனது உயிரை எமதூதர்கள் எடுத்துச் சென்றார்கள்.
எமதர்மராஜா அவனிடம்,""நீ வாழ்க்கையில் ஒரே ஒரு நற்செயல் தான் செய்திருக்கிறாய். அதற்குரிய நற்பலனையும், பாவங்களுக்குரிய கொடிய பலனையும் நீ அனுபவிக்க வேண்டும். எதை முதலில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை நீயே முடிவு செய்து கொள்,'' என்றான்.
""நல்லதை முதலில் அனுபவித்து விடுகிறேனே!'' என்றதும் அனுமதி வழங்கப்பட்டது. அவன் தேவலோக குதிரை ஒன்றில் வைகுண்டம் சென்று நாராயணனை வணங்கினான். விருந்து சாப்பிட்டான். திரும்பி வரும்போது, எமதூதர்கள் அவனைப் பிடித்து, ""அவ்வளவு தான், நற்பலனை அனுபவித்து விட்டாய், வா நரகத்துக்கு,'' என்று இழுத்தனர்.
அவன் கத்தினான்.
""நாராயணனை ஒருமுறையாவது ஸ்ரீஹரி என்று சொன்னவர்களுக்கே பாவம் தொலையும் என்றும் எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் உபன்யாசம் செய்யக் கேட்டிருக்கிறேன். இப்போது அவரது தரிசனமே பெற்றுவிட்டேன். நீங்களோ நரகத்துக்கு அழைக்கிறீர்கள்! நாராயணா! என்னைக் காப்பாற்று,'' என கத்தினான்.
வைகுண்ட காவலர்கள் ஓடிவந்தனர். எமதூதர்களை விரட்டினர். அவனை வைகுண்டத்தில் தங்க வைத்தனர்.
இந்தக் கதையைப் படிப்பவர்கள், இங்கே அவ்வளவு பாவத்தையும் செய்துவிட்டு, அங்கே போய் எப்படியாவது தப்பி விடலாம் என நினைக்கக்கூடாது. தெய்வங்களின் பெயரைச் சொன்னால் எந்தளவுக்கு நன்மை கிடைக்கும் என்பதற்கே இந்தக் கதை. இறைநாமாவை உளமார்ந்த பக்தியோடு சொல்பவர்களுக்கு அவ்வுலகில் மட்டுமல்ல! இங்கும் நன்மை நடக்கும்.
No comments:
Post a Comment